Monday, May 9, 2016

இலங்கை தமிழர்கள் மீதான சித்ரவதை தொடர்கிறது - ஐ.நா. குழு நேரில் கண்டு வேதனை

ஐ.நா. மன்றத்தின் சித்ரவதை, ஏனைய வன்கொடுமை குறித்து விசாரிக்கும் குழுவின் உறுப்பினர்கள் ஜூவான் மெண்டஸ், நீதித்துறையின் சுதந்திரம் மீதான அறிக்கையாளர் மோனிகா பிண்டோ அடங்கிய குழு உறுப்பினர்கள் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிக்கு சென்று அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை அறிய எட்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்தனர். தங்களுடைய ஆய்வுகளை முடித்துக்கொண்டு இலங்கையிலிருந்து திரும்பியபோது கொழும்பில் பத்திரிகையாளர்களிடம் இன்னும் இலங்கைத் தமிழர் மீது தாக்குதலும் சித்ரவதைகளும் தொடர்கின்றன என்று சொல்லியுள்ளனர். இலங்கையில் தமிழர்கள் உள்ள தடுப்பு முகாம்களும், சிறைகளின் நிலைமை மோசமாக உள்ளது.  இங்கு மனித உரிமைகள் இன்னும் மீறப்படுகின்றன. இலங்கை அரசு இந்தப் பிரச்சினையில் பார்த்தும் பாராதமாதிரியும் தொடரக் கூடாது.

தமிழீழத்தில் யுத்தம் முடிவடைந்து 7 வருடங்களாகியும் இதுவரை இராணுவத்தை வெளியேற்றாமல் இருப்பதற்கு இதுவே உண்மையான காரணமாகும்.

இன்றும் தமிழர்களை அடக்குவதற்கான சட்டங்கள் அப்படியே உள்ளன. தமிழர்களின் விகிதாச்சாரத்தை குறைக்கும் நோக்கோடு சிங்களக்குடியேற்றங்கள் வியாபாரம், விவசாயம், தொழில் ஆகியவற்றின் ஆக்கிரமிப்புகளும் நடைபெற்று வருகின்றன. மொத்தத்தில் படுகொலைகளைத் தவிர ஏனையவை அனைத்தும் தாராளமாக நடைபெற்று வருகின்றன.

2009க்கு பின் நடைபெற்றுவரும் கீழ்குறிப்பிடப்படும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது இலங்கை அரசு தமிழ் இனத்தை எப்படி அழித்துக்கொண்டிருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

மட்டக்களப்பில் 26 வீத மாணவர்கள் போதைக்கு அடிமை - மட்டக்களப்பு பொது சுகாதார அலுவலர் ஜே. தேவநேசன் 18.10.2015ல் அறிவிப்பு.

யாழ்ப்பாணத்தில் 22 மாணவர்களுக்கு எயிட்ஸ் நோய்.

சட்டவிரோத, சிங்களக் குடியேற்றங்கள் தினமும் நடைபெறுகின்றன - உதயன் நாளிதழ் செய்தி

- தமிழ் மக்களை 19 கிராமசேவகர் பிரிவில் இருந்து ஆயுத முனையில் விரட்டிவிட்டு 11789 சிங்களவர்களை குடியேற்றி சிங்களமாவட்டமான அனுராதபுரத்துடன் இணைத்த மணலாறுப் பகுதி மீண்டும் முள்ளிவாய்க்காலுக்கு பின் தமிழ் மாவட்டமான முல்லைத்தீவுடன் இணைக்கப்பட்டது. இது சிங்கள மாவட்டமாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியேயாகும்.

- வட மாகாணத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் 361 பேர் நியமனத்தில் 332 பேர் சிங்களவர்கள் 29 பேர் தமிழர்கள் - வட பகுதி விவசாய அமைச்சர் அங்கரநேசன் 13-8-2015

- மட்டக்களப்பு விவசாய ஆராய்ச்சி உதவியாளர் 99 பேர் நியமனத்தில் 75 பேர் சிங்களவர்கள்

- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா - முல்லைத் தீவில் 7-4-2015ல் தமிழர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி, சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் 300 சிங்களவர்களுக்கு கடற்படை பாதுகாப்பு - வடமாகாண மீன்பிடி அமைச்சர்.

இது தமிழ் இணத்தை அழிக்கும் செயல்பாடுகளில் சில உதாரணங்களாகும். இப்படி பல சம்பவங்கள் தினம் தினம் நடைபெறுகின்றன.

2009க்குப் பின் சிங்களவர்களுக்கு அடிமைகளாக அவதியுறும் நிலையே உள்ளது. தமிழர்களின் வாழ்க்கையினை சிங்களவர்களும், சிங்கள அரசும் திட்டமிட்டு அழித்து வருகிறார்கள்.  யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகளாகியும் இராணுவம் அப்படியே நிலை கொண்டுள்ளது. இராணுவத்திற்கான சிங்களக் குடியேற்றங்களும் நடைபெற்றுவருகின்றது. இதைவிட சிங்கள மீனவர்களுக்கான முல்லைத் தீவு மன்னார், மாதகல் போன்ற கடற்கரைப் பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழீழப் பகுதிகள் அனைத்திலும் சிங்களவர்களின் ஆக்கிரமிப்பே நடைபெறுகிறது. வியாபாரம் சிங்களவர்களின் கைகளில், மீன்பிடித்தொழில் சிங்களவர்களின் கைகளில், விவசாயம் அவர்களின் கைகளில், கூலித் தொழில்கூட அவர்கள் கைகளிலேயே உள்ளது. அரசு நிர்வாகங்களில் சிங்கள அதிகாரிகள், ஊழியர்கள் நியமனங்கள், புத்த விகாரைகள் நிர்மானிப்புகள் என திட்டமிட்டே தமிழ் இனத்தை அழித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment