Tuesday, July 14, 2015

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா. - T. S. Balaiah



1960 -70 களில் பள்ளி கல்லூரி நாட்களில் திரை உலகத்தில் எம்.ஜி.ஆர், என்.எஸ்.கிருஷ்ணன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், பாலாஜி, முத்துராமன், ஜெய் சங்கர்,  என்று கதாநாயகர் வரிசைகள் இருந்தாலும் தகப்பனார் வேடத்தில் நடித்த டி.எஸ்.பாலைய்யா, எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.ராதா, டி.ஆர். மகாலிங்கம், டி.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் எம்.என்.நம்பியார், அசோகன், மனோகர்  நகைச்சுவை நடிகர்கள் வி.கே.ராமசாமி, சந்திரபாபு,  தங்கவேலு, கருணாநிதி, நாகேஷ் போன்றோர்கள் இன்றைக்கும் மறக்க முடியாதவர்களாக நினைவில் உள்ளனர்.  இன்றைய தலைமுறையினர் இவர்களை அறிவார்களா என்று தெரியவில்லை.

டி.எஸ்.பாலையா நடிப்பும் பாவனைகளும் என்றும் மனதில் நிலைப்பவை. அவருக்கு நூற்றாண்டு கடந்த ஆண்டு நிறைவு பெற்றது.
ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் தூத்துக்குடி அருகே உள்ள சுண்டங்கோட்டை கிராமத்தில் ஆகஸ்ட் 23, 1914ல் பிறந்தார்.

கதாநாயகன், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர், வில்லன் என அனைத்து கதாப்பாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். 1936ல் சதிலீலாவதி படத்தில் டி.எஸ்.பாலையா திரையுலகில் நுழைந்து 1972ல் மறையும் வரை திரைப்படங்களில் நடித்தார்.

அவர் நடித்த முக்கியத் திரைப்படங்கள் சில :
வேலைக்காரி (1949)
உத்தம புத்திரன் (1940)
ஆர்யமாலா (1941)
மனோன்மணி (1942)
மீரா (திரைப்படம்) (1945)
வால்மீகி (1946)
மோகினி (1948)
ஏழை படும்பாடு (1950)
ஓர் இரவு (1951)
மதுரை வீரன் (1956)
பாகப்பிரிவினை (1959)
காதலிக்க நேரமில்லை  (1964 )
திருவிளையாடல் (திரைப்படம்) (1965)
பாமா விஜயம் (1967)
தில்லானா மோகனாம்பாள் (1968)

1947ல் வெளியான ராஜகுமாரியில்  எம்.ஜி.ஆர் கதாநாயகனாக இருந்தாலும் வில்லனாக ஆலகாலன் வேடத்தில் நடித்த டி.எஸ்.பாலையாவின் உடல்மொழியும், பாவனையும், கண் விழியில் வெளிப்படுத்திய உக்கிரமும் அற்புதமாக அமைந்தது.

ஜூபிடர் பிக்சர்ஸ் 1948ல் தயாரித்து வெளியிட்ட மோகினியிலும் எம்.ஜி.ஆர் தான் கதாநாயகன். இந்த படத்தின் பாட்டுப் புத்தகத்தில் எம்.ஜி.ஆர் பெயருக்கு மேலே டி.எஸ்.பாலையா பெயர் இடம்பெற்றிருந்ததை குறிப்பிடுவதன் மூலம்  இவரது தனிச்சிறப்பை அறியலாம்.  மோகினி திரைப்படத்தில் இடம்பெற்ற  “உண்மையும் இது இல்லையா  ஒருக்காலும் மறுக்காதே” என்ற அற்புதமான பாடலை அவரே சொந்தக்குரலில் அருமையாகப் பாடி ரசிகர்களைக் கட்டிப் போட்டார்.

பேரறிஞர் அண்ணாவின் “வேலைக்காரி” படத்திலும் மணி என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தார்.   டி.எஸ்.பாலையாவின் நகைச்சுவை 1954ல் வெளிவந்த தூக்கு தூக்கி படத்தில் நடித்த  வடநாட்டு மார்வாரி வேடத்தில் தில்லுமுல்லுகளையும் திருட்டு வேலைகளையும், சகல சேட்டைகளையும் செய்து ரசிகர்பெருமக்களை வெடிச்சிரிப்பு சிரிக்கவைத்தார்.

1964ல் வெளிவந்த காதலிக்க நேரமில்லை படத்தில் எஸ்டேட் உரிமையாளராகவும், கதாநாயகிகளுக்கு தந்தையாகவும் நடித்தார். நாகேஷுடனான நகைச்சுவைக் காட்சிகளில் பயந்து நடுங்கி அவர் நடிக்கும் காட்சிகள் எல்லோராலும் மகிழ்ச்சியாக இன்றும் நினைத்துப் பார்க்க வைப்பது.

ஊட்டிவரை உறவு படத்தில் பணக்கார வேடத்தில் நடித்து செய்த தவறை மனைவி மக்களிடம் மறைக்க  அவர் படாதபாடு படுவதை பார்க்கும் போது ரசிகர்களுக்கு சிரிப்பை உருவாக்கும்.

மதுரை வீரன் படத்தில் நரசப்பனாகவும், தில்லானா மோகனாம்பாள் படத்தில் தவில் வித்வானாகவும். திருவிளையாடல் படத்தில் மதுரை நகரைவிட்டு ஓடும் ஹேமநாத பாகவதர் வேடமும், பாமா விஜயம் படத்தின் நடுத்தரகுடும்பத்தின் மூன்று மகன்களில் தந்தையாகவும் மருமகள்களை நடத்துகின்ற பாங்கும் என பல வேடங்கள் ஏற்றாலும் அதில் தனிமுத்திரை பதித்த டி.எஸ்.பாலையா இன்றைக்கும் நினைவில் உள்ளவர்.

கதாநாயகனோ துணை நடிகரோ என்றில்லாமல் தான் அங்கம் வகிக்கும் பாத்திரத்திற்கு பெருமையைத் தேடித்தந்தார் டி.எஸ்.பாலையா. அதேபோல சக நடிகர்களோடு எந்தவித பிரச்சனைகளுக்கும் இடங்கொடுக்காமல் அனுசரித்துச் செல்கின்ற நடிகராகவும் விளங்கினார். தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி பொதுப்பணிகளையும் மறைமுகமாக செய்துவந்தார்.

இவரது முழுமையான வரலாற்றை “நூற்றாண்டு கண்ட டி.எஸ்.பாலையா” என்று நெல்லை மாவட்டத்திற்குச் சம்பந்தமில்லாத
 தி. சந்தான கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். இவரது முயற்சி பாராட்டுக்குரியது.

இப்படிப்பட்ட எளிமையான நடிகரை நெல்லை மண் பெற்றுத் தந்து தமிழ் திரை உலகிற்கு வழங்கியதை பெருமையாகவே கருதுகிறோம்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
14-07-2015.




  

No comments:

Post a Comment

Make a choice to get better, and to move forward. Move boldly against any currents*

*Make a choice to get better, and  to move forward. Move boldly against any currents*. Be persistent and consistent with your change, no mat...