Sunday, July 17, 2016

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

ட#ஏன்_கண்டிய_நடனம்_இங்கே........?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களும் சிங்கள மாணவர்களும் மோதலில் ஈடுபட்டு தணிந்துள்ளபோதும் இப்பொழுது விடுதியை விட்டு மாணவர்களை வெளியேறச் சொல்லியதால் வளாகத்தில் உடமைகளோடு செய்வதறியாது காத்திருப்பதாக அறியமுடிகிறது.
போர் நிறைவுக்குப் பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்ட சிங்கள மாணவர்களின் தொகை இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தையும் சிங்களமயமாக்கி அடக்குமுறைக்குள் கொண்டுவந்துவிட்டது. சிங்கள மாணவர்களின் வருகையின்பின் தமிழ் சிங்கள மாணவர்களிடையே அவ்வப்போது புகைந்துகொண்டிருந்த இனவாத நெருப்பு இன்றைய ஆடி மாதத்தின் முதல்நாள் காற்றிலேயே கொழுந்துவிடத் தொடங்கிவிட்டது. இந்த ஆரம்பம் எந்தத்தரப்பினர்க்கும் ஆரோக்கியமாக அமையப்போவதில்லை.
ஒரு காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்குரல்களாக வடக்கே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் கிழக்கே கிழக்கு பல்கலைக்கழகமும் அன்றுதொட்டு இருந்து வந்தன. காரணம் இவ் இரண்டு பல்கலைக்கழகங்களும் தமிழரின் பிரதான தாயக பூமிகளான மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் அமைந்து பெருந்தொகை தமிழ் மாணவர்களையும் பேராசிரியர்களையும் கொண்டிருந்தன. இவ்விரண்டு பல்கலைக்கழகத்திலிருந்தும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதப் போராட்டத்திலும் அகிம்சை வழியிலும் எண்ணற்ற மாணவர்கள் தம்மைத் தியாகம் செய்திருந்தார்கள். தமிழ்மக்களின் உரிமைகள் தொடர்பான அறிவார்ந்த குரல்களாக இரண்டு பல்கலைக்கழகங்களும் கோலோச்சின.
ஆனால் கிழக்கில் போர் முடிவுக்கு வந்து வடக்கில் மையங்கொண்டதிலிருந்தே கிழக்குப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் திட்டமிட்டு சிங்களமயமாக்கி தமிழ் மாணவர்கள் கைதூக்க முடியாத நிலைக்கு மாற்றி இன்று அதில் கணிசமான வெற்றியும் கண்டுவிட்டது. ஒரு காலத்தில் வடகிழக்கு மாணவரொன்றியமென இரண்டு பல்கலைக்கழக கல்வியளர்களும் குரல் கொடுத்த நிலை மாற்றியமைக்கப்பட்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் குரல்வளை சிங்கள அடக்குமுறையின் கரங்களால் நசுக்கப்பட்டுவிட்டது.
எஞ்சியிருந்ததுதான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். வடக்கில் போர் முடிவுக்கு வரும்வரை மருத்துவபீடத்தில்கூட சிங்கள மாணவர்கள் இல்லாத நிலை இருந்தது. 2009 இற்கு பின்னர் படிப்படியாக சிங்கள மாணவர்கள் உள்வாங்கப்பட்டு இன்று தமிழ் மாணவர்களின் தொகையை விஞ்சுமளவிற்கு சிங்களமயப்படுத்தப்பட்டு விட்டது. ஆரம்பத்தில் மருத்துவ பீடம் என தொடங்கி பின்னர் விஞ்ஞான பீடம், முகாமைத்துவபீடம், பொறியியல் பீடம், விவசாய பீடம் என ஆக்கிரமித்து இறுதியில் கலைப்பீடத்தையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது தீவிர சிங்களமயமாக்கம்.
நேற்றுவரை சிங்கள மாணவர்கள் தமது மனத்திலே இனவாத வன்மத்தையே சுமந்திருந்தார்கள் என்பதை இன்று அவர்களின் வாய்கள் கொட்டிய அடக்குமுறை வார்த்தைகள் பளிச்செனக் காட்டுகின்றன. திட்டமிட்ட ரீதியில் மருத்துவ பீடமும் விஞ்ஞான பீடமும் சிங்கள மயமாக்கப்பட்டதோடு முகாமைத்துவ பீடம் மூவின மாணவர்களாலும் நிரப்பப்பட்டு அதுவும் தமிழ் மாணவர்களை வலுவிழப்புக்குள்ளாக்கியுள்ளது.
