Friday, April 6, 2018

காவிரிநீர் பங்கீடு குறித்த எனது கட்டுரை - "டெல்லியை உலுக்காமல் தண்ணீர் தமிழகத்திற்கு வராதா?"

காவிரிநீர் பங்கீடு குறித்த எனது கட்டுரை ஒன்று இன்றைய தி தமிழ் இந்து பத்திரிக்கையில் "டெல்லியை உலுக்காமல் தண்ணீர் தமிழகத்திற்கு வராதா?" என்ற தலைப்பில் போதிய தரவுகளுடன் வெளியாகி உள்ளது.
காவிரிநீர் பிரச்சனையை மத்திய அரசு மாய மானாக காட்ட நினைக்கின்றது. ஆனால் நீதிமன்ற தீர்ப்புகள், கோப்புகள் மாயமாகாது என்பதை நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன்.

****

காவிரி சிக்கலில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டுமென உத்தரவிட்டும் அதை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இத்தீர்ப்பில் சொல்லப்பட்ட ‘ஸ்கீம்’ என்ற செயல்திட்டம் குறித்த விளக்கத்தை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் துவக்கத்திலேயே கேட்டிருக்கலாம். காலம் கடத்திவிட்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது, அமைக்க சிறிது காலமாகும் என்று குழப்பமான நிலைப்பாட்டினை மத்திய அரசு கூறுவது வேதனையாக உள்ளது. தன்னுடைய மனுவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மூன்று மாத காலம் அவகாசமும் அதனுடைய வரம்புகள், அதிகாரம், பணிகள், நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சில தகவல்கள் வேண்டுமென்று காலங்கடந்து உச்ச நீதிமன்றத்தின் மனுவில் மத்திய அரசு சொல்லியுள்ளது கபட நாடகமாகத்தான் தெரிகிறது.

இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் 02.04.2018 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியம் தானா என்று சந்தேகம் இருப்பதாக தனக்கேற்ற சுயநலவாதத்தை வைத்தது. ஆனால் ஸ்கீம் என்றால் மேலாண்மை வாரியம் தான் என்று எதிர் தரப்பில் கூறியும், ஸ்கீம் என்றால் மேலாண்மை வாரியம் தான் என்ற யதார்த்தம் இருந்தாலும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அது அல்ல என்று மறுக்கிறார் என்றால் என்ன செய்ய?
ஸ்கீம், 1956ம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டத்தில் சர்க்காரியா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவு 6A(2)-ன்படி ஸ்கீம் என்பது ஆணையம்(Authority)என்று கூறப்பட்டுள்ளது.எனவே ஆணையம் என்பதை உள்ளடக்கிய ஸ்கீம் உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் மத்திய அரசுக்கு வழங்கிய உத்தரவு ..தீர்ப்பில் பக்கம் 337ல்பத்தி 290ல் நடுவர் மன்றம் சுட்டிக்காட்டிய காவிரி மேலாண்மை வாரியம் பற்றியும், அதன் விபரங்கள், கூட்டங்கள் நடத்தும் முறை ஆகியவை பற்றியும் உச்சநீதிமன்றமே விளக்கி கூறியிருக்கிறது.இப்போது தலைமை நீதிபதி வேறுவிதமான விளக்கமளிக்கிறார்.
ஸ்கீம் என்பதை மாயமான் போல தவறான, குழப்பமான விவாதங்களை வைப்பது ஏற்புடையதல்ல.
இது காலத்தை கடத்தவே இந்த நடவடிக்கையாகும். அது மட்டுமல்லாமல், காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக வேறு ஏதாவது செயல் திட்டம் உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கின்றதா என்ற கூறியிருந்தது தான் கொடுமை. இப்படியான மத்திய அரசினுடைய தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகள்.
நதிநீர் மேலாண்மை வாரியச் சட்டம், 1956 (நடைமுறைக்கு வந்த நாள். 19/09/1956) ன்படி அரசியலமைப்புச் சட்டம் பிரிவு. 262ன்படி அனைத்து நதிநீர்ச் சிக்கல்களை தீர்க்க வழியிருந்தும் மத்திய அரசு அசட்டையாக இருந்தது. இந்த பிரிவு அனைத்து அதிகாரங்களையும் நாடாளுமன்றத்தின் மூலமாக மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. இதன்படி மாநிலங்களிடையே பாயும் நதிகளை கட்டுப்படுத்தல், நதிநீர்ச் சிக்கல்களை தீர்க்கலாம் என்று தெளிவாக இருந்தும், மத்திய அரசு இதையெல்லாம், ஒதுக்கித் தள்ளிவிட்டு கட்டப் பஞ்சாயத்து போல நடத்துவது தான் கொடுமையிலும் கொடுமை. இந்த நதிநீர் மேலாண்மை வாரியச் சட்டம், தெளிவாக மேலாண்மை வாரியம் எப்படி அமைய வேண்டும், அதன் தலைவர்கள், உறுப்பினர்கள் என்று தெளிவாகப் குறிப்பிடப்பட்டு அதை மத்திய அரசு அமைக்காமல் காலந்தாழ்த்துவது என்ன நியாயம்?
இந்த சட்டத்தின் படி, 2 பிரிவு 4 (1) ன்படி நதீநர் தாவா குறித்து மாநிலங்களிடையே பிரச்சனை வந்தால், நதிநீர் மேலாண்மை வாரியம் வேண்டுமென்றால் மத்திய அரசு ஏதாவது செவிசாய்த்து அமைக்க வேண்டும். அமைப்பதற்கு முன்பு அதில் உள்ள மாநிலங்களை அழைத்து பேசி முறையான மத்திய அரசின் அறிவிக்கையாக வேண்டும். மேலும் பிரிவு. 5 (1)ன்படி மேலாண்மை வாரியம் தலைவர், உறுப்பினர்கள் அதே பிரிவு. 2 ன் கீழ் நீர்பாசனப் பொறியாளர்கள், வெள்ளக் கட்டுப்பாடுகள், மின்பொறியாளர்கள், மண்பாதுகாப்பு, நீர்ப் பாதுகாப்பு, விவாசய போன்றோர் இந்த வாரியத்தில் இடம் பெறுவார்கள். இந்த வகையில் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக்கூடிய வகையில் இந்த வாரியத்தை அமைப்பதில் செயல் திட்டம் இடம்பெற முயலும். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அமைக்காமல் காலந்தாழ்த்துவது மாற்றாந்தாய் போக்காகும்.
இப்படியான தெளிவாக வழிமுறைகள் இருக்கும் போது இதையே ‘ஸ்கீம் - செயல் திட்டம்’ என்று மத்திய அரசு எடுத்துக் கொண்டிருக்கலாம். இந்நிலையில் மத்திய அரசு செயல்திட்டம் – ஸ்கீம் என்று கேள்வி எழுப்புவது தமிழகத்தை வஞ்சிக்கும் நடவடிக்கை தான். நதிநீர் மேலாண்மை வாரியச் சட்டத்தில் அனைத்து கேள்விகளுக்கான பதில்கள் சட்டத்திலே குறிப்பிட்டுள்ளது. அதிகார வரம்பு, செலவுகள், நிதிஆதாரங்கள், காலஅளவு மட்டுமல்லாமல் நதிகளுடைய நீர்சேமிப்பு, அணைகளுடைய கட்டுப்பாடு, நீர்பாசன மேலாண்மை, வெள்ள கட்டுப்பாடு, படகு போக்குவரத்து கட்டுப்பாடுகள், மண் அரிப்பு, அருகிலுள்ள காடுகளின் பாதுகாப்பு என்று இந்த சட்டத்தில் வழி இருக்கும் போது செயல்திட்டம் என்று கூறும்போது மத்திய அரசு காலந்தாழ்த்த தான் இந்த ஸ்கீம்.
உச்ச நீதிமன்றம் பக்கம் 335 இல் பொறிமுறை – (Mechanism) என்பது சி.எம்.பி (CMB) என்பதை காவிரி மேலாண்மை வாரியம் என்ற தான் எடுத்துக் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் நடுவர் மன்றத்தில் குறிப்பிட்டுள்ள காவிரி மேலாண்மை வாரியத்தை எடுத்துக்காட்டி அதையே உத்தரவின் சாரம் என்று சொன்னதை மத்திய அரசு கவனத்தில் கொள்ளாமல் பொறிமுறை, செயல் திட்டம் என்று திட்டமிட்டு தேவையில்லாமல் தவறான கருத்தை வெளியிட்டது. தெளிவாக நடுவர் மன்றத்தின் தீர்ப்பையே எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சி.எம்.பி என்று சொல்லியிருப்பதை செயல்படுத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து மத்திய அரசு காலம் தாழ்த்திவிட்டது. காவிரிப் பிரச்சனையில் உலகளவில் பன்னாடுகளுக்கு இடையில் பாயும் நதிகளை குறித்து நீர்ப் பகிர்வு மற்றும் தாவாக்களை தீர்க்க சர்வதேச சட்ட மையம் வெவ்வேறு கால கட்டங்களில் கூடி மூன்று வழிமுறைகளை கொள்கைகளையும் சட்ட வடிவமாக இயற்றியுள்ளது.

