என்னை நீ மறப்பாய் எனில் - பாப்லோ நெருடா
----------------------------------------------------------------------
நீ ஒன்றைத் தெரிந்து
கொள்ள வேண்டுகிறேன்.
நீ அறிந்திருக்கலாம்,
இது இப்படித்தானென்று:
பளிங்கு நிலவையோ
இலையுதிர் காலத்தின் நிதானத்தில்
சிவப்பு மரக்கிளையையோ
என் ஜன்னல் வழியே
நான் பார்ப்பதும்
தீயில் எரியும் மரக்கட்டையின்
தொட்டுணர முடியாத சாம்பலை
அல்லது உருமாறிய அதன் தண்டை
நெருப்பினருகில்
நான் தொடுவதும்
என எல்லாச் செயல்களுமே
என்னை உன்னிடம் கொண்டுசேர்க்கும்,
நறுமணம், ஒளி, இயந்திரம் என
இங்கு இருக்கும் யாவும்
சிறு படகுகளாய்
எனக்கெனக் காத்திருக்கும்
உன் தீவுகளைத் தேடிப் பயணிப்பது போல!
ஆனாலும்,
என்னை நேசிப்பதை
கொஞ்சம் கொஞ்சமாய்
நீ கைவிடும்போது,
உன் மேலான என் காதலும் போய்விடும்
கொஞ்சம் கொஞ்சமாய்!
எளிதில்
என்னை நீ மறப்பாய் எனில்
என்னைத் தேட வேண்டாம்,
ஏனென்றால்
நானும் உன்னை ஏற்கனேவே மறந்திருப்பேன்!
திரைச்சீலைகள் வீசும் காற்று
என் வாழ்வைக் கடந்து செல்வதை
தீர்க்கமாய், ஆவேசத்துடன் ஆராய்ந்த பின்னும்
வேர்கள் ஊன்றிய என் இதயத்தின் தீரத்தில்,
என்னைத் துறந்து நீ செல்வாய் எனில்
அதே நாள்
அதே நேரம்
உன்னை நான் விட்டொழிந்திருப்பேன்,
புது மண் தேடி
என் வேர்கள் நீளும் என்பதையும்
நினைவில் கொள்!
ஆனால்,
நீ எனக்கெனத் தீர்க்கப்பட்டவள் என்று
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணிநேரமும்
மாறாக் கனிவுடன்
நீ உணரும் போதும்
ஒவ்வொரு நாளும்
உன் இதழ்கள் வரை உயர்ந்து
என்னை நாடி
மலரொன்று பூக்கும் போதும்
ஓ .. என் அன்பே! என்னவளே!
ஓய்ந்தத் தீக்கனல்
மீண்டும் பற்றியெரியும் என்னுள்!
அழிந்திடாமல், மறந்திடாமல்
அனைத்தும் காக்கப்படும் என்னுள்!
உன் காதலினால் உயிர்வாழும்
உனக்கான என் பிரியம்
நீ வாழும் நாளென்றும் நிலைத்திருக்கும்
உன் கரங்களுக்குள்,
என்னை விட்டகலாமல்!
கவிதை மூலம்: பாப்லோ நெருடா
No comments:
Post a Comment