Saturday, March 3, 2018

சத்யமேவ ஜெயதே

மக்களே, நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய நாடாளுமன்ற, மக்களவையின் 542 உறுப்பினர்களில் 185 உறுப்பினர்கள் கிரிமினல்கள். குற்றவாளிகளாக வழக்கு மன்றத்தில் நிற்கின்றனர். கிட்டத்தட்ட 40% பேர் குற்றவாளிகள். சாதாரண குற்றங்கள் அல்ல. கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பல கோடிகளில் லஞ்சம், பாலியல் பலாத்காரம், போதை பொருள் கடத்தலுக்கு துணை போகுதல் போன்ற கடுமையான குற்றங்கள். 
சரி. சட்டமன்ற உறுப்பினர்கள் நிலை என்ன?
இந்தியாவில் மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 4,120. இவர்களில் 1,353 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 35% ஆகிறது. 
பொது வாழ்வில் குற்றவாளிகளின் பரிணாம வளர்ச்சியும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதில் மாண்புமிகு அமைச்சர்களும் பலர் உள்ளனர். என்ன செய்ய? மக்கள் காசு வாங்கி ஓட்டு போடும் போது இப்படி கிரிமினல்கள்தானே ஆளுவார்கள். இது தான் நமது ஜனநாயகம் என்றால், அந்த ஜனநாயகம் எதற்கு? 
நாடளுமன்றத் தேர்தலில், 2004இல் போட்டியிட்டவர்களில் 462 பேர் கிரிமினல்கள், 2009இல் 1,158 ஆகவும், 2014இல் 1,404 ஆக உயர்ந்துள்ளது. நாளொரு வண்ணமாக இந்த கணக்கு ஏறிக்கொண்டு செல்வது நாட்டுக்கு நல்லதா?
தகுதியே தடை என்ற நிலையில் தகுதியானவர்களை மக்களுக்கும் பிடிக்காது. ஏனெனில் அவர்கள் ஓட்டுக்கு பணம் தரமாட்டார்கள். நேர்மையாளர்கள். நாடாளுமன்றத்தில் விவரமறிந்து பிரச்சனைகளை குறித்து பேசக்கூடியவர்கள் செல்ல வேண்டியதில்லை. அரிவாள், கம்பு, துப்பாக்கி, பணத்திற்கு விலை போகும் நபர்கள் தான் நடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் செல்ல முடியும். நேர்மையான ஆற்றலாளர்கள் தங்களுக்கு உண்மையாக மக்கள் பணியாற்றிக் கொண்டு வெளியே தெருவில் திரிந்தால் போதுமென்று நினைக்கும் நாட்டில், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் தானே நடக்கும். 
குற்றவாளிகளால் குற்றவாளிகளுக்காக குற்றவாளிகள் நடத்தும் ஆட்சியே, இன்றைக்கு ஜனநாயகத்தின் கூறுகளாகவும், மக்களாட்சியின் தத்துவமாகவும் கருதும்போது என்ன செய்ய முடியும்.
விதியே, விதியே, என்செய்ய நினைத்தாயோ?
எத்தனைத் தத்துவங்கள், நேர்மையான பார்வைகள் என்று அணுகினாலும் எந்த பயன்பாடும் கிடையாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். கிரிமினல்கள் ஆளுகிறார்கள் என்றால் அதைவிட கேவலம் வேறொன்றும் இல்லை. 
பெரும்பான்மை மக்கள் குற்றவாளிகளை ஆதரிக்கின்றார்கள் என்றாலே அவர்கள் தகுதியான ஆளுமைகள் என்று எடுத்துக் கொண்டால் அது மக்களினுடைய காட்சிப்பிழை தான். ஆயிரக்கணக்கில் கிரிமினல்களை பொது வாழ்வில் இருக்க நாம் துணை போனால் அதற்குப் பொருள் என்ன?
சற்று சிந்தியுங்கள், நாமும் அந்த குற்றவாளிப் பட்டியலில் இருக்கின்றோம் என்றுதானே அர்த்தம்.
பெரிய இடத்தில் அமர்ந்துகொண்டு சில்லறைத் தனமான நடவடிக்கைகளில் இறங்குவது நியாயம் என்றால் அப்படிப்பட்ட அரசியல் கட்டமைப்பு நமக்குத் தேவையா?
இந்த கிரிமினல்களை எப்போது பொதுவாழ்வில் இருந்து ஒழிக்கப் போகின்றோம். இது தான் எதிர்காலத்தின் சவால்.
ஆனால், மதவாதம், பொருளாதார சீரழிவு, மக்கள் விரோதம் என்ற கேடுகளின் காரணமே இப்படிப்பட்ட புரையோடிய கிரிமினல்கள் அடங்கிய நாட்டின் கட்டமைப்பு.

சத்யமேவ ஜெயதே (தமிழில்: வாய்மையே வெல்லும்) என்ற சமஸ்கிருத வாக்கியம் இந்தியாவின் தேசிய குறிக்கோளுரை ஆகும். இக்குறிகோளுரை இந்தியாவின் தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இது முண்டக உபநிடதத்தில் குறிப்பிடப்பட்ட சொல்லாகும்.

பொது வாழ்வு தூய்மையாகும் வரை இந்த சத்யமேவ ஜெயதே என்ற சொல்லை அசோகச் சின்னத்தில் இருந்து நீக்கிவிடுவது தான் பொருத்தமாக இருக்கும்.

இப்படிப்பட்ட மக்கள் விரோத மக்கள் பிரதிநிதிகளை திரும்பி அழைக்கும் முறையை மக்களுக்கு வழங்க வேண்டும்.

#தகுதியே_தடை
#பொது_வாழ்வில்_கிரிமினல்கள்
#Criminals_in_public_life
#Criminals_in_politics
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-03-2018
Image may contain: cloud, sky and outdoor

No comments:

Post a Comment

*Live in joy. Life goes by in the blink of an eye*

*Live in joy. Life goes by in the blink of an eye*. Don't live in upset, angry  or ungrateful. Look for the good, you'll find it. Ch...