Monday, April 30, 2018

விடுதலைக் களம், வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அமைப்பு சார்பில் உகாதி விழா.

நேற்று (29/04/2018) நாமக்கல் நாகராஜனை தலைவராக கொண்ட விடுதலைக் களம், வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் திரு. சதாசிவம் எம்.பி, வேங்கடவிஜயன், ஜெகந்நாத் மிஸ்ரா போன்றோரோடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.
Image may contain: 6 people, people smiling
Image may contain: 4 people, people sittingஇந்த நிகழ்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன், திருமலை நாயக்கர், நீதிக்கட்சியின் நிறுவனர் பிட்டி தியாகராயர், சேலம் வரதராஜுலு நாயுடு, ஓமந்தூரார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, சாத்தூர் எஸ்.ஆர். நாயுடு, ஆர்.கே, என்.ஆர். தியாகராஜன், உண்மையான, நேர்மையான கல்வித் தந்ததையாக விளங்கிய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பிஎஸ்ஜி கல்லூரி நிறுவனருமான ஜி. ஆர். தாமோதரன், ஜி.டி.நாயுடு, உழவர் தலைவர் சி. நாராயணசாமி நாயுடு, சென்னை எலமந்தா (முன்னாள் எம்.எல்.சி), மேலவை முன்னாள் தலைவர் அண்ணாவின் நன்பர் சி.பி.சிற்றரசு; இப்படியான பல ஆளுமைகளை குறித்து உரையாற்றினேன். 
அரசியல் களத்தில் நன்கறிந்த சீலநாயக்கன்பட்டி ஸ்டீல் சதாசிவம் அவர்கள், தூரத்தில் இருந்து அரசியலை சரியாகத் தெரிந்து உணர்ந்து பேசக் கூடியவர். 
Image may contain: 1 person
அவர் இறுதியில் பேசும்போது பல நற்கருத்துகளை வெளிப்படுத்தினார். மற்றும் பல உறுப்பினர்கள் கோவை, சென்னை, மதுரை, தேனி, விளாத்திகுளம், சாத்தூர், கோவில்பட்டி போன்ற பல ஊர்களிலிருந்து பங்கேற்றனர். விழாவை நாகராஜன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். அற்புதமான செயல்வீரர். பொதுத் தளத்தில் சேலம் மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இளைஞர். அவருக்கு எனது பாராட்டுக்கள்.
Image may contain: 3 people, including வால்டேர், people standing, sky and outdoor
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-04-2018

இன்று, சித்ரா பௌர்ணமியில் கண்ணகிக்கு விழா.

இன்று, சித்ரா பௌர்ணமியில் கண்ணகிக்கு விழா. கண்ணகி கோட்டத்திற்காக உயர்நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறிய கதை.
--------------------
இன்று சித்ரா பௌர்ணமி. ஒவ்வொரு வருடமும் இந்நாளில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழக பயணிகள் செல்வது வாடிக்கை. வருடந்தோறும் சித்ரா பௌர்ணமி அன்று கண்ணகி கோவிலுக்குச் செல்வதற்கு தமிழக மக்களுக்கு அதீத ஆனந்தம். ஒரு வார்டு கவுன்சிலரை கூட கேள்வி கேட்கத் தெரியாதவர்களுக்கு நாட்டை ஆண்ட மன்னனை எதிர்த்துக் கேள்வி கேட்ட காவியத் தலைவி கண்ணகி. ஆனால் இந்த கோவிலில் வழிபாடு செய்ய வரும் தமிழக மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் அதிகம்.
சேர மன்னன் செங்குட்டுவனால் கண்ணகிக்கு கட்டப்பட்ட கோவில் தான் இது. மேற்குத் தொடர்ச்சி மலை மீதிருக்கும் மங்கலதேவிக் கண்ணகிக் கோயில். இந்த கோயில் தமிழகத்தின் புளியங்குடி கிராமத்தில் இருந்து 6 கி.மீ தூரத்திலும், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் உள்ளது. கோவலனின் மறைவுக்குப்பின் கண்ணகி அமைதி வேண்டி இங்கு அமர்ந்ததாக சொல்கிறார்கள். இக்கோட்டத்திற்கு மதுரை மாவட்டத்திலுள்ள கூடலூரிலில் இருந்து இரண்டு பாதைகள் வழியாகச் செல்லலாம். இப்பாதைகளும் கோட்டமும் ‘வண்ணாத்திப் பாறை’ என்று பாதுகாக்கப்பட்ட பாறைகளில் உள்ளன. இங்கு வனவிலங்ககுள் பல உள்ளன. மற்றொரு பாதையாகக் குமுளி வழியாகப் பேருந்து மூலம் செல்லலாம். அங்கிருந்து தேக்கடி வரை சென்று காட்டுப் பாதை வழியாக இக்கோட்டத்திற்கு செல்ல வேண்டும்.
1883ஆம் ஆண்டு கூடலூர் மக்கள் அரசு அனுமதி பெற்று இக்கோட்டத்திற்கு செல்லும் பாதையைப் புதுப்பித்தனர். 1839 – 1896 ஆகிய நில அளவை ஆவணங்கள், 1893ஆம் ஆண்டு இந்திய நில அளவை வரைபடம், 1916ஆம் ஆண்டு இந்திய சர்வேயர் ஜெனரல் வரைபடம், 1932ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மதுரை மாவட்ட கெஜட், அரசு ஆணை 182 (1.5.1918) சென்னை – பொது அரசியல்) ஆகிய ஆவணங்களின்படி இக்கோட்டம் தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ளது. கி.பி.1672ஆம் ஆண்டு காட்டூர் பகுதியில் நடந்த போரில் இக்கோவில் தமிழகத்தைச் சார்ந்தது என முடிவெடுக்கப்பட்டது. அது ராணி மங்கம்மாள் மதுரையை ஆண்ட காலமே. இருப்பினும் 1975ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நில அளவைப் பதிவேடுகள் துறை இணை இயக்குநர் கணேசன், கேரள மாநில அரசு அதிகாரிகளுடன் பேசி இது தமிழகத்திலுள்ளதே என முடிவு செய்தனர். அதன்பின்பு தமிழக அதிகாரிகள் பல்வேறு சமயங்களில் இப்பிரச்சினையை ஒட்டி நிலஅளவை செய்து தமிழகத்தில் உள்ளது என்று தெள்ளத் தெளிவாக்கியுள்ளனர். இருப்பினும் இந்த கோயிலுக்கு சாதாரணமாக தமிழக மக்கள் செல்லக்கூடிய உரிமையை 1975ஆம் ஆண்டு தமிழக அரசும் இழந்துவிட்டது. சித்திரை பௌர்ணமி அன்று மூன்று நாட்களுக்கு மட்டும் தான் கோவிலுக்குள் அனுமதி என்று கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
கடந்த 1982ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமியன்று வழிபாட்டுக்கு வந்த மக்கள் கைது செய்யப்பட்டவுடன் பிரச்சையில் தமிழக அரசு கவனம் செலுத்த தொடங்கி பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்ட்டன. ஆனால் இன்னும் சுமூகமான பிரச்சனைகளை தீர்த்து கொள்ளாமல் அரசுகள் மக்களை துன்பப்படுத்துகின்றனர். இந்த கோவிலுக்கு புளியங்குடி வழியாக நடந்தும் போகலாம். குமுளி வழியாக ஜீப்பில் போலாம். இந்த இடங்களை கேரள வனத்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்தப் பக்கம் போனாலே ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் தான் செல்ல வேண்டியுள்ளது. தண்ணீர் வசதி கூட தரமாட்டார்கள். அங்கும் கேரளத்தினருக்கே முன்னுரிமை அளிப்பார்கள். அங்கே மேல் முற்றம் ஒன்று உள்ளது. சிலப்பதிகாரம் முற்றோதல் செய்யவிடமாட்டார்கள். குமுளியில் இருந்து கண்ணகி கோயில் போவதற்கு சாலை அமைக்க 1975இல் முடிவுசெய்யப்பட்டது. அதற்கு முன் எந்தவித தடையும் இல்லை. இந்தியத் தொல்லியல் துறைக்கு 1983ஆம் ஆண்டு கேரளத் தொல்லியல் துறையிடம் ஒப்படைத்துள்ளர்கள். கோவிலை சீரமைக்கும் பணிகளுக்காக ரூ. 60 லட்சங்கள் நிதி ஓதுக்கியதை பயன்படுத்தாமல் உள்ளது. இது தொடர்பாக ஒரு வழக்கையும் தாக்கல் செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு முன்னால் கேரள மாநில காவல் துறையினர் தமிழக மக்களை அங்கு அனுமதிக்காமல் கடுமையாக நடந்து கொண்டார்கள்.
அப்போது நான் தாக்கல் செய்த மனு கண்ணகி கோவில் (வழக்கு எண். WP No. 8758 of 1988). இந்தியாவில் தமிழக எல்லைக்குள் இருந்த கண்ணகி கோவிலுக்கு தமிழர்கள் செல்வதையே தடுத்து, விரட்டிய அண்டை மாநிலம் கேரளாதான். 1988 ல் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து சற்று தீர்வு ஏற்பட்டவுடன் கேரள காவல்துறையினரின் அத்துமீறல் நிறுத்தப்பட்டது. தமிழர்களும் அங்கு சற்று ஆறுதலோடு செல்லக்கூடிய நிலைமையும் உருவாக்கி தந்த திருப்தி அடியேனுக்கு உண்டு. கண்ணகி வழிபாடு என்பது, நாட்டுப்புற திராவிடத் தெய்வ வழிபாடாகும். கண்ணகியைத் துர்க்கையம்மன், பகவதியம்மன் போன்ற நாட்டுப்புற தெய்வங்கள் போன்று மங்கல தேவி என்றும் பலர் அழைக்கின்றனர். மங்கல தேவி வழிபாடுகள் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் உள்ளன. இலங்கையில் வைகாசி மாதத்தில் மங்கல தேவி வழிபாடுகள் நடக்கின்றன.
#சித்ரா_பெளர்ணமி #கண்ணகி_கோட்டம் #Chitra_Pournami #Kannagi_Kottam #KSRpostings #KSRadhakrishnanPostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 30-04-2018

