1950களின் இறுதியிலிருந்து டென்ட் கொட்டகை டீக்கடை பெஞ்சுகள் போல இருக்கும். அதிலாவது சில சமயம் மணல் தரையில் உட்கார்ந்துகொண்டு, கறுப்பு வெள்ளைப் படங்களை பார்த்ததெல்லாம் இன்றைய நினைவுகள். கோலி கலர் சோடா, முறுக்கு, கடலை மிட்டாயோடு சேர்த்து படம் பார்ப்பது சம்பிரதாயம் மட்டுமல்லாமல் கடமையாக கொண்டதுண்டு. நினைவு தெரிந்த காலத்தில் 10 பைசாவாக இருந்து இறுதியாக காலணா என்று சொல்லக்கூடிய 25 பைசாவுக்கு திருவேங்கடத்தில் படம் பார்த்ததுண்டு. அவையெல்லாம் மகிழ்ச்சியான நாட்கள். அதை திரும்பப் பெற முடியாது. அதேபோல கல்லூரி காலத்தில் பாளையம்கோட்டை,திருச்செந்தூர் ரோட்டில் பெல்பின்ஸ் அருகில் இருந்த டென்ட் கொட்டகை, மேலப்பாளையத்தில் இருந்த திரையரங்கத்திற்கும் கல்லூரி விடுதி வார்டனுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக சென்று வந்ததெல்லாம் மகிழ்ச்சியான தருணங்கள். கிராமங்கள் இம்மாதிரி வாடிக்கைகள், அமைதியான போக்குகள், வெள்ளந்தியான மனிதர்கள், நேர்மையான சூழல்கள் என்பதெல்லாம் இப்போது அவசியம் என கருதி கிராமத்திலேயே இருந்து விடுவோமா என்று நினைத்தாலும் அங்கும் மனிதர்கள் தொலைக்காட்சி நாடகங்களைப் பார்த்து அம்மாதிரியே தாங்களும் இருக்க வேண்டும் என்று நினைக்கத் துவங்கிவிட்டனர். தொலைக்காட்சி நாடகங்கள் அனைத்தும் நம் சமுதாய அமைப்பை ஆரோக்கியமற்ற நிலைக்கு தள்ளிப்போட்டுவிட்டது. கூட்டுக் குடும்பங்களை கலைத்துவிட்டது. என்ன இருந்தாலும் டென்ட் கொட்டகையில் ஏழரை மணிக்கு முதல் காட்சித் துவங்கி, பத்தரை மணிக்கு முடியும். பிறகு இரண்டாவது காட்சி என்பதெல்லாம் அன்றைக்கு மனதின் அலுப்பை குறைக்கும். இதுவே கிராமப்புறங்களுக்கு அன்றைக்குக் கிடைத்த பொழுதுபோக்கும், நிம்மதியும் ஆகும். இன்றைக்கு கிராமப்புறங்களில் இந்த நிம்மதி இருக்கின்றதா?......
அந்த வகையில் உலகின் கடைசி, தமிழகத்தில் இறுதியாக இருந்த திருப்பரங்குன்றம் லக்ஷ்மி தியேட்டரும் மூடப்படுவதை வருத்தத்தோடுதான் பார்க்கவேண்டியுள்ளது.
No comments:
Post a Comment