  • ஹெல்சிங்கி கொள்கை
  • ஹார்மன் கோட்பாடு
  • பெர்லின் விதி
காவிரி தாவாவில் அனைத்துலக நதிநீர் பயன்பாட்டுக்கான ஹெல்சிங்கி விதிகளையே உச்ச நீதிமன்றமும், நடுவர் மன்றமும் கவனத்தில் எடுத்துக் கொண்டு தீர்ப்புகளை வழங்கியது. இந்த விதி மற்றும் கோட்பாடின்படி நதிநீர் மேலாண்மை வாரியச் சட்டமும், இதற்கு ஒத்தே உள்ளது. இப்படி எல்லாம் சட்டங்களின்படி பரிசீலனை செய்து காவிரிப் பிரச்சனையில் தீர்ப்புகளை வழங்கினாலும் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கிறது.
ஏற்கனவே நதிநீர் மேலாண்மை வாரியங்கள் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது தான். அந்த முறையில் பக்ரா – பியாஸ் செயல் திட்டத்தின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை தாராளமாக அமைத்திருக்கலாம். அதற்கு முன்னுதாரணமாக பக்ரா – பியாஸை மத்திய அரசு எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் மத்திய அரசு அதை புறந்தள்ளியது.
தற்போது, பக்ரா-பியாஸ், நர்மதை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா போன்ற நதிநீர் சிக்கல்கள் பல மாநிலங்களுக்கு இடையில் நிலவி அதற்கான விசாரணைகள் முறையாக நடந்து உத்தரவுகள் வந்து, அந்த உத்தரவுகளை மத்திய அரசு செயல்படுத்தும் போது காவிரியில் மட்டும் இந்த பாகுபாடு ஏன்? மேலும் சட்லஜ் - யமுனா இணைப்பு கால்வாய் பிரச்சனை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கிடையே தீர்க்கப்பட்டது. அதே போல யமுனா நதிப் பிரச்சனை டெல்லிக்கும், ஹரியானாக்கும் இடையே நடந்த சிக்கலுக்கும் முடிவு காணப்பட்டது.
காவிரியில் தமிழகத்தின் ஆதிபத்தியமான கீழ்ப்பாசன உரிமைகளை திட்டமிட்டு மத்திய அரசும், கர்நாடக அரசும் கபளீகரம் செய்கிறது. அதற்கு தான் அதிகாரமில்லாத ஒரு அமைப்பை ஏற்படுத்திட மத்திய அரசு துடிக்கிறது.
ஏற்கனவே சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் (Indus Water Treaty), இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே 1966இல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. சட்லஜ், பியாஸ், ரவி ஆகிய நதிகளை இந்தியாவின் பயன்பாட்டுக்கு என ஒப்புக்கொள்ளப்பட்டது. மற்ற நதிகளை பாகிஸ்தான் பயன்படுத்தும். இந்தியா பயன்படுத்தி வரும் நான்கு நதிகள் குறித்தான பெருந்திட்டம் (Master Plan) என்ற வகையில் பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் ஒப்புதலாலும், முயற்சியாலும் இந்த மகா திட்டம் உருவாக்கப்பட்டது.
கடந்த நவம்பர், 1ஆம் தேதி 1966 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநில எல்லைகள் மறு சீரமைக்கப்பட்ட போது பக்ரா மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டது. இதன்படி பக்ரா நங்கல் திட்டத்தின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் பக்ரா மேலாண்மை வாரியத்திடம் வழங்கப்பட்டது. இதுவொரு அதிகாரம்பெற்ற சுயாட்சி வாரியமாகும். அதேபோல, பியாஸ் நதியின் பணிகள் முடிந்து அதையும் பக்ரா மேலாண்மை வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 1976ஆம் ஆண்டு மே மாதம் 15ம் தேதியிலிருந்து இதை பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் என்றே அழைக்கப்படுகின்றது. அமைக்கப்பட்ட பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், புதுடெல்லி மற்றும் சண்டிகார் பகுதிகளிலிருந்து தண்ணீரை பாசனத்திற்கும், குடிநீர் பயன்பாட்டிற்கும் முறைப்படுத்தி வினியோகிக்கிறது. இதன் நிர்வாகம், பராமரிப்பு மற்றும் ஏனைய பணிகளை தடையில்லாமல் இன்று வரை நடந்து வருகிறது.
  • பியாஸ் - சட்லஞ் இணைப்புத் திட்டம் - 1 (பிரிவு 1)
  • போங் அணை (பிரிவு 2)
ஆகியவற்றின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளை முறையாக இந்த வாரியம் கவனிக்கிறது. ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய நதிகளிலிருந்து தண்ணீரை முறைப்படுத்தி வழங்குகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தை பிரச்சனை இல்லாமல் வினியோகிக்கப்படுகிறது.