இப்படியும் முன்னாள் தமிழக பெண் அமைச்சர்கள்.

Image may contain: 1 person, closeup and indoor
இன்றைய (29-04-2018) தமிழ் இந்துவில் தமிழக முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனை பற்றி செய்திக் கட்டுரை வந்துள்ளது. இவர் குமரி மாவட்டத்தை சார்ந்தவர். இவரைப் பற்றிய விரிவான பதிவை கடந்த ஆண்டு என்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தேன். இவர் எங்களது கிராமத்திற்கு வந்துள்ளார். திருநெல்வேலியை சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜாத்தி குஞ்சிதபாதம் போன்றவர்கள் எல்லாம் பொறுப்பில் இருந்தார்கள். இந்த இருவரும் எங்களுடைய இல்லத்திற்கு 1960களில் அடிக்கடி வருவதுண்டு. எங்கள் தாயாருடைய சமையலை விரும்பி சாப்பிட்டதும் உண்டு. இவர்கள் தங்களது இறுதிக் காலத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்ததும் உண்டு. இன்றைக்கு முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால் வசதியான வாழ்க்கை.
Image may contain: 1 person, closeup

அதே போன்று சென்னையைச் சேர்ந்த பெண் அமைச்சர் ஜோதி வெங்கடாசலம் ஆவார். தமிழகத்தில் 1967க்கு முன் காங்கிரஸ் பெண் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராஜாத்தி குஞ்சிதபாதம் மற்றும்  அமைச்சர்களாக  லூர்தம்மாள் சைமன், ஜோதி வெங்கடாசலம் இருந்தவர்கள். ஆனால் இன்றைய தலைமுறைக்கு இவர்களைப் பற்றிய அறிமுகமும் இல்லை.

ஜெயலலிதா, சசிகலா போன்றவர்களை கொண்டாடும் தமிழகம் இந்த பெண் அமைச்சர்களை கொண்டாட வேண்டாம். ஆனால் இவர்களைப் பற்றி அறியாமல் இருப்பது வேதனை தருகிறது. இது தான் இன்றைய அரசியல். இவர்கள் எளிமையான வாழ்க்கையும் வாழ்ந்தவர்கள். ராஜாத்தி குஞ்சிதபாதமின் புதல்வி இன்றைக்கும் மயிலாப்பூரில் நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஜோதி வெங்கடாசலம் சென்னையில் ஊறுகாய் கம்பெனி நடத்தினார். இவரது வீடு இன்றைக்கும் வேப்பேரியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதிக்கு பின்னால் இருக்கிறது. இந்த மூவரும் மறைந்துவிட்டார்கள். இந்த நேர்மையான பெண்மணிகளை தமிழகம் அறியத் தவறிவிட்டது.

