Tuesday, April 24, 2018

காவிரிப் பிரச்சனையும்- மலரும் நினைவுகளும்

நேற்றைக்கு, சேலம் மாவட்டம், மேட்டூரில் நடந்த கழக மாணவரணி நிர்வாகி தம்பி. எம்.கே.முருகேசன் திருமணத்தை பங்குகொண்டு தலைமையேற்று நடத்துவதற்காக திருப்பூர் கார்த்திகேயன் Karthikeyan வேண்டிக்கொண்டதால் நேற்று மேட்டூர் சென்றிருந்தேன். திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈரோடு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சு. முத்துசாமி அவர்களது துணைவியார் இறந்த துக்கத்தை விசாரிக்க அவருடைய கிராமம் நெடுங்குளத்திற்கு செல்லும்போது காவிரி பயணிக்கும் வழியில் செல்ல வேண்டியிருந்தது. அப்போது தடுப்பணைகளும் கண்ணில்பட்டன.
Image may contain: 1 person, standing, mountain, outdoor and nature
சற்று பழைய நினைவுகள் மனதிற்குள் வந்தது. மே, 1982ஆம் ஆண்டு காலக் கட்டத்திலேயே காவிரிப் பிரச்சனை எழந்த சமயம்,பெரியகுளம் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கம்பம் நடராஜன் மறைவிற்கு பிறகு அங்கு இடைத்தேர்தல் நடந்தது. அந்த இடைத்தேர்தல் நேரத்திலேயே 1982ஆம் ஆண்டு செப்டம்பரில் காவிரிப் பிரச்சனைகள் கொழுந்து விட்டு எரிந்தது.
Image may contain: 2 people, people smiling, people standing, sky and outdoor
தமிழகத்தில் அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தார். 10/09/1982இல் தமிழ்நாடு சட்டப் பேரவையில் இது குறித்தான விவாதங்கள் நடந்தன. ஆனால் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று அழுத்தந்திருத்தமாக அன்றைய கர்நாடக முதல்வர் குண்டுராவ் 06/10/1982இல் மறுப்பு தெரிவித்தார்.
தஞ்சையில் 10/10/1982இல் காவிரி பாசன விவசாயிகள் மாநாடு தஞ்சை இராமமூர்த்தியும், சி. முருகேசனும் நடத்தினார்கள். அந்த மாநாட்டில் பழ. நெடுமாறனோடும், தீபம். நா.பார்த்தசாரதியோடும் அடியேனும் கலந்து கொண்டேம்.
காவிரிக்காக முதன்முதலாக 15/10/1982இல் தமிழகம் முழுவதும் பந்த் நடத்தப்பட்டது. இந்த பந்த் திமுக மற்ற எதிர்கட்சிகள் அறிவித்தபின் எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசும் அந்த கடையடைப்பை ஏற்றுக் கொண்டது.
பந்த் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த கடையடைப்பை குறித்து பேச பழ.நெடுமாறன், தி.சு.கிள்ளிவளவன், நானும் தலைவர் கலைஞர் அவர்களை சட்டமன்ற திமுக கட்சி அலுவலகத்தில் சந்தித்தோம். அப்போது அண்ணா அறிவாலயம் கட்டப்படவில்லை. திமுக தலைமை நிலையம் சட்டமன்ற கட்சி அலுவலகத்தில் தான் செயல்பட்டது. தலைவர் கலைஞர் தினமும் அங்கு தான் வந்து காலையும், மாலையும் தனது பணிகளை மேற்கொள்வார். அதற்கு பக்கத்தில் தான் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற அலுவலகம் இருந்தது. இந்த கட்டிடத்தில் தான் கலைஞர் அவர்களை நள்ளிரவில் கொடுமையாக கைது செய்து கொண்டும் செல்லப்பட்டார்.
இந்த கடையடைப்பின் தொடர்ச்சியாக தஞ்சை இராமமூர்த்தி தலைமையில் பிரபல தமிழ் படைப்பாளி தீபம் நா.பார்த்தசாரதி, அடியேன், பி.ஏ.சித்திக் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு காவிரிப் பிரச்சனை குறித்து உண்மை அறியும் குழுவை 02/12/1982இல் பழ.நெடுமாறன் அமைத்தார். நாங்கள் நான்கு நாட்கள் காவிரி டெல்டா மாவட்டங்களிலும், கர்நாடக மாநிலத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காவிரி செல்லும் பாதை, அதன் அணைகளில் உள்ள நீரைக் குறித்து ஆய்வு செய்து இப்பிரச்சனை குறித்து விரிவான அறிக்கையை நெடுமாறனிடம் வழங்கினோம். அந்த அறிக்கையை நெடுமாறன் மூலமாக அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் 05/12/1982இல் வழங்கினோம். அன்றே அந்த அறிக்கையின் நகல்களை சென்னையில் இருந்த பத்திரிக்கைகளான ஆங்கில இந்து, தினத்தந்தி, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமலர், தினகரன், மாலை மலர், முரசொலி, விடுதலை ஆகியவற்றிற்கு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் வழங்கினோம். அன்றைக்கு இவ்வளவு தான் பத்திரிக்கைகள் இருந்தன. தொலைக்காட்சி செய்தி சேனல்கள் கிடையாது. தூர்தர்சன், ஆல் இந்தியா ரேடியோ மட்டுமே இருந்தன. மறுநாளே டெல்லி பத்திரிக்கைகளிலும், கர்நாடக பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி பெரிதாக வந்திருந்தது. ஆனால் கர்நாடக அரசு இந்த அறிக்கைக்கு மாறாக திரும்ப திரும்ப பொய்யை கக்கியது.
