Friday, December 9, 2022

எல்லையில் கேரளா அரசு டிஜிட்டல் சர்வே #*தமிழக முதல்வர் அவர்கள் கவனத்துக்கு*...

எல்லையில் கேரளா அரசு டிஜிட்டல் சர்வே #*தமிழக முதல்வர் அவர்கள் கவனத்துக்கு*...
—————————————

நவகேரளம் 1956 இல் அமைந்த நவம்பர் 1 - ஆம் தேதியில் இருந்து தமிழக எல்லையில் கேரளா அரசு டிஜிட்டல் சர்வே எடுத்து வருகிறது.  தமிழக எல்லையில் நமது தமிழக நிலங்கள் பறிபோகக் கூடிய சூழ்நிலை உள்ளது. இது குறித்து,  தமிழக அரசுக்கு சரியான தாக்கீது அனுப்பாமலேயே நிலங்களை அளந்துள்ளது கேரள அரசு. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி என எல்லைப்புற மாவட்டங்களில் கேரள அரசு டிஜிட்டல் சர்வே எடுப்பதை எதிர்த்து போராட்டங்களும் நடத்தினார்கள். 

நானும் இதுகுறித்து எனது வலைதளங்களில் நவம்பர் 1 - ஆம் தேதி பதிவு செய்திருந்தேன்.
இது குற்த்து;முதல்வர் என்ன செய்கிறார்? அவருக்கு இது தெரியுமா? வருவாய்த்துறை அமைச்சருக்கு இது தெரியுமா? என் முகநூலைப் பார்த்துவிட்டு, போகிற போக்கில் வருவாய்த்துறை அமைச்சர் ஏதோ சொன்னார். “நிலங்களை அளந்தபிறகு இரு மாநிலங்களும் பேசி முடிவெடுப்போம்” என்று அவர் சொன்னது ஒப்புக்குச் சொன்னதாக இருக்கிறது. என்ன செய்திருக்க வேண்டும்? வருவாய்த்துறை அமைச்சர் நேரடியாகச் சென்று கேரள அரசின் டிஜிட்டல் சர்வேயைச் சரி பார்த்திருக்க வேண்டும். முதல்வரும், டிஜிட்டல் சர்வே கூடாது; தமிழகம் பாதிக்கப்படும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஏன் எழுதவில்லை. என்ன செய்ய... இதுதான் இன்றைய தமிழகம்!

தமிழ்நாட்டுடன் அதிகபட்சமாக 830 கி.மீ. எல்லையைக் கேரளம் கொண்டிருக்கிறது. இதில் 203 கி.மீ. மட்டுமே தமிழ்நாடு - கேரள அரசுகளால் வரையறுக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. எஞ்சிய 627 கி.மீ. பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பகுதிகளாகவும் வனப் பகுதிகளாகவும் இருப்பதால், நில அளவைப் பணிகள் இரண்டு மாநில அரசுகளாலும் இதுவரை செய்யப்படவில்லை. இந்தச் சூழலில்தான் கேரள அரசு நில அளவை, எல்லை வரையறைப் பணியை தற்போது கையில் எடுத்திருக்கிறது.
 நில ஆவணங்களைப் பராமரிப்பதற்காக டிஜிட்டல் சர்வே என்ற அளவில், இதுபற்றி கடந்த சில ஆண்டுகளாகவே கேரள அரசு பேசி வந்தது.  தற்போது செயலில் இறங்கிவிட்டது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இந்தப் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கேரள அரசு, ரூ.856.42 கோடி நிதியையும் ஒதுக்கியிருக்கிறது.
 இந்த டிஜிட்டல் சர்வே பணியில் 1,500 நில அளவையாளர்கள், 3,200 உதவியாளர்கள் என ஒட்டுமொத்தமாக 4,700 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பிரம்மாண்டமான நில அளவைப் பணிக்காக, கேரள அரசு ‘என்ட பூமி’ (என் பூமி) என்ற இணையதளத்தையும் தொடங்கி, இது தொடர்பான பணிகளையும் ஒருங்கிணைத்து வருகிறது.

#தமிழகஎல்லையில்_கேரளா_அரசு_டிஜிட்டல்_சர்வே

#ksrpost
9-12-2022.


No comments:

Post a Comment

விவசாயம்⁉️

இரண்டு கோடிகள் கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்...!! இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் ...