Saturday, March 6, 2021

#தியாகச்சுடர்_கடலூர்_அஞ்சலை_அம்மாள்


———————————————————
மூத்த பத்திரிக்கையாளர் நண்பர் திரு வி.ராஜா எழுதிய விடுதலை போரின் தியாகச்சுடர் கடலூர் அஞ்சலை அம்மாள் நூலை தழல் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நூல் ஆசிரியர் அன்புக்குரிய ராஜா அவர்கள் நூலை அனுப்பினார். மிக்க நன்றி. பல்வேறு பணிகள் உள்ள சூழலில் சென்னையில் இல்லாத காரணத்தினால் உடனே இந்த நூலைப் படிக்க முடியவில்லை.


அஞ்சலை அம்மாள் வரலாற்றை அற்புதமாக படம் பிடித்துக் காட்டியுள்ளர் அன்புக்குரிய ராஜா அவர்கள். அஞ்சலை அம்மாளின் புதல்வர் ஜெயவீரன் நூலுக்கு தக்க அணிந்துரையும் வழங்கியுள்ளார். இவர் அஞ்சலை அம்மையாரின் கடைசி புதல்வர். காந்தியின் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் அறிவித்தபோது கடலூரில் அஞ்சலை அம்மாள் கலந்து கொண்டபோது இவர் அவர் வயிற்றில் கருவாக இருந்தார்.
1890-ல் கடலூர் முத்து நகரில் பிறந்த அஞ்சலை அம்மாள் தியாக வாழ்க்கை அளப்பரியது ஆகும். 5-ஆம் வகுப்பு வரை படித்து காந்தியின் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு 1921-ல் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னுடைய குடும்ப சொத்துகளான வீடு, நிலங்களை எல்லாம் விற்று நாட்டின் விடுதலைக்காக செலவிட்டார்.
1927 நீல் சிலையை அகற்றம் போராட்டத்தில் தனது ஒன்பது வயது மகளுடன் சிறைக்கு சென்றார். தன் மகளையும் சிறையிலேயே வளர்த்தார். காந்தியுடன் இந்த அம்மையாருக்கு அறிமுகம் ஏற்பட்டது. இவருடைய மகள் அம்மாக்கண்ணு பெயரை லீலாவதி என்று மாற்றி காந்தியார் தன்னுடைய வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.
கடலூரில் நடந்த உப்பு சத்தியாகிரக போராட்டம், 1931-ல் நடந்த மகளீர் காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அதன்பின் 1932 விடுதலை போராட்டத்தில் கலந்துகொண்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு முறை காந்தியார் அஞ்சலை அம்மாளை சந்திக்க வரும்போது ஆங்கிலேய அரசாங்கம் தடுத்துவிட்டது. ஆனாலும் பர்தா அணிந்து கொண்டு குதிரை வண்டியில் காந்தியார் அவர்களை அஞ்சலை அம்மாள் சந்தித்தார். நாட்டின் விடுதலைக்கு பின் இரண்டு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் நேர்மையாக மக்கள் நல அரசியலை நடத்தினார். இவ்வளவு தியாகங்களைச் செய்த அஞ்சலை அம்மாள் 1961 ஆண்டு ஜனவரி 20-ல் காலமானார். இன்றைக்கு உள்ள இளைஞர்களிடம் அஞ்சலை அம்மாள் பற்றி தெரியுமா? தியாகி சோமயாஜுலு தெரியுமா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் வரதராஜிலு நாயுடுவை தெரியுமா? மதுரை அ.வைத்தியநாத ஐயர் தெரியுமா? என்று கேட்டால் பதில் சொல்ல தெரியவில்லை. இதுதான் இன்றைக்கு தியாகத்தை மதிக்கின்ற வரலாறு என்கிறபோது மனம் ரணம் படுகிறது.
