Friday, October 23, 2015

தேனி. என்.ஆர்.தியாகராஜன்



தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் பிறந்து விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தின் முக்கியத்தலைவராகத் திகழ்ந்தவர் தான் என்.ஆர்.தியாகராஜன்.

இவரை என்.ஆர்.டி என்று அன்போடு அழைப்பார்கள்.தேனி நகரம் அடிப்படை வளர்ச்சிகளைப் பெற்றமைக்கு இவர்தான் காரணமாக இருந்தார். தேனி நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றியம், தேனி அல்லி நகர் முதல் குடிநீர்திட்டம், தேனி கிழக்கு மேற்கு சந்தைக் கட்டிடங்கள், அரசு மருத்துவமனை, சிட்கோ தொழிற்பேட்டைகள் என பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து தேனியை நகரமாக்கினார்.

1969ல் பழ.நெடுமாறன் மதுரைமாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது. காமராஜரை வைத்துக்கொண்டே என்.ஆர்.டியை தேனியின் சிற்பி என்று வர்ணித்தார். பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, பூமிதான இயக்க வினோபா போன்றோர்களோடு மிக நெருக்கமாக இருந்தவர். ஆண்டிபட்டி ஜம்புலிப் புதூர் கோவிலுக்கு ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு வினோபாவுடன் ஆலயப் பிரவேசம் செய்தவர் என்.ஆர்.டி.

1938ல் பெரியகுளம் தாலுகா காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர், 1942லிருந்து 1952வரை தேனிமாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், ராஜாஜியோடு வேதாரண்யம் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டவர். கோவில்பட்டியில் சிலகாலம் இருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் ஊழியராக அங்கு சில பணிகளை மேற்கொண்டார். விடுதலைப் போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறைக்குச் சென்றவர். சிறையில் செக்கும் இழுத்தார்.


1953வரை மதுரைமாவட்ட ஜில்லா போர்டு தலைவராகவும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். மேலவையில் இவருடைய வாதங்கள் தெளிவானதாக இருக்கும். என்.ஆர்.டி என்றால் நேர்மையான மனிதர் என்று எல்லோரும் சொல்வார்கள்.இரா.கி.யும், என்.ஆர்.டியும் காமராஜருக்கு வலமும் இடமுமாக இருந்த தளபதிகளாகவும், தோழர்களாகவும் செயல்பட்டனர்.

தலைவர் கலைஞர் அவர்கள் என்.ஆர்.டி பற்றிக்குறிப்பிடும்போது, சட்டமன்றத்திலும், சட்டமன்ற மேலைவையிலும், உறுப்பினராக இருந்து, தன்னுடைய வாதங்களை ஆணித்தரமாகவும், புள்ளிவிபரங்களோடும் எடுத்துச் சொல்லும்போது, ஆளுங்கட்சியாக இருந்த எங்களுக்கு அதுவே ஆலோசனைகளாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பி.கக்கன் அவர்கள் இவரைப்பற்றிச் சொல்லும்போது, “காங்கிரஸ் கட்சியின் தொண்டராகவும், தியாகசீலராகவும் விளங்கினார் என்று கூறி இருக்கிறார்.
கேரளமாநில ஆளுநரும், மத்திய முன்னாள் அமைச்சருமான பா.இராமச்சந்திரன், “ என்.ஆர்.டி தன் அரசியல் ஆசானாகவும், மூத்த சகோதரனாகவும் விளங்கினார்” என்று பெருமையோடு சொல்லி இருக்கின்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த எம்.கல்யாணசுந்தரம் “பெல்லாரி மாவட்டம் அலிப்புரம் சிறையில் நாங்கள் ஆங்கிலேயர்களால் சிறையில் ஒன்றாக அடைக்கப்பட்டோம். நட்போடு பழகுவார். கம்யூனிஸ்டுகள் சிறையில் நடத்தும் வகுப்புகளிலும் ஆர்வத்தோடு கலந்துகொண்டு எங்களோடு விவாதிப்பார். பொதுவுடைமைக் கட்சி நண்பர்களோடு தோழமையோடு இருந்தார்” என்று நினைவுகளிலிருந்து குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் “என்னுடைய சகோதரனை இழந்துவிட்டேனே; நான் என்ன செய்வேன், கையறு நிலையில் இருக்கிறேன் என்று என்.ஆர்.டி மறைந்த போது இரங்கல் செய்தியாகக் கூறினார்.

இன்றைக்கு கவுன்சிலராக ஆனாலே விலைமதிப்புயர்ந்த கார்களில் படோபடமாகச் செல்கின்றார்கள். என்.ஆர்.டி மதுரை ஜில்லாபோர்டு தலைவர், சட்டமன்ற உறுப்பினர். இரண்டு ஜதை கதர்வேட்டி சட்டையோடும், மஞ்சள் பையோடும் தேனியிலிருந்து மதுரை வரை பேருந்துகளில் பயணித்தார். இப்படியான நிலையில் இன்றைய அரசியலில் உள்ளவர்களில் இவ்வளவு எளிமையைப் பார்க்கமுடியுமா?

ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பதுபோல, காலையும் மாலையும் வேப்பங்குச்சியைக் கையிலெடுத்துக்கொண்டு பல்துலக்குவது இவரது வாடிக்கை. தேனியில் இன்றைய இளைஞர்களிடம் இவர்பற்றிக்கேட்டால், இங்கே என்.ஆர்.டி நகர் என்று ஒன்று இருப்பது தெரியும் என்று மட்டும் தான் பதில் வருகின்றது.

இவருடைய வரலாறு முழுமையாக எழுதப்படவேண்டும்.
இப்படிப்பட்ட அரசியல் தலைவர்களை, ஆளுமைகளை இன்றைய சூழலில் பார்க்கமுடியவில்லையே என்ற கவலையோடும் எழுதிய பத்திதான் இது.
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-10-2015.



#KSR_Posts‬ ‪#KSRadhakrishnan


No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...