Sunday, May 15, 2016

உண்பது நாழி உடுப்பவை இரண்டே....

பேராசை, சுயநலம், ஜாதி, மத வெறி, பாசாங்கு, பகட்டு என்ற நிலையிலும் மானிடம் தவறாக பயணித்தாலும் உண்பது நாழி, உடுப்பவை இரண்டே. இந்த உலகம் முழுமையாக யாருக்கும் உரிமையில்லை. தனி ஒருவன் என்பது ஒரு மாயை. இதில் எவ்வளவு போட்டிகள், பொறாமைகள். இதையெல்லாம் நிறுத்தி துலாக்கோல் நிலையில் பரிசீலித்து நாடு என்பது நிலையானது. அதை ஆள்பவர்கள் தகுதியானவர்கள் என்று நினைத்து வாக்களிக்கும் நாள் நாளை.  மனிதர்கள் வருவார்கள். திக்கு தெரியாத திசையை நோக்கி இறுதியில் சென்றுவிடுவார்கள். இருக்கிற காலத்தில் நல்லதை நினைப்போம், நல்லதை செய்வோம், நேர்மையாக பயணிப்போம். நம்முடைய கடமைகள் அனைத்தையும் சுயநலமற்ற போக்கில் செய்து முடிப்போம் என்ற உறுதிமொழியோடு நல்லவர்கள் நமது ஆட்சியாளர்களாக அமர்த்துவோம் என்ற சமுதாய உறுதியோடு நமது ஜனநாயக கடமையை காட்சிப்பிழை இல்லாமல் ஆற்றுவோம். நமக்கு நாமே என்ற நிலையில் "மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களுடைய ஆட்சி" என்ற ஆபிரகாம் லிங்கனின் கனவை மெய்ப்படுத்துவோம். கெட்டிஸ்பர்க்கில் அவர் ஆற்றிய அந்த உரையின் வீச்சும், அதிர்வும் என்றைக்கும் சிரஞ்சீவியாக திகழும். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது நமது வழிகாட்டும் நெறிமுறையாகும்.

"உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்பேம் எனினே தப்பும் பலவே"

என்று பெரும்புலவர் நக்கீரனார் புறநானூற்றில் கூறிய இந்த தத்துவம்தான் நமது வாழ்வின் முறையும், வாழ்வின் மொழியும் ஆகும்.



No comments:

Post a Comment