Sunday, June 26, 2022

#கரிசல்காட்டின்_கவிதைச்சோலை_பாரதி

#கரிசல்காட்டின்_கவிதைச்சோலை_பாரதி 
——————————————————-

கரிசல்காட்டின் கவிதைச்சோலை பாரதி என்ற நான் பதிப்பித்த நூல் குறித்து இன்றைய (26-6-2022) தினமணி நாளிதழில் எனது நண்பரும்,அதன் ஆசிரியருமான திரு கே வைத்தியநாதன் சிறப்பாக எழுதி உள்ளார் அவருக்கு நன்றி. கரிசல்காட்டின் கவிதைச்சோலை பாரதி, பாரதியின் நினைவு நூற்றாண்டு  சிறப்பு வெளியீடாக வெளிவந்தது.. இந்த நூலில் உள்ள கட்டுரைகளை கடந்த 25 ஆண்டுகளாக எட்டயபுரம், கடையம், தென்காசி,சங்கரன் கோவில்,ஓட்டப்பிடாரம்,திருநெல்
வேலி,திருவனந்தபுரம்,மதுரை, சென்னை,கோவை,வாரணாசி போன்று பல்வேறு  இடங்களுக்கு சென்று அலைந்து திரிந்து சேகரித்து தொகுத்த கட்டுரை தான். இதில் என்ன சிறப்பு என்றால்  திராவிட இயக்க தலைவர்கள் பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞர் பாரதி பற்றி சொன்ன கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழ் இலக்கியப் படைப்பாளிகளும், பத்திரிகையாளர்களும், திரைத்துறை சார்ந்தவர்களும் என  சகல தரப்பினரையும் உள்ளடக்கி அனைவருடைய கட்டுரையும் சேகரித்து தொகுத்து  வெளியிடப்பட்டது. 




இந்நூலை நண்பர் நந்தா கலைஞன் பதிப்பகம் Masilamani Nandanவெளியிட்டது. இந்த நூல் பெரிய அளவில் 653 பக்கங்களாக வெளியிடப்பட்டது எனக்கு மன திருப்தியை தந்தது. இந்த நூல் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரிகளுக்கும், தமிழகத்தின் முக்கிய நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. 
••••••••••••••••••••••••••••••••••

#இன்றைய_தினமணியில்…..
#இந்த வாரம்.
#கலாரசிகன்.
பாரதியாரின் நினைவு நூற்றாண்டை ஒட்டி நூற்றுக்கணக்கான வெளியீடுகள் வந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றுமே பல புதிய தகவல்களை நமக்குத் தருகின்றன. பெரியவர் சீனி.விசுவ நாதன், பேராசிரியர் ய.மணிகண்டன், ஆ.இரா.வேங்கடாசலபதி உள்ளிட்டோர் ஆய்வு நோக்கில் வழங்கியிருக்கும் தரவுகள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன.
அந்த வரிசையில் வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தனது பங்குக்கு வெளிக்கொணர்ந்திருக்கும் 'தொகுப்புக் கருவூலம்'தான் 'கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி. அவரது பல வருட உழைப்பு இதில் தெரிகிறது. கோவில்பட்டிக்காரர் என்பதால் இயல்பாகவே நண்பர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு பாரதியாரிடம் பற்று கலந்த அபிமானம் உண்டு. அவருக்கு இப்படியொரு வாய்ப்புக் கிடைத்தால் விட்டுவிடுவாரா என்ன?
"தமிழ் நாட்டின் தென்புலக் கரிசல் மண்ணில் பிறந்து தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையகம் பாலிக்கப் பாடிய குடுகுடுப்பைக் கோணங்கி மறைந்து ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. அத்தகைய பெருமகனை நம் தமிழ்கூறும் நல்லுலகத்தின் அறிஞர் பெருமக்கள் பலரும் தம்முள் நினைவுகூர்ந்து எழுதிய பல விதமான கருத்துக் களஞ்சியங்களை ஒரு சேரத் தொகுப்பது, சிதறி உருண்டோடும் நெல்லிக்கனிகளை ஓடிப் பொறுக்கி ஒரு மூட்டைக்குள் அடக்குவதற்கு ஒப்பான செயல். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக பலவாறாகத் தேடிச் சேகரித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன” என்கிற பதிப்பாசிரியர் உரையை மெய்ப்பிக்கின்றன கட்டுரைகள்.
பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவருடன் வாழ்ந்து, நெருங்கிப் பழகிய ராஜாஜி, திரு.வி.க., வ.உ.சி., வ.வே.சு. ஐயர், உ.வே.சா., குவளை கிருஷ்ணமாச்சாரியார், பரலி சு.நெல்லையப்பர், சோம சுந்தர பாரதி, பாரதிதாசன் போன்றவர்களும், பாரதியாரின் குடும்பத்தினரும் அவர் குறித்து எழுதியிருக்கும் கட்டுரைகள் அந்த ஆளுமை எப்படி இருந்தார் என்பதைப் படம் பிடிக்கின்றன. 
பாரதியார் குறித்து அவருக்குப் பின்னால் வந்த அரசியல் ஆளுமைகளான எஸ்.சத்திய மூர்த்தி, ப.ஜீவானந்தம், ம.பொ.சி. போன்றவர்களும், திராவிட இயக்கத்தினர்களான அண்ணா, கருணாநிதி உள்ளிட்டவர்களும் வெளிப்படுத்தி இருக்கும் பார்வை, அந்த ஆளுமை எப்பேர்ப்பட்டவர் என்பதை  வெளிப்படுத்துகின்றன.
கவிஞர்கள், இலக்கியவாதிகள், இதழியலாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் என்று எந்தவொரு பகுதியினரையும் விட்டு வைக்காமல், அவர்கள் எழுதிய கட்டுரைகளைத் தேடி சேகரித்துத் தொகுத்திருக்கும் வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணனுக்கு தமிழக அரசு பாரதியார் விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்.
பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவின்போது ‘கல்கி ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது .அதேபோல, பாரதியாரின் பிறந்த நூற்றாண்டின்போது கலைக்கதிர் சிறப்பு மலர் ஒன்றைவெளியிட்டது.அந்த மலர்களில் வெளிவந்த கட்டுரைகளும் இதில் இணைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. ஆளுமைகளுக்காக சேர்க்கப்பட்டிருக்கும் கட்டுரைகளும், சொல்லப்படும் செய்திக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளும் இடம்பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது. தவிர்த்திருக்கலாமே என்று சொல்லும்படி எந்தவொரு கட்டுரையும் இல்லை.
பாரதியார் ஒரு தங்கச் சுரங்கம். தோண்டத் தோண்டக் கொட்டிக் கிடக்கும் தங்கத்தை அள்ளி அள்ளி மாளாது. அடுத்த தலைமுறைக்கு இந்தக் கட்டுரைகள் கிடைப்பதற்கு வழிகோலியிருக்கிறார் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
‘ரிலே ஓட்டப்பந்தயத்தின் ஒருகட்டம் ஓடியிருக்கிறார் அவர். இதைப் படித்த பிறகு, அடுத்தகட்ட ஓட்டத்துக்குத் தயாராக என்னைத் தூண்டுகிறது ஆர்வம்.

#ksrpost
26-6-2022.


No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...