Saturday, January 14, 2017

கிரா நூல்கள் வெளியிட்டு விழா

கிரா நூல்கள்  வெளியிட்டு விழா
-------------------------------
 மூத்த படைப்பாளி கிரா அவர்களின் ருசியான கதைகள் , கதைசொல்லி -கிரா குறிப்புகள் , பதிவுகள் , சங்கீத நினைவலைகள் , லீலை என்ற நான்கு நூல்கள்  இன்று(13/1/2017)மாலை   சென்னை புத்தக கண்காட்சி அரங்கில் வெளியிடபட்டன .

அன்னம் அகரம் பதிப்பகத்தின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில்  
தமிழக மூத்த அரசியல் தலைவர் தோழர் ஆர் .நல்லகண்ணு அவர்கள் பங்கேற்று பேசியபோது,கிரா அவர்களுக்கும் இவருக்கும் உள்ள நட்பு  60 ஆண்டுகளுக்கு மேலான நட்பாகும் என கூறினார் .  பொதுவுடமை இயக்கத்தில் இருவரும் சேர்ந்து ஆற்றிய பணிகள் குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அட்டையை மறைந்த சீனிவாச ராவ் அவர்களிடம் 60 ஆண்டுகளுக்கு முன்பாக கிரா பெற்ற போது அடைந்த மகிழ்ச்சி , விவசாய போராட்டங்களில் திருநெல்வேலி சதி வழக்கில் கிரா அவர்களுடைய பங்களிப்பு குறித்து விரிவாக பேசினார் . 

கோவில்பட்டி வட்டார கரிசல் மக்களின் குறைகளை நீக்க போராடும் அடியேனை 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நன்கு தெரியும் நதிநீர் பிரச்னைகள், ஈழப்பிரச்சனை ,தமிழ்நாட்டு உரிமைகளுக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார்  என்று  என்னை பாராட்டியது எனக்கு ஊக்கமும் மகிழ்ச்சியும் அளித்தது .

வெளயிடப்பட்ட கிராவின் நான்கு நூல்களை திறனாய்வு செய்து பேசிய சகோதரி கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் உரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் சிறப்பாக அமைந்தது . கிரா அவர்களின் ஐம்பது ஆண்டு படைப்பு உலகத்தை 1 மணிநேரத்தில் அற்புதமாக அரிய தகவல்களுடன் பேசியது நிகழ்ச்சிக்கு பெருமை சேர்ந்தது .ஏதோ ஒரு உறவும் உரிமையும் கிராவோடு இருப்பதாக சகோதரி கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் பேச்சில் தெரிந்தது.

அவருடைய தாய் மாமன் கழுகுமலை என்று சொன்னவுடன் எனக்கு மிக நெருங்கிய ஊரானதே அது என்று மனதில்பட்டது .கரிசல் இலக்கியத்திற்கு பாத்திகட்டி , நாற்று ஊன்றிய கிரா ,
கு . அழகிரிசாமி அவர்களின் வரிசையில் இன்றைக்கு உள்ள நவீன இலக்கிய உலகில்,பின் நவீனத்துவத்தில் கரிசல் இலக்கிய படைப்புகளை புதிய அணுகுமுறையில் படைக்கும்  சகோதரி தமிழச்சி போன்ற நண்பர்களை  கரிசல் வட்டார மக்கள் நன்றி பாராட்ட வேண்டும் .கிரா அவர்களின் நான்கு நூல்களை திறனாய்வு செய்து தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசியது போல வேற யாரும் பேசிட முடியாது என்று கருதுகிறேன் . அவரின் இந்த திறனாய்வு இசையின் சப்தசுவரங்கள் எழுவது  போல அமைந்தது .கதைச் சொல்லி சார்பில் அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும
தெரிவித்துக்கொள்கிறேன்.

 அவரை தொடர்ந்து திரைபட கலைஞர்  சார்லி அவர்கள் கரிசல் வட்டார கோவில்பட்டி வலக்கு மொழி நடையில் மேடையில் பேசினார் . சாகித்திய அகாடமியில்  தாகூர்  பற்றி அற்புதமான ஆய்வு கட்டுரையை எழுதி அவர் வாசித்தார்  என்று கூறியது புதிய செய்தியாக இருந்தது .  1975 ஆம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரா அவர்களுடன் தொடர்பு உண்டு என்பதை தெரிவித்தார் நடிகர் சார்லி . அவர் திரைப்பட துறைக்கு வராமல் இருந்திருந்தால் கரிசல் இலக்கிய பனடைப்பாளியாக இருந்திருப்பார் என்றால் மிகையாகாது . 

நிகழ்ச்சியை நல்லமுறையில்  கழனியூரான்ஒருங்கிணைத்தார் .
அன்னம்- அகரம் பதிபகத்தின் நிறுவனர் கவிஞர் மீரா அவர்கள் பேரறிஞர் அண்ணா , தலைவர் கலைஞர் அவர்களால் பாரட்டப்பட்டவர் .நவீன புதுகவிதைகளின் பிதாமகனாவார் கவிஞர் மீரா அவர்கள் . அவரின் புதல்வர்  கதிர்மீரா அனைவரையும் வரவேற்றார் . கிராவின் புதல்வர்  பிரபாகரன் நன்றி கூறானார் . அடியேன் இந்த பெருமைவாய்ந்த புத்க வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கினேன் . 

புத்தக கண்காட்சி அரங்கில் இன்றைய மாலை  நேரத்த்தில் இந்த  நல்ல நிகழ்ச்சி அரங்கேறியது மனதிற்கு மகிழ்ச்சியாக அமைந்தது .
#கிராஜநாரயணன் 
#தமிழ்இலக்கியம்
#கரிசல்இலக்கியம்
#KSRposting
#KSRadhakirushnanpost
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
13/01/17

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...