#ராஜாத்தி_குஞ்சிதபாதம்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-04-2018

இந்தியாவின் கம்பீரம் - டெல்லி செங்கோட்டை

இந்தியாவின் கம்பீரம், பாரம்பரியத்தின் அடையாளமான டெல்லி செங்கோட்டையை கூட பராமரிக்க இயலாத அரசு. நாட்டுக்கு அவமானம்.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-04-2018

Sunday, April 29, 2018

கிராம சபை

கிராம சபை ஜனநாயகத்தின் ஆனிவேர். இதை உயிரோட்டமாக நேர்மையாக நடத்திச் செல்வது கடமையாகும். 
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-04-2018

சென்னை மாநகர விரிவாக்கம் - விவாதத்துக்கான புள்ளிகள்

நேற்றைய (27/04/2018) மின்னம்பலம் இணைய இதழில் சென்னை மாநகரத்தோடு காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களின் பகுதிகளை இணைத்து மகா சென்னையாக (Greater Chennai) உருவெடுப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான எனது பத்தி வெளிவந்துள்ளது. 
http://www.minnambalam.com/k/2018/04/27/32

சிறப்புக் கட்டுரை: விரிவாகும் சென்னையில் உருவாகும் சிக்கல்கள்!
சென்னை மாநகர விரிவாக்கம் - விவாதத்துக்கான புள்ளிகள்

சென்னை மாநகரோடு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தின் பகுதிகளை இணைத்துச் சென்னைப் பெருநகரின் எல்லைகளை விரிவுபடுத்தத் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

சென்னை ராஜதானியின் தலைநகராக ஒரு காலத்தில் சென்னை மாநகரம் விளங்கியது. ஆனால், மாநகர அந்தஸ்து பெற்றாலும் சென்னை மாநகரின் அடிப்படை திட்டங்களையும் அதன் நிர்வாகத்தையும், சட்ட விதிகளையும் 1957ஆம் ஆண்டு முறையாக சென்னை மாகாண அரசு இறுதிப்படுத்தியது. தமிழ்நாடு அரசின் நகரத் திட்ட இயக்குநகரத்தால் வடிவமைக்கப்பட்ட மெட்ராஸ் இடைக்காலத் திட்டம், 1971ஆம் ஆண்டு பன்முக நிறுவனக் குழுவால் தயார் செய்யப்பட்டு, 1974ஆம் ஆண்டு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உருவாக்கப்பட்டது. பெருகிவரும் மக்கள்தொகையையும், நகரமயமாதல் மற்றும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு 2012இல் முதல்கட்டமாக புறநகர்ப் பகுதிகள் சென்னைப் பெருநகருடன் இணைக்கப்பட்டன. இப்போது இரண்டாவது கட்டமாக அரக்கோணம் வரை, இன்னொரு பக்கம் மீஞ்சூர் வரை சென்னைப் பெருநகர் என்று விரிவாக்கம் செய்ய சிஎம்டிஏ தயாராகிவிட்டது.

1987இல் சென்னை மண்டல வளர்ச்சி நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது. எம்ஜிஆர் இறந்துவிட்டதால் அது மேற்கொள்ளப்படவில்லை. சென்னை நகரப் பெருக்கத்தினால் தமிழகத்தின் தலைநகரைத் திருச்சிக்கு மாற்ற வேண்டுமென்று எம்ஜிஆர் சொன்னதும் உண்டு. 2009இல் திமுக ஆட்சியில் பெருநகர வளர்ச்சிக்காக முறையான ஆய்வு நடத்தித் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

சென்னையின் உள்கட்டமைப்பு
கோயம்பேடில் ஒருங்கிணைந்த புறநகர் பேருந்து நிலையம், மக்கள் கூடும் தியாகராய நகர், பாண்டி பஜார், கோயம்பேடு போன்ற இடங்களில் பல அடுக்கு வாகன நிறுத்த வளாகங்கள், கோயம்பேடு காய்கறி மொத்த அங்காடி, உணவு தானியங்களுக்கான மொத்த விற்பனை அங்காடிகள், காய்கறிக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம், சாத்தாங்காடு இரும்பு மற்றும் எஃகு அங்காடி, ஒருங்கிணைந்த திடக்கழிவு மேம்பாட்டுத் திட்டம், மேம்பாலங்கள் போன்ற பல பணிகளைச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில், உயர்மட்ட மேம்பாலங்கள், வானுயர்ந்த கட்டடங்கள் எனச் சென்னை மாநகரின் இன்றைய வளர்ச்சியில் இதன் பங்கு அதிகம்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்த நேரத்தில் சிஎம்டிஏ அந்தக் கட்டடங்களை நெறிப்படுத்தியது. 1979இல் முதலில் வில்லிவாக்கம், வேளச்சேரி, திருமங்கலம் போன்ற புறநகர்ப் பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில்தான் சென்னையைச் சுற்றியிருந்த பல கிராமப் பகுதிகள் சிஎம்டிஏ எல்லையுடன் இணைக்கப்பட்டன. ஐந்தாண்டுகளுக்கொரு முறை நகரமயமாக்கல் திட்டம் மற்றும் விதிகளை மாற்றியிருக்க வேண்டும். ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2008இல் இரண்டாவது மாஸ்டர் பிளான் போடப்பட்டது. 2026 வரை சிஎம்டிஏ எல்லை எவ்வளவு இருக்க வேண்டும், அந்தப் பகுதிகளில் என்ன வசதிகள் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை வரையறுக்கப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலில் பிளான் போடும்போது ஐடி மையம் கிடையாது.

இப்போது மக்கள் தேவைக்கேற்பவும் சூழ்நிலைக்கேற்பவும், மாஸ்டர் பிளான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பல இடங்கள் கிராம, நகர, பேரூராட்சிப் பகுதிகளாக உள்ளன.

தற்போதைய பெருநகர விரிவாக்கத் திட்டத்தால், 1,189 சதுர கிலோமீட்டராக இருந்த சென்னையின் பரப்பு 4,459 சதுர கிமீ கூடுதலாகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் போன்ற பகுதிகளில் உள்ள 11 நகராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 22 பேரூராட்சிகள் இணைகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளில் உள்ள 5 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் இணையவுள்ளன. வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நகராட்சியில் 36 வார்டுகளையும் நெமிலிச்சேரி பேரூராட்சியின் கீழ் உள்ள 52 ஊராட்சி மன்றங்களையும் இணைத்து 8,878 சதுர கிமீ விரிவாக்கம் செய்யப் பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. இதில், இரண்டாவது பரிந்துரைக்கு அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இதன் மூலம் நகர்ப்புற வளர்ச்சிகள், வசதிகள் மேம்படுவதால் அதிகளவில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என அமையும். நிலங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு அதன் வழிகாட்டி மதிப்பும் உயரும். புதிய சிறு நகரங்கள் உருவாக்கப்படும்.

பெருநகர எல்லைகளை விரிவுபடுத்தும்போது பல பிரச்சினைகளை ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும். சென்னை நகரத்தில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடும், வெள்ளம் பெருக்கெடுத்துப் பேரழிவுகளும் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டிருந்த நகரில் இன்றைக்குள்ள மக்கள்தொகைக்கு ஏற்ற திட்டங்களை அறிவியல் ரீதியாக நாம் முன்னெடுக்க வேண்டும்.

