Saturday, October 31, 2015

பழைய நினைவுகள் - எளிமையின் அடையாளம் ஏ.எஸ்.பொன்னம்மாள்.



பழைய நினைவுகள் - எளிமையின் அடையாளம் ஏ.எஸ்.பொன்னம்மாள். ______________________________________________ எந்த மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் மறைந்த கக்கன் அவர்கள் வெறும் பாயில் படுத்துக்கொண்டு தன்னுடைய வயதான காலத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டாரோ, அதே மருத்துவமனையில் காமராஜரின் படைவரிசையிலிருந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்கள் புற்று நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கிட்டத்தட்ட ஒன்பது முறை நிலக்கோட்டை மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் நினைத்தால் வசதிவாய்ந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அரசு மருத்துவமனையில் சிக்கிச்சைபெற்று வருகின்றார். முன்னாள் அமைச்சர் என்ற தோரணைகள் இல்லாமல் கக்கன் எப்படி எளிமையாக சிகிச்சை எடுத்துக்கொண்டாரோ அதுபோல அவரது வழித்தோன்றலான ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்களும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஏ.எஸ். பொன்னம்மாள் அவர்களைப்பற்றி சில செய்திகள் இந்த இடத்தில் சொல்லவேண்டும். காங்கிரஸிலிருந்து பழ.நெடுமாறன் அவர்களை இந்திராகாந்தியார் நீக்கியபோது, அவரோடு ஏ.எஸ்.பொன்னம்மாள், பாரமலை போன்றோரெல்லாம் உடன்வந்து, பழ.நெடுமாறன் மதுரையிலும், ஏ.எஸ்.பொன்னம்மாள் நிலக்கோட்டையிலும், பாராமலை மானாமதுரையிலும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களாக 1980ல் வெற்றிபெற்றார்கள். இந்த சமயத்தில் நான் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் கூட்டணியில் போட்டியிட வேண்டுமென்று பழ.நெடுமாறன் அவர்கள் எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது, எம்.ஜி.ஆர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சோ. அழகர்சாமி தொடர்ந்து வெற்றி பெற்றுவருகின்ற தொகுதி அதை ஒதுக்க இயலாது என்று சொல்லிவிட்டார். அப்போது விடுதலைப்புலிகளோடு நெருக்கத்தில் இருந்த காரணத்தினால் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரோடு தொடர்பில் இருந்தேன். எம்.ஜி.ஆர் அவர்கள் என்னை சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் நிற்கச் சொன்னபோது எனக்குத் தயக்கம். அ.தி.மு.கவிலும் சரியான வேட்பாளர் இல்லாத காரணத்தினால் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். ஆனால், அப்போது நான் வழக்கறிஞர் தொழிலில் சீனியர் வழக்கறிஞர் காந்தி அவர்களிடம் ஜூனியராக இருந்த நேரம். நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுவது சாதாரணமான காரியமில்லை என்று மனத்தளவில் முடிவெடுத்து மறுத்துவிட்டேன். டாக்டர்.ஹாண்டே அவர்கள் தனக்குத் தெரிந்த நல்லவன் என்ற சௌந்தர் ராஜனைப் பரிந்துரைத்து கூட்டணியில் அ.தி.மு.க. வேட்பாளராக சிவகாசி தொகுதியில் போட்டியிடவைத்தார். அப்போது ஏ.எஸ். பொன்னம்மாள் அவர்கள், “ தம்பி நீங்கள்லாம் இங்கிலீஷ் பேசுற ஆட்கள்; பார்லிமெண்டுக்குப் போனா நல்லதே” என்று அக்கறையோடு சொன்னது இன்றைக்கும் காதில் ஒலிக்கின்றது. ஏ.எஸ்.பொன்னம்மாள், பாராமலை எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் பழ.நெடுமாறன் அவர்களோடு உறுப்பினர்களாக இருந்தவர்கள். தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பழ.நெடுமாறன். துணைத்தலைவர்களாக தஞ்சை ராமமூர்த்தி, பாரமலை, ஏ.எஸ்.பொன்னம்மாள் ஆகியோர் பொறுப்பு வகித்தனர். எம்.கே.டி.சுப்பிரமணியம் (பேரறிஞர் அண்ணா தி.மு.க.வை ராபின்சன் பார்க்கில் துவக்கும் போது அழைப்பிதழில் இடம்பெற்ற ஏழெட்டுப் பெயர்களில் இவர் பெயரும் இருந்தது. பெரியார் அண்ணாவுக்கு நெருக்கமானவர், பிற்காலத்தில் காமராஜருக்கு தளபதியாகவும் இருந்தார்.) தி.சு.கிள்ளிவளவன் (இவரும் அண்ணாவுக்கு செயலாளராகவும், தி.மு.க. நடத்திய ஹோம்லேண்ட் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பிரபல வழக்கறிஞர் வி.பி.ராமனுடன் இருந்தார்) இவர்களுக்கு அடுத்து இளம் வயதில் நானும் பொதுச்செயலாளர்களாக கட்சியில் பதவியிலிருந்தேன். கவிஞர் கண்ணதாசன் ஆரம்பக்கட்டத்தில் இக்கட்சிக்கு ஆதரவாக இருந்தவர். மையிலாப்பூரில் நெடுமாறன் அவர்களும் நானும் அருகருகே குடியிருந்தோம். அவர் பக்கத்தில் இருந்தால் உதவியாக இருக்குமென்று, எனக்கு அந்த வீட்டைக் கொடுத்தார். நான் இருந்த அந்த வீட்டில் தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் என்னுடன் தங்கியிருந்தார். இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈழவேந்தன், இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதி ராஜா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், காசி ஆனந்தன், சம்பந்தன், கரிகாலன், சந்திரஹாசன், என அனைத்து ஈழத்தலைவர்கள் தங்கியிருந்தும், சிலர் வந்து சென்ற இடமும் அந்த வீடு. அந்தத் தெருவில் தான் பாலச்சந்தர் இயக்கிய நடிகை சுஜாதா நடித்த முதல்படமான, அவள் ஒரு தொடர்கதை படமாக்கப்பட்டது. பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிரபாகரன் அவர்கள் கைதுசெய்யப்பட்டபோது, அவர் என்னோடு தங்கியிருந்த வீடு எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் “ரெய்டு” செய்யபட்டது. அப்போது, என்னுடைய உடைமைகளும், தம்பி பிரபாகரன் உடைமைகளும் காவல்துறையினர்களால் எடுத்துச் செல்லப்பட்டன. அந்த வீட்டில் வெறும் கட்டிலும், நாற்காலியும் மட்டும் இருக்கும்போது, சம்பவங்களைக் கேள்விப்பட்ட ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்கள் ஒரு ஆட்டோவில் வந்திறங்கி, ரெய்டு செய்யப்பட்டது குறித்து ஆறுதலாகப் பேசிவிட்டுச் சென்றார்கள். ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்கள் கதர் ஆடைகளையே உடுத்துபவர். நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டு தன் தொகுதியிலுள்ள பிரச்சனைகள் குறித்த மனுக்களை ஒரு கருப்பு ஜிப் பைலில் வைத்து, கக்கத்தில் இடுக்கிக்கொண்டு வருவது இன்றைக்கும் நினைவில் வருகின்றது. 1984ல் ராஜ்யசபைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வை.கோ மற்றும் ஆற்காடு வீராசாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். இருவருக்கும் மொத்தம் 68வாக்குகள் தேவை ஆனால், 20க்கும் மேலான வாக்குகள் பற்றாக்குறையாக இருந்தது. அந்த சமயத்தில் நெடுமாறன் அவர்கள், ஏ.எஸ்.பொன்னம்மாள், பாரமலை மற்றும் தன்னுடைய வாக்கையும் தி.மு.கவுக்கு அளிக்கலாம் என்று சொன்னார். ஆனால் நிகழ்வுகள் வேறுமாதிரி அமைந்துவிட்டன. ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்கள் எளிமையாக, நேர்மையாக, தன்னுடைய அரசியல் தளத்தில் இயங்கியவர். இன்றைக்கிருக்கும் அரசியல்வாதிகளின் பந்தாவும், பகட்டுமில்லாமல் எளிமையாக மக்களிடம் பழகியும், தொடர்புகொண்டும் தன் பணிகளை ஆற்றியவர். அவர் விரைவில் குணமடைந்து நலம்பெறவேண்டும். -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 30-10-2015. #KSR_Posts #KsRadhakrishnan #ASPonnammal #TamilnaduKamarajCongress

