Wednesday, May 4, 2016

பேரவையின் மாண்புகள் திரும்ப வேண்டுமெனில்......

இன்றைய (04-05-2016) தினமணி நாளிதழில் “பேரவையின் மாண்புகள் திரும்ப வேண்டுமெனில்......” என்ற தலைப்பில் கடந்த கால சட்டப்பேரவை தேர்தல்களும், தமிழக சட்டமன்ற வரலாற்றை குறித்தும் தலையங்க பக்கத்தில் வந்த எனது பத்தி.


பேரவையின் மாண்புகள் திரும்ப வேண்டுமெனில்......

அக்னி கக்குகின்ற வெயிலில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கின்றன.

தமிழக சட்டமன்றத்திற்கு இந்தியாவிலுள்ள மற்ற சட்டமன்றங்களைக் காட்டிலும் ஒரு நெடிய வரலாறு உண்டு. 18ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாடு, ஒடிசா, கேரளாவின் சில பகுதிகள், கர்நாடகாவின் சில பகுதிகள், பண்டைய நிஜாம் அரசின்  நீங்கலான ஆந்திராவின் பகுதிகள் இணைந்து மதராஸ் மாகாணமாக விளங்கியது. இதைப் போன்று பம்பாய், கல்கத்தா மாகாணங்களும் விளங்கின. 1873ல் கவர்னர் ஜெனரல் நியமிக்கப்பட்டு சட்டமன்றங்களும் அமைக்கப்பட்டன. 1892ல் இந்திய கவுன்சிலர்கள் சட்டத்தின் கீழ் மதராஸ் மாகாண சட்டமன்றம் அமைக்கப்பட்டன. பின் மிண்டோ மாரிலே சீர்திருத்தங்களின்படி முறையான தேர்தல்கள் நடத்தி சட்டமன்றத்திற்கு உறுப்பினர்கள் 20லிருந்து 50 ஆக உயர்த்தப்பட்டது. இந்த தேர்தல் நேரடித் தேர்தல் இல்லை. 1919ல் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் சட்டமன்றங்களில் சட்டங்களை இயற்றுவது, ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றுவது போன்றவை முறைப்படுத்தப்பட்டன.  1919 இந்திய அரசின் சட்டத்தின்கீழ் மதராஸ் மாகாண சட்டமன்றத்திற்கு உரிய அதிகாரங்களும், 3 ஆண்டுகள் காலமும் வழங்கப்பட்டு, 132 உறுப்பினர்கள் கூடுதலாக்கப்பட்டனர். 9.1.1921 அன்று புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றக் கூட்டத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. கன்னட் பிரபு மாகாண சட்டமன்றத்தை 12.1.1921 அன்று முறையாக துவக்கி வைத்தார்.  ஆளுநர் உரை 14.1.1921ல் நிகழ்ந்தது. தொடர்ந்து நேரடி தேர்தல் இல்லாமல் 1923-26 மறைமுகத் தேர்தல் மூலமாக இரண்டாவது, மூன்றாவது சட்டமன்றங்கள் அமைந்தன. நான்காவது சட்டமன்றத்திற்குப் பின் மாகாண தன்னாட்சி என்ற வகையில் 1935 ஆம் ஆண்டு சட்டத்தின்படி சட்டமன்றம் முறைப்படுத்தப்பட்டது. இதனால் மாகாண சட்டமன்றத்தில் மேல் அவை, கீழ் அவை என்று இரு அவைகள் உருவாக்கப்பட்டன. மேலவையில் மூன்றாண்டு நிறைவில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுவார்கள். அதிகபட்சம் 56 உறுப்பினர்கள் கொண்டதாக இருந்தது. சட்டப்பேரவை 215 உறுப்பினர்கள். இதில் 146 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இஸ்லாமியர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள், ஐரோப்பியர்கள், இந்திய கிறிஸ்துவர்கள், தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள், நிலச்சுவான்தார்கள், பல்கலைக்கழக அலுவலர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என்று வகைப்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் 1939ல் இரண்டாம் உலகப்போரையொட்டி சட்டமன்றமும், அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.  திரும்பவும் 1946ல் பிரிட்டிஷ் காலத்தில் மே மாதம் தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் சட்டமன்றம் அமைந்தது. இவையெல்லாம் நாட்டு விடுதலைக்கு முன்பு.

