Tuesday, October 27, 2015

அக்கால கிராமிய நினைவுகள்










இன்று காலை புதியதலைமுறை தொலைக்காட்சியில், “புதுப்புது அர்த்தங்கள்” நிகழ்ச்சிக்கு அன்புக்குரிய ஜென்ராம் அழைத்திருந்தார். படப்பிடிப்பு அரங்கத்தின் நுழைவாயிலில் ஒரு பழைய சைக்கிளும், ஐஸ்பெட்டியும் நிறுத்திவைத்திருந்ததைப் பார்த்ததும் 1950 இறுதி காலக்கட்டங்களில் மற்றும் 1960 துவக்கங்களிலுமான நினைவுகள் சற்று பின்னோக்கிச் சென்றன.
என்னுடைய கிராமமான குருஞ்சாகுளத்திற்கு அருகாமையில் உள்ள திருவேங்கடம், கழுகுமலையிலிருந்து 11:30மணிவாக்கில், கந்தசாமி, சுப்பையா என்ற இரண்டுபேர் இதேப்போல சைக்கிளில் ஐஸ் பெட்டிக்களைக் கட்டிக்கொண்டு வருவார்கள். அவர்களிடம் வெள்ளை நிறத்தில் சேமியா போட்ட பால் ஐஸ் மற்றும் வெவ்வேறு வர்ணங்களில் குச்சி ஐஸ்கள் குறிப்பாக ஆரஞ்சு மற்றும் ரோஸ் கலர் குச்சி ஐஸ்கள் அதிகமாக இருக்கும்.
அப்போது அரையணாவுக்கு ஒரு ஐஸ் விற்கப்பட்டது.
அப்படி தயாரிக்கப்பட்ட குச்சி ஐஸ்களை ஒரு மரப்பெட்டி செய்து, அந்த மரப்பெட்டிக்குள் துரு ஏறாத தகரம் வைத்து, அதன் பக்கவாட்டில் நான்குபக்கமும் வெள்ளை ஐஸ்கட்டிகளை நிரப்பி, மரத்தூள் மற்றும் உப்பு கலந்து குளிரைத் தக்கவைக்க ஏற்பாடு செய்வார்கள். அந்த ஐஸ் பெட்டிகளில் தான் குச்சி ஐஸ்களை அடுக்கிவைத்து விற்பனைக்குக் கொண்டுவருவார்கள். குறைந்தது எழுபது முதல் நூறு குச்சி ஐஸ்கள் வரை நிரப்பிக்கொண்டு கிராமங்களுக்கு விற்க வருவார்கள். அக்காலத்தில் உள்ள ஐஸ் பெட்டிகள் சற்று அகலமாகவும், இதைவிட உயரம் குறைவாகவும் இருக்கும்.
குறைந்தது மூன்று ஐஸ்களாவது ஒரு நாளைக்கு வாங்கிச் சுவைப்பதுண்டு. அதுமட்டுமில்லாது உடன் இருப்பவர்களுக்கும் தாராளமாக சப்ளை செய்வதும் உண்டு. அப்போது ஐஸ் பேக்டரி என்று பெரிய பெட்டிகளில் குளிரூட்டி தண்ணீர் தொட்டிகளில் இனிப்பு, பால் வகைகளை எல்லாம் உடன் சேர்த்து, மரக்குச்சிகளை ஒவ்வொரு ஐஸுக்கும் ஒன்றாக குத்திவைத்து தயாரிக்கப்படும்.
அந்த வயதில் ஐஸ் விற்கவரும் இவர்களெல்லாம் மனத்தைக் கவர்ந்த பெருமக்கள் போலத் திகழ்வார்கள். அதுமட்டுமில்லாமல், சினிமா தியேட்டர்களில் விநியோகிக்கப்படும் விளம்பர நோட்டீஸ்களும், பெரிய கம்பில் சவ்வுமிட்டாய் போன்று ஆரஞ்சு நிறத்தில் சுருளாக வைத்த்க்கொண்டு விற்க வருவார்கள். இவர்களைப் போலவே, பஞ்சுமிட்டாய் விற்பவர்களும் சுவாரசியமானவர்கள். எண்ணெய் டின்கள் போன்ற பெட்டியின் மூன்று பக்கம் தகரமும், ஒருபக்கம் கண்ணாடி வைத்து, உள்ளே ரோஸ் நிறத்தில் உள்ள பஞ்சுமிட்டாயை ஆசைகாட்டி விற்க வருவார்கள்.
இந்தத் தின்பண்டங்களை எல்லாம் சாப்பிடக்கூடாது என்று வீட்டில் கண்டிப்பு இருந்தாலும், அவர்களுக்குத் தெரியாமல் காசுகொடுத்து வாங்கி ருசிபார்ப்பதுண்டு. வீட்டில் முறுக்கு, அதிரசம், சுசியம், முந்திரிகொத்து, சீடை என பலகாரங்களுக்குக் குறைச்சல் இல்லாமல் இருந்தாலும் அதன்மீதெல்லாம் விருப்பம் இல்லாமல் குச்சி ஐஸ், ஜவ்வுமிட்டாய், பஞ்சுமிட்டாய் ஆகியவற்றின் மீதுதான் விருப்பம் ஏற்படும். கடைகளில் வட்டமாகச் சுற்றப்பட்ட கருப்பட்டி மிட்டாயும், சீனிமிட்டாயும், சேவும், ஓமப்பொடியும், வருவலும் இருந்தாலும் இந்த குச்சி ஐஸ் களேபரங்களுக்கு நிகர் அப்போது எதுவும் இல்லை. புதியதலைமுறை அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் அக்கால கிராமிய அடையாளம் போல இந்த சைக்கிளையும், ஐஸ்பெட்டியையும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 27-10-2015.
#KsRadhakrishnan #KSR_Posts

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...