Tuesday, December 31, 2024

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை நினைவுகள்

#கன்னியாகுமரிதிருவள்ளுவர்சிலைநினைவுகள்……! 
———————————————————
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபப்  பாறைக்கு அருகே உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவர் சிலையை தன்னுடைய விருப்பப்படிக் கலைஞர் நிர்மாணித்தார். அதற்கான விழா நேற்று தான் நடந்தது போல் இருக்கிறது !ஆனாலும் 25 ஆண்டுகள் கடந்துவிட்டன.!



திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட பிறகான இடைக்காலத்தில் இருவருக்கும் இடையே ஒரு இணக்கமான சூழல் இருந்தது. அப்பொழுது தான் அந்த சிலையும் அமைந்தது. அந்த விழாவின் போது செய்தி விளம்பரத்துறை அமைச்சர் முல்லைவேந்தன் இருந்து சிலைக்கான எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டிருந்தார். ஜனவரி 30 ஆம் தேதி நானும் வை கோவும் கன்னியாகுமரி சென்று விட்டோம்.



வேலைகள் நல்லபடியாக நடந்து கொண்டிருக்க

அந்த மாவட்டத்தின் அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் எம்எல்ஏ ஆவுடையப்பன் தூத்துக்குடி என் பெரியசாமி முன்னாள் அமைச்சர் ஜெனிஃபர் சந்திரன் போன்றவர்களும் அங்கு இருந்தார்கள். கலைஞரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
கலைஞர் வந்ததும் சிலை திறக்கப்பட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது! அந்த விழா நடந்து முடிந்த அன்று தான் வைகோ அவர்களின் மைத்துனர்  



எ. சீனிவாசன் குருமலை - வெங்கடசலபுரத்தில் இறந்து போன செய்தி எட்டியது. கலைஞர் அவர் யார் என்னை எப்படி இறந்தார் என்றெல்லாம் வைகோவை விசாரித்து ஆறுதல் கூறியதெல்லாம் நடந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.




அதன் பிறகு தமிழ் புத்தகாலயம் அகிலன் கண்ணன் அவர்கள் பதிப்பித்த மனித உரிமை- சிலகுறிப்புகள் என்ற எனது நூல் ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில்
வைத்து வெளியிடப்பட்டது. அது குறித்து வெளியான அழைப்பிதழ்களைப் பார்த்துவிட்டு கலைஞர்  ஏய்யா! இந்த நூல் வெளியீட்டிற்கு என்னைக் கூப்பிட வேண்டியதுதானே, ஏன் கூப்பிடவில்லை?! என்னை நீங்களும் வை கோவும் அந்நியமாக நினைக்கிறீர்களா? என்று கேட்டார்.



அப்படி இல்லை அண்ணன் நீங்கள் முதலமைச்சராக இருக்கிறீர்கள்! உங்களுடைய பணி நெருக்கடிகள் என்னவென்று தெரியவில்லை அதை தெரிந்து கொள்ள வேண்டும்! அதற்கு நேரம் இருந்தால்தான் நீங்கள் வர முடியும்  . அதன் பிறகு தான் உங்களை அழைக்கவும் முடியும்! சிலையை திறந்து வைத்து விட்டு வந்திருக்கிறீர்கள். எத்தனை நாள் அந்த பணிகள் என்றும் தெரியவில்லை! உங்களுக்குச் சிரமம் தரக் கூடாது  என்று யோசித்தோம் என்றேன்!