அன்றைக்கு மத்தியில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தது. காவிரிக்காக பழ.நெடுமாறனோடு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியையும், அகில இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆகியோரையும் சந்தித்து மனுக்களை அளித்தோம்.
நெடுமாறன் தலைமையில் தஞ்சை ராமமூர்த்தி (இந்திரா காந்திக்கு நெருக்கமான தொடர்பில் இருந்தவர்.), எம்.கே.டி. சுப்பிரமணியம் (இவர் யாரென்றால் ஆரம்பக் கட்டத்தில் பெரியாருக்கு நெருங்கியவர். அண்ணா அவர்கள் ராபின்சன் பார்க்கில் பெத்தாம்பாளையம் பழனிச்சாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுகவை துவக்கினார். அந்த கூட்ட அழைப்பிதழில் ஈ.வி.கே.சம்பத், நாவலர், எம்.கே.டி.சுப்பிரமணியம் போன்றவர்களோடு இவரது பெயரும் இடம்பெற்றது. கலைஞர் அவர்களை முதன்முதலாக சென்னைக்கு அழைத்து வந்து கூட்டம் நடத்தியவர்.), தி.சு.கிள்ளிவளவன் (இவர் அனைவருக்கும் தெரிந்தவர் தான். திமுகவில் அண்ணாவுக்கு 1950களில் மிகவும் உதவியாக இருந்தவர். அண்ணாவின் ஆங்கில ஹோம் லேண்ட் பத்திரிக்கையை கவனித்து வந்தவர். திமுக ஆட்சிக்கு வந்த காலக் கட்டங்களில் காங்கிரசில் தன்னை இணைத்து கொண்டார்), திண்டுக்கல் தி.அழகிரிசாமி (இவர் யாரென்றால் பழ. நெடுமாறனுடைய சக மாணாக்கர். அண்ணாவுக்கும், காமராஜருக்கும் மிக நெருக்கமாக இருந்தவர்.) மற்றும் அடியேன், திருச்சி சாமிக்கண், பி.ஏ.சித்திக், தஞ்சை. சி. முருகேசன், தாராபுரம் எஸ்.ஆர்.வேலுச்சாமி போன்றோரோடு காவிரி உரிமைப் பிரச்சாரத்தை பூம்புகாரில் 22/12/1982இல் துவங்கி ஒரு வாரகாலம் காவிரிக் கரையோரம் தஞ்சை, திருச்சி, பெரியார், சேலம் மாவட்டங்களில் காவிரிப் பிரச்சனை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டோம்.
Image may contain: 1 person, standing, mountain, outdoor and nature
நெடுமாறனுடைய அன்புத் தம்பி மறைந்த நீரியல் பொறியாளர் ப.கோமதிநாயகம் இது குறித்தான ஆலோசனைகளை எல்லாம் அவ்வப்போது வழங்குவார். தமிழ்நாட்டிலுள்ள அணைகளையும், நதிகளையும், நீர்ப் பிரச்சனைகளையும் தளப்பாடமாகச் சொல்வார். அவர் பாராட்டிற்குரிய நீரியல் அறிஞர்.
இந்த பிரச்சாரத்தில்,அகண்ட காவிரி, வறண்ட காவிரி ஆகிவிட்டது, கர்நாடகம் தமிழகத்தை வஞ்சிப்பதை குறித்தெல்லாம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தோம். இந்த பிரச்சாரத்தை இறுதியாக 28/12/1982இல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள காவிரிக் கரையோரம் இரவு 10.30 மணிக்கு மேட்டூரில் முடித்தோம். இது தான் முதன்முதலாக சென்ற காவிரிப்
இதற்கு முன் 1970களில் நடந்தாய் வாழி காவிரி என்று தலைக்காவிரி தொட்டு பூம்புகார் வரைக்கும் காவிரிக் கரையோரமாக பயணம் செய்து எழுத்தாளர்கள் சிட்டியும் தி.ஜாவும் எழுதியிருக்கிறார்கள். இது வாசகர் வட்டம் பதிப்பித்த புத்தகம். காவிரியுடைய போக்கும், கரைகளில் இருக்கும் வரலாற்றை பற்றி பயணம் நடத்தி நடந்தாய் வாழி காவிரி என்று முதன்முதலாக ஜனதா கட்சியின் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி (இவர் தீரர் சத்தியமூர்த்தியின் புதல்வி) நூலை வெளியிட்டார். இப்போது காலச்சுவடு மறுபதிப்பு செய்திருக்கிறது.
காவிரி உரிமைப் பிரச்சனை குறித்து பூம்புகாரில் இருந்து மேட்டூர் வரை இதுதான் முதல் தமிழகத்தில் நடந்த பிரச்சாரம் பயணம். மேட்டூர் நிகழ்வு முடிந்த இடத்தில் சற்று காலார நடந்து சென்று பார்த்தேன். முதல் தடுப்பணையில் தண்ணீர் தேக்கப்பட்டு இருந்தாலும் நமது உரிமைக்கான தண்ணீரின் அளவும் மிகவும் குறைவாக இருந்தது.
தற்போது 36 ஆண்டுகள் கடந்துவிட்டன. காலச்சக்கரங்கள் வேகமாக ஓடுகின்றது. ஆனால் காவிரிப் பிரச்சனை இன்னும் தீரவில்லை என்ற ஆதங்கம் இங்கு நிற்கும் போது ஏக்கத்தோடு பழைய சம்பவங்களும், நினைவுகளும் மனதில் எழுந்தன.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-04-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...