Wednesday, March 29, 2023

#இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் #இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள். *Parliament* # *MP most privileged persons*



—————————————
இந்திய நாடாளுமன்றம் இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு அதிக அளவில் முடக்கப்பட்டே வருகின்றது. நேரு, சாஸ்திரி பிரதமராக இருந்த காலத்தில் 180 நாள்களுக்கு மேல் இந்திய நாடாளுமன்றம் கூடியதெல்லாம் உண்டு. ஏன், 1966 வரை 200 நாட்களுக்கு மேல் நள்ளரவு தாண்டி 2.00 மணி வரையும் இரு அவைகள் நடந்துள்ளன.  இன்றைக்கு அதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. இந்திரா காந்தி காலத்தில் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம், நாடாளுமன்ற ஆவணங்களைக் கிழித்துப் போடுதல் என ஆரம்பித்தது, இன்றைக்கு இரு அவைகளும் நடத்த முடியாத அசாதாரண நிலைக்குத் தள்ளிவிட்டது. 

இந்திய நாடாளுமன்றம் ஓர் ஆண்டுக்கு மூன்று முறை கூடுகிறது.
வருடாந்திர வரவு செலவு திட்டம் (Budget Session) (பிப்ரவரி முதல் மே வரை 4 மாதங்கள்
மழை கால கூட்டம் (Monsoon Session) (ஜூலை முதல் செப்டம்பர் வரை 3 மாதங்கள் )
குளிர் கால கூட்டம் (Winter Session) நவம்பர் முதல் டிசம்பர் வரை 2 மாதங்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு அமர்வுகள் உண்டு. 
காலை அமர்வு (Morning sitting) 11 மணி முதல் 2 மணி வரை -2 மணி நேரங்கள்.
மதிய அமர்வு ( Post-lunch sitting) 2 மணி முதல் 6 மணி வரை - 4மணி வரை
இதில் கேள்வி நேரம், பூஜ்ய நேரம், வாய் சண்டை நேரம் மற்றும் தூக்க நேரம் எல்லாம் அடங்கும்.
வாரத்தில் இறுதி இரு நாட்கள் மற்றும் தேசிய விடுமுறை தினங்களில் இவர்கள் கூடுவதில்லை. ஆக ஒரு மாதத்திற்கு சராசரி 20 நாட்கள் வைத்து கொள்வோம்.

வருடாந்திர வரவு செலவு திட்டம் - 80 நாட்கள்
மழைக் கால கூட்டம் - 60 நாட்கள்
குளிர் கால கூட்டம்- 40 நாட்கள்
மொத்தம் சராசரி 180 நாட்கள் ஒரு வருடத்திற்கு கூடுகிறார்கள். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வைத்து கொண்டால் ஒரு வருடத்திற்கு 1080 மணி நேரங்கள் கூடுகிறார்கள்.

நாடாளுமன்றம் ஒரு நிமிடம் கூடுவதற்கு ரூ.2.5 லட்சம் செலவு ஆகுவதாக ஒரு தரவு சொல்கிறது. அதன் படி பார்த்தால் 64,800 நிமிடங்கள். இதற்கு ஒரு நிமிடத்திற்கு ரூ.2.5 லட்சம் செலவு என்று வைத்து கொண்டால் மொத்தம் ரூ.1620 கோடி வருகிறது.

இதுமட்டுமா?
 ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆண்டிற்கு மொத்த 32 லட்சம் ரூபாய் ஊதியமற்ற செலவுகளுக்கு அளிக்கப்படுகிறது. இது போக அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இலவச ரயில் பயணங்கள், இலவச விமானப் பயணங்கள், டெல்லிக்கு மட்டும் 40 முறை இலவசமாக அவரும் அவர் துணைவியாரும் சென்றுவிட்டு திரும்பலாம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 வருடத்திற்கு அரசு கஜனாவிலிருந்து 850 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவ்வளவு சலுகைகளும், பயன்களையும் பெற்றுக் கொண்டு மக்கள் பிரதிநிதிகள் செய்யக் கூடிய  பணிகள் அனைத்தும் பயனற்ற நிலையிலேயே உள்ளன. 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் “திறம்பட செயல்படும் நோக்கில்” சில சலுகைகள் மற்றும் நன்மைகளுக்கு உரிமையுடையவர்கள். இவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1954 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. சட்டத்தின் சமீபத்திய திருத்தம் மே 11, 2022 அன்று செய்யப்பட்டது.