சாமானிய மக்களின் துயரம்
சென்னையின் விரிவாக்கப்படும் பகுதிகளில் இனி சென்னைப் பெருநகருக்கு ஈடாக தண்ணீர் வரி, சொத்து வரி, வடிகால் வரி என்று புறநகராகப்போகும் அரக்கோணம் போன்ற வருமானம் பெருகாத பகுதிகளிலும் சென்னையின் மையப் பகுதியில் எந்த வரியோ, அந்த வரிகள் அனைத்தும் போடப்படும். சொத்து மதிப்பு தாறுமாறாக உயரும். வீட்டு வாடகை மதிப்பும் உயரும். இதன் விளைவாக சாமானிய மக்கள் பெரிதும் துன்பப்படுவர். முதல்கட்டமாக சென்னைப் பெருநகர் விரிவாக்கப்பட்ட சமயத்தில் பலர் நகர வாழ்வை விடுத்துப் புறநகருக்கு இடம்பெயர்ந்தனர். இப்போது புறநகர் பகுதிகள் மீண்டும் விரிவாக்கப்படுவதால், அரக்கோணத்தைக் கடந்தும் வாடகைக்கு வீடு தேட வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கெனவே கைக்கும் வாய்க்கும் போதாமல் தவிக்கும் சாமானிய மக்களை அரசு எந்த வகையிலும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

கிராமங்களிலிருந்து வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரங்களையும் தேடி மக்கள் நகரங்களுக்கு நகர்கின்றனர். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நகரத்து மக்கள்தொகை மொத்த மக்கள்தொகையில் 5%. இன்றைக்கு அது 50% முதல் 60% என ஆகிவிட்டது. உலகெங்கும் உள்ள பெருநகரங்களின் நிலைமையும் இதுதான். மக்கள் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கும் நிலைதான் இன்றைக்கு நிலவுகிறது.

சென்னையின் முக்கிய வியாபாரப் பகுதிகளான கொத்தவால்சாவடி காய்கறி மார்க்கெட்டைக் கோயம்பேடுக்குக் கொண்டுசெல்லும் திட்டத்தை சிஎம்டிஏ கொண்டுவந்தது. அதே போன்று பிராட்வேயிலிருந்து பஸ் நிலையத்தை கோயம்பேடுக்கு மாற்றியது. இப்போது தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான நிறுத்தம் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்படுகிறது. சென்னையில் உள்ள இடநெருக்கடியைக் குறைக்கவே இவை மாற்றப்படுகின்றன. சிஎம்டிஏ எல்லை விரிவாக்கப் பகுதியில் குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். இந்தப் பகுதிகள் முழுமை பெற்ற நிறைவான நகரமைப்பாக உருவாக வாய்ப்பு கிடைக்கும். இனிமேல் சிஎம்டிஏவுக்குக் கூடுதல் பணியாளர்கள் தேவைப்படும். நிதியும் அதிகளவில் தேவைப்படும்.

‘பில்டிங் ஸ்டிராங், பேஸ்மென்ட் வீக்’
அதிகமான வாகனப் பெருக்கத்தினால் காற்று மாசு ஏற்படுவது மட்டுமல்லாமல், வாகனங்களின் ஒலிப்பான் எழுப்பும் ஒலிகள் உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் மட்டும்தான் இத்தகைய நிலை. சிங்கப்பூர், லண்டன் போன்ற நகரங்களில் ஒலி எழுப்பினால் கடுமையான தண்டனைகள் உண்டு. இங்கு மட்டும் பெரிய வாகனங்களை வைத்துக்கொண்டு கொடியைக் கட்டிக்கொண்டு ஒலிப்பான்களின் ஒலி அளவை அதிகரித்தால் ஏதோ பெரிய அந்தஸ்து என்று கருதுகின்ற போலியான போக்கு உள்ளது. இந்த வாடிக்கை சென்னையில் அதிகம்.

மாசுபட்ட காற்று, திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் தட்டுப்பாடு, வெள்ளத் தடுப்பு மேலாண்மை, வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை மேம்பாடு மற்றும் பாதுகாப்பு, மின்சார வளங்கள், ரேஷன் பொருள் தட்டுப்பாடுகள், நடைபாதை வாசம் போன்றவற்றைச் சரிசெய்யாமல் சென்னை நகரின் எல்லைகளை விரிவுபடுத்துவது மேலும் சிக்கலைத்தான் உருவாக்கும்.
சென்னை நகரம் தன்னுடைய அண்டை மாவட்டங்களை நம்பி இருக்க வேண்டியுள்ளது. அப்படியான நிலையில், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் போன்ற ஏரிகளும் மாசுபடுவதோடு சிறிது சிறிதாக அழிந்துவிடும். ஏற்கெனவே நீர்நிலைகளை வீட்டு மனைகளாக மாற்றிச் சமூக விரோதிகள் கொழுத்துவருகின்றனர்.
சாதாரண மழையையே எதிர்கொள்ள சக்தியற்ற நிலையில், ஒரு மாநகர விரிவாக்கத்தின்போது பெருவெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர்களை எதிர்கொள்ளத் தொலைநோக்குப் பார்வை தேவை. அது அரசிடம் இல்லை. இந்த விரிவாக்கம் சென்னையின் சீரான வளர்ச்சிக்கு உதவுமா என்பது கேள்விக்குறி.
ஏற்கெனவே வளி மண்டலம், நீர், நிலம், ஒலி மாசடைந்து சென்னை நகரம் நாளுக்கு நாள் சீரழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்களும் மக்களை வாட்டுகின்றன. நம்மிடம் அடிப்படை கட்டமைப்பே மோசமாக இருக்கிறது. ‘பில்டிங் ஸ்டிராங், பேஸ்மென்ட் வீக்’ என்பது போலத்தான் நமது நிலைமை. முகலிவாக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக்கூட சரியாகக் கட்டத் திராணியின்றி நாம் பார்த்த காட்சிகளின் வேதனையில் இருந்து இன்னமும் மீளவில்லை.
சென்னை மற்றும் கல்பாக்கம் பகுதி, நிலநடுக்க மண்டலப் பிரிவு 3இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் நகரங்களின் பட்டியல் என்ற பெரும் அபாயத்தின் கீழ் சென்னை நகரமும் உள்ளது. கோடைக்காலங்களில் அனல் காற்றின் அளவு கூடும்.
சென்னை மாநகரில் நாளொன்றுக்கு 5000 முதல் 7000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அதை முறைப்படுத்திக் கையாளவே முறையான அரசு இயந்திரம் இல்லை.
சென்னை மாநகரில் 1992இல் இருந்த 6 லட்சம் வாகனங்கள் 2001இல் 13 லட்சம் எனப் பெருகின. 2012இன் கணக்கின்படி சென்னையில் 36 லட்சம் வாகனங்கள் இருந்தன. விரைவில் ஒரு கோடியை எட்டிவிடும் அளவுக்குச் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நகரம் மேலும் மாசுபடும். வாகன ஒலிப்பான்களுடைய சத்தங்கள் பொறுக்க முடியாமலிருக்கும். இதன் பின்விளைவுகள் மிகவும் அபாயகரமாக அமையும்.
தினமும் 1500 புது வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுப் பயன்பாட்டுக்கு வருகின்றன. நூறாண்டுகளுக்கு முன் இருந்த சென்னையின் பெரும்பாலான சாலைகள் அதே அளவில்தான் இன்றும் உள்ளன. வாகனங்கள் மட்டும் பெருக்கப்படுகின்றன. ஒரு வீட்டுக்கு 4 அல்லது 5 நான்கு வாகனங்கள் வாங்கிவிட்டுத் தெருவில் நிறுத்த வேண்டிய நிலைமை. வெளிநாடுகளில் வாகனங்கள் வாங்குவதில் நகரத்தின் சுற்றுச்சூழல் நன்மையைக் கருதிச் சில கட்டுப்பாடுகள் உண்டு.
பெரிய வாகனங்கள் இருந்தால்தான் கௌரவம் என்ற மடத்தனமான எண்ணங்களும் இதற்காகவே கோடிக்கணக்கில் கடன் வாங்கி வாகனங்களை வாங்கும் பாசாங்குத்தனமான போக்குகளும் நம்மிடையே உள்ளன. அரசாங்கமும் இதைக் கட்டுப்படுத்தாமல் புதுப்புது விதமாக ஷேர் ஆட்டோக்கள், வாடகை ஊர்திகள் எனப் போக்குவரத்து உரிமங்களை தாராளமாக அள்ளி வழங்குகிறது. இதன் மூலம், போக்குவரத்து நெரிசல்களை அரசே உருவாக்கி சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடுகிறது.
மக்கள்தொகைப் பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, வேலையிழப்புகள், உள்கட்டமைப்புப் போதாமை, வாகனப் பெருக்கம், குடிநீர்ப் பற்றாக்குறை, வெள்ளத் தடுப்புக்கான ஏற்பாடுகள் இன்மை, பெருகும் குப்பைகள் எனக் கடுமையான நெருக்கடிகள் சென்னையைச் சூழ்கின்றன.
நகர வளர்ச்சிக்குத் தேவையான பொருளாதார வசதியும் கொள்கைகளும் நம்மிடம் இல்லை. பழைமையின் அடையாளங்களான நாகரிகங்கள் உதித்த நகரங்கள்கூட திட்டமிட்டு அந்தந்த காலத்துக்கேற்ப அமைக்கப்பட்டன. எத்தனையோ பழைய நகரங்கள் வளர்ச்சியின் அலையில் காணாமல் போயின.
சென்னை மாநகர விரிவாக்கத்தைவிட மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற நகரங்களின் கட்டமைப்பை சீராக்கி விரிவாக்கினால், தமிழகத்தின் பொருளாதாரம் மண்டல ரீதியாக வளர்ச்சி அடையும். அதுபோல, கிராமங்களிலிருந்து மக்களின் வெளியேற்றமும் கட்டுப்படுத்தப்படும்.
இப்படியான சூழலில் சென்னை பெருநகர் விரிவாக்கம் மேலும் புதிய சிக்கல்களை உருவாக்கும், சுற்றுச்சூழலும் பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து விவாதம் நடத்தி அதன் பிறகு இத்திட்டத்தை நிறைவேற்றுவது நல்லது. இயற்கையின் அருட்கொடையான பல வளங்களை நகரமயமாக்கலால் இழந்து நாம் வஞ்சிக்கப்படுகிறோம்.
நகர்ப்புற வளர்ச்சி ஒரு பக்கம் அவசியம் என்றாலும், அதனால் ஏற்படும் பாதகங்களையும் கணக்கில் எடுத்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை - பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். இவரைத் தொடர்புகொள்ள: rkkurunji@gmail.com)
#சென்னை_பெருநகரம்
#காஞ்சிபுரம்
#வேலூர்
#திருவள்ளூர்
#Greater_Chennai
#Kanchipuram
#Vellore
#Tiruvallur
#KSRpostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-04-2018

