Thursday, March 22, 2018

மார்ச் 30ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமையாது

வருகிற மார்ச் 30ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறுகிறது. அதற்கு பதிலாக வேறொரு அமைப்பை உருவாக்க இருக்கின்றோம் என்று மத்திய அரசு சொல்வது; தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய காவிரி நீரையும் தடுக்கும் நடவடிக்கையாகத் தான் இது. மத்திய அரசு பம்மாத்து வேலைகளை செய்கிறது.
மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேற்று (21-3-2018)தெளிவாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்றும் ஒரு செயல் திட்டத்தை வகுக்க தான் செல்கிறது என்று வாய் கூசாமல் சொல்லியுள்ளார்.
காவரியில் தமிழகத்திற்கு ஏதோவொரு தீர்வு கிடைத்தாலும்,அது நடைமுறைக்கு வராத துயரமும் ரணமே எஞ்சியுள்ளது.
கடந்த காலத்தில் காவிரி நடுவர் மன்றம் 1991இல் வழங்கிய இடைக்காலத் உத்தரவையும், 2007இல் வழங்கிய இறுதித் தீர்ப்பையும் நிறைவேற்ற கர்நாடகா மறுத்ததும், இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க உச்சநீதிமன்றம் வரை போயும் கர்நாடகம் திமிர் போக்கில் இருந்து வருகிறது. வழக்காடியதில் எந்த பயனுமின்றி போய்விட்டது.
உச்ச நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க ஆணையிட்டும் கர்நாடகம் கண்டுகொள்ளாமல் இருந்தது. தற்போது உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பையும் கர்நாடகா ஏற்க மறுக்கிறது. இந்த இறுதித் தீர்ப்பிலும் தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் நியாயங்களை வழங்கவில்லை என்பது வேறு விசயம். இருப்பினும்,மத்திய அரசு கர்நாடகத்திற்கு பாதுகாப்பாக இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போலாகும்.

பக்ரா, பியாஸ், நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற நதிநீர் சிக்கல்கள் பல மாநிலங்களுக்கு இடையில் நிலவி அதற்கான விசாரணைகள் முறையாக நடந்து உத்தரவுகள் வந்து, அந்த உத்தரவுகளை மத்திய அரசு செயல்படுத்தும் போது காவிரியில் மட்டும் இந்த பாகுபாடு ஏனோ?காவிரியில் தமிழகத்தின் ஆதிபத்தியமான கீழ்ப்பாசன உரிமைகளை திட்டமிட்டு மத்திய அரசும், கர்நாடக அரசும் கபளீகரம் செய்கிறது. அதற்கு தான் அதிகாரமில்லாத ஒரு அமைப்பை ஏற்படுத்திட மத்திய அரசு துடிக்கிறது. ஒரு காலத்தில் அகண்ட காவிரியாக தமிழகத்தின் அடையாளமாக திகழ்ந்த காவிரி, இன்று வறண்ட காவிரியாக மாறுவதற்கு டெல்லி பாதுஷாக்கள் தான் என வரலாற்று பக்கங்களில் எழுதப்படும்.
#காவிரி_மேலாண்மை_வாரியம்
#காவிரி_விவகாரம்
#தமிழக_விவசாயிகள்
#Cauvery_Management_Board
#TamilNadu_Farmers
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-03-2018

No comments:

Post a Comment