இவற்றில் சில சலுகைகள் மற்றும் பலன்கள் பின்வருமாறு :
ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் மற்றும் பணியின் போது வசிக்கும் எந்த காலகட்டத்திலும் ஒரு நாளைக்கு ரூ.2,000 செலவினப்படிகள் கிடைக்கும். ‘கடமையில் இருக்கும் காலம்’ என்பது, ஒரு உறுப்பினர் நாடாளுமன்றத்தின் அமர்வு அல்லது ஒரு குழுவின் அமர்வு நடைபெறும் இடத்தில் அல்லது அத்தகைய அமர்வில் கலந்து கொள்வதன் நோக்கம் அல்லது உட்கார்ந்திருப்பது அல்லது அத்தகைய பிற வணிகத்தில் கலந்து கொள்வதன் நோக்கத்திற்காக, அத்தகைய உறுப்பினராக அவரது கடமைகளுடன் தொடர்புடைய பிற வணிகங்கள் பரிவர்த்தனை செய்யப்படும் இடத்தில் இருக்கும் காலம் என்று பொருள்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் தினசரி செலவினப்படிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, செலவு பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் அதிகரிக்கப்படுகிறது.
பயணப் படிகள் மற்றும் இலவச இரயில் போக்குவரத்து:
நாடாளுமன்ற உறுப்பினராக தமது கடமைகள் தொடர்பாக மேற்கொள்ளும் எந்தவொரு பயணத்தையும் எளிதாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயண படியையும் பெறுகின்றனர். தங்கள் கடமைகளை நிறைவேற்ற அவர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு பயணத்திற்கும் விமானக் கட்டணத்தை அவர்கள் பெறுகிறார்கள். சாலை வழியாகப் பயணம் செய்தால், ஒரு கிலோ மீட்டருக்கு 16 ரூபாய் மைலேஜ் கட்டணமாக வழங்கப்படுகிறது.
முன்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரயிலில் பயணம் செய்யத் தேர்வு செய்தால் அவர்களுக்கும் ரயில் கட்டணம் செலுத்தப்பட்ட நிலையில், இப்போது அவர்களுக்கு இலவச, மாற்ற முடியாத பாஸ் வழங்கப்படுகிறது, இது குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பில் எந்த ரயிலிலும் எந்த நேரத்திலும் பயணிக்க உரிமையளிக்கிறது. இந்த பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் காலத்திற்கு செல்லுபடியாகும். எந்தவொரு காரணத்திற்காகவும் ரயில் அனுமதிச் சீட்டை பெறவில்லை என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரயிலில் இலவசப் பயணம் செய்ய உரிமையுண்டு, அவர்களது கட்டணம் திருப்பிச் செலுத்தப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீராவி கப்பலில் இலவச போக்குவரத்தை அனுமதிக்கும் விதிமுறைகளும் உள்ளன. கடலோர, தீவு அல்லது ஆற்றங்கரை மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
தொகுதி செலவினங்கள்
ஒரு உறுப்பினர் தொகுதி உதவித்தொகையாக மாதம் ரூ.75,000 பெற தகுதியுடையவர்.
அலுவலக செலவுப் படிகள்
ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவர்களின் அலுவலக செலவுகளை கவனிக்க மொத்தம் ரூ.60,000 மாதம் ஒதுக்கப்படுகிறது. இதில், 20,000 ரூபாய் ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் தபால் கட்டணத்திற்குச் செல்கிறது, லோக்சபா செயலகம், செயலர் உதவி பெறுவதற்காக பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் 40,000 ரூபாய் செலுத்துகிறது.