Friday, October 30, 2015

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் - தமிழக மீனவர்கள் - Tamil Nadu Fishermen



தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் 15கோடி அபராதம் விதிப்பதற்கான சட்டங்களைத் திருத்த உள்ளதாக இலங்கை அரசின் மீன்வளத்துறை தலைமை இயக்குனர் பெர்னாண்டோ சொல்லியுள்ளது மிகவும் அபத்தமாக உள்ளது.

நாகப்பட்டிணம் முதன் ராமேஸ்வரம், தெற்கே தூத்துக்குடி, கன்னியாகுமரி வரை ஏறத்தாழ 600கி.மீ நீளமுள்ள கடற்கரையில் மூன்று லட்சம் மீனவர்களுக்கு மேல் வாழ்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வாதாரமே வங்கக்கடலில் மீன் பிடிப்பதுதான். எதிர்புறத்தில் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து காங்கேசத்துறை வரை ஈழத் தமிழ் மீனவர்கள் மீன் பிடிக்கின்றார்கள்.

3லட்சம் மீனவர்கள் இருந்த இலங்கையில் இப்போது 60,000மீனவர்கள் எனக் குறைந்துவிட்டார்கள். மீனவர் பிரச்சனை 1964கட்டத்திலே துவங்கிவிட்டது. அன்றைக்கு இருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் சிங், நாடாளுமன்றத்தில் “இலங்கையோடு பேசி, பிரச்சனையை தீப்போம்” என்று சொல்லி 51வருடங்களாகஇன்றைக்குவரை டெல்லி அரசாங்கம் இலங்கை அரசுடன் பேசிக்கொண்டி இருக்கின்றது.