இப்படியெல்லாம் சரிவர பணியாற்றுகின்ற மேலாண்மை வாரியம் வடபுலத்தில் அமைக்ககப்படுகிறது. ஆனால் நியாயமாக தமிழகத்தின் நலன் கருதி அமைக்கப்பட வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் வஞ்சித்து, தற்போது கைவிரித்துவிட்டது. கடந்த 21/03/2018 அன்று மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் காவரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்படவில்லை என்றும் ஒரு செயல் திட்டம் தான் வகுக்கச் சொல்லியுள்ளது என்று சொன்னபோதே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது என்ற துயர செய்தி தெரிந்துவிட்டது.

பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று அமைத்திட என்ன சிரமங்கள் உள்ளது. அங்கு அவ்வப்போது ஏற்பட்ட சில பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டது. தெளிவாக தீர்ப்பும், சட்டங்களும், வழிமுறைகளும் இருந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டு பம்மாத்தும், பாவலா காட்டிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசோ இந்த பிரச்சனையை இதய சுத்தியோடு அணுகாமல் தாமதமான நடவடிக்கைகளும் மேலும் சிக்கலைத் தான் உருவாக்கும். தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு மனுவும் காலத்தை கடத்திக் கொண்டு பதில் மனு, நீதிமன்ற வாய்தாக்கள் என்ற திரும்பவும் அதே தொடர்கதை நிலைமை தான். இந்த அவமதிப்பு மனுவில் மேல் உத்தரவு எப்போது வருமோ என்பதும் காத்திருக்கும் நிலை தான். திரும்பவும் கிணற்றில் போடப்பட்ட கல் தான்.

தமிழகத்தை ஏமாற்றிவிடலாம் என்று வஞ்சிக்கும் போக்கில் மத்திய அரசு இருந்தால் இயற்கையின் நீதி அந்த போக்கை வீழ்த்தும் என்று டெல்லி பாதுஷாக்கள் எச்சரிக்கையோடு புரிந்து கொள்ள வேண்டும். காவிரியில் மட்டும் இப்படி செய்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி ரணப்படுத்துவது போல உள்ளது.

வடக்கே ஒரு நியாயம். தெற்கே ஒரு நியாயமா?

தமிழக வரலாறு, நாகரிகம், அன்றாட வாழ்க்கை முறையில் இணைந்த காவிரி உரிமையை நிலைநாட்டத் தியாக உணர்வோடு தொலைநோக்கிலான சாத்தியக்கூறுகளை மனதில் கொண்டு அணுக வேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது. காவிரிப் பிரச்சினையில் இதுவொரு முக்கியமான காலகட்டம். இந்தக் காலகட்டத்தை சமயோசிதமாக அணுகி சாத்தியப்பட்ட உரிமைகளையாவது நிலைநாட்ட அரசியல் மனமாச்சரியங்களைக் கடந்து கடமைகளையாற்ற வேண்டியது அனைவரின் பொறுப்பாகும்.

செய்தித்தொடர்பாளர், திமுக., நூலாசிரியர், இணையாசிரியர், கதைசொல்லி, பொதிகை – பொருநை - கரிசல் rkkurunji@gmail.com கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 06-04-2018.

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...