Thursday, October 26, 2023

#*வாழ்க்கை*-#*நிர்மலம்* #*மாசின்மை* #*நிர்மதி* #*நிம்மதி*

#*வாழ்க்கை*-#*நிர்மலம்* #*மாசின்மை* #*நிர்மதி* #*நிம்மதி* 
—————————————
மனித வாழ்க்கையை நீண்ட காலம் கவனித்து வருகின்ற முறையில் எனக்கு சில விஷயங்கள்  முதலில் பிடிபட மறுத்தது. அல்லது அதை ஏற்பதில் சங்கட உணர்ச்சிகளையும் அடைந்திருந்தேன். ஆனால் இதுவரை நான் பழகிய மனிதர்களையும் அவர்களின் பல்வேறு அரசியல் செயல்பாடுகள் மற்றும் பொதுவான விஷயங்களில் கூட நான் பழகிப் பார்த்தபோது எத்தனை கீழ்மையான மனிதர்களோடு நாம் நம்மை அறியாமல் பழகி இருக்கிறோம்.அதுதான் போகட்டும் எனில் அதில் எத்தனை தூய்மையானவர்களை இழந்திருக்கிறோம்  என்கிற துக்கம் தான் ஏற்பட்டது . தனிமனிதர்களின் உளவியல் சிக்கல்கள்  எழுதத் தூண்டும் காரணிகளாக இருக்கின்றன.

இன்று கோவையில் என் நண்பர் வி சுந்தர் உடைய ஆர் எஸ் புரம் இல்லத்திற்கு சென்ற போது  அவர் வீட்டைவிட்டுக் காணாமல் போய் 35 வருடங்கள் ஆகிவிட்டது என்பது உறைத்தது. மிக வசதியான செல்வ செழிப்பான குடும்பம் மனைவி ஏராளமான  சொத்துகள் எல்லாம் இருந்தும் அவர் போயேவிட்டார். மிக அருமையானவர் பண்பானவர் எல்லோருக்கும் உதவி செய்யக்கூடியவர். சுவாமி விவேகானந்தர் மீது பற்று கொண்டவர். என்னுடன் பி எல் படித்தார். சட்டம் மட்டுமல்ல  தமிழ் இலக்க்கியம் என இந்த வாழ்வின் கதியை முழுவதும் புரிந்து கொண்டவர்தான் ஆனால் ஏனோ அவ்வளவு வசதிகளையும் செல்வாக்கையும் விட்டுவிட்டு எங்கோ காணாமல் போனவர் இன்னும் வீடு திரும்பவில்லை.

குடும்ப நண்பர் என்கிற முறையில்  அங்கே எனக்கு இன்று உணவு தயாரித்து ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கென்னவோ மனம் கேட்கவில்லை. சுந்தரின் முகம் தான் திரும்பத் திரும்ப மனதில் வந்தது. ஏன் அப்படி போனார் என்று கேள்வியுடன் மனபாரத்துடன் திரும்பி விட்டேன். 

இது மட்டும் அல்லாது   பி இ பொறியல் படித்து அதன் மூலம்  தனியாக தொழில் செய்து கொண்டிருந்த  எனது சொந்த கிராமத்தை சர்ந்தவர். கோவில்பட்டியை சேர்ந்தவர்…எஸ். வெங்கடசாமி  என்ற அருமையான மனிதர்.  1960ல் எனக்கு கோவை விவசாயக் கல்லூரியில் படிக்க  நேர்முக தேர்வுக்கு சென்ற  போது முதல் காந்திபுரம் திருவள்ளுவர்ப் பேருந்து நிலையத்திலும்,  கோவை ரயில் நிலையத்திலும் வந்து காத்திருந்து  பிறகு என்னை அழைத்துக் கொண்டு செல்வார் .அவரும் பிறகொரு  நாளில் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ காணாமல் போய்விட்டார். .எல்லா விதமான பிரச்சனைகளையும் என்னிடம் மனம் விட்டு பேசக்கூடியவர் மிகச் சிறந்த அறிவாளி! நுட்பமானவர்! அவருக்கு எல்லாம் கிடைத்துத்தான் இருந்தது. ஆனாலும்  அவரும் எங்கோ போய்விட்டார். இதுவரை இருக்கும் இடம் கூட தெரியவில்லை. எனக்குத் தெரிய இப்படி பல மனிதர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். யாருக்கும் தெரியவில்லை இவர்கள் யாரும் இன்று உயிருடன் இருக்கிறார்களா இல்லையா? இருந்தால் எங்கே இருக்கிறார்கள்?