இடைப்பட்ட காலங்களில் 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். சுமார் 2000 மீனவர்கள் துப்பாக்கிச்சூட்டினால் ஊனப்படுத்தப் பட்டுள்ளனர். பலகோடி மதிப்பிலான படகுகளும், வலைகளும் இலங்கைக் கடற்படையினரால் நாசமாக்கப்பட்டுள்ளது.

வலைவீசும் மீனவனுக்கு இதுதான் எல்லை என்பது தெரியாது. மீனவர்களுடைய மீன்பிடிக்கும் வரைமுறைகளை 1742ல் டச்சு சட்ட நிபுணர் “ஃபிங்கர்ஷா” சட்டப்பூர்வமாக வடிவமைத்தார். அதை மற்ற ஐரோப்பிய நாடுகளும் பின்பற்றத் துவங்கின.

1948வரை பருத்தி இலைகளை வலைகளாகவும், பாய்மரப்படகுகளையும், கட்டுமரப்படகுகளையும் பயன்படுத்திய மீனவர்கள் அதன்பின் இயந்திரப்படகுகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அப்போதுமுதல் இலங்கை நமது மீனர்வர்கள் மீது பிரச்சனைக்ளை ஏற்படுத்தியது.

கிட்டத்தட்ட இதுவரை சுமார் 1,400 சம்பவங்கள் (துப்பாக்கிச்சூடு, படகுகளைச் சேதமாக்குதல், தமிழக மீனவர்களை கைது செய்து அழைத்துச் செல்வது ஆகியவை) நடந்துள்ளன.

1921ல் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் மீன்பிடி எல்லைகளில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அப்போதெல்லாம் காவல்துறைதான் இரண்டு நாடுகளின் மீனவர்களின் இந்தப் பிரச்சனையை கண்காணித்தது. இரு நாடுகளிடமும் கடற்படைகள் அப்போது கிடையாது.

ஐரோப்பாவில் இதேப்போல நாடுகளுக்குள்ளே, பிரிட்டனுக்கும், ஐஸ்லாந்துக்கும் மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்குமிடையே மீன்பிடிப் பிரச்சனைகள் நடைபெற்றாலும் அவற்றைப் பெரிதாக்காமல் இருதரப்பு நாடுகளும் அமர்ந்துபேசி உடனுக்குடன் தீர்வு காண்கின்றம.

கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் 1976ல் தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு மேலிருந்த முழுமையான உரிமைகளும் பறிக்கப்பட்டது.

1973 டிசம்பரில் ஐ.நா.மன்றம் சர்வதேச கடல் சட்டங்களை நியூயார்க்கில் விவாதித்து, கரையொட்டிய கடற்பிராந்தியத்தில் 20கி.மீட்டர் கடலோர நாடுகளின் ஆளுமைக்கு உட்பட்டது என்று முடிவெடுத்தது. 1982ல் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த கடல் எல்லை மாநாட்டிலும் இதுகுறித்து விவாதித்து, கடல் எல்லை 3கடல் மைல்கள் என்பதை, 12 கடல் மைல்கள் என நீட்டிக்கலாம் என்று பரிந்துரைகள் செய்யப்பட்டு அது நடைமுறைக்கும் வந்தது.

1700கி.மீட்டர் பரப்பளவுள்ள தமிழகக் கடற்கரையில் 8லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் வங்கக்கடலை நம்பி தங்களுடைய வாழ்க்கையை நடத்துகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை அரசு அடாவடித்தனமாக, 15கோடி அபராதம் விதிப்போம் என்று சொல்லியிருக்கும் அபத்தத்தைத் தட்டிக்கேட்கக்கூட மத்திய அரசுக்கு மனதில்லை.

ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கே, “தமிழக மீனவர்கள் எல்லைதாண்டினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்று பேசினதைக்கூட மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை!?


தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான் .. என்பதுதான் தமிழக மீனவர்களின் நிலைமை .

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-10-2015

#TamilNaduFishermen#KSR_Posts‬ ‪#KsRadhakrishnan‬ ‪




பாலை நிலத்தின் கண்ணீர் -Tear and desert




‘Tear’ and ‘desert’ are words that are pronounced differently to indicate their meaning. The noun tear, which is a drop of fluid from the eye, rhymes with the word dear.

‘She shed a tear when her cat died.’

But when we use ‘tear’ as a verb, meaning to rip, it's pronounced 'tear' and that rhymes with the word 'bear'.

‘Don't tear the book.’

The noun ‘desert’ means a barren dry, sandy and often lifeless place.

‘It rarely rains in the desert.’

But when the word ‘desert’ is used as a verb, meaning to run away, it's pronounced 'desert'.

‘Don't desert me, stay and help please.’

When it's spelt with two Ss ‘desert’ is used to describe the part of a meal that is often eaten after the main course. It usually consists of something sweet.

‘I don’t think I'll have any dessert thanks, I am already full.’

-K.SRadhakrishnan
30-10-2015

#KSR_Posts‬ ‪#KsRadhakrishnan‬ ‪#Tearanddesert

"You too Brutus" என்று சீசர் தன் நண்பனை அழைத்த, புரூட்டஸினுடைய வாக்குமொழி.



“ If there’s anyone in this assembly, any dear friend of Caesar’s, I say to him that my love for Caesar was no less than his. If, then, that friend demands to know why I rose up against Caesar, this is my answer: it’s not that I loved Caesar less, but that I loved Rome more. Had you rather Caesar were living and die all slaves, than that Caesar were dead, to live all free men? As Caesar loved me, I weep for him. As he was fortunate, I rejoice at it. As he was valiant, I honor him; but, as he was ambitious, I slew him."
--Brutus from "Julius Caesar" (Act III, Scene II) *William Shakespeare.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 30-10-2015

#KSR_Posts‬ ‪#KsRadhakrishnan#Brutus #Shakespeare #JuliusCaesar

உலகநாடுகளில் தமிழர்கள் தேர்தல் தொடர்வெற்றி.



ஆஸ்திரேலியா மோர்லண்ட் நகர முதல்வராக, ஈழத்தமிழ்ச் சகோதரி, சமந்தா ரத்தினம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கிரீன் கட்சியின் சார்பில் தெற்கு வட்டாரத்தின் உறுப்பினரான இவர் வெற்றிபெற்றுள்ளார். அன்பு நண்பர் மாணிக்கவாசகம் மெல்பர்னிலிருந்து இந்த மகிழ்ச்சியான செய்தியினைச் சொன்னார். அவருக்கு வாழ்த்துகள்.

1983 இனக்கலவரத்தின் போது ஆறு வயதுச் சிறுமியாக இருந்த சமந்தா ரத்தினம் ஐரோப்பா, கனடா நாடுகளில் வசித்து 1989ம் ஆண்டு ஆஸ்த்திரேலியாவில் குடியேறினார். தொழிலாளர் கட்சியின் கோட்டையாகத் திகழ்ந்த மோர்லண்ட் நகரத்தில் கிரீன் கட்சியின் உறுப்பினரான சமந்தா ரத்தினம் வெற்றிபெற்றிருப்பது. அங்குள்ள அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே கனடாவில் சகோதரி ராதிகா சிற்பேசன் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றிருந்தார். சமீபத்தில் நார்வே தலைநகர் ஒஸ்லோவின் துணை மேயராக ஈழத்தமிழ் சகோதரி ஹம்சாயினி குணரத்தினமும், கனடா நாட்டின் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்காபரோ ரூச்பார்க்கில் ஈழத்தமிழரான வழக்கறிஞர் ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின் சார்பிலும் வெற்றிபெற்றுள்ளனர்.

உலகெங்கும் சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் தமிழர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக பொறுப்பேற்று வருகின்றனர். குறிப்பாக ஈழத்தமிழர்களுடைய பங்களிப்பால் தமிழர்களுக்குப் பெருமை.

விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் மேற்கொண்ட நியாயமான போர்குணத்தால் தமிழர்கள் யார் என்று அறியமுற்பட்டு உலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தனர். உலக அளவில் தேர்தல்களில் தமிழர்கள் மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெறுவது நமக்குத்தானே பெருமை.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-10-2015.

#KSR_Posts #KsRadhakrishnan # #Anandasagaree, #KhamshajinyGunaratnam, #SamanthaRatnam


தமிழ்நாடு உரிமைகளும் - பிரச்சனைகளும்.



சென்னைப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் விமல் என்னைத் தொடர்புகொண்டு, “18-08-2015 அன்று தினமணியில் தமிழ்நாட்டு உரிமைகளும், கிடப்பில் போடப்பட்ட திட்டங்களைப் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை என்னுடைய ஆய்வுக்கு மிகப்பயனுள்ளதாக இருந்தது. மேலும், தமிழக உரிமைத்திட்டங்களும், பிரச்சனைகளும் இருந்தால் எனக்குத் தெரிவித்து உதவ வேண்டுகிறேன்” என்றார்.

இத்தோடு இணைக்கப்பட்ட தினமணி கட்டுரையோடு மேலும் பல தமிழகப் பிரச்சனைகள் உள்ளன. அவற்றில் சில...

1, ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தின் நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் இருக்கின்றது. 39,202 ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கோயில் குளங்கள் 5000, நூற்றுக்கும் அதிகமான அணைகள் மற்றும் தடுப்பணைகள், 33ஆறுகள். இவற்றை தூர்வாரினாலே இரண்டுமடங்கு நீராதாரங்களைச் சேமித்து மிச்சப்படுத்தலாம்.

2. மணல் கொள்ளைகளை தடுத்தால் ஆண்டுக்கு 13ஆயிரத்து 140கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாகக் கிடைக்கும். கிரானைட் குவாரி கொள்ளைகளைத் தடுத்தால் ஆண்டுக்கு 10,950கோடிகள் கிடைக்கும். தாதுமணல்களான கார்னைட், இல்மனைட் மூலம் ஆண்டுக்கு மேலும் 30ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டலாம். கிராவல் மணல் மூலம் 800கோடி ரூபாய் வரை தனியார்கள் சுரண்டுகின்றனர். இவ்வாறு இயற்கை தந்த அருட்கொடைகளை மாபியாக்கள் கொள்ளையடித்து அரசு கஜானாவை நஷ்டப்படுத்துகின்றன.