ஈழத்தில் சந்திப்போம்

தமிழரை சந்திக்கும் போது "அடுத்த ஆண்டு ஈழத்தில் சந்திப்போம்" என கூறுங்கள். 

நூறு ஆண்டுகள் சென்றாலும், ஈழம் அடையும் வரை கூறுங்கள்.

#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-04-2018

கமலாதேவி சட்டோபாத்தியாயா

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்ட 15 பெண்களின் பட்டியலை ஒரு இணைய இதழ் வெளியிட்டுள்ளது. 

இந்த பட்டியலில் கமலாதேவி சட்டோபாத்தியாயாவை (Kamaladevi Chattopadhyay) உறுப்பினராக நியமிக்கும் விவாதம் வந்தது. அப்போது பண்டித நேருவும், படேலும் அவரை நியமிக்க விரும்பவில்லை. 

ஏனெனில் அவர் எதிர்த்து பல்வேறு வாதங்களை புரிவார். அதனால் பிரச்சனைகள் ஏற்படும் என்று அவரை தவிர்த்ததாக தி எக்கனாமிக் பொலிட்டிகல் வீக்லி இதழில் செய்தி வந்துள்ளது. 

இவர் யாரென்றால்; மத்திய முன்னாள் அமைச்சருமான கமலாதேவி சட்டோபாத்யாயா தான் இந்தியாவில் முதன்முதலாக தேர்தல் களத்தில் சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட பெண்மணி. கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரருடைய மனைவி ஆவார்.இவர் ஒரு இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.. 

#கமலாதேவி_சட்டோபாத்யாயா
#இந்தியஅரசியலமைப்புச்சட்டம்
#Constitution_of_India
#Kamaladevi_Chattopadhyay
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-04-2018

Saturday, April 28, 2018

நீதிதேவன் மயக்கம்


நீதிதேவன் மயக்கம்
நீதிமன்றத்தினால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, மக்களால் தூற்றப்பட்ட ஒருவருக்கு அரசு சார்பில் சிலையும், மரியாதையும், அரசு அலுவலகங்களில் படங்களை வைப்பதே இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது. இதென்ன நீதிமன்றத்திற்கு தெரியாதா? இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருந்து இறங்கிய போது மத்திய அரசு அலுவலகங்களில் இருந்து அவரது படங்களை தூக்கித் தெருவில் வீசியதெல்லாம் 1977இல் நாம் பார்க்கவில்லையா?
இந்திரா காந்தியை விட இந்த குற்றவாளி மேம்பட்டவரா? என்ன கருமமோ? இப்படியெல்லாம் காட்சிப் பிழைகளும், போலி பிம்பங்களும் தமிழகத்தை பாழடிக்கின்றது. இதுவொரு வேடிக்கை காட்சியல்ல. பகுத்தறிவு வேண்டும். பகுத்தறிவில்லாமல் இப்படியான இடமாறும் தோற்றப் பிழைகளை கொண்டாடினாலே முட்டாள்தனமான நடவடிக்கைகளாகும். அரசியல் என்ற நெறியை தவமாக நினைக்காமல் பிழைப்பாக நினைத்தால் இப்படியெல்லாம் அநீதிகள் அரங்கேறி அதையும் நியாயப்படுத்துவோம். அதையும் நீதிமன்றங்களும் கண்டுகொள்வதில்லை. ஏனெனில் பொது வாழ்வில் தகுதியானவர்களை அப்புறப்படுத்திவிட்டோமே. தகுதியே தடை.
ஆனால், வரலாறு ஒரு நாள் இந்த தவறுகளை காட்டிக் கொடுத்து எதிர்கால சமுதாயம் இப்படியும் பொது வாழ்வில் இருந்த தகுதியற்றவர்களை கொண்டாடினார்களா என்று பரிகசிக்கும் காலமும் வரும்.