எஞ்சியிருப்பது கலைப்பீடம். கலைப்பீடத்திலும் சட்டத்துறையை சிங்களம் ஆக்கிரமித்துவிட்டது. இதுவரை வளாகத்தினுள் தமிழ் சிங்கள மோதல் நேராததற்கு காரணம் கலைப்பீடம் அதிகரித்த தமிழ் மாணவர்களைக் கொண்டிருப்பதுவே. ஆனால் விஞ்ஞான பீடமும் முகாமைத்துவபீடமும் சிங்களமயமாகியதன்பின் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கைக்கு நிகரான சிங்கள மாணவர்களின் தொகை சமப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே சிங்கள மாணவர்கள் துணிச்சலோடு வன்முறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் விளைவு எதிர்காலத்தில் ஆரோக்கியமாக அமையாது.
தமிழ் மக்களுக்கான யாழ் பல்கலைச் சமூகத்தின் குரல்வளையைத் திட்டமிட்டு அடக்கும் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே பல்கலைக்கழக மாணவர் உள்வாங்கல் நடைபெற்று வருகின்றன. கலைப்பீடத்தில் இணைக்கப்படும் மாணவர் மொத்த எண்ணிக்கையில் தமிழ் ஆண் மாணவர்களைவிட பெண் மாணவிகள் 75 விழுக்காட்டுக்கு மேலும் விஞ்ஞான பீடத்தில் பெரும்பான்மையாக இணைக்கப்படும் சிங்கள மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் பெண்களைவிட ஆண்களே அதிகம் உள்வாங்கப் படுகின்றனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தை தமிழ் மாணவர்களிடமிருந்து மீட்டு அவர்களை அடக்கியதுபோல் யாழ் பல்கலைக்கழகத்தையும் அவ்வாறு மாற்றுவதுதான் மேலிடத்தின் நோக்கம்.
நல்லிணக்கம் என்ற போர்வையில் செய்யப்படுகின்ற மிக மோசமான ஒரு இனவாதத் தூண்டல் என்றே சொல்லமுடியும். முற்றுமுழுக்க தமிழ் மாகாணம் ஒன்றின் தலையாய பல்கலைக்கழகமாக இருக்கும் ஒரு கல்விக்கூடத்தில் சிங்கள மாணவர்களின் தொகையை அதிகரிப்பது தேவைதானா?
யாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் எல்லோரும் பீட வேற்றுமை மறந்து ஒன்றாக ஒற்றுமையாக செயற்படவேண்டிய தருணம் இது. அத்துடன் முடிந்தவரை உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்து நிதானமாக நகரவேண்டும். வேறு எந்த பல்கலைக்கழகத்தில் இன மோதல் நடந்தாலும் அது பெரிதாக கண்டுகொள்ளப்படாது. ஆனால் யாழ் பல்கலைக் கழகத்தில் இனமோதல் வெடித்தால் அது இனப்பிரச்சினையாகி நாட்டுப்பிரச்சினையாகி சர்வதேசம்வரை தொற்றிவிடுமளவுக்கு ஊதிப் பெருப்பிக்க பல கறுப்பாடுகள் காத்திருக்கின்றன. யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களோடு மோதி அவர்களை அடக்குவது பெரிய கடினமான காரியமல்ல, ஆனால் வடக்குக்கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் மாணவர்கள் நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் சிறுபான்மையினராக இருக்கின்றனர். இந்தப் பிரச்சினை அவர்களையும் பாதிக்கவல்லது.
ஆகவே நிதானமாகச் செயற்படவேண்டிய தருணம் இது. மாணவரொன்றியம் இதனை உரிய முறையில் உரிய தரப்பினரோடு கையாளவேண்டும். உணர்ச்சிகளைக் கிளறிவிடுவதால் மீண்டும் பாதிக்கப்போவது நாம்தான்.
தமிழ்ப்பாரம்பரியமிக்க பல்கலைக்கழகத்தில் கண்டியப் பாரம்பரியத்தைத் திணித்தமை ஏற்புடையதன்று. இது இந்தளவுக்குச் செல்லும்வரை வாய்மூடி இருந்த நிர்வாகம் கண்டனத்திற்குரியது. இப்பொழுதுகூட ஒரு பொருத்தமற்ற முடிவையே நிர்வாகம் எடுத்திருக்கிறது.

No comments:

Post a Comment

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...