என்னயா! உயர் நீதிமன்றம் முன்னாள் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டி,தஞ்சை ராமமூர்த்தியை கூப்பிட்டு இருக்கிறீர்கள். அமெரிக்க தூதரைக் கூப்பிட்டு இருக்கிறீர்கள் மாலனைக் கூப்பிட்டு இருக்கிறீர்கள்! உங்கள் கட்சிக்காரர்கள் அத்தனை பேரும் இருக்கிறார்கள் உன்னை போன்ற வழக்கறிஞர்களும் இருக்கிறார்கள். அப்படியான நிகழ்ச்சிக்கு நான் வந்திருப்பேன் அல்லவா!நான் வந்து விழாவில் அந்த நூலை வெளியிட வைகோ அதை வாங்கி இருக்கலாமே! என்று அவர் கேட்டதெல்லாம் என் நெஞ்சில்  அலை மோதுகின்றன! அந்த சிலையை எந்த இடத்தில்  நிறுவ வேண்டும் எந்த இடத்தில் எதைச் சேர்க்க வேண்டும் எப்படி எப்படி எல்லாம் அதை உருவாக்க வேண்டும் என்று அவர்  கலந்து பேசியதெல்லாம் என் ஞாபகத்தில் இருக்கிறது.




இன்றைக்கு உள்ளவர்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாது! அன்றைக்கு அந்த விழாவிற்கு ஆற்காடு வீராசாமி தமிழ்நாட்டில் பொதுப்பணித் துறையில் அமைச்சராக இருந்த துரைமுருகன் வந்திருந்தார் . மத்தியில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த டி ஆர் பாலு வந்திருந்தார். இந்த இருவரை தவிர அப்போது  எம்எல்ஏவாக இருந்த தங்கம் தென்னரசும் வந்திருந்தார் என்று நினைக்கிறேன். பேராசிரியர், மூப்பனார்,சிவாஜி கணேசன், ஜன வைகோ,கிருஷ்ன மூர்த்தி(பாஜக),
பாமக தலைவர் இராமதாஸ் என பலர் கலந்து கொண்டார்கள் .

இதுதான் என் ஞாபகத்தில் இருக்கிறது மற்றவர்களெல்லாம் புதியவர்கள் யார் என்று தெரியாதவர்கள். 25 ஆண்டுகள் கழித்து இந்த ஞாபகங்கள் எல்லாம் எனக்கு வருகிறது! அதைச் சொல்ல வேண்டியது என் கடமை! அத்தோடு இல்லாமல் அது கலைஞருடன் நான் பயணித்த நாட்களும் கூட. இன்றைக்கு சிலை திறந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற செய்தியைப்பார்த்த பிறகு எனது கடந்த கால ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அன்றைக்கு சென்னை மேயராக இருந்த ஸ்டாலினும் வந்திருந்தார்! கலைஞர் இருந்திருந்தால் இன்னும் இந்த ஞாபகங்கள் கூடுதலாக இருக்கும்.

உண்மையில் சிலைக்கான அடிக்கல் 1979ல் மொரார்ஜி தேசாய் அவர்களால் எம்ஜிஆர் ஆட்சியின் போது திட்டமிடப்பட்டது. அன்றைய  விவேகானந்த கேந்திரா இயக்குனர் ஏக்நாத் ராணடே அவர்களால் இந்த திட்டம் முன்மொழிக்கப்பட்டது. எம்ஜிஆரின் தலைமையில் மொரார்ஜி தேசாய் அதற்கான விழா எடுத்து அந்த அடிகல்லை நாட்டினார். அதற்குப் பிறகு 21 ஆண்டுகள் கழித்து தான் கலைஞரின்  கனவாக பிரமாண்டமான திருவள்ளுவரின் சிலை 133 அடி உயரத்தில்  வெகு சிறப்பாகக் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டது.

 அப்படியான வள்ளுவர் சிலையின் 25வது ஆண்டிற்கு கலைஞரின் நினைவுகளோடு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

#கன்னியாகுமரியில்திருவள்ளுவர்சிலை
#tiruvalluvarstatue
#kanyakumari

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட
31-12-2024

No comments:

Post a Comment

#*இலங்கை அதிபரிடம்இந்திய எதை வலியுறுத்த வேண்டும்*? | *Ksr* | @*ksrvoice* |

#*இலங்கை அதிபரிடம்இந்திய எதை வலியுறுத்த வேண்டும்*? | *Ksr* | @*ksrvoice* |  #Srilanka, #IndianOcean, # #AnuraKumaraDissanayake, #china, #Tam...