Friday, May 20, 2016

பிரிவு 356ம் உத்தரகண்ட் மாநிலமும்

உத்தரகண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையில் இருந்த காங்கிரஸ் அரசை மத்தியில் இருக்கும் பாஜக அரசு கலைத்தது.  கட்சித் தாவிய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பாஜக அரசு அந்த மாநிலத்தில் அமைய திட்டமிட்டது. இந்த அத்துமீறல் போக்கை நீதிமன்றம் முறியடித்தது.

உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் நம்பிக்கை வாக்கு எடுக்க ஆளுநர் நிர்ணயித்த தேதிக்கு ஒரு நாளைக்கு முன்பே குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு திணிக்கப்பட்டது. இதை நீதிமன்றம் கடுமையாக கண்டித்ததோடு;  குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமாகும். கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் இங்கே இயங்குகின்றன. மத்திய அரசும் மாநில அரசும் தங்களுக்கென வரையறுத்துள்ள அதிகார வளையத்துக்குள் இறையாண்மைமிக்கதாக இயங்கவேண்டும். இதையெல்லாம் கவனிக்காமல் போகின்ற போக்கில் மத்திய அரசு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது முறையற்றதாகும்" என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரகண்ட் மாநில ஆட்சிக் கலைப்பை பற்றி கருத்து வெளியிட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடத்தவும் உத்தரவிட்டது.

உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் 29.4.2016 அன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று ஆணையிட்டிருந்தது. மத்திய அரசு இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வாக்கெடுப்புக்கான உயர்நீதிமன்ற ஆணைக்கு தடையும் கோரியது. மேல்முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 29.4.2016 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதித்தது. இதற்கு நீதிபதிகள் கூறிய காரணம், தங்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் கிடைக்கவில்லை என்றும், அதனைப் பெற்றுப் பரிசீலித்தபின் அதன் அடிப்படையில் மேல்முறையீட்டின் மீது ஆணை பிறப்பிக்கலாம் என்று கூறி அது வரை மட்டும் இடைக்காலத் தடை விதித்தது.

பின்னர் உச்சநீதிமன்றம் வழக்கை முழுமையாக விசாரித்து, உத்தரகண்ட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டதை கடுமையாக விமர்சித்தது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண சட்டமன்றத்தில் 10.5.2016 அன்று சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று உத்தரவிட்டது. இதை மேற்பார்வையிட ஓர் அதிகாரியையும் உச்சநீதிமன்றம் நியமித்தது.

உத்தரகண்ட் மாநில சட்டமன்ற சபாநாயகர், கட்சி தாவிய 9 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்திருந்தது. இந்தத் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஒரு மாநில அரசு, சட்டப்பேரவையில் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறதா என்பதை சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துப்படுவதன் மூலமாகவே அறிந்துகொள்ள முடியும் என்றும் அது ஒன்றே வழி என்றும் உச்சநீதிமன்றம் 1994ல் எஸ்.ஆ. பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கலைக்க, அரசமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவை எதிர்காலத்தில் யார் பயன்படுத்தினாலும், அவர்களுக்கு உத்தரகண்ட் நிகழ்வு ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கும். காங்கிரஸ் கட்சியும் இதிலிருந்து படிப்பினையைக் கற்றுக்கொள்ளும்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சிதான் இந்தப் பிரிவை அதிகமான அளவில் பயன்படுத்தி இருக்கிறது. இப்போது இத்தகைய நடவடிக்கைக்கு அந்தக் கட்சியே பலியாகி உள்ளது.

இதுவரை பிரிவு 356ஐ மத்திய அரசு உத்தரகண்ட்டை சேர்த்து 126 முறை பயன்படுத்தியுள்ளது.

அது குறித்தான பட்டியல் விவரம்:

http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2016/05/article-356-implemented-in-india.html

No comments:

Post a Comment

2023-2024