1952ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைக்குப் பின் பொதுத் தேர்தல் நடந்தது. வயது வந்தோருக்கு வாக்குரிமை என்ற நிலையில், மதராஸ் இராஜதானியின் முதலாம் சட்டமன்றம் 1.3.1952ல் அமைந்தது. இதில் 325 உறுப்பினர்கள் இருந்தனர். மொத்தம் 309 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இவற்றில் 243 உறுப்பினர்கள் தொகுதிகளும் 66 இரட்டை உறுப்பினர் தொகுதிகளும் இருந்தன. 62 இரட்டை உறுப்பினர் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஆங்கிலோ-இந்தியன் உறுப்பினர் ஒருவருக்கு நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டதும் உண்டு. அப்போது சென்னை இராஜதானியின் முதல்வர் என்று அழைக்கப்படுவது இல்லை. பிரிமியர் அல்லது பிரதமர் என்று அழைப்பது உண்டு.

மாநில சீரமைப்பு என்ற நிலையில் தெலுங்கு பேசப்பட்ட பகுதிகளை ஆந்திராவுக்கும், கன்னடம் பேசப்பட்ட பகுதிகளை பெல்லாரி மாவட்டம் மைசூர் மாவட்டத்திற்கும், ஒரிசா பகுதிகள் ஸ்ரீகாகுளம் வட பகுதிகள் ஒரிசா மாநிலத்திற்கும் சென்றது. மலபார் மாவட்டங்களைச் சேர்ந்தவை கேரளத்திலும் சேர்க்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டையும் சென்னை மாநிலத்தில் இணைக்கப்பட்டன. இதனால் சென்னை மாகாணத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 196 ஆக குறைந்தது.  1956ல் தொகுதி சீரமைப்பு நடவடிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்து, இரட்டை உறுப்பினர் தொகுதிகள் இதில் 38 ஆக இடம்பெற்றன. இதுதான் முறையான சென்னை மாகாணத்தின் முதல் சட்டப்பேரவை.

1957 மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தல்கள் முடிந்து இரண்டாவது சட்டப்பேரவை 1957-1962 வரை அமைந்தது. 1962ஆம் ஆண்டு இரட்டை உறுப்பினர் முறை மாற்றப்பட்டது. இதனால் 37 தனித் தொகுதிகள் என்று பிரிக்கப்பட்டன. இன்றைக்குள்ள 234 தொகுதிகள் என்பது மூன்றாவது சட்டப்பேரவை 1962ல் நடைபெற்ற தேர்தலில்தான் இறுதி செய்யப்பட்டது. 42 தனித் தொகுதிகளாகவும் ஒதுக்கப்பட்டன. 8வது சட்டப்பேரவை காலத்தில்தான் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தின் நுண்மான் நுழைபுலம் கொண்ட பல அறிஞர்கள் இடம்பெற்ற சட்ட மேலவை ஒழிக்கப்பட்டது.  இதுவரை 14 சட்டப்பேரவைகள் அமைந்துள்ளன. அமையப்போவது 15 சட்டப்பேரவை ஆகும்.  முதல் சட்டப்பேரவை தேர்தலி சின்னங்கள் இல்லாமல் தனித்தனி வர்ணங்களில் வாக்குகள் அளிக்கப்பட்டன.