வீட்டு வசதி மற்றும் பிற தொடர்புடைய படிகள்
ஒவ்வொரு உறுப்பினரும் தனது பதவிக் காலம் முழுவதும், பணம் செலுத்தாமல், ஓர் அடுக்குமாடி குடியிருப்பு வடிவில் தங்குவதற்கு உரிமையுண்டு. அவர்களுக்கு பங்களா ஒதுக்கப்பட்டால், சாதாரண உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு இலவச மின்சாரம் (ஆண்டுக்கு 50,000 யூனிட் வரை) மற்றும் இலவச தண்ணீர் (ஆண்டுக்கு 4,000 கிலோ லிட்டர் வரை) ஆகியவையும் உண்டு.
நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சில மரச்சாமான்கள் மற்றும் கூடுதல் சேவைகளுக்கான ஏற்பாடுகள் (எம்.பி.யின் இல்லத்தில் இணைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் போன்றவை) மற்றும் குறிப்பிட்ட கால பராமரிப்பு ஆகியவையும் உள்ளன.

தொலைபேசிக் கட்டணம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் டெல்லி இல்லம் மற்றும் அலுவலகம், அத்துடன் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலத்தில் உள்ள அவர்களது வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் தொலைபேசிகளை இலவசமாக நிறுவுவதற்கும் இயக்குவதற்கும் உரிமை உண்டு. எந்த வருடத்திலும் தொலைபேசியிலிருந்து செய்யப்படும் முதல் 50,000 உள்ளூர் அழைப்புகளுக்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய ரோமிங் வசதியுடன் மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட்டின் (எம்.டி.என்.எல்) ஒரு மொபைல் போன் இணைப்பையும், எம்.டி.என்.எல் அல்லது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) இன் மற்றொரு மொபைல் போன் இணைப்பையும் தனது தொகுதியில் பயன்படுத்துவதற்கு தேசிய ரோமிங் வசதியைப் பெற உரிமை உண்டு. அத்தகைய கையடக்கத் தொலைபேசி இணைப்புகளைப் பதிவு செய்தல் மற்றும் வாடகைக்கு எடுப்பது தொடர்பாக அவர் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

மருத்துவ சேவை
500 ரூபாய் (உறுப்பினரின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும்) மாதாந்திரக் கட்டணத்திற்குப் பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இலவச மருத்துவச் சேவையைப் பெற உரிமை உண்டு.

இவ்வளவு சலுகைகளையும், உரிமைகளையும் பெற்று வலம் வரும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், உண்மையிலேயே மக்கள் பணி செய்வதற்கு தகுதியானவர்களாக இருக்கிறார்களா? என்று பார்த்தால் இல்லையென்றே சொல்லத் தோன்றுகிறது.
 
இன்றைக்கு என்ன நிலைமை? நாடாளுமன்ற உறுப்பினர்கள்  பிரச்னைகளைப் பற்றிய அறிதல் புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். காசு கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கி வெற்றி பெற்றவர்களிடம் என்ன நேர்மை இருக்கப் போகிறது? கடுமையான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஒரு காலத்தில் நேர்மையற்ற அரசியல்வாதிகள், அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆனார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்த குற்றவாளிகள் இன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் செல்லக் கூடிய பரிணாம அநியாயப் போக்கு நடந்து கொண்டு வருகிறது. 
 
