Tuesday, October 31, 2023

#பசும்பொன்தேவர்திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் (Muthuramalingam

#பசும்பொன்தேவர்திருமகனார்
முத்துராமலிங்கத்தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் இவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் வருடந்தோறும் கலந்துகொண்டு வணங்குகின்றனர் எல்லா அரசியல்வாதிகளும் பசும்பொன்னை நோக்கி வருடம் தோறும் போய்  வருகிறார்கள். எதற்கு என்று பார்க்கத்தான் வேண்டி இருக்கிறது.













தேசிய திருமகன் என்று போற்றப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் அக்காலங்களில் தமிழ்நாட்டின் தென்பகுதியில் எல்லா அடித்தள மக்களையும் அரவணைத்து தனது நிலங்களை கூடப் பொதுவுடமை ஆக்கி சுதந்திர உணர்ச்சியை நாடெங்கிலும் எழுப்பவும் அதே சமயம் கீழைத் தேய ஆன்மீகமே இந்தியாவின் இறையாண்மை என்றும் சொல்லிக் கொண்டிருந்தவர்.

காங்கிரஸ்காராகவும் இல்லாமல்  ஒரு நில உடமைச் சுவான்தாராகவும் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் அதில் சலிப்புற்று ஆன்மீகப் பாதையையும் வீரத்தையும் தேடி நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் வழியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியைத் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார். அன்றைய காந்தி உட்பட்ட காங்கிரஸின் சாத்வீக போராட்டங்களுக்கு மறு தலையில் வீரமும் விவேகமும் தேசியமும் தெய்வீகமும் பிற்கால இந்திய அரசின் ஆளுமைக்கு ஒரு புனித நடைமுறையைத் தர வேண்டும் என்று அகில இந்திய அளவில் குறிப்பாக  இந்தியாவின் தெற்கிலிருந்து தன் தீவிரவாதக் குரலை எழுப்பினார். கச்சவான ஒரு பொதுஉடமைத்தனம் அவரின்  மனதில் நடைமுறை சார்ந்து பண்படாத நிலையில் இருந்தது.அதை ஒரு துறவு மனநிலை என்று கூட நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

அன்றைய திராவிடம் பேசும் அனைத்து தலைவர்களும் தேசியத்தில் செல்வாக்கு பெற்றிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு கட்டுப்பட்டு தான் இங்கு பகுத்தறிவு கொள்கைகளைக்கூடப் பரப்பினார்கள். ஆனால் எப்போதும் இந்திய தேசியத்தில் அதீதப் பற்றுடன் இருந்த பசும்பொன் அவர்கள் சுதந்திரத்திற்கு பிறகான தமிழ்நாட்டில் முதலமைச்சராக வருவதற்கு காந்தியார் முன்மொழிந்த ராஜாஜியைத் தவிர்த்து விட்டுப் பச்சை தமிழனாகவும்  அடித்தள மக்களின் பிரதிநிதியாகவும்  காங்கிரஸில் உழைத்த காமராஜரை மதித்தார்.

அப்படியான ஒரு  தலைவரை சாதியப் பின்னணிகள் இல்லாமல் தேசிய தலைவராக பார்க்க வேண்டும்.

இந்த இந்த ஓட்டு பொறுக்கி அரசியல் தனத்திற்கு எல்லா மக்களையும் சமமெனக் கருதியபசும்பொன்னாரைப் பலியிடுவது எந்த வகையில் நியாயம்.

 மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தலித்துகளுக்கான ஆலய பிரவேசத்தில் பசும்பொன்னாரின் பங்கு எவ்வளவு முக்கியம் என்று அறிந்தவர்களுக்கு இந்த சுயலாப ஓட்டுகளை வாங்க அவரைப் போய் போலியாக வணங்கி விட்டு வரும் அரசியல்வாதிகளை நன்றாகவே அடையாளம் தெரியும். உண்மையில் இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல்ச் செய்து கொண்டிருக்கிறார்கள் .மிகப்பெரிய தேசியத் தலைவரை மறுபடி மறுபடி இம்மாதிரி அரசியல்வாதிகள் போய் அஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தி  மீண்டும் அவரை அவரை அவர் பிறந்த சாதிக்குள் நான் அடைத்து விட்டுத்தான் வருகிறார்கள். எவ்வளவு பெரிய வெட்கக்கேடு!  இன்று பிறப்பால் அவரது சாதியைச் சேர்ந்தவர்கள் ஆதாயவாதப் பொறுக்கிகள் பசும்பொன்னாரை எங்கள் இனமான குலத் தலைவன்  என்று சொல்லி அவரை தங்கள் சாதி அடையாளத்திற்குள்ளே மீண்டும் மீண்டும்  குறுக்கி  வைக்கிறார்கள். இன்றைக்கு தேசிய தலைவர் ஆன பசும்பொன்னார்  தன் பிறப்படையாளச்சாதியை வைத்து ஏமாற்றி பிழைக்கும் அவரின் சொந்த சாதி சுரண்டல்வாதிகளுக்கு ஒரு அரசியல் மூலதனமாகிவிட்டார் !இதையா பசும்போன்னார் எதிர்பார்த்தார்? காலம் கலிகாலம்?