#தகுதியே_தடை
#நீதிதேவன்_மயக்கம்
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-04-2018

Friday, April 27, 2018

திராவிட இயக்கத்தின் மூத்த முதல் பெண்மணி


நீதிக் கட்சி, திராவிட இயக்கத்தின் மூத்த முதல் பெண்மணி அலமேலு மங்கத்தாயரம்மாளை யாரும் கொண்டாடுவதில்லையே ஏன்?

யாரும் இவரை அறியவில்லையா?

#திராவிட_இயக்கம்
#KSRadhakrishnanpostings

#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-04-2018

இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற வேட்பாளர்.


மத்திய முன்னாள் அமைச்சருமான கமலாதேவி சட்டோபாத்யாயா தான் இந்தியாவில் முதன்முதலாக தேர்தல் களத்தில் சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட பெண்மணி. கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரருடைய மனைவி ஆவார்.



#KSRpostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-04-2018

மகளிர் உரிமைக்காக களத்தில் நிற்கும் சகோதரிகளே,


மகளிர் உரிமைக்காக களத்தில் நிற்கும் சகோதரிகளே,



நீதிக் கட்சி, திராவிட இயக்கத்தின் மூத்த முதல் பெண்மணி அலமேலு மங்கத்தாயரம்மாளை யாரும் கொண்டாடுவதில்லையே ஏன்?



யாரும் இவரைப் பற்றி அறியவில்லையா?



#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-04-2018

திராவிட இயக்கத்தின் மூலவர்


Image may contain: 1 person, shoes


இன்று திராவிட இயக்கத்தின் மூலவர், வள்ளல் தியாகராயர் பிறந்தநாள். 

அனைவருக்கும் கல்வி, உணவு, வேலை வாய்ப்புகள்,இருப்பிடம் வழங்கிய அவரும் வந்தேறி தான்.

வந்தேறி வந்தேறி எனக் கொக்கறிப்பவர்கள் அவரை வாசித்து விட்டுப் பேசுங்கள்..

#தியாகராயர்
#திராவிடஇயக்கவள்ளல் 
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-04-2018

இன்று ஏப்ரல் 27 -சர்பிட்டி தியாகராயர் பிறந்தநாள்

இன்று ஏப்ரல்  27 -சர்பிட்டி தியாகராயர் பிறந்தநாள்               

சென்னை மாநகராட்சியில் நேரடித் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் மேயர். நெசவு, தோல்பதனிடுதல், சுண்ணாம்பு காளவாய், உப்பளம் என பல தொழில்களில் ஈடுபட்டு பொதுவாழ்வுக்கு தன் சொந்தப் பணத்தை செலவிட்டவர். பலருக்கும் உதவி கரம் நீட்டியவர்.

நீதிக்கட்சியைத்  தொடங்கிய மூவரில் முதல்வர்  வெள்ளைக்காரர்கள் காலத்தில் இரட்டை ஆட்சி முறையின்கீழ் நடந்த தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. தியாகராயரை முதல்வராகப்  பொறுப்பேற்க அப்போது கவர்னர் அழைத்தார். முதல்வர் பதவியை  மறுத்துவிட்டு, சென்னை மாநகராட்சி மேயராகவே நீடித்தார். பிரிட்டிஷ் இளவரசரை வரவேற்கும் போதும் மேயருக்கான ஆடம்பர உடை மரபுகளை உடைத்து, தனது வழக்கமான வெள்ளுடையுடன வரவேற்றார்.

இவர், தண்டையார்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரியை நிறுவினர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவ துணையாக இருந்தார்.

ஆரம்ப பள்ளிகள், தொழிலநுட்ப பயிற்சி நிலையங்களையும் அமைய பணிகள் ஆற்றினார் . ஆயிரம் விளக்கு  சென்னை நகராட்சிப் பள்ளியில் 1920ல் முதன் முதலாக மதிய உணவு திட்டத்தை இவர் தொடங்கினார்.இவரின் பெயரில்தான இன்றைய தியாகராய நகர்(தி நகர்)என அழைக்கப்படுகிறது.

அனைவருக்கும கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்று உயரவிட்டவர். திராவிட இயக்கத்தின் மூலவர்.

#சர்பிட்டிதியாகராயர்
#சென்னைமாநகராட்சி
#நீதிக்கட்சி
#தியாகராயநகர்
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
27-04-2018

கிராம வாழ்க்கை

கிராம வாழ்க்கை வித்தியாசமான அனுபவங்களை அள்ளித் தந்தது. சித்திரை, வைகாசி மாதங்கள்ல தான்
கிராமத்து கோவில் திருவிழாக்கள்.

வெக்கைக்கும்,புழுக்கத்திற்குமான இரவு
பொழுது போக்குகள்,வில்லிசை,
நாடகம்,சினிமா,சாமிஊர்வலம்,
மேளதாளம் அந்த பெட்ரோமாக்ஸ் லைட் இப்படி வேடிக்கைகள் அந்த இரவின் 
பகலின் கடுமையை தணித்து மனதை
லேசாக்கிவிடும்.

இன்றைய வெயில் நம்மை ஐஸ்கிரீம்களையும்,செயற்கை மென்
பானங்களையும் தேட வைக்கிறது.நம்
பிள்ளைகள் அதற்கு அடிமைகளாயும் ஆகிப்போகிறார்கள்.

எத்தனையோ இயற்கை பானங்கள் 
கிராமத்தில் இளநீர்,பதநீர்,லெமன் 
ஜுஸ்,நீர் மோர், நீராகாரம் (புளிச்ச தண்ணி) இப்படி இன்னும் எத்தனையோ 
இருக்கிறது.

இருந்தாலும் " பானக்கரம்" என்றொரு
பானம் வீடுகளில் தயாரித்து குடிப்பது
என்பது வாடிக்கையான ஒன்று.எனினும்
இதற்கு மட்டும் ஒரு சிறப்பு. கோடை கால
திருவிழாக்களில் சாமியாடிகள், விருந்தினர், வேடிக்கை பார்க்க அனைவருக்கும் 
கொடுத்து மகிழ்வார்கள் கிராமத்தினர்.

இது தயாரிப்பு ரொம்ப சுலபம் தண்ணீரில் புளியை கரைத்து பனை
வெல்லம் அல்லது மண்டை வெல்லத்தை
தட்டி நுணுக்கி பொடி செய்து கலந்து
சிட்டிகை உப்பு சேர்த்து சுவைக்காக 
தேவைப்பட்டால் சுக்கு அல்லது துளசி
இலையை சிறிதாய் வெட்டி சேர்க்க
அதன் சுவையை சொல்லி மாளாது.

இதில் அவ்வளவு நன்மைகள் வெயிலின்
தாக்கத்தில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து
குறைபாட்டை தடுப்பதுடன் உடல் 
சூட்டையும் தணிக்கிறது.எந்த ஒரு
பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.