3. திருச்சி, சேலம், மதுரை, கோவை, நெல்லை மாவட்டங்களில் படிக சுண்ணாம்புக்கல்லும், ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரை பவளப்பாறைகளான சுண்ணாம்புக்கல்லும், புலிகாட் மற்றும் கன்னியாகுமரி கடற்கரையோரப்பகுதிகளில் கிளிஞ்சல் சுண்ணாம்புக்கல்லும், சேலம் சேர்வராயன் மலைப்பகுதியில் அலுமினியமும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் செம்பும், சிலிக்கா எனப்படும் கண்ணாடி உற்பத்திக்குப் பயன்படும் மூலப்பொருட்களும், திருச்சி, கோவை, தர்மபுரி, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஜிப்சமும், சிவகங்கை மாவட்டத்தில் கிராஃபைட்டும், கடலூர் மாவட்டத்தில் நிலக்கரியும் எனப் பல்வேறான இயற்கை வளங்கள் கிடைக்கப்பெற்றும் அவற்றை சரியானமுறையில் பயன்படுத்தாமல் இருக்கின்றோம்.
இந்த இயற்கை வளங்களை எல்லாம் தோண்டி புதிதாக கடலூர், நாகை, கீழக்கரை, இராமேஸ்வரம், பாம்பன், வாலி நோக்கம், கன்னியாகுமரி, குளச்சல் துறைமுகங்களைச் சீர்படுத்தி, தமிழகத்தில் கிடைக்கும் தாதுவளங்களை ஏற்றுமதி செய்யலாம். இவ்வளவு இயற்கை வளங்களும் நாட்டுக்குப் பயன்படாமல் தனியார்கள் கொள்ளையடிக்கின்றனர்.

4. குடிநீருக்கும் , விவசாயத்திற்கும் பயன்படுத்தும் ஆறுகளில் விஷக்கழிவுகள் கலப்பதால் நோய்களும், சுகாதாரக்கேடும் விளைகின்றன. பவானி, காவேரி, வைகை, தாமிரபரணி, சிறுவாணி, நொய்யல், பாலாறு ஆகிய ஆறுகள் சாயம், தோல், தொழிற்சாலைக் கழிவுகள் சேருவதால் நச்சுத்தன்மைக்கு உள்ளாகின்றன. இவற்றிலும் அரசுகள் பாராமுகமாக இருக்கின்றன.

5. விவசாயத்திற்குப் பயன்படுத்தவேண்டிய விளைநிலங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலம் , தனியார் மற்றும் ஆதிக்க சக்திகளால் வீட்டுமனைகள் என்று லட்சக்கணக்கான ஏக்கர்கள் பறிபோய்விட்டன.

6.கிழக்குக் கடற்கரை ஓரத்தில் கடலூரிலிருந்து வேதாரண்யம் வரை, மற்றும் தூத்துக்குடியில் அனல்மின் நிலையங்களுக்காக தனியார் வசம் வழங்கப்பட்ட நிலங்களுக்கு குறைவான ஈட்டுத் தொகையே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதனால் அங்கு விவசாயமும் பாழ்பட்டு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது.

7.கடல்வளத்தில் கிடைக்கும் மீன், இறால் முதலிடத்தில் உள்ள தாய்லாந்தைவிட இந்தியாவில் தான் அதிகம் கிடைக்கின்றது. இதைத்தனியார்கள் சுரண்டி, ஐரோப்பா போன்ற நாடுகளோடு பேரம் பேசி, ஏற்றுமதியின் மூலம் கொள்ளைலாபம் சம்பாதிக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தூத்தூர், நீரோடை, மார்த்தாண்டத்துறை, வள்ளிவிளை, இரவிப்புதூர் மற்றும் கோவளம் ஆகிய கிராமங்களில் கடல் ஓரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு அங்குள்ள கிராமங்களே அழிகின்ற நிலையில் இருக்கின்றன. அவற்றை அரசுகள் கண்டுகொள்ளவில்லை.

எண்ணூர், மாமல்லபுரம், இராமேஸ்வரம், கன்னியாகுமரி பகுதிகள் கடலரிப்பால் பாதிப்படையும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது. மன்னார் வளைகுடா அருகில் உள்ள 21தீவுகளில் விலங்குசல்லி, பூவரசம்பட்டி ஆகிய தீவுகள் கடலுக்குள் மூழ்குகின்ற அபாயத்தில் உள்ளன. இதையெல்லாம் அரசுகள் கண்டுகொள்ளாமலும், தனியார்கள் சுரண்டும் மீன்வளம் பற்றி அக்கரையில்லாமலும் உள்ளது. ஆனால் சாதாரண மீனவன் இலங்கைக் கடற்படையினால் வதைக்கப்படுகின்றான்.


8. வன வளமும், யானைகளும் பிற வனவிலங்குகளும் அழிக்கப்படுகின்றன. இதில் பல லட்சக்கணக்கான கோடிகள் தனியார்களால் பகல்கொள்ளை அடிக்கப்படுவதும், விலங்குகள் வேட்டையாடப்படுவதும் மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. மேற்குத் தொடர்ச்சிமலை, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள வன வளங்களையும் தனியார்கள் கொள்ளை அடிகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள
பனைமரங்களை பாதுகாககும் அக்கறையும் இந்த அரசுகளுக்கு இல்லை.

