Thursday, August 3, 2017

காவிரியும், நீர் பெருகாத ஆடிப் பெருக்கும்

இன்று ஆடி 18 - ஆடிப் பெருக்கு, காவிரி நதி தீரத்தில் ஆன்மிக இயற்கை சார்ந்த திருவிழா. தென்மேற்கு பருவமழை தொடங்கி ஆடியில் காவிரியில் நீர் வெள்ளமெடுத்து வருவதை ஒரு காலத்தில் கொண்டாடினார்கள். தை மாதத்தில் அறுவடை செய்யும் பயிர் தொழிலுக்கு இதே அச்சாரம். இந்த வெள்ளத்தை காவிரியில் வணங்குவது வாடிக்கை. 
 


அன்று திருவையாற்றில் ஆடிப் பெருக்கு கால்த்தில்...







பருவமழை பொய்த்து வெள்ளம் வருவதும் காவிரியில் பொய்த்துவிட்டது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறப்பதும் இல்லை. ஆனால் ஆடிப் பெருக்கோ இன்றைக்கு தஞ்சை டெல்டாவில் சோதனை பெருக்காக அமைந்துவிட்டது.

 
திருச்சியில் அகண்ட காவிரி வறண்ட காவிரி.


இன்று திருவையாற்றில் ஆடிப் பெருக்கு...








ஆடிப் பட்டம் தேடி விதை, என்பது முதுமொழி. ஆடிப் பெருக்கை குறித்து சீர்காழி பிள்ளை பாடிய முதல் திருமுறை – திருநெய்த்தானம்.
நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப்
பகராவரு புனல்காவிரி பரவிப்பணிந் தேத்தும்
நிகரான்மண லிடுதண்கரை நிகழ்வாயநெய்த் தான
நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே.

விளக்கவுரை:
நுகரத்தக்க பொருளாகிய சந்தனம், ஏலம், மணி, செம்பொன் ஆகியவற்றை நுரையோடு உந்தி விலை பகர்வதுபோல ஆரவாரித்து வரும் நீரை உடைய காவிரி பரவிப் பணிந்தேத்துவதும், ஒருவகையான மணல் சேர்க்கப்பெற்ற அவ்வாற்றின் தண்கரையில் விளங்குவதுமாகிய நெய்த்தானத்துக் கோயிலில் விளங்கும் சிவபிரான் திருவடிகளை ஏத்தத் துன்பங்கள் நம்மை அடையா.

சீர்காழி கோவிந்தராஜன் அகத்தியர் திரைப்படத்தில் பாடி மக்களை கவர்ந்த சிலப்பதிகார வரிகளோடு பாடும் நடந்தாய் வாழி காவேரி...பாடல் தான் நினைவுக்கு வருகிறது. இந்த பாடல் திருச்சி ரேடியோ நிலையத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் கேட்கக் கூடிய அளவில் வைகறைப் பொழுதில் ஒலிபரப்பப்படும்.

திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.

மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.

உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி.
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன்
வளனே வாழி காவேரி.

சுழித்து நுரைத்து ஓடும் காவிரி, கல்லணையில் காட்டாற்று வெள்ளமா பாய்ந்த காவிரி, எப்ப நம்ம ஊர் வாய்க்காலுக்கு வரும்  என்ற மகிழ்ச்சியான தஞ்சை வட்டார பேச்சு வழக்கில் சம்பாஷனைகள் நடக்கும்.
மனம் கமழும் காவிரியில், இன்று மணல் கூட இல்லை...!

#ஆடி_பெருக்கு
#aadi_perukku
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03-08-2017

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...