Thursday, September 2, 2021

#திராவிடம்_திராவிடக்களஞ்சியம் ———————————————————-

 #திராவிடம்_திராவிடக்களஞ்சியம்

———————————————————-

தினமணியில் “திராவிடத்தை உள்ளடக்கிய தமிழ் தேசியம்” என்ற கட்டுரையை படித்துவிட்டு பலரும் தொடர்பு கொண்டனர். அதன்பிறகு சில தரவுகளும் கிடைத்தன. திருவாடுதுறை ஆதீன மகாவித்துவான் யாழ்ப்பாணம் வடகோவை சபாபதி நாவலர் இயற்றிய ”திராவிட பிரகாசிகை” 1927-ல் வெளியிட்ட நூல் கிடைக்கப்பெற்றது. தமிழ் இலக்கிய, இலக்கண சாஸ்திர மெய்வரலாறுகளை எல்லாம் இனிதுபட எடுத்துப்போதிப்பது இத்திராவிட பிரகாசிகை என இதன் பதிப்புரையில் சொல்லப்பட்டுள்ளது.தமிழ் இலக்கிய, இலக்கண மரபியல்களை பல பாடல்களோடு சொல்லப்பட்டுள்ளது. தமிழறிஞர் சபாபதி நாவலரால் எப்படி திராவிடம் என்ற பதமில்லாமல் 1927-லே ஒரு நூலை இயற்றமுடியும்.
இதைப்போலவே 1908-ல் ”திராவிட வேதத் திரட்டு” என்று தமிழறிஞர் கயப்பாக்கம் சதாசிவ செட்டியார் திருமுறைகளை திரட்டி திராவிட வேதமென்று நூறாண்டுகளுக்கு முன்பே எழுதி பதிப்பித்துள்ளார் என்றால் திராவிடம் என்ற சொல்லாடல் இல்லாமல் எப்படி திராவிட வேதத் திரட்டு என்ற நூல் வெளிவந்திருக்கும். இந்த நூல் அல்லயன்ஸ் வெளியீட்டகம் நான்காம் பதிப்பாக 2013-ல் வெளியிட்டுள்ளது.
”திராவிட காண்டம்” என்று ஒரு அறியநூலை கடலூர் கனகசபை பிள்ளை எழுதி வெளியிட்டுள்ளார். வெளியிட்ட வருடம் சரியாகத்தெரியவில்லை. இந்த நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் குறித்தான செய்திகள் உள்ளன. கடல்கொண்ட தெங்குநாடு (7), மதுரைநாடு (7), முன்பாலைநாடு (7), பின்பாலைநாடு (7), குன்றநாடு (7), குணக்காரைநாடு (7), குறும்பனைநாடு (7) ஆகிய 49 திராவிட நாடுகளை கணக்கிட்டுச் சொல்கின்றார்.
”சீர்கொண்ட தொண்டைமண் டலமிருப துடனாலு
செப்பிடுங் கோட்ட மவயிற்
சேருமெழு பத்தொன்ப தாகுநா டவைபினூர்
தச நூறு நவ நூறதாம்
பார்கொண்ட கோத்திரம் பன்னிரா யிரமுன்
பகர்ந்தபட் டயமுள்ளதிப்
பட்டயந் தனிவில்லை யுள்ளபடி முன்னோர்
பகர்ந்திடு மூர்களவையில்
வேர்கொண்ட காடுசில வாயவோ திரைவீசு
வேலைசில தைக்கொண்டதோ
வேற்றரசர் நாட்டினிற் சேர்ந்திட்ட வோவலது
மேடாய்வ ளர்ந்திட்டவோ
கார்கொண்ட நீர்கொண்டு பள்ளவழி யாயவோ
கழறுமிவ் வூர்களெல்லாங்
கச்சியிற் கல்வெட்டு செப்பேட்டி லுளவென்று
கற்றநா வலர்சொன்னதே”.
