Sunday, May 15, 2016

வாழ்க நமது குடியாட்சி மாண்பு....

1950, 60களில் வெறும் டீயும், பீடியும் குடித்துக்கொண்டு மாற்று வேஷ்டி சட்டை இல்லாமல் தேர்தல் பணி செய்த கம்யூனிஸ்ட்டுகளை பார்த்து மாஸ்கோவில் இருந்து பணம் வருகிறது என்று கொக்கரித்தது உண்டு. டீயும், பன்னும் சாப்பிட்டுக்கொண்டு கடமையே என்று கடும்பணிகள் ஆற்றிய திமுக தோழர்களை பார்த்து இவர்களுக்கெல்லாம் ஓட்டா என்று ஏகடியமும் செய்தது உண்டு. திமுகவும், கம்யூனிஸ்ட்டும் நாட்டு நலனுக்கு சாதித்தது அதிகம்.

வேட்பாளர் கிராமத்தில் உள்ள பம்புசெட்டில் குளித்து, துண்டோடு தான் கட்டியிருந்த வேஷ்டியை ஏரோப்ளேன் மார்க் (Brand) நீலக்கலர் சோப்பை கொண்டு துவைத்து காயப்போட்டு, அந்த வேஷ்டி காய்ந்தவுடன் கட்டிக்கொண்டு ஓட்டுக் கேட்கச் சென்ற எளிய சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளர் மறைந்த ஊர்காவலனையும் பார்த்துள்ளேன். கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கோவில்பட்டி எஸ். அழகர்சாமி, மோரில் களியைக் கரைத்து மதிய உணவாக குடித்துவிட்டு வேட்பாளராக அன்றைக்கு வாக்குகள் கேட்ட காட்சிகளும் கண்முன் உள்ளன. அப்போது திமுகவுக்கு வாக்கு சேகரித்த திராவிட மணியை சைக்கிளில்தான் அழைத்து வருவதுண்டு. ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் அவர் ஒரு முக்கிய நட்சத்திர பேச்சாளர். இப்படி பல பழைய நினைவுகள். அதைப் பேசி இப்போது என்ன பயன் இருக்கிறது? அது ஒரு காலம். இது ஒரு காலம். அது நல்லதா? இன்றைக்கு உள்ள பந்தா, பகட்டு, போலித்தனம், நடிப்பு, பாசாங்கு, தகுதியே தடை என்ற நிலை என்பது நல்லதா?

காலச்சக்கரங்கள் எவ்வளவோ வேகமாக நகர்ந்து உருண்டுவிட்டன. வாழ்க நமது குடியாட்சி மாண்பு....

No comments:

Post a Comment