இதை பெரும்பாலான வீடுகளில் பெரிய
பித்தளை அல்லது தாமிர பானைகளில்
வாசலில் வைத்து அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்த காலம் இனிமையானது.

நகர வாழ்க்கை,கிராம வாழ்க்கை எங்கே
இருப்பினும் உங்கள் குழந்தைகளுக்கும்
தயாரித்து கொடுத்து நீங்களும் அருந்தி
கோடை வெயிலின் தாக்கத்தை சமாளித்து மகிழுங்கள்.வாழ்க மகிழ்வோடு.
நன்றி-Nachiarpatti Dhanasekaran Nks.

தமிழகத்தில் இவ்வளவு கட்சிகளா !!!

தமிழகத்தில் பதிவு செய்ப்பட்ட மாநிலகடசிகள், தேசியக்கட்சிகள் கட்சிகளை தவிர்த்து
அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட 154 கட்சிகள் இந்திய தேர்தல் ஆணைய கணக்கில் உள்ளன.

இதில் மக்கள் நல பணியில்  10 கட்சிகளுக்கு மேல் இல்லை. இத்தனை கட்சிகளின் பெயர் கூட மக்களுக்கு தெரியாது. வணிக அரசியலும், சுயபுகழ்ச்சிக்காக மட்டுமே இவ்வளவு கட்சிகள்.

#தமிழக்கட்சிகள்
‘#KSRpostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-04-2018

சுய விளம்பரம்

வேலைவெட்டி இல்லாத நடிகை ஒண்ணு சுய விளம்பரத்துக்காக ஏதேதோ உளறுது.... அந்த உளறலையெல்லாம் எடுத்துவெச்சி பேசறது மகா கேவலம் .


#KSRpostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-04-2018

Ignore, Read, Explore

Ignore,Read ,Explore,Understand,Move on the society with guts....


#KSRpostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-04-2018

Thursday, April 26, 2018

தமிழகம் -கேரளா நதி நீர் பிரச்னைகள் குறித்து மத்திய அரசு முன்னிலையில் பேச்சுவார்த்தை

தமிழகம் - கேரளா  நதி நீர் பிரச்னைகள் குறித்து மத்திய அரசு முன்னிலையில்  பேச்சுவார்த்தை வரும் மே 1ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. டெல்லியில் நடக்கும் இந்த நிகழ்வில் ,மத்திய நீர்வள அதிகாரிகள்  மற்றும் இரு மாநில அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

பரம்பிக்குளம் ஆழியார் திட்ட ஒப்பந்தத்தை புதுப்பித்தல், செண்பகவல்லி அணைக் கட்டுக்கான பழுது, முல்லைப் பெரியாறு அணை மற்றும் குமரி மாவட்டம் நெய்யார் அணையின் நீர் திறப்பு பற்றிய பல பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.

அச்சன்கோவில்,பம்பை தமிழக வைப்பாற்றில் இணைப்பு என எனது உச்ச நீதிமன்ற நதி நீர் இணைப்பு வழக்கில் வழங்கிய உத்தரவுகளையும் ஆலேசிக்கப்படயுள்ளது.

#தமிழகம்_கேரளா_நதிநீர்_பிரச்சனைகள்
#நதிநீர்_இணைப்பு
#tamilnadu_kerala_river_issues
#river_networking
#KSRpostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-04-2018

26.04.2018 - இன்று தந்தை செல்வாவின் 41ம் ஆண்டு நினைவு நாள்...




தமிழினத் தந்தை எஸ்_ஜே_வி_செல்வநாயகம் அவர்கள் "தனித் தமிழீழமே” ஒரே தீர்வாக அமையும் என்று கூறியவர்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் விடுதலைக்கு அறவழியில் போராடியவரும், தமிழரசுக் கட்சியின் நிறுவனரும், அதன் தலைவருமான அனைவருக்கும் அறிமுகமான எஸ். ஜே. வி. செல்வநாயகம் 
சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், எஸ். ஜே. வி. செல்வநாயகம், தந்தை செல்வா எனப் பல பெயர்களால் அன்பாக அழைக்கப்பட்டவர்.

ஒரு குடிசார் வழக்கறிஞரான (எஸ். ஜே. வி. செல்வநாயகம்) இவர், ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின் கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார்.

இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி அரசியல் முறையை வற்புறுத்தி வந்தார். 1950 களின் இறுதிப் பகுதியிலும், 60களிலும், 70களிலும், தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றவர் இவர்.

தந்தை செல்வாவினால் வட்டுக்கோட்டையில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆனது தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியதோடு தமிழர்களை அடக்கி ஆழலாம் என நினைத்த சிங்கள பெளத்த பேரினவாத அரசிற்கும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

தமிழர்கள் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் அதற்கு இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட “தனித் தமிழீழமே” ஒரே தீர்வாக அமையும் என்ற அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமே இன்றும் “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” என அழைக்கப்படுகிறது.

இதன் பின் 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது. தந்தை செல்வா அவர்கள் கூறிச் சென்ற முக்கிய வார்த்தைகளில் மிகவும் முக்கியமானது “அகிம்சை வழியில் போராடும் தமிழர்களுக்கான விடுதலையை தர சிங்கள அரசு மறுத்தால் எமக்கு அடுத்த இளைய சந்ததியினர் ஆயுதம் கொண்டு மீட்டெடுக்க நேரிடும்” என சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கையும் செய்திருந்தவர் தந்தை செல்வா அவர்கள்.

அவர் அன்று கூறியதோ போலவே தமிழர்களது உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழீழ தனியரசை உருவாக்கவும் என இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் குதித்தனர்.
தமக்கே உரித்தான கட்டுப்பாடு, ஒழுக்கம், இலட்சியம், தியாகம் எனும் உயரிய பண்புகளோடு மக்களின் ஆதரவோடு ஆயுதவழிப் போராட்டத்தில் பல சாதனைகளைப் படைத்து தமிழர்களின் காப்பரணாக “தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்பு திகழ்ந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 25, 2018

இன்றைய மின்னம்பலம் இணைய இதழில் 15வது நிதிக்குழு தொடர்பான எனது பத்தி வெளிவந்துள்ளது.

