Friday, April 6, 2018

கரிசல் காட்டு அப்பாவியான சம்சாரியின்(விவசாயியின்) நொந்த புலம்பல்......


எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலம்னு 1970களின் இறுதி 1980கள் நெனைக்குறேன். வெவசாயத்துக்கு கரண்ட் தட்டுப்பாடு நெனைச்சா காலைல ரெண்டு மணி நேரம் நைட்டு ரெண்டு மணி நேரம் இப்படித்தான் கரண்ட் விடுவாங்க.

சிலநேரங்கள்ல எந்நேரம் விடுவான் எப்ப பிடுங்குவான்னு கூடத்தெரியாது.
வேலைக்கு ஆளும் கூப்புட முடியாது.கூப்புட்டா முழு நாள் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும்.

வேறு சேர்ந்த வேலை இருந்தாதான் சம்பள ஆளக்கூப்புடுவோம்.இல்லை நாங்களே தான் தண்ணி பாச்சனும்.
நேரா தோட்டத்துக்கு போய் காத்திருக்கனும் கரண்ட் வருரதுக்கு முன்னாலேயே போய் பெட்ரூம்ல காத்துக்கெடப்போம் .மோட்டார் இருக்குற ரூம தான் பெட் ரூம்னு சொல்லுவோம்.
பெட்ரூம் எப்படி இருக்கும்னா கெணத்த ஒட்டி சேர்ந்தே( கடைகள்ல லிப்ட்) ரூம் மாதிரி கெணத்து கீழே வரைக்கும் இருக்கும். தரை தளத்துலயிருந்து கீழ கெணத்தோட ஆழம் வரை கூட மூனு நாலு அடுக்குகளா இருக்கும்.
கெணத்துல தண்ணியோட ஏற்ற இறக்குத்துக்கு தோதா மோட்டாரை ஏத்தி இறக்க வசதியா பிட் பன்ற மாதிரி அந்த அடுக்கு அறைகள் இருக்கும்.
அந்தக்காலத்துல சப்மெர்சிபிள் மோட்டாரெல்லாம் கெடையாது. மோட்டாரு தண்ணியில நனைஞ்சா பெரிய செலவு ஒரு வார வேலை கெடும். பயிருக்கு தண்ணி பாய்ச்ச முடியாது.இப்ப சப்மெர்சிபிள் மோட்டார் வந்துருச்சி தண்ணிக்குள்ள தூக்கி போட்டுட்டாலே ஓடும்.
இந்த மோட்டாரை ஏத்த எறக்கத் தேவையில்லை.பெட்ரூம் கூட அவசியமில்லை.சின்ன தொழில் நுட்ப முன்னேற்றம் பெரிய செலவு,நேரம் மிச்சம் இப்ப. அப்ப அப்படி ஒரு வசதியில்லை.
இப்ப கரண்ட் வரப்போற டைமுக்கு முன்னாலயே கெணத்துக்கு போய் மூனு லைட்டு ஸ்விட்ச போடுவோம். ஏன்னா மூனு பேஸ் லைட்டை எறிஞ்சா தான் மோட்டாரை ஆன் பண்ண முடியும்.அப்புறம் அவுட்டர் பைப் பெண்டு ஒன்னு ரூம்ல கெடக்கும்.
அத மாட்டி தொட்டியில ஏற்கனவே கெடக்குற தண்ணி ரோட்ல போனவன் வந்தவனெல்லாம் கக்கா போய்ட்டு அந்த தண்ணியில வந்து தான் கழுவியிருப்பான். அந்த தண்ணிய இல்ல ஒரு கொடம் தண்ணி கெணத்துல 
இரைச்சி எடுத்தாந்து அவுட்டர் பைப் வழியா ஊத்துனா மோட்டாருக்குள்ளே போய் புட்பால் வரை போயிரும்.

இப்ப மூனு லைட்டும் திடீர்னு எரியும். டக்னு பெட்ரூம்ல வேகமா கீழே எறங்கி ஏர் வால்வ தெறந்து ஏர் வெளியேறு னவுடனே வேகமா மேலே ஏறி ஸ்டார்ட்டர்ல பச்சை பட்டன அமுக்குனா ஒய் ஒய்னு மோட்டாரு ஓடுற சத்தம் கேட்டவுடனே அவுட்டர் பைப்ல தண்ணி வந்து கொட்டும்.
சமயத்துல ஒரு பேஸ் பீஸ் ஆகும்.பீஸ போட்டு மோட்டார ஓட்டனும் ஊத்துற தண்ணி குழாய்ல நிக்காது அதுக்கு வைத்தியம் தண்ணி கூட சாணிய கரைச்சி ஊத்தனும்.சரியாகி மோட்டரு ஓட ஆரம்பிச்சி சமயத்துல தண்ணி போய் பாத்தியில தலை வைக்கும் கரண்ட்டுக்கு
என்ன கொள்ளை வந்துச்சோ ஆப்பாய்ரும்.