9. எண்ணூர்-மதுரை எரிவாயுக்குழாய்த் திட்டத்தினால் பல லட்சக்கஅல்லாம ஏக்கர் விவசாய நிலங்களும், சுற்றுச்சூழலும் பாதிக்கக்கூடிய அளவில் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

10. நெல்லைமாவட்டம் கங்கைகொண்டானில் கோலா குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி நீரை மிகக்குறைந்த விலைக்குக் கொள்ளையடித்து, அதைப் பலமடங்கு லாபத்தில் மக்களுக்கு விற்பதைத் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

11. குட்டி ஜப்பான் என்றழைக்கப்பட்ட சிவகாசி, தீப்பெட்டித் தொழில், பட்டாசுத்தொழில், அச்சுத் தொழில் ஆகியவை புதிய பொருளாதாரக் கொள்கைகளாலும், பெருமுதலாளிகளாலும் பாதிக்கப்பட்டு அன்றாடம் கிடைக்கக்கூடிய வேலைகள் இல்லாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றார்கள்.

12. நெசவாளர்களும் அவர்களுடைய தொழில்களும் அழிகின்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஒருகாலத்தில் பவானியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஜமுக்காளத் தொழிலே முடங்கிவிட்டது.

13. திருப்பூர் பின்னலாடை தொழிலும் தடைபட்டு இந்தத் தொழிலை அங்குள்ள தொழில் நிறுவனங்கள் குஜராத்துக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.


இப்படிப் பல பிரச்சனைகள் சொல்லிக்கொண்டே போகலாம்.



தினமணியில் 18-08-2015 அன்று வெளிவந்த எனது கட்டுரை
______________________________________________________

காவிரிப் படுகையில் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி.) எண்ணெய், எரிவாயு எடுக்க சுற்றுச்சூழல் இசைவுக் கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

ஷெல் வாயு என்பது பிரதானமாக மீத்தேன் எரிவாயுதான். மீத்தேன் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் அதே நீரியல் விரிசல் தொழில்நுட்பம் தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது.

மீத்தேன் எடுப்பதற்கு 2000அடி வரை நிலத்தைத் தோண்டி, அதில் மணலையும், 600க்கும் அதிகமான நச்சு வேதிப்பொருள்களையும் பல்லாயிரம் லிட்டர் தண்ணீரில் கரைத்து, அக்கலவை அதிகமான அழுத்ததில் உள்ளே செலுத்தப்படும்.

சில நூறு அடிகளுக்குப் பிறகு, பக்கவாட்டிலும் துளைத்துக் கொண்டு இந்தக் கலவையைச் செலுத்தும் போது, நிலத்திற்கு அடியில் உள்ள நிலக்கரி படிமங்களை நொறுக்கி, இடைவெளிகளில் உள்ள மீத்தேன் வாயு வெளியே எடுக்கப்படும். இந்த வேதியல் கலவை மீண்டும் உறிஞ்சி எடுக்கப்பட்டு கழிவுகளாக நிலத்தின் மேற்பரப்பில் தேக்கிவைக்கப்படும்.

இதனால் காவிரிப் டெல்டாவில் நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு, பாசான நீர் நஞ்சாகி, ஒட்டு மொத்த காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், கடலூர் மாவட்டங்களின் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு பாலைவன ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு கோடிக்கும் மேலான மக்கள் தங்கள் நிலத்தையும், விவசாயத்தையும், தொழிலையும் விட்டு இலங்கை அகதிகள் போல நாதியற்று வெளியேற வேண்டிவரும். காவிரி மூலமாக குடிநீர்பெறும் தமிழகத்தின் 19மாவட்டங்களும் தவிப்புக்குள்ளாகும்.

காவிரியில் மீதான தமிழகத்தின் உரிமைகள் ஒருபக்கம் மறுக்கப்படுகிறது. மற்றொரு பக்கம் காவிரி டெல்டாவில் மீத்தேன் மற்றும் ஷெல் வாயு திட்டங்கள் நிறைவேற்றத் துடிக்கின்றது மத்திய அரசு. மீத்தேன் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது என்று ஒரு மாயையைக் கிளப்பிவிட்டு மறுபடியும் பாம்பு படமெடுத்து ஆடுகின்ற கதைதான்.

2013ம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் இந்திய பெட்ரோலிய அமைச்சகம் காவிரிப் படுகையில் இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் மீத்தேன் வாயுவை கண்டறிய ஷெல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. இப்பகுதியில் 35இடங்களில் ஷெல் எண்ணெய் மற்றும் ஷெல் வாயுவை எடுக்க ஓ.என்.ஜி.சி வேண்டுகோள் விடுக்கவும் மத்திய அரசும் இசைவு தெரிவித்தது.

தமிழ்நாட்டைக் குப்பைக்கூடையாக நினைத்துக் கொண்டு, பிற மாநிலங்கள் விரட்டி அடித்த நச்சுத் தொழிற்சாலைகளை மத்திய அரசு இங்கு அனுமதிக்கிறது.