நண்பர் ராஜா அவர்கள் தக்கத் தருணத்தில் தெளிவாக விரிவாக 310 பக்கத்திற்கு மேலாக அஞ்சலை அம்மாள் வரலாற்றை அற்புதமாக தொகுத்துள்ளார். நாம் அனைவரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கவேண்டும்.
விரிவான பதிவு விடுதலைப் போராட்டக் காலம், சமகால அரசியல் நிகழ்வுகளை தொகுத்து வழங்கி உள்ளார். தென் ஆற்காடு, வடஆற்காடு, செங்கல்பட்டு என்ற நடுநாட்டில் விடுதலைப் போராட்ட செய்திகளும் ஆங்காங்கு விவரித்து உள்ளார். நீல் சிலையை சென்னை மவுண்ட் ரோட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்ற போராட்டத்தில் அஞ்சலை அம்மாள் கலந்து கொண்டது என்று பல செய்திகளை படிக்க நமக்கு தருகின்றது. 1861-ல் அமைக்கபட்ட நீல் சிலையை 66 ஆண்டுகள் கழித்து அகற்ற வேண்டும் என்ற போராட்டத்தில் அஞ்சலை அம்மாள் இந்தளவு அக்கறை எடுத்துக்கொண்டு செய்துள்ளார் என்று ஒரு நெடிய வரலாற்றை 65 –ஆம் பக்கத்திலிருந்து 79-வது பக்கம் வரை படிக்க மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் மண்ணின் தியாகி சோமயாஜுலு குறித்தும், காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தை நிறுவிய டி.வி.சௌந்தரம் மற்றும் சி.ராமச்சந்திரன் பின்னாட்களில் மத்திய அமைச்சராக இருந்தவர். அவர் பற்றிய செய்திகளும் வருகின்றன.
இப்படிப்பட்ட பல்வேறு மக்கள் நலனும் சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் என்று போராட்டமே வாழ்வாக கொண்டுள்ளார். தான் சட்டமன்ற உறுப்பிராக இருந்தபொழுது சிறைக்கு சென்றார்.
உத்தமர் காந்தி மட்டுமல்ல, முண்டாசு கவி பாரதி, மூதறிஞர் ராஜாஜி ஓமந்தூரார், காமராஜர் என அத்தனை பேரும் இவரைப் பார்க்க கடலூருக்கு வந்தது உண்டு. அப்படிப்பட்ட அஞ்சலை அம்மாள் குறித்து பள்ளி பாடப்புத்தகங்களில் இவருடைய வரலாற்றை சேர்க்க வேண்டும்.
உத்தமர் காந்தி படுகொலைக்கு பின் கடலூர் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் காமராஜர் இவரை நிற்க வைக்க விரும்பியபோது இவர் அதில் ஆர்வமில்லை என்று தெரிவித்துவிட்டார். கடலூர் நாடாளுமன்ற தொகுதியிலும் நிற்க மறுத்துவிட்டார். தமிழ் மட்டுமல்ல ஆங்கிலம், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளை தெரிந்தவர்.
தன் இறுதி காலத்தில் சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் கிராமத்தில் தன்னுடைய விவசாயப் பணிகளை பார்த்துக் கொண்டு அங்குள்ள கிராமங்களுக்கு நீர் வரத்துப் பெற கால்வாய்களை வெட்டி எடுக்க பல பணிகளை ஆற்றினார். அந்த கால்வாய் இன்றைக்கும் அஞ்சலை அம்மாள் கால்வாய் என்று பெயரில் அழைக்கப்படுகிறது. இன்றைக்கு கடலூர் சுண்ணாம்புக்கார தெருவில் சுதந்திர போராட்ட அடையாளமாக இருக்கும் அவர் வீடு உள்ளது. இதில் அஞ்சலை அம்மாளின் கடைசி மகன் மறைந்த ஜெயவீரன் வாழ்ந்தார். இப்படியான ஒரு நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட அஞ்சலை அம்மாள் புகழ் வாழவேண்டும். அவர் வாழ்க்கையே நமக்கு பொது வாழ்க்கைக்கு தருகின்ற பாலபாடமாகும்.