கண்ணீர் விட்டா வளர்த்தோம்
சுதந்திரப் பயிரை செந்நீரால் காத்தோம் என்கிற தலைவர்கள் எல்லாம் மறைந்து அதிகாரத்தை பயன்படுத்தி கொழுத்த பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் இன்றைய கொள்ளை கும்பல்களைத்தான் நாம்  அரசியல் தலைமைகளாக  ஏற்றுக் கொண்டிருக்கிறோம் . சரி அவர்கள் உண்மையில் என்ன வகைத் தேசியம் பேசுகிறார்கள் என்று கூட நமக்குத் தெரியவில்லை என்று நினைக்கும் போது மனம் நொந்து போவதை தவிர வேறு என்ன சொல்ல இருக்கிறது?  பிரிட்டிஷாரின்தொடக்க காலத்தில் இருந்து ஜனநாயக முறையைப் பின்பற்றி தமிழ்நாட்டின் சட்டசபையில் இருந்த முதலமைச்சர்கள் இந்தியாவின் முதல் ஐந்து ஆண்டு திட்டங்களுக்குள் இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்வதில் மிகச்சிறந்த செயல்முறை வீரர்களாக இருந்தார்கள். வடக்கே பால கங்காதர திலகர் பட்டேல் சுபாஷ் சந்திர போஸ் தெற்கே  சிதம்பரனார், பாரதி, சிவம்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இவர்களை எல்லாம் இணைத்து காண்பவர்களுக்கு தான் பழைய உண்மை  வரலாறு சரியாகப் பிடிப்படும்.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேவருக்கு அவர் பிறந்த இடத்தில் மிகுந்த பொருட்செலவில் மண்டபம் கட்டுவதாக எல்லாம் சொல்லி குறிப்பிட்ட அம் மக்களின் ஓட்டை வாங்க முயலுகிறார். போக இந்த அரசு பசும்பொண்ணாருக்கு  செய்யக்கூடிய பணிகள் குறித்து தினசரி பத்திரிகையான தினத்தந்திக்கு மட்டுமே விளம்பரம் கொடுக்கிறார்கள். மற்றும் வேறு எந்த பத்திரிகைகளிலும் இந்த அரசு விளம்பரங்கள் கண்ணில் கூடப் படவில்லை. எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள்!  தேசியத் தலைவர்
பசும்பொன்னாரின் நினைவிற்காக முடிந்தவரை முதல்வர் ஏதாவது செய்யட்டும் வரவேற்போம். நமக்கு அட்டி ஏதுமில்லை. இந்தத் தந்திரங்களை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நினைப்பதுதான் அறிவீனம்!

சரி போகட்டும்! இதேபோல் வ உ சிக்கு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு வகையான தலைவர்களுக்கு கக்கனுக்கு காமராஜருக்கு வழிபாடுகள் நினைவுச் சின்னங்கள் என்று வருடம் தோறும் போய் சிறப்பு செய்வது போல அமைப்புகள் இருக்கிறதா. இன்னும் முதல் தலைமுறை தலைவர்களுக்கு எந்த நினைவுச் சின்னமும்  ஏன் அவர்கள் புதைத்த இடம் கூட அடையாளம் தெரியாமல் போய்விட்டது! நாத்திகம் பேசியவர்களுக்கு ஓட்டு வங்கி என்றால் பகுத்தறிவு இல்லாமல் போய்விடுமா? இல்லை அவர்களும் உண்மையில் தேசிய தலைவர் பசும்பொன்னாரை ஒரு சாதியைச் சேர்ந்தவர் என்றுதான் கருதுகிறார்களா?
இது அவருக்கு செய்யும் அநீதி இல்லையா? பீற்றல் வேறு!

 இன்னும் சொல்ல என்ன இருக்கிறது முழுவதும் சுயநல கூட்டங்கள்.

பசும்பொன் தேவர் மொழிகள் சில…..
••
நான் பேசுவது.. எழுதுவது.. 
சிந்திப்பது.. சேவை செய்வது 
எல்லாமே என் தேசத்திற்காகவே 
எனக்காக அல்ல.

தான் வாழ பதவி தேவை என்று 
கருத்துபவர்களிடம் உண்மைக்கு 
எதிரானவற்றை தான் 
எதிர்பார்க்க முடியும்.

பதவியை ஒரு சேவையாக 
கருத்துபவர்களிடமே ஆட்சி 
இருக்க வேண்டும்.. 
அப்படி இல்லாமல் போனால் 
மக்களுக்கு நலன் என்பது 
வெறும் கனவு தான்.

எவன் ஒருவன் தன் சாதி 
பெயரை முன்னிலைப்படுத்தி 
அரசியல் செய்கின்றானோ 
அவனே சமுதாயத்தின் 
முதல் எதிரி.

சாத்திய சிந்தனை கொண்டவன் 
அரசியலுக்கு வந்தால் 
நாடு நாசமாகி விடும்.. 
அவன் பாவி.. சாதிய எண்ணம் 
கொண்டவன் இறைவனை 
வழிபடவே தகுதியற்றவன்.

பணம் கொடுத்து ஓட்டு 
கேட்பவன் பாவி.. 
பணம் பெற்று ஓட்டு போடுபவன் 
நாட்டுத் துரோகி.!

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
31-10-2023.

No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...