இன்றைய மின்னம்பலம் இணைய இதழில் 15வது நிதிக்குழு தொடர்பான எனது பத்தி வெளிவந்துள்ளது.
சிறப்புக் கட்டுரை: நிதிக்குழுவின் மாற்றாந்தாய் போக்கு புதிதல்ல!
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15ஆவது நிதிக்குழு பாரபட்சத்தோடு செயல்படுவது கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணானது என்று சொல்லப்படுகிறது. இது இன்றைக்கு அல்ல; கடந்த 20 ஆண்டுகளாக இந்தக் கோளாறுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
மத்திய அரசின் 15ஆவது நிதி ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள், முந்தைய ஆணையத்தின் நெறிமுறைகளிலிருந்து மாறுபட்டுள்ளது. இந்த மாற்றங்களால் தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று வர்ணிக்கிறார்கள். நிதிப் பங்கீட்டுக்கான முன்னுரிமை அம்சங்களை நிதி ஆணையம் வகுக்கிறது. இது இன்றைக்கு வந்ததாகச் சிலர் சொல்வது அர்த்தமல்ல.
இந்தப் பிரச்சினை இன்றைக்கு ஏற்பட்டதல்ல, 1998ஆம் ஆண்டில் குஸ்ரு தலைமையில் அமைந்த 11ஆவது நிதிக்குழு வகுத்த முன்னுரிமைகளிலேயே இந்த அளவுகோல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் மக்கள்தொகை, தேசிய தனிநபர் வருமானத்துக்கும் மாநில தனிநபர் வருமானத்துக்கும் இடையில் உள்ள வித்தியாசம், மாநிலத்தின் பரப்பளவு, வனங்களின் பரப்பளவு, மாநில அரசின் நிதிநிலை ஒழுக்கம் ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டிருந்தது.
எந்த அடிப்படையில் நிதி ஒதுக்கப்படுகிறது?
நிதிக்குழு மூலமாக மக்கள்தொகை மாற்றீடு விகிதம் என்னும் சூத்திரத்தின் அடிப்படையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அதாவது ஒரு மாநிலத்தின் மக்கள்தொகைக்கேற்ப நிதி ஒதுக்கீடு. கடந்த 20 ஆண்டுகளாகவே இப்படித்தான் நடக்கிறது. இதனால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குக் குறைவான நிதி ஒதுக்கீடு கிடைக்கிறது. மக்கள்தொகைப் பெருக்கம் உத்தரப் பிரதேசத்தில் 2.7 சதவிகிதமாக உள்ளது. பீகாரில் 3.4, ராஜஸ்தானில் 2.4.
தென்மாநிலங்களில் இது மிகவும் குறைவாக உள்ளது. ஆந்திரம், கர்நாடகாவில் 1.8 சதவிகிதமாக உள்ளது. கேரளத்தில் 1.6, தமிழகத்தில் 1.7.
1998இல் அமைந்த 11ஆவது நிதிக்குழுவின் முடிவுகள் 1971இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அந்தக் காலகட்டத்தில் சன் டிவியில் மாலன் நெறியாளராக நடந்த விவாதத்தில் நானும், கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜனும் அதை எதிர்த்து அதற்கான வாதங்களை முன்வைத்தோம். அப்போது அதற்கு பாஜகவின் இல.கணேசன் அதை மறுத்துப் பதிலளித்தார். அப்போது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகம், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து உத்தரப் பிரதேசம் போன்ற மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாத வடமாநிலங்களுக்கு அதிகமான நிதியை அன்றைய வாஜ்பாய் அரசு ஒதுக்கியது. கலைஞர், சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இதைக் கண்டித்து, அன்றைக்கு அது பெரும் சிக்கலாகவும் விவாதிக்கப்பட்டது. அன்றைக்குத் தொடங்கிய சிக்கல் இன்றும் தொடர்ந்து, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் மாநிலங்களை மாற்றாந்தாய் போக்கில் அணுகுகிறது. நிதி ஒதுக்கீடு எப்படிக் கணக்கிடப்படுகிறது என்று பாருங்கள்:
14ஆவது நிதி ஆணையம் பங்கீடு செய்த முறை:
மக்கள்தொகை – 1971: 17.5 புள்ளிகள்
மக்கள்தொகை – 2011: 10 புள்ளிகள்
தனிநபர் வருவாய் இடைவெளி: 50 புள்ளிகள்
பரப்பளவு: 5 புள்ளிகள்
வனங்களின் பரப்பளவு: 0 புள்ளிகள்
நிதிநிலை ஒழுங்கு முறை: 17.5 புள்ளிகள்
மொத்தம்: 100 புள்ளிகள்
15ஆவது நிதி ஆணையம் சில சர்ச்சைக்குரிய மாற்றங்களையும் கொண்டுவந்துள்ளது.
1. மக்கள்தொகையைப் பொறுத்தவரை 1971ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரம் கைவிடப்படுகிறது. அதற்குப் பதிலாக 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகைப் புள்ளிவிவரம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. ஆனாலும் இதற்கான நிதிப் பகிர்வுகளில் மத்திய அரசு தங்கள் விருப்பம்போல் நடந்துகொள்கிறது. சில மாநில அரசுகள் மத்திய அரசின் திட்டங்களைக் கிடப்பில் போடுவதும் உண்டு.
3. இலவசங்களும், மானியங்களும் மாநில அரசுகளுக்குத் தவிர்க்க முடியாதவை. முடிந்தளவு விவசாயம், கல்வி, நல்வாழ்வுகளுக்கு மட்டும் மானியங்களும், இலவசங்களும் வழங்குவது நல்லது. முடிந்தளவு இலவசங்களைத் தவிர்ப்பது நல்லது.
பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்துவிட்டன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதைக் கவனத்தோடு சகல ஏற்பாடுகளோடு செய்யாமல் இந்த நடவடிக்கையானது பெரும் சேதாரத்தை ஏற்படுத்திவிட்டது.
எனவே, 15ஆவது நிதிக்குழு மட்டும் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வுகளைக் குறைக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இதே நிலைமைதான். இது தொடர் நிகழ்வாக இன்றுவரை நீடித்து மாநில அரசுகள் வஞ்சிக்கப்படுகின்றன.
தருவதும் பெறுவதும்
கர்நாடகத்திலிருந்து மத்திய அரசு ஒரு ரூபாயை வரியாக வசூலித்தால், அதில் 47 காசுகள் மட்டுமே கர்நாடகத்துக்குத் திரும்ப கிடைக்கிறது. அதே சமயம் உத்தரப் பிரதேசத்தில் வசூலிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஒரு ரூபாய் 79 காசுகளாகத் திரும்பக் கிடைக்கிறது. பீகார் மாநிலம் ஒரு ரூபாய்க்கு 4 ரூபாய் 20 காசுகளைத் திரும்பப் பெறுகிறது. ஆனால் தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு இதைக் கவனத்தில் கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ பக்குவமும் இல்லை, நேரமும் இல்லை. அவர்களுக்குத் திட்டங்களின் கமிஷன்கள்தான் முக்கியமாகக் கண்ணில்படுகின்றன. ஏனென்றால் ஏதோ மக்களை ஏமாற்றி, ஆட்சிக் கட்டிலில் இருக்கின்ற ஜென்மங்களாகத் தமிழகத்தில் காட்சி தருகின்றனர்.
சமீபத்தில் தென்மாநில நிதியமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம், தெலங்கானா தவிர்த்து அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
15ஆவது நிதிக்குழு பாரபட்சத்தோடு நடந்துகொள்வது கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணானது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் கோளாறுதான் இது.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை - பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். இவரைத் தொடர்புகொள்ள: rkkurunji@gmail.com)

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...