Tuesday, May 10, 2016

வி.கே. கிருஷ்ண மேனன் - V. K. Krishna Menon

கேரளாவில் உயர் பொறுப்பில் உள்ள அரசியல் தலைவர்கள் எல்லாம் எப்போதும் எளிமையும், மக்கள் நலனும், களப்பணியும் இணைந்திருக்கும். கேரளாவில் ஏ.கே. கோபாலன், நம்பூதிரிபாட், அச்சுதமேனன், ஏன் இன்றைக்கு இருக்கின்ற ஏ.கே. அந்தோணி, எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், முதல்வராக இருக்கின்ற உம்மன்சாண்டி போன்றவர்களும் காட்சிக்கு எளிமையான, பகட்டு இல்லாத தலைவர்கள். இவர்களைப் போலவே வி.கே. கிருஷ்ண மேனனும் கடவுளின் பூமியான கேரளத்தில்தான் பிறந்தார். நவகேரளம் படைக்க வேண்டுமென்று இந்த தலைவர்கள் எல்லாம் சர்வபரி தியாகம் செய்தவர்கள். கிருஷ்ண மேனன் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயமாகும்.

இந்திய அரசியல் வரலாற்றில் வி.கே. கிருஷ்ண மேனன் மறக்கமுடியாத ஆளுமை. எளிமையானவர், தைரியமிக்கவர், எதையும் துணிந்து எதிர்நோக்குபவர். கேரளாவில் பிறந்தாலும் பம்பாயில் நாடாளுமன்றத் தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர். சிறந்த ராஜதந்திரி. நேருவின் அன்பைப் பெற்றவர்.

வி. கே. கிருஷ்ண மேனன் (V. K. Krishna Menon) வெங்காலில் கிருஷ்ணன் கிருஷ்ண மேனன் (மே 3 1896 - அக்டோபர் 6 1974),  ஐக்கிய ராஜ்யத்திற்கான இந்திய உயர்பேராளர் ஆணையராகவும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இந்தியா பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.

ஐ.நா. மன்றத்தில் இந்தியாவின் குரலை உரக்க உரிமை குரலிட்டவர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செழிப்பான குடும்பத்தில் (1896) பிறந்தார். குடும்பப் பெயர் ‘வெங்காலில்’. தந்தை கிருஷ்ண குருப், வெற்றிகரமான வழக்கறிஞர். தலசேரி, கோழிக்கோட்டில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, சாமுத்திரி கல்லூரியில் பயின்றார்.

சென்னை பிரசின்டென்சி கல்லூரியில் வரலாறு, பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அன்னி பெசன்ட்டின் ஹோம் ரூல் இயக்கத்தில் இணைந்தார். தத்துவத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

அன்னி பெசன்ட்டின் ‘பிரதர்ஸ் ஆஃப் சர்வீஸ்’ அமைப்பின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டார். அவரது உதவியுடன் இங்கிலாந்து சென்றார். உளவியலில் முதுகலைப் பட்டம், அரசியல் அறிவியலில் எம்எஸ்சி பட்டம், கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றார்.

பத்திரிகையாளராக சிறிது காலம் பணியாற்றினார். இங்கிலாந்து பார் கவுன்சிலில் பதிவு பெற்றார். தொழிற்கட்சியில் இணைந்தவர், பின்னர் இந்திய விடுதலைக்கு ஆதரவு திரட்ட இந்தியா லீக் அமைப்பின் செயலாளராக லண்டனில் பணியாற்றினார்.

உணர்ச்சிகரமான பேச்சாளரான இவர், இங்கிலாந்து முழுவதும் சென்று இந்திய விடுதலையின் அவசியம் குறித்து அந்நாட்டு மக்களிடம் பேசி ஆதரவு திரட்டினார். இந்த அமைப்பு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இங்கிலாந்து கிளையாக செயல்பட்டது. இதனால், நேருவை சந்திக்கும் வாய்ப்பை பெற்றார்.

1947 இல் நாடு திரும்பியவர், நேருவின் சிறப்பு தூதராக நியமனம் பெற்றார். வெளியுறவுக் கொள்கை செய்தி தொடர்பாளர், பிரிட்டனுக்கான இந்திய ஹை கமிஷனர், ஐ.நா. சபையின் இந்தியப் பிரதிநிதி ஆகிய பொறுப்புகளை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர். பாதுகாப்பு துறையில் புதிய உத்வேகத்தைக் கொண்டுவந்தார். இவரது கொள்கைகளும் வழிநடத்துதலும் வலுவான ராணுவம் உருவாக காரணமாக அமைந்தன. தற்போது புகழ்பெற்று விளங்கும் சைனிக் பள்ளிகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இவரது சிந்தனையில் உதித்ததுதான்.

கடமையில் கண்டிப்புடனும் உறுதியுடன் இருந்தார். பத்மவிபூஷண் விருது பெற்றார். ‘டைம்’ உட்பட உலகின் பல பிரபல பத்திரிகைகளும் ‘இந்தியாவின் ஆற்றல் மிக்க 2-வது மனிதர்’ என புகழாரம் சூட்டின.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் உரிமைகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் 8 மணி நேர உரை நிகழ்த்தி உலகப் புகழ்பெற்றார். இவரது இந்த பேச்சு, காஷ்மீரில் இந்தியாவின் நிலையை பாதுகாப்பதற்கும், காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. சபை அப்போதைக்கு தீர்த்துவைப்பதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

‘காஷ்மீரின் நாயகன்’ எனப் புகழப்பட்டார். மேற்கத்திய உலகில் இந்தியாவை உயர்த்திப் பேசுவதிலும், யாராவது இந்தியாவுக்கு எதிராகப் பேசினால் அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதிலும் வல்லவர். மனஉறுதி, நுண்மான் நுழைபுலம் கொண்டவர். உலக அரசியலை நன்கு அறிந்தவர். சர்வதேச அரசியல் களப் பணியாளர். சிறந்த நாட்டுப் பற்றாளர். வி.கே.கிருஷ்ண மேனன் 78-வது வயதில் (1974) மறைந்தார்.

இப்படிப்பட்ட கிருஷ்ண மேனன் அவர்களை நினைவுகொள்ள இன்றைக்குள்ள சமூகம் தவறிவிட்டது. 

No comments:

Post a Comment