Friday, July 15, 2016

இராம காதை காட்சிகள்

இன்றைக்கு பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள். அவரோடு திரு. பழ. நெடுமாறன் அவர்கள் மூலமாக நல்ல அறிமுகம். நான் மாணவர் அரசியலில் இருந்த காலத்தில், அவரை ஒரு சமயம் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அரசு விடுதியில் சந்திக்கும்பொழுது அவர் கையில் மூதறிஞர் இராஜாஜி எழுதிய "சக்ரவர்த்தி திருமகன்" என்ற தலைப்பில் இராமாயணம் இருந்ததைப் பார்த்தேன். இராமாயணத்தின் மேல் காமராஜருக்கு ஈர்ப்பு உண்டு. இராம காதையில் இறுதியாக நீதியை உரைக்கும் காட்சி இதோ.....

ராமன் பதினான்கு வருட வனவாசம் முடிந்து வெற்றியுடன் புஷ்பகவிமானத்தில் வந்திறங்கிய நன்நாள் தான் அது. உதயசூரியன் ஆவலுடன் எட்டிப்பார்க்க சூரியகுல திலகத்தை சுமந்து வந்த புஷ்பகவிமானம் கீழே இறங்கியது.

பரதனை விழுங்க தயாராக நின்ற தீக்கனல்கள் சுருண்டன. அண்ணனின் பாதகமலத்தில் தலைவைத்து ஆனந்தக்கண்ணீர் விட்டான் பரதன். மங்கலவாத்தியங்கள் முழங்கின. மக்கள் மகிழ்ச்சியுடனும், ஆரவாரமுடனும் "ரகுராமன் வாழ்க! வெற்றி வீரன் வாழ்க!" என்று கூவி மகிழ்ந்தனர். பரதனை தூக்கி அணைத்த ராமன் தாயார்களை நோக்கி நடந்தான். மகிழ்ச்சியில் யாவரும் திளைத்தனர். சட்டென கைகேயியின் காலில் விழுந்து வணங்கினான் ராமன். தாயே தாங்கள் சொன்ன சொல்லை காப்பாற்றி விட்டேன் ஆசி கூறுங்கள் என்றான்.

கலங்கிய முகத்துடன் வார்த்தை எழாமல் நின்ற கைகேயியைப் பார்த்து துணுக்குற்றான்.

தாயே, ஏன் கண்கள் கலங்குகிறீர்கள். தாங்கள் நினைத்த காரியத்தால் தசமுகனை வென்று வந்திருக்கிறேனே. எதற்காக வருத்தப்படுகிறீர்கள்?

ராமா! என் மகனே! என்று உதடு துடிக்க கூறிவிட்டு மயங்கி விழுந்தாள் கைகேயி. ஊர்மிளை ஓடிவந்து தாங்க, சுதகீர்த்தியும் மாண்டவியும் முகத்தில் நீர் தெளித்தனர். தன் மேலாடையால் அன்னையின் முகத்தை துடைத்தான் ராமன். கைகேயியின் கண்களிலிருந்து கண்ணீர். "வனவாசம் போயும் திரும்பி வந்துவிட்டானே என கண்ணீர வடிக்கிறாளா - இவளா என்னை பெற்ற தாய் - இல்லை இவள் ஒரு பேய்," பரதன் கருவினான். அம்மா எழுந்திருங்கள் என்ற ராமன், அவளை அன்புடன் அணைத்து, அங்கு காத்திருந்த ரதம் நோக்கி சென்றான்.

"நான் பெற்ற மகனே என்னை நாகூசாமல் ஏசுகிறான், ஆனால் நீயோ என்னிடம் அன்பை பொழிகிறாய். ஒரு கூனியின் சொல் கேட்டதால் நான் பட்ட துன்பங்கள் என்னை கூனிக்குருக வைத்து விட்டது. போதும்ப்பா எனக்கு. உனக்காக நான் உயிர் வாழ்ந்தேன்," வேதனையுடன் கூறினாள் கைகேயி.

"யார் சொன்னது நீங்கள் கூனிக் குருகியதாக? பார் போற்றும் வெற்றியை எனக்கு அளித்ததே நீங்கள் தானே அம்மா. வெற்றிக்கு மூலமே நீங்கள். தூற்றுபவர்களை மன்னித்து விடுங்கள்". கைகேயியின் முகத்தில் புன்னகையின் சாயல். தாயே அரண்மணை செல்ல உத்தரவு இடுங்கள். திகைப்புடன் கைகேயி "நானா? உன்னைப்பெற்ற உத்தமி கௌசல்யா அவர்கள் கூறட்டும் ராமா" என்றாள் அமைதியாக. "நான் ராமனை ஈன்றவள் மட்டுமே, நீதான் அவனுக்கு பெருமைகளை அளித்தவள் உனக்குத்தான் உரிமை உண்டு கைகேயி," என்றாள் கௌசல்யா.

கைகேயி களிப்புடன் ராமனும், சீதையும் அயோத்தி செல்லும்படி கூறுகிறேன் மங்கல வாத்தியங்கள் முழங்கட்டும் என்று உத்தரவிட்டாள். வசிஷ்டரும், சுமந்திரரும் அதை ஆமோதித்தனர். ரதத்தின் அருகில் வந்த கைகேயி அங்கேயே நின்றாள்.

ராமன் அன்னையின் முகத்தை நோக்கி ஏருங்கள் என்றான். அதற்கு கைகேயி முன்பு உன் தந்தையுடன் தேரில் சென்ற பொழுது இரு வரங்கள் கேட்டேன் அல்லவா? இப்பொழுது இத்தேரில் அமருமுன் எனக்கு இரண்டு வரங்கள் வேண்டும் மகனே என்றாள்.

மீண்டும் இரண்டு வரங்களை? பரதன் கோபமுடன் பாய்ந்து வந்தான். ஆத்திரம் வீரனுக்கு அழகல்ல, அவனை கையமர்த்திவிட்டு கைகேயியை வாஞ்சையுடன் பார்த்த ராமன் கேளுங்கள் அம்மா என்றான்.

"திருமாலின் அவதாரமே! எனக்கு இப்பிறவியில் பழிச்சொற்களையும், பாவங்களையும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தாய். இதற்கு நேர்மாறாக உன் அடுத்த அவதாரத்தில் உன்னையே வளர்த்து உலகம் புகழும் தாயாக வாழ வரம்தா. இரண்டாவது, தசரத மன்னனே என் அடுத்த பிறவியிலும் எனக்கு மட்டுமே கணவராக வந்து என் கடைசி மூச்சை அவர் மடியில் விடும் பாக்கியத்தை தா", குரல் தழுதழுக்க கூறி முடித்தாள் கைகேயி. எப்படிப்பட்ட அற்புதமான வரங்கள்! வசிஷ்டர் வியந்தார். பரதன் அம்மா என்று கூவிக்கொண்டே புளகாங்கிதமுடன் அவள் காலடியை பற்றி வணங்கி, உங்களை நினைத்து நான் பெருமைபடுகிறேன் என்றான்.

ராமனுக்கோ கிருஷ்ணாவதாரத்தில் வரப்போகும் யஸோதையும், நந்தகோபரும் கண்முன் தோன்றினார்கள். கைகேயி தன்னை வளர்க்கும் அன்னையாய் மட்டுமே வந்து உலகம் புகழும்படி இருக்கப்போவதை நினைத்துக் கொண்டார்.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...