தாமிரபரணி
------------
வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்!
நம்ம மாநிலத்தை தண்ணீர் பிரச்னைக்காக பக்கத்து மாநிலங்களோட சண்டை போட வைக்காத ஒரே நதி தாமிரபரணிதான். பொதிகை மலையில உற்பத்தியாகும் இந்த நதிதான் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களோட தாகத்தைத் தீர்த்து, பசுமையைக் கொழிக்க வைக்குது.
இந்த தண்ணியில தாமிரச்சத்து கலந்திருக்கிறதால, இந்த நதிக்கு தாமிரபரணினு காரணப் பெயர் வந்திருக்கும்னு சொல்றாங்க. அதாவது, பொதிகை மலை உச்சியில பூங்குளம்ங்கிற இடத்துல இருந்துதான், தாமிரபரணி நதி உற்பத்தியாகுது. தாமிரபரணி உற்பத்தியாகி வர்ற வழியில சில மரங்களோட இலைகள்லயும், பாறைகள்லயும், தாமிரச்சத்து இருக்கிறதாவும், அந்தச் சத்து தண்ணியோட கலந்து வருதுனும் சொல்றதுண்டு. அறிவியல்பூர்வமாவே, இந்த தண்ணியில தாமிரச்சத்து இருக்குனு கண்டுபுடிச்சிரு
க்காங்க.
தாமிரபரணி தண்ணி எல்லா வகைக் காய்ச்சல், பித்ததோஷம், கண்புகைச்சல், உள்சுரம், சுவாச ரோகம், கக்குவான், என்புருக்கி, கை, கால் எரிச்சல், மிகுந்த நீர்வேட்கை ஆகிய நோய்களைத் தீர்க்கும்.
#தாமிரபரணி ஆறு, மலையில இருந்து, இறங்கி பாபநாசம் வழியா நடந்து, தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் பகுதியில கடல்ல கலக்குது. இந்தக் காலத்துல பல விதமான ரசாயன கழிவுகள் கலந்துதான், தாமிரபரணி கடலுக்குள்ள போய் சேருது. குறைஞ்சபட்சம் பாபநாசம் வரையிலும், வேணும்னா தண்ணி தூய்மையா இருக்கலாம். அதுக்கும் கீழ இறங்க, இறங்க தண்ணியோட தரம் மாறி, உருமாறிடுது. தாமிரபரணியில வெள்ளப்பெருக்கு உருவாகி, கடல் தண்ணியில கலந்தாதான், சுத்துப்பட்டுல நல்ல மழையும், கடலுக்குள்ள மீன் வளமும் பெருகும். நன்னீர் கடல்ல, கலக்குற பகுதிகளிலிருந்துதான் மேகங்கள் அதிகமான தண்ணீரை உறிஞ்சி மழையைக் கொடுக்குது. நன்னீர் இருக்கிற பகுதியிலதான், பல வகையான மீன்கள் உற்பத்தியாகி பெருகி வளருது. ஆக, இனிமேல் கடல்ல வெள்ள நீர் வீணா கலந்துடுச்சுனு சொல்லாதீங்க.
சரி, தாமிரபரணிக்கு வருவோம். அந்தக் காலத்திலிருந்தே, தாமிரபரணி வெள்ளம் கரைபுரண்டு ஓடியிருக்கு. பொதிகை மலையில மழை பெஞ்சி, திடீர்னு வெள்ளம் வர்ற செய்தி திருநெல்வேலியில இருக்கிறவங்களுக்கு எப்படி தெரியும்?
தாமிரபரணியில நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல்பூர்வமா தெரிஞ்சுக்கிட்டாங்க. அதுக்குப் பேரு, சங்குக் கல்மண்டபம். தாமிரபரணி ஆத்து மையத்தில சங்குக் கல்மண்டபம் அமைச்சிருந்தாங்க. மூணு பக்கம் திறந்தவெளியாகவும், தண்ணி வர்ற எதிர்ப்பக்கம் மட்டும் கற்சுவராலயும் அடைக்கப்பட்ட மண்டபம் அது. மண்டபம் உச்சியில சங்கு மாதிரி ஒரு அமைப்பு இருக்கும். ஆத்துல வெள்ளம் வரும்போது, அந்த மண்டபத்துக்குள்ள குறிப்பிட்ட அளவுக்கு மேல நீர்மட்டம் உயர்ந்தா, வெள்ளத்தோட இரைச்சலால் காத்து உந்தி தள்ளி, அந்த சங்கு சத்தமாக ஊதும். இதுதான் வெள்ளம் பற்றிய அறிவிப்பு. இதன் மூலமா, சுற்று வட்டார மக்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயிடுவாங்க.
நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகும். சங்கு சத்தம் குறைஞ்சதுனா, வெள்ளம் வடிஞ்சிருச்சுனு அர்த்தம். சங்குச் சத்தம் குறைஞ்ச பிறகு, கரையோர மக்கள், இயல்பு வாழ்க்கைக்கு வந்துடுவாங்க.
ஒரு காலத்துல பாபநாசம் தொடங்கி, கடல்ல சங்கமம் ஆகிற வரையிலும், குறிப்பிட்ட தூரத்துக்கு தாமிரபரணியில ஒரு சங்கு மண்டபம் இருந்திருக்கு. அதுக்கு சாட்சியா, தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி (வைணவ ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த ஊர்)யில, தாமிரபரணிக் கரையில இன்னும் சங்கு மண்டபம் நின்னுக்கிட்டிருக்கு. பல நூறு வருஷத்துக்கு முன்னாடியே, வெள்ளம் வந்தா தப்பிக்கிறதுக்கு, முன்னறிவிப்பு சொன்ன, சங்கு மண்டபம் மட்டும் வெளிநாட்டுல இருந்திருந்தா, இந்நேரம் உலக பாரம்பர்ய சின்னமா அறிவிச்சிருப்பாங்க.
No comments:
Post a Comment