Tuesday, July 12, 2016

கிருஷ்ணா - கோதாவரி இணைப்பு - Krishna-Godavari Link


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழகத்தின் உரிமைகளை பாலாற்றை கபளீகரம் செய்து தடுப்பணைகள் கட்டுகின்றார். தன்னுடைய மாநிலத்தை முன்னேற்றுவதற்காக கிருஷ்ணா-கோதாவரி நதிகள் இணைப்பை 320 நாட்களில் முடித்துவிட்டார்.  24 ராட்சச பம்புகள் அமைத்து 354 கன அடி கோதாவரி தண்ணீர் கிருஷ்ணாவில் கலக்க இருக்கின்றது. இன்னும் 20 ராட்சச பம்புகளை இணைத்தால் மேலும் தண்ணீர் அதிகமாகவும், வேகமாகவும் இருக்கும் என்று ஆந்திர மாநில நீர்ப்பாசன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தமிழகத்தில் நடப்பதென்ன? தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு, காவிரி-குண்டாறு, பெண்ணையாறு-பாலாறு போன்ற இணைப்பு திட்டங்கள் இன்னும் முடிவாகாமல் நிலுவையிலேயே இருக்கின்றன. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, நெய்யாறு, அடவிநயனாறு, செண்பகவல்லி, அழகர் அணை, உள்ளாறு, மஞ்சளாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு-புன்னம்புழா, பம்பாறு, சிறுவாணி, பொன்னியாறு, ஒகேனக்கல் போன்ற பல நீர் ஆதாரப் பிரச்சினைகள் முடிவுக்கு வராமல் தமிழகம் தவிக்கின்றது. ஆனால் ஆட்சியாளர்கள் ஒப்புக்கு அறிக்கைகள் மூலமாகவும், செய்திகள் மூலமாகவும்தான் "இதோ, அதோ" என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆந்திரா முதல்வர் தன் மாநிலத்தின் நலனில் நியாயங்களை மீறி பணிகளை செய்கிறார். ஆனால் பாங்கு, நியாயமாகக் கூட நம்முடைய ஆட்சியாளர்கள் செய்யவில்லையே என்ற வேதனை வாட்டுகின்றது. ஏனெனில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், இலவசங்களுக்கு மயங்கி இருப்பவர்களிடம் ஆட்சியாளர்களும் ஏமாற்று வேலைதான் செய்வார்கள். தகுதியே தடை என்ற நிலையில் தகுதியானவர்கள்தான் தேர்தல் களத்தை எட்டிப் பார்க்க விருப்பமில்லாமல் ஆகிவிட்டார்கள்.  குண்டர் சக்தியும், பண நாயகமும், நேர்மையற்றவர்கள் களத்தில் இருக்கும்பொழுது நேர்மையானவர்கள், தகுதியானவர்கள் விலகிதானே செல்வார்கள். பிறகு எப்படி திட்டங்கள் வரும். மக்கள் நலன் எப்படி பேணி காக்கப்படும்? மக்கள் சரியாக இருந்தால்தானே மக்களாட்சி நடக்கும். எனவேதான் நம்முடைய உரிமைகளை இழந்து வருகிறோம். எதிர்கால வரலாறு இதை உண்மையென்று உணரும்.


No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...