இந்த நூலில் சென்னை, திருச்சி, வேலூர், என சிறைகளை கழித்த அஞ்சலை அம்மாளிடம் சிறை அதிகாரிகள் உங்கள் தண்டனை காலம் முடிந்ததை நினைவூட்டினர், அதை பற்றியெல்லாம் மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ளாமல் அஞ்சலை அம்மாள் அப்போது எப்படி நடந்து கொண்டார் என்பதை நூல் ஆசிரியர் வி.ராஜா அவர்கள் எழுதி இருக்கிறார் பாருங்கள்.
—————-
அஞ்சலை அம்மாள் இதற்கு முன் சென்னை பெண்கள் சிறையில் ஓராண்டு, திருச்சி மத்திய சிறையில் மூன்று மாதம், பிறகு வேலூர் பெண்கள் சிறையில் ஆறுமாதமும் இருந்திருக்கிறார். அதைவிட பெல்லாரி சிறை மிக மோசமாக இருந்தது. முன்பிருந்த சிறைகளில் பெரும்பாலானவர்கள் தமிழ் தெரிந்தவர்கள். வருத்தங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பிருந்தது. இங்கு பெரும்பாலும் கன்னடம், தெலுங்கு பேசுகிறவர்களாக இருந்தார்கள். அரசியல், நாட்டு நடப்பு பேசக்கூட பொருத்தமான ஆளாக யாரும் அமையவில்லை. அன்றாடத் தேவைகளுக்காகப் பேசியதில் கன்னடமும், தெலுங்கும் பழக்கமாகி வந்தது. சாப்பாடு, அடைத்து வைக்கப்பட்ட இடம் போன்றவற்றால் உடல் அவதிப்பட்டது. ஆனால் மனம் உறுதியாக இருந்தது. கள்ளுக்கடைக்கு எதிராக அமைதியாக நடைபெற்ற மறியலில் போலிஸ் திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தியது நினைவுக்கு வந்தது. அன்று முதுகில் ஏற்பட்ட காயம் காய்ந்து வந்தது. வெளியில் போன பிறகு கள்ளுக்க்டை மறியலையோ, அந்நியத்துணி புறக்கணிப்புப் போராட்டங்களையோ கைவிட்டுவிடக் கூடாது என்ற உறுதி உருவானது.
சிறைக்கு வந்தபோது பனிக்காலம் என்பதால் காற்றிலிருந்த குளிர்ச்சி மறைந்து வந்தது. ஏப்ரல், மே மாதங்களில் வெயில் நெருப்பாகச் சுட்டது. இது கந்தக பூமி வெயில் கடுமையாகயிருக்கும் என்று வேலை செய்கிற இடத்தில் சக கைதிகள் சொன்னதை நினைத்துக்கொண்டார். காலையில் எழுந்து எச்சில் உமிழ்ந்தால் ரத்தமும் கலந்து வந்தது. சரியான உணவும், நல்ல தட்ப வெப்பமுமில்லாமல் உடம்பு உருக்குலைய ஆரம்பித்தது, நிரந்தரமாக வயிற்றுவலி, நிற்கவே சிரமப்பட்டார். ஜூன் மாதக் கடைசியில் தென்மேற்குப் பருவமழை ஆரம்பமானதால் வெயிலின் தாக்கம் குறைந்தது. ஜூலை முதல் வாரத்தில் சிறை அதிகாரி கூப்பிடுவதாகச் சொல்லி அழைத்துப் போனார்கள்.
“இந்த மாதம் ஐந்தாம் தேதியுடன் உங்களின் தண்டனைக் காலம் முடிவடைகிறது” அதிகாரி நினைவூட்டினார்.
“தெரியும்.”
“ஆனால் கோர்ட்டு விதித்த ஐம்பது ரூபாய் அபராதம் கட்டியதற்கான ரசீது இன்னும் எங்களுக்கு வந்து சேரவில்லை.”
“வந்திருக்காது. நான்தான் அபராதம் கட்டவேண்டாமென்று சொல்லிவிட்டேன்.”
“ஐம்பது ரூபாய் கட்டாவிட்டால் இன்னும் 90 நாள் நீங்க சிறையிலிருக்க வேண்டும்.”
“அதுவும் தெரியும்.”
