Monday, March 12, 2018

தமிழகத்தின் நீர்வளமும், நீர்மேலாண்மையும்...



இந்தியாவில் 4,877 அணைகள் 10 மீட்டருக்கு மேல் உயரமானது. அதில் மகாராஷ்டிராவில் 1,693 அணைகளும், மத்திய பிரதேசத்தில் 898 அணைகளும், குஜராத்தில் 619 அணைகளும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 304 அணைகளும், கர்நாடகாவில் 230 அணைகளும், கேரளாவில் 61 அணைகளும் உள்ளன. ஆனால் தமிழகத்தில் 116 அணைகள் மட்டுமே உள்ளன. இதில் நீரைத் தேக்கும் அளவும் மிகமிகக் குறைவானதே. இந்திய மாநிலங்களின் பரப்பளவில் தமிழகம் முதல் 5 இடங்களுக்குள் வந்துவிடும். இத்தகைய நிலையில் அணைகளின் எண்ணிக்கையில் மிகவும் பின்தங்கியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இன்றைய நிலையில் தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் மொத்தம் 170 டி.எம்.சி நீரை மட்டுமே தேக்கி வைக்க முடியும். ஆனால் கர்நாடகாவில் உள்ள 5 அணைகளில் 580 டி.எம்.சி., ஆந்திரதெலுங்கானாவில் சுமார் 919 டி.எம்.சி., தண்ணீரை தேக்க முடியும். தமிழகத்தின் நீர்த்தேவையை கணக்கில் எடுத்துக் கொண்டால் சொற்ப அளவு நீரையே நாம் சேமிக்கிறோம்.
மேலும், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் பெரும்பாலானவை அண்டை மாநிலங்களை நம்பியே உள்ளது. முக்கிய நதியான காவிரி, தென்பெண்ணை போன்ற நதிகளின் நீர்வரத்து கர்நாடகத்தை நம்பியுள்ளது. பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு, சென்னையின் குடிநீருக்காக கிருஷ்ணா நதிநீர் ஆகியன ஆந்திரத்தின் தயவில் உள்ளது. நெய்யாறு, அடவிநயினார், செண்பகவல்லி, முல்லைபெரியாறு, பரம்பிக்குளம்ஆழியாறு, சிறுவாணி, பாண்டியாறுபுன்னம்பழா, பம்பாறு போன்ற பல ஆறுகளும், அச்சன்கோவில்பம்பையை, தமிழகத்தின் வைப்பாறோடு இணைப்பு போன்ற நீர்வளத்திட்டங்களும் கேரளத்தின் பிடியில் உள்ளன. இவ்வாறு தமிழகத்தின் நீர்வளத்தினை அண்டை மாநிலங்களே நிர்ணயம் செய்து வரும் அவலம் தொடர்கிறது.