இந்த சட்டப்பேரவையில் எவ்வளவோ வரலாற்று நிகழ்வுகள். நேர்மையாக இருந்த ஓமந்தூரார் (1947-49) முதல்வராக நீடிக்க முடியவில்லை. முதல்வராக இருந்த பி.எஸ். குமாரசாமி ராஜாவுக்கும் (1949-52) இதே நிலை. காங்கிரஸே முழுப் பெரும்பான்மை இல்லாமல் காமன் வீல், உழைப்பாளர் கட்சி, முஸ்லீம் லீக், சுயேச்சைகளை கொண்டுதான் இராஜாஜி ஆட்சி அமைக்க முடிந்தது. அப்போதெல்லாம் வலுவான எதிர்க்கட்சிகள் இருந்தன. கம்யூனிஸ்ட் கட்சி பிரதானமாக இருந்தது. முகமது இஸ்மாயில், ஜீவா, பி. ராமமூர்த்தி, டி. பிரகாசம், பசும்பொன் தேவர், பி.டி.ராஜன் ஆகியோர் இராஜாஜியின் எதிர் முகாமில் இருந்து குரல் எழுப்பினர். இராஜாஜி அமைச்சரவையில் ஏ. பி. ஷெட்டி, சி.சுப்பிரமணியம், கே. வெங்கடசாமி நாயுடு, என். ரங்கா ரெட்டி, எம். வி. கிருஷ்ணா ராவ், வி. சி. பழனிசாமி கவுண்டர், யு. கிருஷ்ணா ராவ், ஆர். நாகண்ண கவுடா, என். சங்கர ரெட்டி, எம். ஏ. மாணிக்கவேல் நாயக்கர், கே. பி. குட்டிகிருஷ்ணன் நாயர், சண்முக ராஜேஸ்வர சேதுபதி, எஸ். பி. பி. பட்டாபி ராமா ராவ், டி. சஞ்சீவய்யா ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர்.  தி.மு.க. அப்போது போட்டியிடாமல் திராவிட நாடு கொள்கைக்கு ஆதரவளித்தவர்களுக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டது.  இந்த காலகட்டத்தில் சட்டப்பேரவையின் தலைவர்களாக சிவசண்முகம் பிள்ளை, என். கோபாலமேனன் விளங்கினர். எதிர்க்கட்சித் தலைவர்களாக கம்யூனிஸ்ட் பி. ராமமூர்த்தி, டி. நாகி ரெட்டி ஆகியோர் இருந்தனர்.

இராஜாஜிக்கு பின் காமராஜர் முதல்வரானார். அவருடைய அமைச்சரவையில் ஏ. பி. ஷெட்டி, பக்தவத்சலம், சி. சுப்ரமணியம், எம். ஏ. மாணிக்கவேல் நாயக்கர், சண்முக ராஜேஸ்வர சேதுபதி, பி. பரமேஸ்வரன், எஸ். எஸ். ராமசாமி படையாச்சி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

1957 ஆம் ஆண்டில் காமராஜர் முதல்வராக இருந்தபோது பேரவைத் தலைவராக யு. கிருஷ்ணராவ் இருந்தார்.  காமராஜருடைய அமைச்சரவையில் எம். பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம், ரா. வெங்கட்ராமன், எம். ஏ. மாணிக்கவேல் நாயக்கர், பி. கக்கன், வி. ராமய்யா, லூர்தம்மாள் சைமன் ஆகியோர் அமைச்சர்களாக இடம்பெற்றிருந்தனர்.

தி.மு.க. வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு அண்ணா தலைமையில் முதல் முறையாக சென்றதும் இந்த காலகட்டத்தில்தான்.

1957ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 151,  திமுக 13,  சீர்திருத்தக் காங்கிரஸ் 9, இந்திய கம்யூனிஸ்ட் 4, ஃபார்வார்டு பிளாக் 3, பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சி 2, சோஷ்யலிஸ்ட் கட்சி 1, சுயேட்சைகள் 22 இடங்களை கைப்பற்றின.

வி.கே. ராமசாமி முதலியாரின் தலைமையில் அமைந்த சீர்திருத்த காங்கிரஸ் சட்டப்பேரவையில், காங்கிரசுக்கு எதிராக கடுமையான குரலை எழுப்பியது.  சீர்திருத்த காங்கிரஸைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. காமராஜருக்கு எதிராக அப்போதே காங்கிரஸில் கோஷ்டிப் பூசல் ஏற்பட்டு கோவை வி.கே. பழனிச்சாமி கவுண்டர், ஜெயராம ரெட்டியார், டி.ஜி.கிருஷ்ணமூர்த்தி போன்ற பலர் சீர்திருத்த காங்கிரஸை உருவாக்கி என்னுடைய நினைவில் 9 இடங்களில் வெற்றி பெற்றதாக கருதுகிறேன்.  இந்த சீர்திருத்த காங்கிரஸ் காமராஜர் தலைமையில் இயங்கிய காங்கிரஸுக்கு ஓர் பதற்றத்தை உருவாக்கியது. இதன் பின்னணியில் சாத்தூர் எஸ்.ஆர். நாயுடு, கே.டி. கோசல் ராம், சி. சுப்ரமணியம், எஸ்.எஸ். மாரிசாமி ஆகியோர் ஆதரவாக இயங்கியது காமராஜருக்கு எரிச்சலை உண்டாக்கியது. இது இராஜாஜியின் விருப்பத்திற்காக சீர்திருத்த காங்கிரஸ் துவங்கியதாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. காமராஜர் குடியாத்தம் தேர்தலுக்குப் பின் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அப்போது நடக்க இருந்த ஜில்லா போர்டு தேர்தலில் காங்கிரஸை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று இராஜாஜிக்கு எதிராக சீர்திருத்த காங்கிரஸ் தலைவர்களை அழைத்தது உண்டு. இந்த காலக்கட்டத்தில் பசும்பொன் தேவர், எம்.கல்யாணசுந்தரம், சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சின்னதுரை எதிர்க்கட்சி வரிசையில் இருந்தனர்.

