Thursday, August 10, 2017

கோவில்பட்டி இரண்டாவது பைப்லைன் திட்டம்






----------------------------------------------------------------------------

கோவில்பட்டி நகரில் குடிநீர் பிரச்சனை 1960ல் கடுமையாக இருந்தது. இந்த நகருக்கு 1976ல் முதல் பைப்லைன் தாமிரபரணியில் இருந்து கூட்டுக் குடிநீர்த் திட்டம் அன்றைய முதல்வர் கலைஞரால் துவங்கி வைக்கப்பட்டது. படிப்படியாக பைப்லைன் பழுதாகி நீர்வரத்தும் குறைந்து 1988ல் இரண்டாவது பைப்லைன் வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. சீவலப்பேரியில் இருந்து வரும் தண்ணீர் கோவில்பட்டி மக்களின் தாகத்தை தீர்த்தது. 

அப்போதே 30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கோவில்பட்டி நகராட்சி விரிவடைந்து தற்போது சுமார் 1.50 லட்சம் மக்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 1வது பைப்லைனின் ஆயுள்காலம் 1976ம் ஆண்டு தொடங்கியது முதல் 2006ம் ஆண்டு வரை 30 வருடங்களே ஆகும். தற்போது காலாவதியாகி 11 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. 

இதனால் கோவில்பட்டிக்கு 2வது பைப்லைன் வேண்டுமென்ற தொடர் போராட்டத்திற்கு பிறகு இத்திட்டத்திற்கு ரூ. 81.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2012ம் டெண்டர் விடப்பட்டு கமிசன், கையூட்டு போன்ற சிக்கல்களால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 

பின்னர் 2014ம் ஆண்டு மறுடெண்டர் விடப்பட்டு 18 மாத காலத்தில் இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், 6 ஆண்டுகளாக இத்திட்டம் தொடர்ந்து மெத்தனமாக நடந்து வருகிறது. தற்போது பைப்லைன் பதிக்க வேண்டிய 51 கிலோ மீட்டரில் குருமலையில் இருந்து ஊத்துப்பட்டி வரையுள்ள 1700 மீட்டர் தூரம் வனத்துறை அனுமதி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் 5 கி.மீ. பைப்லைன் பதிக்க வேண்டியுள்ளது. 

இத்திட்டத்தின்படி அமைக்க வேண்டிய 10 மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் 3 குடிநீர் தொட்டிகளுக்கான துவக்க பணிகள் கூட இன்னும் மேற்கொள்ளவில்லை. மேலும் கோவில்பட்டி நகராட்சி வீடுகளுக்கு வழங்க தெருக்களில் சுமார் 82 கி.மீ தூரம் குழாய் பதிக்கும் பணிகளும் இன்னமும் அப்படியே உள்ளது. இந்நிலையில் 15 நாட்களுக்கு ஒருமுறை வீதமே கோவில்பட்டியில் குடிநீர் விநியோகம் உள்ளது. ஒரு குடத்திற்கு பத்து ரூபாய் கொடுக்கும் அவலமும் அரங்கேறுகிறது. 

18 மாதத்தில் முடிவடைய வேண்டிய இந்த 2வது பைப்லைன் திட்டம் 6 ஆண்டுகளுக்கும் மேல் கிடப்பில் உள்ளது. 

இதை எதற்கு சொல்கிறேன் என்றால், 1989 தேர்தலில் கோவில்பட்டியில் தோற்றபோது 2வது குடிநீர் திட்டம் வேண்டுமென்று நானும், அன்றைய திமுக ஒன்றிய செயலாளர். பா. முத்து, நகர செயலாளர். எம்.டி.ஏ.காளியப்பன், நகர காங்கிரஸ் தலைவர் ரசாக்,சி.பி.எம். நகர்மன்ற உறுப்பினர். இராமசுப்பு, ஜனதா கட்சி தலைவர். அ.பூ.சுப்பையா ஆகியோர் அன்றைய முதல்வர் கலைஞரை சந்தித்து முறையிட்டு அதற்கான கோப்புகள் நகர்ந்து கொண்டிருக்கும் போது ஆட்சி கலைந்துவிட்டது. 

ஆனால் இன்னமும் கோவில்பட்டி 2வது பைப்லைன் நிறைவேறாத நிலையாக உள்ளது. 

#கோவில்பட்டி
#கோவில்பட்டி_குடிநீர்_திட்டம்
#தாமிரபரணி_கூட்டுக்_குடிநீர்_திட்டம்
#kovilpatti 
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-08-2017

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...