உலகிற்கே விவசாயம், நீர்மேலாண்மையை சிறப்பாக கற்றுக் கொடுத்த தமிழர்கள் இன்று தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை நோக்கி தவம் கிடக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
பெருக்கெடுத்து ஓடிய காவிரியை தடுத்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை எழுப்பிய கரிகாலனின் நீர்மேலாண்மை தமிழர்களுக்கு ஒர் எடுத்துக்காட்டு. நீர்நிலைகளை மேம்படுத்துவதும் நீரை சேமிப்பதும் பண்டைய தமிழர்களின் தலையாய கடமையாக இருந்துள்ளது. வாழ்வின் தருமமாக பின்பற்றியுள்ளனர். அதை அழிப்பவர்களுக்கு தண்டனைகள் கொடுக்கப்பட்டதாக கல்வெட்டுச் செய்திகள் உள்ளது.
ஆனால் இப்போது தமிழகத்தின் நிலைமை தலைகீழாகிவிட்டது. புதிய அணைத் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. ஏற்கனவே போதிய மழை பெய்யாமலும், சுற்றுச் சூழல் மாறுபாட்டால் பருவமழை பல ஆண்டுகளாக சரிவர பெய்யாமலும், வானம் பார்த்த பூமியாக விவசாயமும் பொய்த்து, குடிக்க தண்ணீர் இல்லாமலும் மக்கள் துயரத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் பால் கட்டணம், பஸ் கட்டணங்களை உயர்த்தி அண்டை மாநிலங்களுடன் விலை ஒப்பீடு செய்யும் தமிழக அரசு இதுபோன்ற ஒப்பீடுகளை ஏன் செய்வதில்லை?
அணைகளை தூர்வாருதல், பராமரித்தல் போன்ற எந்தவித திட்டமும் இல்லாமல், மழைநீரை தேக்கி வைக்கும் எந்தவித மேலாண்மைத் திட்டத்தையும் செயல்படுத்தாமல் உள்ள அரசு, ஆக்கிரமிப்புகளையும் ஊக்குவிப்பது மேலும் சோகம். தமிழகத்தில் இருந்த பல ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் போன்றவற்றை சூறையாடி அதன் மீது பல கட்டிடங்களை எழுப்பி நீர் வழிப்பாதைகளையும் அடைத்துவிட்டனர்.
பல முக்கிய அரசு அலுவலகங்கள் தமிழகத்தில் ஏதேனும் ஒரு நீர்நிலையின் மேல்தான் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் புதிய கட்டிடங்களும் அவ்வாறே கட்டப்பட்டு வருகிறது. அரசே இப்படி முன்னோடியாக இருக்கும் போது மக்களை குற்றம் சொல்லி எந்த வித பயனும் இல்லை.
ஆற்றங்கரையில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு எந்தவித கட்டிமும் கட்டக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் இந்த விதியை காற்றில் பறக்கவிட்டு ஆற்றங்கரை மட்டுமல்லாமல் அதன் நீர்வழிப்பாதைகளையும் சேர்த்து கட்டிடங்களை எழுப்பியதால் தான் சென்னை நகர் வெள்ளத்தில் மூழ்கியது. நகரப்பகுதிகளில் போதிய வடிகால் மற்றும் மழைநீர் சேமிப்பு இல்லாத காரணத்தினால் மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. மேலும் குடிநீர் பஞ்சமும் ஏற்படுகிறது.
கிராமப்புறங்களில் மணல் கொள்ளை அமோகமாக நடைபெறுகிறது. அண்டை மாநிலங்களுக்கு டெல்டா பகுதிகளில் இருந்து தினந்தோறும் குறிப்பிட்ட சதவீத மணல் கடத்தப்படுகிறது. ஆற்றுக்குள்ளேயே குவாரிகளை நடத்தும் அவலமும் அரங்கேறுகிறது. நமக்கு நீர் கொடுக்காத அண்டை மாநிலங்களுக்கு நாம் மணலை தாராளமாக விற்றுவருகிறோம். நமது மணலைக் கொண்டே அணைகளை கட்டி நமக்கே தண்ணீர்விட மறுக்கும் அபத்தம் உலகில் எங்கும் காண இயலாது. நமது வளங்களை எல்லாம் வீணடித்து விட்டு அண்டை மாநிலங்களிடம் உரிமை என்ற பெயரில் நீரை கேட்டு ஒவ்வொரு முறையும் கையேந்தி வருகிறோம்.
தமிழகத்தை தாண்டி வடக்கு கர்நாடகத்திலும் இது போன்ற நிலை உள்ளது. எப்படி காவிரியில் கர்நாடகம் தண்ணீர் வழங்க மறுக்கிறதோ அதே போல மகதாயி நதியில் கோவா கர்நாடகத்திடம் இது போன்ற நடைமுறையை கையாளுகிறது. இது போன்ற பிரச்சனைகள் அனைத்து மாநிலங்களுக்கு இடையில் தொடர் பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது. அதற்காகவே நதிகளை இணைக்க வேண்டி நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக பல வழக்குகளைத் தொடுத்து தீர்ப்புகளை பெற்றுள்ளோம். ஆனால் மத்திய அரசு இது தொடர்பாக எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மாநில அரசுக்கோ இது தொடர்பான எந்தவித கொள்கையோ, திட்டமோ இருப்பதாக தோன்றவில்லை.
தமிழகத்திற்கு உள்ளேயே வைகைதாமிரபரணியை இணைப்பதற்கு நாம் எந்தவித முயற்சியையும் மேற்கொண்டதில்லை. மதுரை நகருக்கான குடிநீர் தேவைக்காக லோயர் கேம்பில் இருந்து தண்ணீர் எடுக்க தேனி, கம்பம் பகுதி மக்களே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை தான் உள்ளது. இப்படி தமிழகத்தின் மாவட்டங்களுக்கு உள்ளேயே இது போன்ற பிரச்சனைகள் உள்ளபோது, அண்டை மாநிலம் தண்ணீர் வழங்கும் என்று நாம் எதிர்பார்ப்பது நிரந்தர தீர்வாகுமா? என்பதை யோசிக்க வேண்டும்.
வருங்காலத்தில் இது போன்ற நிலைகளை தமிழகம் எதிர்கொள்ள வேண்டுமானால் நாம் நீர்மேலாண்மையில் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மழைநீரையும், வெள்ளநீரையும், உபரிநீரையும் வீணாக்காமல் தடுப்பணைகளை கட்டி சேமிக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். முடிந்தவரை முக்கிய நதிகளின் நீர்வழிப்பாதையின் இடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி அதை பாதுகாக்க வேண்டும். கண் துடைப்புக்காக நடக்கும் தூர்வாரும் பணிகளை எந்தவித தொய்வுமின்றி அணைகளை ஆழப்படுத்த வேண்டும். தொழிற்சாலைக் கழிவுகளை மறுசுழற்சி செய்யாமல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும்.
அண்டை மாநிலங்களுடன் நாம் தண்ணீர் கேட்பதற்கு முன்னர் குறைந்தபட்சம் நமது தமிழக நதிகளையாவது இணைத்து நீர்மேலாண்மையை செயல்படுத்த வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டிய ஒன்றே. ஆனால் தமிழகம் முழுமைக்குமான நீர்மேலாண்மை திட்டங்கள் இன்றைய நிலையில் அவசியமாகிறது. இதை நாம் செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் தமிழகம் தென்னாப்பிரிக்காவின் ‘கேப்டவுன் – ஜீரோடே’ ஆக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
#நீர்மேலாண்மை
#நீர்வளம்
#Water_Resources_Tamil_Nadu
#Water_Conservation
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-03-2018

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...