உதாரணமாக, மராட்டியத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் குடிகொண்டு விட்டது. கேரளமாநிலம் பிளாச்சிமடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட கோக்ஆலை திருநெல்வேலி கங்கைகொண்டானில் மையம் கொண்டுள்ளது. கூடங்குளம் அணுக்கழிவுகள் கோலார் வயலில் கொட்டப்படும் என்று சொன்னவுடன் கர்நாடகம் எதிர்த்தது. உடனே கூடங்குளம் அணுக்கழிவுகள் தமிழகத்திலே கொட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

தமிழகத்திற்கு நியாயமாக நிறைவேற்றப் படவேண்டிய உரிமைகளும், திட்டங்களும் 50ஆண்டுகளாக மறுக்கப்படுகின்றது. ஆனால் தீங்கு விளைவிக்கின்ற திட்டங்கள் மட்டும் தமிழகத்தில் முன்னுரிமையோடு வேகமாக நிறைவேற்றப்படுவதில் என்ன நியாயம் உள்ளது.

தமிழகத்தின் நலன்நாடி செய்யவேண்டிய கீழ்க்குறிப்பிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்போக்கில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக புறந்தள்ளி வருகிறது.

1. அகல இரயில் பாதைத் திட்டம் கூட ஆமை வேகத்தில் தான் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்திற்கு வந்தது. இன்னும் செங்கோட்டை-புனலூர் கொல்லம் மார்க்கம், மதுரை-போடிநாயக்கனூர் போன்ற திட்டங்கள் மிகவும் தாமதப்படுத்தப் படுகின்றன.

2. சேது சமுத்திரத் திட்டம் முடக்கப்பட்டுள்ளது.

3. கிழக்குக் கடற்கரைச் சாலை முழுமை அடையவில்லை.

4. சுமார் 10க்கும் மேலான மீன்பிடித் துறைமுகத் திட்டங்கள் மத்திய அரசிடம் தூங்குகின்றன.

5. நெய்வேலி என்.எல்.சி பிரச்சனை முடிவுக்கு வராமல் தொடர்கதையாக உள்ளது.

6. சேலம் இரும்பாலை விரிவாக்கம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது.

7. உதகை இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை கிட்டத்தட்ட மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது.

8. சென்னை மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் செயல்பாட்டிற்கு வரவில்லை

9. நியூட்ரினோ திட்டம் அடாவடியாகத் தேனி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கின்றது.

10. குளச்சல், கடலூர் துறைமுகத் திட்டங்கள் பல ஆண்டுகளாக ஏட்டளவில் உள்ளது.

11. நோக்கியோ ஆலைத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் அதன் கதவுகள் மூடப்பட்டுவிட்டது.

12. 1980களுக்கு முன்னே திட்டமிடப்பட்ட, மரக்காணத்திலிருந்து சென்னை வழியாக ஆந்திரா, பெத்தகஞ்சம் வரை 420கி.மீ தூரமுள்ள பக்கிங்ஹாம் கால்வாய் நீர்வழிப் போக்குவரத்தும் நடைமுறைக்கு வரவில்லை.

13. நீர்வள ஆதாரங்களான குமரி மாவட்ட நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் அடவிநயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு, திருவில்லிப்புத்தூர் அழகர் அணைத்திட்டம், முல்லைப்பெரியாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு-புன்னம்புழா, சிறுவாணி, பம்பாறு ஆகியவை கேரள மாநிலத்தோடு உள்ள நதிநீர்ப் பிரச்சனைகள்.

காவிரி, ஒகேனக்கல், தென்பெண்ணையாறு, பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி ஆகியவற்றில் கர்நாடக, ஆந்திர மாநிலங்களோடு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட படாதபாடு படவேண்டி இருக்கின்றது.

14. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்குப் பயன்படும் அச்சன்கோவில்-பம்பை-வைப்பாறு இணைப்புத் திட்டம் 1975லிருந்து கொள்கை வடிவில் தான் இருக்கின்றது. இந்த நீர்ப்படுகை இணைப்பிற்கு கேரளாவை இணங்க வைக்க மத்திய அரசுக்கு மனமில்லை.

இத்திட்டத்தினால் கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் வரை குடிநீர் வசதி கிடைக்கப்பெறும். நதிநீர் இணைப்பு குறித்து நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு கொடுத்தபோதுகூட மத்திய அரசிடமிருந்து இந்த இணைப்பைக் குறித்து அழுத்தமாக எந்த பதிலும் இல்லை.

15. தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு, காவிரி-குண்டாறு, பெண்ணையாறு-பாலாறு என மூன்று இணைப்புத் திட்டங்களுக்கான உரிய நிதி ஆதாரங்களையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை.

16. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினால் 30ஆண்டுகளுக்கு மேலாக சொல்லாத் துயரினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

17. தமிழர் பூமியான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துவிட்டு, கச்சத்தீவு இலங்கைக்குத்தான் சொந்தம் என்று நீதிமன்றத்தில் பதில் மனுவும் தாக்கல் செய்கிறது மத்திய அரசு.

18. ராஜீவ் படுகொலையில் தூக்குதண்டனைக்குள்ளான அப்பாவிகளை விடுவிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு மனமில்லை.