ஐஏஎஸ் அதிகாரியான திருமதி ஷீலா ராணி சுங்கத் அவருடைய கணவர் சுங்கத் அவர் ஐஏஎஸ் . வீட்டை விட்டு போய்விட்டார்.அவர் சில நாட்கள் காணாமல் போய் விட்டார். ஏன் 
இப்படியான முடிவுகள் என தெரியவில்லை.

ஏன் அப்படி போய்விடுகிறார்கள்.
நல்ல படிப்பு அதற்கேற்ற பணி செல்வாக்கு வசதி வாய்ப்புகள் மனைவி தாம்பத்தியம் நட்பு சுற்றம் உறவினர்கள் இன்னும் எல்லாம் இருந்தும் இவர்களுக்கு ஏன் மனம் இவ்வாறு முடிவெடுத்து விடுகிறது சித்தார்த்தன் என்ற கௌதம் புததர் அரச வாழ்வையும் துறந்து மனைவியையும் தன் குழந்தைகளையும் விட்டு ஏன் வெளியேறிக் காணாமல் போனார்?  உண்மையில் அவர் எதைத்தேடிப் போனார்?. இப்படியான வெளிப் போக்கின் விசித்திரத்தை  ஒரு வகையான தத்துவத் தளத்தில் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் இவ்வாறு பலரும் காணாமல் போய்விடுவது ஒரு அதிசயமான 
ஆய்விற்குரிய சம்பவங்கள் தான். நளன் நிலை…?

இன்று வரை இந்தியாவில் 3 லட்சத்துக்கும்  அதிகம் பேர்கள் எந்த முகவரி அற்றும் எங்கு இருக்கிறாரகள் என்று தேட இயலாதபடிக்கும் காணாமல் போய்விட்டார்கள் என்று சொல்கிறார்கள். இதில் பெண்களும் குழந்தைகளும் அடக்கம்.

இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வரர் அனந்தகிருஷ்ணன் மலேசியாவில் இரட்டைக் கோபுரங்களை கட்டியவர் அவரது ஒரே மகனான சிறு வயது பையன் 10 வயதில் வீட்டை விட்டு எங்கோ தொலைந்து போகிறான் .தேடி அலைந்து பத்து வருடங்களுக்கு பிறகு அவன் திபெத்தில் இருக்கக்கூடிய ஒரு  புத்தத் துறவிகளின் மடத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே போய் மகனை சந்திக்கிறார்.கூட  வருமாறு அழைக்கிறார் உமது பணம் உங்களுடைய வசதி செல்வாக்கு வாய்ப்பு எதுவும் எனக்கு வேண்டாம் நான் அமைதியாக இந்த துறவு மடத்திலிருந்து வாழ்நாளை சாத்வீகமாக கழித்து விடுகிறேன் என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டான். எவ்வளவோ சொல்லியும் அவனை அவர் அழைத்துப் போக இயலவில்லை.

இந்த இக போக வாழ்க்கை மீதான மொத்த பரிணாமங்களையும் புரிந்து கொண்டபின்புதான் அல்லது அதில் இருக்கும் இன்மையையும் வெறுமையும் அறிந்து கொண்ட பின்தான் இவர்கள்  இப்படிக் கிளம்பிச் சென்று விடுகிறார்கள் என்று  தோன்றுகிறது.