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னால் மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பபட்ட ஒரு எம்பி ஆங்கிலத்தில் ராஜ்யசபா, பார்லிமெண்ட் என்று எழுதத் தெரியாமல், எழுத்துப் பிழைகளோடு எழுதினார். அப்படிப்பட்ட  ஒருவரை அவர் சார்ந்த கட்சித் தலைமை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதென்றால் அது எவ்வளவு வேடிக்கை, விபரீத செயல் அல்லவா? 
வங்கி லோன் வாங்கி ஏமாற்றி லண்டனில் பதுங்கியிருக்கும் மல்லையா, மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமி போன்றவர்கள் எல்லாம்,  மருத்துவக் கல்லூரியில் படிக்க மருத்துவப் படிப்புக்கான இடங்களை விலைக்கு  வாங்குவதைப் போல ராஜ்ய சபா உறுப்பினர் பதவியையே  விலைக்கு வாங்கி, ராஜ்ய சபாவுக்குச் சென்றதும் உண்டு. இப்படியான உறுப்பினர்களிடம் நாம் என்ன நேர்மை, கடமையுணர்ச்சி என்பதை எல்லாம் எதிர்பார்க்க முடியும்?  இதைக் குறித்து விரிவாக பலமுறை என்னுடைய வலைதளங்களில் தெளிவாகவும்,  விரிவாகவும் எழுதியுள்ளேன். 

இன்றைக்குத் தினமும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன.  நாடாளுமன்ற  உறுப்பினர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று எத்திக்ஸ் கமிட்டி போன்ற பல குழுக்களை அமைத்தும், நாடாளுமன்றம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று குழுக்களிடம்  அறிக்கைகளைப் பெற்றும்  இதற்கான விமோசனம் இதுவரை ஏற்படவே இல்லை.
எம்.பி என்றால் மெம்பர் ஆப் பார்லிமென்ட் அல்ல, விஜபியைவிட  மோஸ்ட்  பிரிவ்லேஜ்டு பெர்சன் என்றுதான் எம்பிகளைக் கருத வேண்டும் என்று ஒரு நண்பர் சொன்ன கருத்துதான் இப்போது  நினைவுக்கு வருகிறது. 

நானும் பார்த்து வருகிறேன். 1990 - இல் இருந்து நாடாளுமன்றம் இரு அவைகளிலும் நடக்கும்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுநாள் காலையில் அவையில் பேச வேண்டிய பேச்சுக்கான தரவுகளை கேட்பார்கள். முதல் நாள் இரவு 7.00 -8.00 மணியளவில் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாடு பிரச்னைகள், ஈழப் பிரச்னை,  காவிரி பிரச்னை என எந்தப் பிரச்னைகள் குறித்தும் அவை பற்றிய தரவுகள் வேண்டும் என்று கேட்கும்போது,  நான் எவருக்கும் செவிமடுக்காமல், "இதெல்லாம் தெரியாமல் ஏன் எம்பியாக பதவி ஏற்று இருக்கிறீர்கள்? நாடாளுமன்ற நூல் நிலையம் சென்று படித்து சுயமாகப் பேசுங்கள். உங்களைச் சொல்லி குற்றமில்லை. உங்களைப் போன்ற தகுதியற்றவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய கட்சித் தலைமையைத்தான் சொல்ல வேண்டும்'' என்று அவர்களிடம் கறாராகச் சொல்வேன். இப்படி  

நாடாளுமன்றத்துக்குத் தகுதியற்றவர்களை கட்சித் தலைமை அனுப்பினால் இப்படியான நிலைதான் இருக்க முடியும்.
 மக்கள் வரிப் பணத்தில்  இவ்வளவு செலவுகள் செய்தும், மக்களுக்கான நலப் பணிகள் குறித்து விவாதிக்காமல் நாடாளுமன்றத்தை முடங்கியிருக்கச் செய்வதில் யாருக்கு என்ன பயன் இருக்கப் போகிறது?  காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

 கே எஸ் இராதாகிருஷ்ணன்.
#ksrvoice, #KS_Radhakrishnan, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை,, #அரசியல், #புரியாதபுதிர், #நேரு, #பிரதமர், #இந்திரா, #nehru, #indiragandhi,#இந்திய_நாடாளுமன்ற_உறுப்பினர்கள் #MPs #mp_most_privileged #Parliament 

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#KSR_Post
29-3-2023.

No comments:

Post a Comment