19. வடமாநில உயர் நீதிமன்றங்களில் இந்தியும், குஜராத்தில் குஜராத்தியும் வழக்காடு மொழியாக இருப்பது போல, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரிக்கை எழுப்பியும் அதை மத்திய அரசு இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

20. அந்தமானில் வாழும் தமிழர்களுடைய வழக்குகள் யாவும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்கக் கூடிய சூழ்நிலை மாற வேண்டும்

21. கூடங்குளம் அணு உலை கேள்விக்குறியாக இருக்கின்றது.

22. கொங்குமண்டல விவசாயிகளைப் பாதிக்கும் கெயில் எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டத்தைக் கைவிடாமல் மத்திய அரசு விதண்டாவாதம் செய்கின்றது.

23. பழநி வழியாக கேரளா செல்லும் இரயில் வழித்தடமும் நடைமுறைக்கு வந்தபாடில்லை.

24. தென்மாவட்டக் கடற்கரை ஓரங்களில் கொள்ளையடிக்கப்படும் தாதுமணல் கொள்ளையினைத் தடுக்கவும், கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி தாது மணல் ஆலையைப் புதுப்பிக்கவும் மத்திய அரசு முயலவில்லை.

25. தூத்துக்குடி மாவட்ட குலசேகரப் பட்டிணத்தில் இராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

26. நெல்லைமாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி மற்றும் திரவ எரிவாயு தொழில் நுட்ப மையம் துரிதமாக அமைக்கவும் மத்திய அரசிடம் முயற்சிகள் இல்லை.

27. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள் திருவனந்தபுரம் இரயில்வே கோட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடத்தியும் இதைக் கண்டுகொள்ளாமல் மத்திய அரசு உள்ளது.

28. கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த நெசவு ஆலைகள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன. அவற்றைப் புனரமைக்க எந்த மேல் நடவடிக்கையும் இல்லை.

29. வளைகுடா நாடுகளில் தென் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் தான் அதிகமாகப் பணியாற்றுகிறார்கள். அவர்கள் சொந்த ஊருக்கு விரைவாக வரவேண்டுமென்றால் மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வளைகுடா நாடுகளிலிருந்து விமான சேவை வேண்டுமென்று நீண்டகாலமாக வற்புறுத்தியும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது மத்திய அரசு. திருவனந்தபுரம் அல்லது கொழும்பு வழியாகத்தான் பல மணிநேரம் காத்திருந்து தென் மாவட்டங்களுக்கு வந்து சேர முடிகிறது.

30. தூத்துக்குடி விமான நிலையத்தை பன்னாட்டு விமான முனையமாக மாற்றும் திட்டமும் நிலுவையில் உள்ளது.

31. எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைய வாய்ப்புகள் இருந்தும் தாமதமாகிக் கொண்டிருக்கின்றது.

32. புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் ஓவியங்களை உலகிற்கு பறைசாற்றும் வகையில் மத்திய கலாச்சார அமைச்சகத்தில் பரிந்துரைக்கப்பட்டும் அவையாவும் கோப்பில் தூங்குகின்றன.

33. திருநெல்வேலி அருகே நாகரிகத் தொட்டிலான ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்த சத்தியமூர்த்தி குழுவின் அறிக்கையை பத்தாண்டுகளாக மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிடவே இல்லை.

34. இயற்கையின் அருட்கொடையான ரம்யமான கொடைக்கானலில் 1984ல் நிறுவப்பட்ட இந்துஸ்தான் யுனிலிவர் தெர்மாமீட்டர் ஆலையிலிருந்து பாதரசக் கழிவுகள் வெளியாகி பம்பாறு சோலை தண்ணீரில் கலக்கின்றது. இதனால் கொடைக்கானல் நகரத்தின் சுற்றுச்சூழலும், அங்குள்ள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் உடைந்த கண்ணாடிக் கழிவுகளும் குப்பைகளாகக் குவிகின்றன. இங்கு செய்யப்படும் தெர்மா மீட்டர்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்பிரச்சனை பலதடவை அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டும் பாராமுகமாக இருக்கின்றது.

35.புதுவையை தனிமாநிலமாக அறிவிக்கக் கோரியும் முறையான நடவடிக்கைகளும் இல்லை.

இப்படி தமிழ்நாட்டு உரிமைகளும், பிரச்சனைகளும் என ஒரு நீண்ட பட்டியலே இருக்கின்றது. இவற்றையெல்லாம் நிறைவேற்றாமல் சுற்றுச்சூழலையும், தமிழகத்தையும் வஞ்சிக்கின்ற திட்டங்களைத்தான் மத்திய அரசு இங்கு நிறைவேற்றத் துடிக்கிறது.

“தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை வளநாட்டை” பாழாக்கும் ஷெல், மீத்தேன் எரிவாயுத் திட்டங்களை தமிழகத்தின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்.


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-10-2015



#KsRadhakrishnan #KSR_Posts #TamilnaduIssues
#TamilnaduPendingPlans

கணேச மூர்த்திகள் ….. பெண்கள் பொது வெளியில் தேவையற்று சிரிக்க கூடாது .ஆண்கள் பொது வெளியில் அழக்கூடாது.

தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்!    பெண்கள் பொது வெளியில்  தேவையற்று சிரிக்க கூடாது .ஆண்கள் பொது வெளியில...