Sunday, May 15, 2016

1993ல் ஒரு நபர் - சிறு சங்கதியான கதை

43 வருட அரசியலில், எனக்கு தெரிந்து 1993ல் ஒரு நபர் கட்சிக்கு வந்தார். அண்ணே நான் இந்த ஊர்.  ஏதாவது ஒரு பதவி வேணும் என்றார். சரி இளைஞராக இருக்கின்றாரே என்று சொல்லி அந்த சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளரிடம் பரிந்துரைத்து, மாவட்டத்தின் ஒரு அணியின் துணைச் செயலாளராக பதவி வாங்கிக் கொடுத்தேன். பிறகு ஆளும்கட்சிக்குப் போனார். கவுன்சிலர் ஆனார். எம்.எல்.ஏ., பின்பு அமைச்சர் ஆனார். கோடிக் கணக்கில் பண பேரங்கள். இது ஒரு 18 ஆண்டுகளில் நடந்த சமாச்சாரம். எனது தயவில் அரசியல் பொறுப்புக்கு வந்தவர்களெல்லாம் கோடிக்கணக்கில் கையில் பணம் புரளுகின்றன. இது எப்படி என்றே எனக்கு பிடிபடாத மர்மமாக இருக்கின்றது.  வேடிக்கை காட்சியாகவும் தெரிகின்றது. தமிழ்நாட்டில் எத்தனையோ நான் அறிந்தவர்கள் பெரிய பொறுப்புக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் எங்களைப் போன்றோருடைய உதவியால் சின்னப் பொறுப்பைப் பெற்று எப்படியோ சலுகைகளோ, தயவுகளோ, கையை கட்டியோ, தலையை கீழே குனிய வைத்தோ, எம்.பி., அமைச்சர் ஆகிவிடுகிறார்கள். இது ஒரு தனித் திறமைதான். இதேத் திறமையோடு லாரிகளிலும், வேன்களிலும், கோடிக்கணக்கில் கரன்சி நோட்டுகளை அடுக்கிக் கொண்டு, கடந்த காலங்களில் சைக்கிளில் பயணம் செய்தவர்கள், சாகச, கமுக்கமான இந்தப் பணிகளை செய்வது குறித்து நொந்துகொள்வதா என்று தெரியவில்லை. இவரது நடவடிக்கையும் குறுகிய காலத்தில் பதவிகளை பெறுவதை நினைத்தால் குழப்பமாக உள்ளது. இவர்களுடைய மந்தனமான நடவடிக்கைகளைப் பற்றி ஒன்றும் அறியமுடியாமல் திகைப்பாக உள்ளது.

இவர்களுக்கு அரசியல் என்பது ஒரு செல்வம்கொழிக்கும் தொழில். எப்படியாவது மண்டியிட்டு, கையைக் கட்டி, வேஷம்போட்டு, சுயமரியாதையை விற்றுத் திரியும் ஜென்மங்களின் பணங்கள் இப்படித்தான் உரிமை கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்படும். அது யாருடைய பணம்? மக்களிடம் கொள்ளையடித்த பணம்தானே? இப்போது தேர்தலில் பறிமுதல் செய்த பணங்களை மக்களின் அடிப்படைகளை பூர்த்தி செய்யும் சாலை வசதி,  மருத்துவமனை போன்றவற்றிற்கு செலவிடவேண்டும்.  எந்த தியாகமும் இல்லாமல் சம்பாதிக்கவே வரும் பொதுவாழ்வுக்கு வரும் ஜென்மங்களுக்கு சவுக்கடிதான் கொடுக்கவேண்டும்.

பொதுவாழ்வையும், அரசியலையும் தவமாக கொண்டவர்கள் தகுதியை இழக்கின்றார்கள். நேர்மையானப் போக்கும், தகுதியும் தடை. எல்லாமே வேஷம்.

#ksrposting #ksradhakrishnanposting #politics #அரசியல் #பொதுவாழ்வு

No comments:

Post a Comment