“அம்மா, கொஞ்சம் யோசிங்க. உங்க மனசு திடமா இருக்கலாம். ரொம்ப எளைச்சி உடம்பு மோசமான இருக்கறது தெரியுது” என்றார் சிறை அதிகாரி. கடந்த முறை வேலூர் சிறையில் சந்தித்த சிறை அதிகாரியைவிட இவர் மனிதாபிமானம் மிக்கவராக இருந்தார்.
“இதுல யோசிக்க என்னாங்க இருக்கு?” என்று அஞ்சலை பதிலளித்தார்.
“நான் வேண்டுமானால் அந்த ஐம்பது ரூபாயைக் கட்ட ஏற்பாடு செய்யட்டுங்களா? காங்கிரஸ் வக்கீல்கள் எனக்குத் தெரியும். சொன்னா கட்டி ரசீது கொண்டு வந்துடுவாங்க.”
“உங்களுக்கு நன்றி. பிரச்சினை பணமில்லை. நான் அபராதம் கட்டிட்டு வெளியில் போனா அது கள்ளுக்கடைக்கு எதிரான போராட்டம் தப்புன்னு ஒப்புக்கொண்டதாகிவிடும். அதனால்தான் கட்ட விரும்பவில்லை.”
“இன்னைக்கு கட்டாவிட்டாலும் எப்ப நீங்க அபராதத்தைக் கட்டுறீங்களோ அன்னைக்கே விடுதலை ஆகிவிடலாம்” என்றார் சிறை அதிகாரி.
“அப்படி ஒரு வாய்ப்பிருக்காது” என்றார் அஞ்சலை.
ஐம்பது ரூபாய் அபராதத்தைக் கட்ட மறுத்ததால் அஞ்சலையின் தண்டனை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. குடும்பம், குழந்தைகளைப் பிரிந்து அவர் பட்ட வேதனை ஒரு பக்கமென்றால், மக்கிய மோட்டா அரிசி சாதமும், உப்பு, உறைப்பில்லாத குழம்பும் அவரை பாதியாக இளைக்க வைத்துவிட்டது. வீட்டிலிருந்து மகள்கள் எழுதும் கடிதங்கள் ஆறுதலாக இருந்தது. அம்மாப்பொண்ணுவாக போய் லீலாவதியாக மாறியிருந்த மகள் கடிதம் போட்டிருந்தாள். ஒவ்வொரு கடித்தத்தையும் ஒன்றுக்குப் பத்து முறை படித்தார். கடலூரிலிருந்து பொன்னுசாமி, வரதன், தாண்டவன், கவிராயர் போன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் மாதம் ஒரு முறை கடிதம் எழுதி வந்தார்கள். சதைப்பிடிப்பான அவருடைய உடல் எலும்பும் தோலுமாக மாறியிருந்தது. சிறை என்ன செய்துவிடும் என எப்போதும் துணிச்சலாகக் கிளம்பும் அஞ்சலை அம்மாள், தன்னை இங்கே கொன்றுவிடுவார்களோ? என்று கூட நினைத்தார். கைதிகளில் சிலர் பெல்லாரி சிறையிலே செத்து மடிவதும் வாடிக்கையாக இருந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்வது என்பார்களே அதன் முழு அர்த்தத்தையும் பெல்லாரி சிறைச்சாலை கற்பித்துக்கொண்டிருந்தது. மொத்தத்தில் ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனையை முடித்துவிட்டு பெல்லாரி சிறையிலிருந்து (1932-ம் ஆண்டு அக்டோபர் 5) விடுதலையானார். அஞ்சலை அம்மாவின் மனவுறுதியைக் கண்டு மிரண்டுபோன சிறை அதிகாரி அவரை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தனர்.
•••••••••••••
அவரின் நூற்றாண்டு விழா முடிந்துள்ளது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
05.03.2021

No comments:

Post a Comment

#கனவாகிப்போனகச்சத்தீவு #கச்சதீவு #KanavaiPonaKachaTheevu #Katchatheevu

‘*கனவாகிப் போன கச்சத்தீவு’ என்னும் என்னுடைய விரிவு படுத்தப்பட்ட நான்காவது பதிப்பு வெளிவருகிறது.  நண்பர்கள், ஊடக தோழர்கள், பல்கலைக்கழகம் மற்ற...