Wednesday, May 4, 2016

சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம் (மே 3-ம் தேதி)

பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. தற்போது எந்த மாதிரியான தகவல் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது, உண்மைகளை வெளியிடுவதில் பத்திரிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் போன்றவற்றை விளக்கும் விதமாகவே இந்த பத்திரிகை சுதந்திர தினத்தை மே 3 -ம் தேதி கொண்டாடலாமென்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, 1991 ஆம் ஆண்டு அறிவித்தது.

பத்திரிகையாளர் வழங்கும் * ‘செய்தி’ என்பதை ஆங்கிலத்தில் ‘News’ என்கிறோம்.இது எப்படி ஏற்பட்டது?தெரியுமில்லையா?நான்கு திசைகளிலிருந்து செய்தி கிடைக்கிறது.அதைக் குறிக்கும் விதமாக வடக்கு (North) கிழக்கு (East) மேற்கு (West) தெற்கு (South)என்னும் சொற்களின் முதல் எழுத்துகள் இணைந்துதான் ‘நியூஸ்’.

இன்றைய பத்திரிக்கைகள் எத்தனையோ சோதனைகளைத் தாண்டிதான் இப்போதைய சுதந்திர நிலையை எட்டியுள்ளன. பத்திரிக்கைகளை ஒடுக்கும் பணியை இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ். இவர் 1781 ஆம் ஆண்டு இவர் ‘வங்காள் கெஜட்’ என்ற பத்திரிக்கைக்கு தொல்லை கொடுத்து, அதன் ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்.1799 ஆம் ஆண்டு வெஸ்லி பிரபு பத்திரிக்கைகளுக்கான புதிய சட்ட திட்டங்களை உருவாக்கினார் என்பதும் பழைய வரலாறு.

அதிலும் ஆட்சியில் இருப்போர் இதழ்களை நசுக்க முனைவதும் அதனை எதிர்த்துப் பத்திரிகையாளர்கள் போராடுவதும் இந்தியாவில் ஒரு தொடர் கதையாகவே இருந்து வந்துள்ளது. இந்தியப் பத்திரிகை வரலாறு என்பதே அதனுடைய சுதந்திரத்திற்கான போராட்ட வரலாறுதான் என்கிறார் ஆர்.சி.எஸ். சர்க்கார் (The Press In India, Page, 17). இந்திய மண்ணில் 1780 – இல் தொடங்கப்பட்ட முதல் செய்தி இதழ் பெங்கால் கெசட் அல்லது கல்கத்தா ஜெனரல் அட்வைசர் என்பதாகும். அதன் ஆசிரியர் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹக்கி என்பவராவர். ஆங்கில ஆட்சியாளர்கள் அவர் மீது வழக்குகள் போட்டு அடக்க முனைந்தனர். அன்றைய இதழாசிரியர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எழுதுவதனைக் கண்டு அஞ்சி ஆங்கில அரசு அவர்களை நாடு கடத்தியது. அதன் வாயிலாகப் பத்திரிகைச் சுதந்திரத்தை அடக்கி ஆள முனைந்தது. இந்நிலையில் நாட்டுப் பற்றுடைய இதழாசிரியர்களாகிய இந்தியர்களின் பத்திரிகைச் சுதந்திரத்துக்கான போராட்டம் மேலும் வலிமை பெற்றது. இப்போராட்டத்தில் பங்கு பெற்றவர்களில் சிறப்பானவர்களாக இராஜாராம் மோகன்ராய், அரவிந்தகோஷ், லாலா லஜபதிராய், சுரேந்திர நாத் பானர்ஜி, திலகர், விபின் சந்திரபால், மகாத்மா காந்தி, தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா, திரு. வி. கலியாணசுந்தரனார் போன்ற பத்திரிகையாளர்களைக் குறிப்பிடலாம்.

ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்றபின் பத்திரிக்கைச் சுதந்திரத்துக்குப் புதிய உந்துதல் கிடைத்தது. புதிதாக உருவான இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் மக்களாட்சியில் எழுத்துரிமையையும் பேச்சுரிமையையும் அடிப்படை உரிமைகளாக (Fundamental Rights) வரையறுத்தது. பத்திரிகைச் சுதந்திரத்திற்கு என்று தனியாக விதிகள் வேறுபடுத்திக் கூறப்படவில்லை. பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்தில் (Freedom Of Speech And Expression) பத்திரிகைச் சுதந்திரமும் உள்ளடங்கியிருக்கிறது. அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 19 (1) விதியும் 19 (2) விதியும் இதழ்களின் சுதந்திரத்திற்குப் பொருந்திவருவனவாகும். விடுதலை பெற்ற பின் பத்திரிகைகள் சுதந்திரமாகச் செயல்பட முடிந்தது. இதனால் அவை வேகமாக வளர்ந்தன. 1947 -இல் ஏறத்தாழ நமது நாட்டில் 1000 செய்தித்தாள்களும் பிறவும் வெளிவந்தன. இவற்றின் எண்ணிக்கை 1957 டிசம்பரில் 6903 ஆகவும், 1974 டிசம்பரில் 12,185 ஆகவும் உயர்ந்தன. இந்தப் புள்ளி விவரம் பேச்சு மற்றும் வெளியீட்டுச் சுதந்திரம் எந்த அளவு பத்திரிக்கைச் சுதந்திரமாகப் பயன்பட்டது என்பதை உணர்த்தும்.

சுதந்திர இந்தியாவில் இதுவரை அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 352 – ஆம் விதியின்படி மூன்றுமுறை நெருக்கடிநிலை (Emergency) அறிவிக்கப்பட்டது. 1962 அக்டோபர் 26 – இல் சீன ஆக்கிரமிப்பின் போது முதல் முறையும், 1970 டிசம்பர் 3 – இல் பாகிஸ்தான் படை எடுப்பின் போது இரண்டாம் முறையும், 1975 சூன் 25 இல் உள்நாட்டுக் குழப்பங்களைக் காரணம் காட்டி மூன்றாம் முறையும் நெருக்கடி நிலையை இந்திய அரசு செயல்படுத்தியது. திருமதி இந்திராகாந்தியின் ஆட்சிக் காலத்தில் 1975 சூன் 25 முதல் 1977 மார்ச்சு 21 வரை பிரகடனம் செய்யப்பட்டிருந்த பத்தொன்பது மாத நெருக்கடிநிலைக் காலத்தில்தான் பத்திரிகைச் சுதந்திரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பத்திரிகைகளை முழுவதும் கண்காணித்தனர். முன் அனுமதி பெற்றே செய்திகளை வெளியிட வேண்டியிருந்தது. ஆட்சிக்கு எதிரான, நெருக்கடி நிலைக்கு எதிரான சிந்தனைகள் பத்திரிக்கைகளில் வெளிப்பட முடியவில்லை. கட்டாயக் கருத்தடை போன்ற அரசு வன்முறைகள், சிறைக் கொடுமைகள் விரிவாக வெளியிடப்பட முடியவில்லை. 1977 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அதன் பின்னரே பத்திரிகைகள் இழந்த சுதந்திரத்தைத் திரும்பப் பெற்றன. இவ்வாறு அவ்வப்போது சில அடக்குமுறைகள் இருந்திருப்பினும் உலகில் உள்ள பல நாடுகளை ஒப்பிட்டு நோக்கும்போது இந்தியப் பத்திரிகைகள் தேவையான சுதந்திரத்தோடு செயல்படுகின்றன எனலாம்

இப்போதும் பத்திரிக்கைச் சுதந்திரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ வரைமுறைப்படுத்தும் மத்திய அரசின் பத்திரிக்கைச் சட்டம் எதுவும் இல்லை .

A முக்தார் அஹமத்

No comments:

Post a Comment