சமயத்துல கரண்ட் நைட்டு மட்டுமே வரும்.அப்ப இருட்டுல டார்ச் லைட்டோ,லாந்தல் விளக்கோட உதவியில தான் தண்ணி பாச்சனும்.இத அஞ்சா கிளாஸ் ஆறாம் கிளாஸ் படிக்கிற வெவசாய வீட்டு பிள்ளைக அந்த வயசுலயே அப்பா, அம்மாவுக்கு ஒதவியா செய்வான்.
இப்ப மோட்டாரு ஓட ஆரம்பிச்சி தண்ணி பாய ஆரம்பிச்சிச்சின்னா மம்பட்டிய தூக்கிக்கிட்டு பாத்தியில போய் நின்னு வரவேத்து ஒவ்வொரு மடையாத்திருப்பி வாய்க்காலுக்கு வலமும்,இடமும் திருப்பி பாச்சிக்கிட்டு வருவோம்.
பொந்து,பொட்டையா கெடக்கும் கொடகொடன்னு தண்ணி உள்ள போகும் சமயத்துல பொந்துலயிருந்து வந்து நம்ம மேல விழுந்து எலியும் ஓடும்,பாம்பும் ஓடும்,முயல் கூட ஓடும் அந்த கஷ்டத்துலயும் ஒரு சந்தோசம் இருக்கும்.
கெணத்துல தண்ணியிருந்தே இந்தப் பாடுன்னா, மானாவாரி வானத்தை நம்பி வெவசாயம் பண்றவன் பாடு சொல்லிமாளாது.
இந்த தண்ணி பாச்சுற ஒரு வேலையிலயே இவ்வளவு கஷ்டம் இருக்குனா களை வெட்டனும்,உரம் வைக்கனும்,மருந்துஅடிக்கனும்,
அறுவடை பன்னனும்.இயற்கை மழை,காத்து,வெயில்ல இருந்து காப்பாத்தி உங்க வயித்துக்கு உணவா கொண்டு வர வெவசாயி என்னா பாடுபடுறான்.

பணத்தை நீட்டுனவுடனே அரிசியும், பருப்பும் கெடைக்கறதால அவன் பாடு யாருக்கும் தெரியல. இதுக்கு எத்தனை நாள் அவன் பாடு. நெனைச்சி பார்த்தா அவனத் தவிர கடவுள்ன்னு ஒருத்தன் இல்லை. அவனுக்குன்னு மிச்சம் ஒன்னுமேயில்ல.
அவன் ஊருக்கு நல்லதை கொடுத்துட்டு சூத்தை காய்யும்,சண்டுவத்தலையும்,
நொறுங்குன ,குருணை அரிசி, பருப்பை
சாப்பிட்டு திரியிற நெலமை.கோவில்
கட்டி கும்புட வேண்டிய சாமி சம்சாரி.
நன்றி-Dhanasekaran Nks.nachiarpatti.
********
காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று டெல்டா விவசாயிகள் ரணத்தில் வாடுகின்ற காட்சியைப் பார்க்கும் போது வேதனைப்படுகிறோம். உண்மை தான். இதே வேதனையில் தான் கரிசல் காட்டு மானாவாரி விவசாயிகள் 365 நாளும் வாடுகின்றனர். நான் பிறந்து 65 வருடங்கள் ஆகின்றது. என்னுடைய சிறு பிராயத்தில் இருந்து எங்கள் கரிசல் மண்ணில் இந்த வேதனையை பார்த்து வருகிறேன்.

இதற்கு தான் நாராயணசாமி நாயுடு தலைமையில் விவசாயிகளை மூன்றாந்தர நாலாந்தர குடிமக்களாக பாவிப்பதை எதிர்த்து 1960-‘ 91வரை பேராடினார்கள். கடந்த 40 ஆண்டுகளில் விவசாயிகளின் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மட்டும் ஏறத்தாழ 50 அப்பாவி விவசாயிகள் வரை அரசால் சுட்டு சாகடிக்கப்பட்டனார். விவசாயிகள் தற்கொலையில் 200க்கு மேல் விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளில் நொந்து மடிந்துவிட்டனர்.
காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளை போன்று,மற்ற பகுதிகிளிலும் நீராதாரமில்லாமல் விளைச்சல் பொய்த்து போய் கடனாளியாக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பல நதிநீர் ஆதாரச் சிக்கல்கள் கவனிக்கப்படாமல் இருக்கிறது. அதை பற்றிய புரிதலும் இல்லை. இந்த பிரச்சனைகள் புரிந்தாலும் அதை குறித்து பேசுவது தவிர்க்கப்படுகின்றன. ஒரே ஆறுதல் கலைஞர் ஆட்சியில் 1989இல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. அவரது ஆட்சியிலேயே கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-04-2018

No comments:

Post a Comment

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for things to get easier, simpler, better*.

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for thi...