Tuesday, July 12, 2016

கூலிப்படைகளின் ஆதிக்கம்

இன்றைக்கு உயர்நீதிமன்ற வளாகத்திலேயே ஒரு வழக்கறிஞர் வெட்டப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. 55 ஆண்டுகளுக்கு முன்னால் தூத்துக்குடி நகரில் பேரறிஞர் அண்ணாவின் தளபதியான கே.வி.கே.சாமியை வெட்டி சாய்த்தனர். தொடர்ந்து இந்த சம்பவங்கள் நடந்து வருகின்றன. முதுகுளத்தூர் கலவரம், மண்டைக்காடு, ஊஞ்சாலை, சங்கனாங்குளம் ,கோவை குண்டு வெடிப்பு 1999 கலவரம்  என்ற பல கலவரங்கள் சமுதாய மத்தியில் நடந்தேறிய அவலத்தில் சில உயிர்கள் பறிக்கப்பட்டன. ஆனால் இன்றைக்கு என்ன நடக்கின்றது. நிம்மதியாக வாழவேண்டியவர்களுடைய வாழ்க்கையே படுகொலையால் முடிகின்றது என்றால் நாம் ஏன் பிறக்கவேண்டும்? பிறகு எதற்கு ஒரு சமுதாயம்? ஒரு ஒழுங்கு அமைப்பு நிலை ஏன்? இதெல்லாம் நினைக்கும்போது வேதனைக்கு வேதனையாக இருக்கின்றது.

மதுரையில் முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பூண்டி கலைச்செல்வன், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாச்சலம், திருச்சி ராமஜெயம், சிவகங்கை நகரமன்றத் தலைவர் முருகன், மதுரையில் பொட்டு சுரேஷ் என்ற ஒரு நீண்ட பட்டியலே உள்ளது. இவர்களும் சாதாரண மக்கள் அல்ல. முன்னாள் அமைச்சர்கள், அரசியலில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள். இவர்களுக்கே பாதுகாப்பு இல்லையா? இதற்கு என்ன காரணம்? நிழல் உலகில் சில சாம்ராஜ்யங்கள் உலாவுகின்றன. அரசு அதை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது. காவல்துறையும் கைகட்டிக் கொண்டிருக்கின்றது. இந்த தாதா உலகம் தேர்தலிலும் தலையிடுகின்றது. இவர்களிடம் பணம் குவிந்துகிடக்கின்றது. ஒரு பக்கம் வெவ்வேறு ரவுடி குழுக்களாக பிரிந்து மோதிக்கொள்வது பழிதீர்த்துக் கொள்வது என்பது வாடிக்கையாக உள்ளது. 1990க்கு பின் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் தலைதூக்கியபின் கூலிப்படை மும்பையில் உள்ள ரவுடிகளிடம் பயிற்சி பெற்று தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக உலாவி வருகின்றன. பல சமயங்களில் நீதிமன்றங்களிலேயே இந்த தாதாக்களால் பலர் வெட்டப்படுகின்றனர். இக்கும்பல் 1996க்கு பின் கொடிகட்டி பறக்க ஆரம்பித்துவிட்டது. இன்றைக்கு கொலை செய்வது ஒரு தொழில் என்ற நிலை. இதற்கென்று சில சூட்சுமங்கள்.

கூலிப்படையில் பயிற்சி பெற்றவர்கள் ஒருவர், இருவர்கள் மட்டும்தான் இருப்பார்கள். அவர்களுக்கு உதவியாக 16 முதல் 20 வயதுக்குள் இருப்பவர்கள் 10 பேரை வைத்துக்கொண்டு தங்களது காரியத்தை முடிக்கின்றனர். இவர்களில் பலர் காவல்துறையிடம் சிக்குவதில்லை. 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால் எளிதாக ஜாமீனும் கிடைத்துவிடுகிறது. வழக்கிலிருந்தும் தப்பிவிடலாம். இப்படியான நிலைப்பாடு என்றால் அமைதியும், சமாதானமும் எப்படி ஏற்படும்? இதற்கு என்ன முடிவோ தெரியவில்லை.

#கூலிப்படை #கொலை #ksrposting #ksradhakrishnanposting

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...