மனிதர்கள் தன் விடுமுறையைக் கழிக்க வந்து போகும் இடம் தான் இந்த பூமி என்று தோன்றுகிறது.  இதற்குத்தான் பிறவி வாழ்வு இன்று பெயரிட்டுக் கொள்கிறோம்.

அமெரிக்காவிலும் இந்தியாவில் தங்களது வர்த்தகத்தால் கொடிகட்டிப்பறந்த சிவகாசி அய்ய நாடார்  வாரிசான அதிபன் போஸ் கூட இன்றைய வாழ்நாளில் "இறை பணிக்காக நான் திரும்பி என் வாழ்நாள் முழுவதும் அதற்கு ஒப்படைத்து விட்டேன்" என்று சொல்கிறார். அவருக்கு நான் வழக்கறிஞர் கூட.

உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் கூட "பணத்தால் எனக்கு ஒரு பலனும் இல்லை" என்று ஒரு பேட்டியில் சொல்கிறார்.

இதையெல்லாம் ஒரு பக்கம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் அதிகாரத்திற்காகவும் பணத்திற்காகவும் பதவிக்காகவும் விசுவாசத்தையும் பணிவையும் காட்டி பிறர் கால்களை நக்கி பிழைக்கும் ஒரு கூட்டம் இன்னும் தங்கள் வாழ்க்கை மிக மதிப்புக்குரியது பாரம்பரியமிக்கது என்றெல்லாம்  தறுதலைகளைப் போல நடந்து கொள்கிறார்கள்.

அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்தராத்திரியில் கொடிபிடிப்பான் என்பது போல இவையெல்லாம் காலப்போக்கில் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்பதையும் உணர்ந்து கொண்டுதான் இந்த லௌகீக வாழ்வின் துக்கங்களில் சுமைகளில் இருந்து அவர்கள் விடுபட்டுப் போய்விடுகிறார்கள் போல. 
"நல்லவர்களுக்கு அழகு சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவது" என்று ஒரு பழமொழியே இருக்கிறது.

 இன்றைக்கு மேசையில் இருந்த  சின்னாளபட்டிக்கவிஞர் யவனிகா ஸ்ரீ ராமின் கவிதை தொகுப்பை தற்செயலாக புரட்டிக் கொண்டிருந்தபோது  ஒரு கவிதை எனக்குக் கண்ணில் பட்டது இந்தப் பதிவிற்கு அது ஏதோ ஒரு வகையில் பொருத்தமாக இருப்பதாய்ப் பட்டதால் அதை இங்கே பதிவு செய்கிறேன்.

பருவம் தவறுவது

இடைவெட்டாய்ப் பக்கவாட்டில் அலையாதே
காட்சிகளை ஒரு கேமராவைப் போல சேகரிக்க முடியவில்லை
எதிரில் பிணம் வந்தால் நல்லது என்கிறார்கள்
நமக்குக் கோடைகாலம்
 தோல்ப் புண்களோடு திமிரையும் கொண்டு வருகிறது
கால்நடைகளை அது கழிச்சலுக்கு உள்ளாக்குகிறது
பருவம் தவறுவது நம்மைச் சுயநலம் ஆக்குவதற்குத் தான்
இல்லையெனில் மழைக்காலத்தில் தானியங்களின் விலை ஏன் கூடுகிறது
நம்மில் பலர் இறந்து போனவர்களைப் போல ஏன் காணாமல் போய்விடுகிறார்கள்
தயவுசெய்து பக்கவாட்டில் இருந்து எப்போதும் அழைக்காதே
அது மரணத்தை ஞாபகப்படுத்துகிறது
அம்புக்குறிபோல் முன்னோக்கிச் சென்றிருந்த ஒரு பறவை கூட்டத்தை ஏதோ ஒன்று சரேலென  தனது பக்கவாட்டில் இழுத்து மறைத்ததை இன்று நான் வானத்தில் பார்த்தேன்.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
26-10-2023.


No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...