Tuesday, July 26, 2016

தில்லை வில்லாளன்

மறைந்த தில்லை வில்லாளன் அவர்களிடம் 1981லிருந்து சந்தித்து பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. உயர்நீதிமன்றத்தில் என்னுடன் வழக்கறிஞராகவும் இருந்தார். நியூ லா சேம்பர் கீழ் தளத்தில் அவருக்கு அறையும் இருந்தது.  மயிலாப்பூர் சன்னதித் தெருவுக்கு நேராக உள்ள நடுத் தெருவில் இராம. அரங்கன்னல் வீட்டில் தங்கியிருந்தார். இந்த வீட்டில்தான் அவள் ஒரு தொடர்கதை படம் எடுக்கப்பட்டது.  நடிகர் ஜெய்கணேஷ் நடித்து பாடிய "தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு" என்ற பாடல் தெருவிலிருந்து பாடும்பொழுது வீட்டிலிருந்து நடிகை சுஜாதா ஜன்னல் திரைச்சீலைகளை மூடும் காட்சி இங்குதான் அப்போது படமாக்கப்பட்டது.  சுஜாதாவின் குடும்பம் அரங்கன்னல் வாழ்ந்த வீட்டில்தான் வாழ்ந்ததாக 1974ல் திரைப்படம் எடுக்கப்பட்டது.  நான் அடுத்தத் தெருவில் உள்ள சாலைத் தெருவில் 1979லிருந்து வசித்தேன். மாலைப் பொழுதுகளில் தில்லை வில்லாளன் என்னைத் தேடி வந்து பேசிக் கொண்டிருப்பார். அந்த வீட்டில்தான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்தார். விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு அங்கு வருவார். இவர்களோடு அரங்கன்னல் பேசுவதை விரும்புவார். என்னிடம் அன்போடு பழகுவார். ஒரு சமயம் நானும் அவரும் டெல்லிக்குப் போனபொழுது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது.  அப்போது உடனிருந்து அவரை கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காவிரிப் பிரச்சினையைப் பற்றி என்னுடைய கட்டுரை தினமணியில் வந்தபொழுது அதைப் படித்துவிட்டு நான் நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசினேன். ஹேமாவதியில் அணை கட்டாதீர்கள். அது எங்கள் தமிழகத்துக்கு எமனைப் போன்று ஏமாவதி என்று பேசினேன் என்று குறிப்பிட்டார். அவரைப் பற்றி எத்தனைப் பேருக்கு இன்றைக்குத் தெரியும்? அண்ணாவின் பயிற்சி பெற்று அவருடைய நம்பிக்கை தளபதியாக இருந்தார்.  சிதம்பரத்தில் பிறந்த அர்ச்சுனன்தான் தில்லை வில்லாளன். சிதம்பரம்தான் தில்லை. வில்லுக்கு அர்ச்சுனன் என்று சொல்லப்படுவதால் அந்த அர்ச்சுனன் வில்லாளன் ஆனார்.  அண்ணாவின் திராவிட நாடு இதழில் பணியாற்றியவர். கதை, கட்டுரை, நாடகங்கள் ஆகியவற்றை எழுதியவர். 20 வயதுக்குள் 6 நாவல்களை எழுதி வெளியிட்டவர். பேசும் ஓவியம் என்கிற இவரது நாடகம், ஓவியத்தின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் புரட்சிக்காரனை மேடையில் சித்தரித்தது. அண்ணாவின் படைப்பாற்றல் மிக்க தம்பிகளில் இவரும் ஒருவர். தம்பி, பூமாலை போன்ற பத்திரிகைகளையும் நடத்தினார். வழக்கறிஞரான இவர் தி.மு.க. வின் சார்பில் 1968 முதல் 1976 வரை நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மாதவன், தன்னுடைய எழுத்துக்களுக்கு முன்னோடியாக அண்ணா, கலைஞர், தில்லை வில்லாளன் ஆகியோரது பெயரைக் குறிப்பிட்டதிலிருந்து திராவிட இயக்கத்தில் தில்லை வில்லாளன் என்ற படைப்பாளி எத்தகைய விதைகளை விதைத்துச் சென்றிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

No comments:

Post a Comment

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...