Tuesday, July 5, 2016

அழகர் அணை (ஸ்ரீவில்லிபுத்தூர்) விவகாரம்



விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் நீண்ட காலமாக விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கின்ற அழகர் அணை திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் கருத்தரங்கம், அது குறித்தான விரிவான விளக்கங்கள் அடங்கிய எனது நூலும் வெளியிடப்படுகின்றது. இந்த திட்டம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே விவாதிக்கப்பட்டாலும் 1950களின் இறுதிகளில் இருந்து 1969 வரை இத்திட்டத்தை நிறைவேற்ற வேகமான மக்கள் இயக்கமாக போராட்டங்களும் கோரிக்கைகளும் எழுந்தன. 1989ல் திராவிட முன்னற்றக் கழக ஆட்சி வந்தவுடன் அன்றைய முதல்வர் தலைவர் கலைஞரிடம் முன்னாள் துணை சபாநாயகர் அண்ணன் பெ. சீனிவாசனும், நானும் 5.8.1989 அன்று இது குறித்து விரிவான விளக்கத்தோடு கோரிக்கை மனுவை அளித்தோம். இந்த திட்டத்தை 1960களில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஸ்ரீவில்லிபுத்தூரின் மண்ணின் மைந்தர் கே. வீராசாமி, அன்றைய இராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவர்களாக இருந்த கே. லட்சுமிகாந்தன் பாரதி, சீதாராமதாஸ், இராமநாதபுர மாவட்ட திமுக அன்றைய மாவட்டச் செயலாளர்களாக இருந்த எஸ்.எஸ். தென்னரசு, எம்.எல்.சி,, முன்னாள் துணை சபாநாயகர் பெ. சீனிவாசன் போன்றோர் இத்திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று அப்போது அக்கறை எடுத்தனர்.

அழகர் அணை திட்டத்திற்கு பொறியாளர் கே. நாராயணன் அவர்கள் இல்லையென்றால் இதைப் பற்றி அறிந்திருக்கவே முடியாது. இந்த திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்று அதற்கான தமிழ்நாடு, கேரளா பகுதிகளின் வரைபடங்களை தேடி கண்டுபிடித்து முறையாக அழகர் அணை திட்டத்திற்கான வரைபடத்தை வரைந்து அதற்கான குறிப்புகளும், திட்டங்கள் மதிப்பீடு விவரங்களையும் முறைப்படுத்தினார். அப்போதெல்லாம் Google Map போன்ற அறிவியல் வசதிகள் எல்லாம் கிடையாது. பல்வேறு சிரமங்களுக்கிடையில் முழுமையாக அழகர் அணை திட்டத்தைப் பற்றி குறிப்புகளை தயார் செய்து சென்னைக்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் பல தடவை அலைந்து திரிந்தவர். அவருடைய பணியை எண்ணிப் பார்க்க வேண்டும். கோவையிலிருந்து நேற்று மாலை (5 மணிக்கு)  சென்னைக்கு வந்திருந்தார்.  அழகர் அணை திட்டம் குறித்து எனது தினமணி கட்டுரையைப் பார்த்தவுடன் தொடர்புகொண்டு, சென்னையில் உங்களை சந்தித்துப் பேசவேண்டும் என்று சொன்னார். நேற்றைக்கு நண்பர் நந்தாவின் கலைஞன் பதிப்பகத்தில். தி. நகரில், மாலைப் பொழுதில் சந்தித்து அழகர் அணை திட்டம் குறித்து பல செய்திகளை சொன்னார். எனக்கும் ஒரு முழுமையான புரிதல் ஏற்பட்டுள்ளது. திரு. நாராயணன் அவர்கள் இன்னும் அதே வேகத்தோடு அழகர் அணை திட்டம் எப்படியும் நிறைவேற்றப்படவேண்டும் என்பதையும் அவர் பேச்சிலிருந்தே தெரிந்துகொண்டேன். அவர் கனவு பலிக்கவேண்டும். தன்னலம் கருதாமல் இவ்வளவு அக்கறையோடு இத்திட்டத்தை நிறைவேற்ற 1950களிலிருந்து அவர் எடுத்துக்கொண்ட பொறுப்புகளையும், கடமைகளையும் பாராட்டியாகவேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அடுத்த மாதம் தமிழகத்தின் முக்கியமானவர்கள் கலந்துகொண்டு அழகர் அணையை செயல்படுத்தக்வோரி கருத்தரங்கையும், தொடர் அறப்போராட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். இது குறித்தான எனது நூலும் அப்போது வெளியிடப்படும். இந்தப் பிரச்சினையில் அக்கறைகொண்டுவரும் விருதுநகர் மாவட்ட, குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார மக்கள் பங்கேற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

#அழகர்அணை #alagardam #ksrposting #ksradhakrishnanposting

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...