அப்போது திராவிட நாடு பிரச்சினையும், முதுகுளத்தூர் கலவரங்களும் வாத பிரதிவாதங்களாக இருந்தன. லோகியோ கிருபளானி போன்றோர் ஆதரவாளர்களும் அன்றைக்கு சட்டமன்றத்தில் இடம்பெற்றதுண்டு.  அப்போது சோசலிஸ்ட், பிரஜா சோசலிஸ்ட், சுதந்திரா கட்சி, ஸ்தாபன காங்கிரஸ் (பிற்காலத்தில் இதுவே ஜனதா), ஆளும் காங்கிரஸ் 1975 வரை தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்ற கட்சிகளாகும்.

முதல் சட்டப்பேரவைத் தேர்தல் 1952ல் மொத்த வாக்காளர்கள் 26981825 இருந்தனர்.  55.34 சதவீதம் பேர் வாக்களித்தனர். கடந்த 2011 ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 47115846 இருந்தனர்.  78.01 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

காங்கிரஸ் அதிகபட்சமாக 46.14 சதவீத வாக்குகளை 1962ல் பெற்றது. ஸ்தாபன காங்கிரஸ் 1971ல் 34.99 சதவீத வாக்குகளை பெற்றது. தி.மு.க. அதிகபட்சமாக 1971ல் 48.58 சதவீத வாக்குகளை பெற்றது. அ.தி.மு.க. அதிகபட்சமாக ராஜீவ் படுகொலை நடந்த 1991ல் 44.39 சதவீத வாக்குகளை பெற்றது. இதுவே கட்சிகள் பெற்ற அதிக வாக்குகள் சதவீதம் ஆகும்.  1971ல் அதிகபட்சமாக 184 இடங்களை தி.மு.க வென்றது.  அ.தி.மு.க. 1991ல் 164 இடங்களை வென்றது. காங்கிரஸ் 1962ல் அதிகபட்சமாக 139 இடங்களை வென்றது. இதுவே கட்சிகள் பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.

இப்படி தமிழக சட்டப்பேரவையைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் நெடிய வரலாறாகி ஒரு நூலாகிவிடும். ஆரம்பக்கட்ட நிகழ்வுகளை மட்டுமே சற்று மீள்பார்வைக்காக சொல்லப்பட்டவை ஆகும். சட்டப்பேரவையில் பலரின் பணிகளை நினைத்துப் பார்க்கவேண்டிய நிலையில் இருக்கின்றோம். அக்காலத்தில் சட்டமன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர்கள் பட்டியலில் மேலே சொல்லப்பட்டவர்களோடு எதிர்கட்சி வரிசையில் நாவலர், கலைஞர், சுதந்திரா கட்சியைச் சேர்ந்த சா. கணேசன், ஸ்தாபன காங்கிரஸ் பி.ஜி. கருத்திருமன், என். சங்கரய்யா, எச்.வி. ஹண்டே, சோசலிஸ்ட் கட்சி ஏ.ஆர். மாரிமுத்து போன்றோர்களுடைய குரல் கடந்த காலங்களில் சட்டமன்றத்தில் ஒலித்த வரலாறும் உண்டு.

இப்படியான புனிதமான இடமாக போற்றப்பட்ட சட்டமன்றம், தகுதியே தடை என்ற நிலையில் தகுதியற்றவர்கள் எல்லாம் உறுப்பினர்களாக சட்டமன்றம் காய்கறி சந்தையாக மாறிவிட்டது என்பதுதான் நம்முடைய கவலை. அரசியலில் எல்லாமே வேஷம் என்ற நிலை மாறி நல்ல ஆரோக்கியமான அரசியல் நிலவ வேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாரா. 1960கள் வரை இயங்கிய சட்டமன்றத்தின் மாண்புகள் திரும்ப வேண்டும். அதை மனதில் கொண்டு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய வாக்குகளை மக்கள் நல அரசு அமைய பதிவு செய்வோம்!


No comments:

Post a Comment