Wednesday, May 18, 2016

செண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசு இடித்துவிட்டது

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், இராஜபாளையம் வரை வேளாண்மை மற்றும் குடிநீருக்கு எதிர்காலத்தில் பயன்படும் திட்டமான செண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசு திடீரென இடித்துள்ளது கண்டனத்துக்குரிய நடவடிக்கையாகும். இத்திட்டம் நிறைவேறவேண்டும் என்று தொடர்ந்து 30 ஆண்டு காலமாக இவ்வட்டார மக்கள் கோரிக்கையை எழுப்பியுள்ளனர். இது குறித்து அப்பகுதியில் நடந்த பொதுக்கூட்டங்களில்கூட விளக்கமாகவும் நான் பேசியதுண்டு.

வாசுதேவநல்லூர் பகுதியில் 15 குளங்கள் சிவகிரி பகுதியில் 33 குளங்கள் வழியாகவும், சங்கரன்கோயில் வட்டத்தில் நேரடி பாசனத்தின் வழியாகவும் ஏறத்தாழ 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும், அப்பகுதிக்கு குடிநீரையும் வழங்கி வந்த செண்பகவல்லி தடுப்பணை சிவகிரி சமீன் அவர்களால் அன்றைய திருவாங்கூர் சமசுத்தானத்தின் ஒப்புதலோடு 1773 இல் கட்டப்பட்ட அணையாகும்.

இந்த அணையில் ஒரு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வதற்கு ஒத்துக்கொண்ட  கேரள அரசு அப்பணிக்காக தமிழக அரசிடம் தான் கோரிப் பெற்ற தொகையை மிக நீண்டகாலத்திற்கு பிறகு திருப்பி அனுப்பிவிட்டது.

செண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசு செப்பனிடவேண்டும் என்று வலியுறுத்தி சிவகிரி விவசாயிகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் கேரள அரசின் எதிர்ப்பை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியான எட்டு வாரகாலத்திற்குள் தடுப்பணை சீரமைக்கும் பணியை முடித்து, நீதிமன்றத்திற்கு கேரள அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என கடந்த 03.08.2006 இல் தீர்ப்பு உரைத்தது.

இத்தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. தமிழக அரசும் உருப்படியான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை.

செண்பகவல்லி அணையை சீரமைக்க மறுத்துவந்த கேரள அரசு இப்போது ஒட்டுமொத்த தடுப்பணை சுவரையும் இடித்துவிட்டது. சட்டத்தையும் நீதியையும் துச்சமாக மதித்து கேரள அரசு மேற்கொண்டுள்ள இந்த அடாவடி நடவடிக்கைக்கு தமிழக அரசின் செயலற்ற தன்மை ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

கேரளாவின் போக்கு மிகவும் கவலை அளிக்கின்றது. ஏற்கனவே குமரி மாவட்டம் நெய்யாறு, நெல்லை மாவட்டம் அடவி - நயனாறு, உள்ளாறு, அழகர் அணை திட்டம், முல்லைப் பெரியாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், சிறுவாணி, பம்பாறு என தமிழகத்தின் உரிமைகளான நதிநீர் பிரச்சினைகளில் தொடர்ந்து கேரளா சிக்கலை உருவாக்கிக்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிடிவாதத்தனமாக இந்தியாவில் சமஷ்டி அமைப்பில் இருக்கிறோம் என்ற பெருந்தன்மைக் கூட இல்லாமல் கேரளாவின் போக்கு கண்டனத்துக்குரியதாகும்.

செண்பகவல்லி பிரச்சினையிலும் 1992 லிருந்து கேரளா பிரச்சினை செய்து வருகின்றது. அப்போதும் கேரளா செண்பகவல்லியில் இருந்த நீர் தடுப்புச்சுவரையும் இடித்தது. ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கொடுக்க முடியாது என்று வினோதமான ஒரு சட்டத்தையும் கேரளா சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இம்மாதிரி எந்த மாநிலத்திலும் நடந்தது இல்லை.  2002ல் இன்றைய கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தம் நெல்லை மாவட்டத்தின் எல்லையிலேயே இருக்கும் அடவி-நயனாவை இடிக்க கடப்பாரை மம்பட்டியுடன் வந்தாரே, இவரும் உலகவாதத்தையும், பொதுவுடைமையைம் பேசுகிறார்.

கேரளாவின் இப்போக்கை மாற்றவேண்டும் என்றால் நாம் அனுப்பும் காய்கறிகள், அரிசி, வைக்கோல், எண்ணெய், மின்சாரம், மணல் போன்ற அத்தியாவசியப் பொருட்களை நிறுத்தவேண்டும்.

செண்பகவல்லி அணை குறித்து விரிவான பதிவை நாளை செய்கின்றேன்.

No comments:

Post a Comment