என்றபடி தொண்டைநாட்டினும் அநேக நாடுகளைக் கடல் கொண்டதெனச் சாசனங்கள் ஏற்ப்பட்டிருக்கின்றன. இதனால் தொண்டைமண்டல நாடு முதல் பாண்டிய நாடுடைய கடற்கரை ஓரங்களிலுள்ள தமிழ் நாடுகள், அநேகமாகக் கடலால் கொள்ளப்பட்டது எனத் தெரிகின்றது. ஆதலின் அந்நாடுகளிலுள்ள தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்க நூல்கள் அநேகமாக இறந்துபோயின. இவை மட்டுமல்ல 12 ஆண்டு பாண்டிய நன்னாடு மழைவளங்காப்ப மன்னுயிர் மடிந்தது. என்றதனால் பாண்டிய நாட்டில் 12 வருடகாலம் மழைப் பெய்யாதிருக்க அதனால் கருப்புண்டாக அநேக உயிர்கள் மாண்டன என்றும், அப்போது ஆண்டு இருந்த சங்கப்புலவர் தத்தம் நாடு நோக்கி சென்றனர் என்றும், சிலர் இறந்துவிட்டனர் என்றும், உயிர் பிழைத்திருந்த சிலரைப் பாண்டியன் மீளவும் அழைத்துப் பாண்டிய நாட்டில் சேர்த்தான் என்றும் தெரிய வருகின்றது.
திராவிடம் என்பது விந்தகிரியின் தென்பாகத்தில்லுள்ள குடிகளால் வழங்கப்படும் தமிழ் மொழி ஆகும். தமிழ்மொழி எக்காலத்தும் அழிவுபடாது. ஸ்திரமாயிருந்ததினால் இதற்கு திரம்+இடம்=திரமிடம் அல்லது திராவிடம் என வழங்கலாயிற்று.
”என்றுமுள தென்றமிலீ யம்பியிசை கொண்டான்”
என்ற கம்பர் வாக்கு இதுவே ஆகும். மறைவிடமெல்லாம் திறவிடமாக்குதலால் திராவிடம் எனப் பெயர். திறவு – இடம் எனவே திறவு = மறைபொருளைத் திறந்துக்காட்டும், இடம் = ஸ்தானமாம். திறவு = சாவி. றகரம் ரகரமாகத் திரிந்தது.
சங்கராச்சாரியார் தாம் செய்தருளிய சௌந்தரியலகரியில் உமாதேவியார் ஞானப்பாலுண்ட சம்பந்தப் பிள்ளையாரை திரவிட சிசு எனக் கூறி இருக்கின்றார் (சைவசமயசாரம் 145-ஆம் பக்கம்). அதனால் இத்திராவிடம் பின்னர் தமிழ் என வழங்கப்பட்டு வந்தது. இனித் தமிழ் என்பது என்னை எனில் சுவை எனப் பொருளாகும். ”இனிமையு நேர்மையுந் தமிழெனலாகும்”. எனும் பிங்கலந்தை சூத்திரத்தைக் காண்க.
“தருஞ் சுவை யமுதெழ மதுரம தொழுகு பசுந் தமிழ்மாலை நிரம்பப் புனைந்த” என்று மதுரைக் கலம்பகத்தில் குமரகுருபர சுவாமிகள் செப்பியவாய் கானு முணர்க.
- "திராவிட காண்டம்"
இந்த திராவிட காண்டம் நூலை பாராட்டி வாழ்துரை வழங்கிய தமிழ் அறிஞர்கள் (மாகவி பாரதி, உவேசா உட்பட) வருமாறு;
1. நெல்லையப்ப கவிராயர் (திருநெல்வேலி)
2. வே.பா.சுப்பிரமணிய முதலியார் (திருநெல்வேலி)
3. இராமசாமி கவிராயர் (சேத்தூர்)
4. சுப்பிரமணிய கவிராயர் (திருவாடுதுறை ஆதீனம்)
5. எம்.ஆர்.கந்தசாமி கவிராயர் தமிழாசிரியர் (உடுமலைப்பேட்டை)
6. எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை (ஆசிரியர் ஞானபோதினி)
7. அநவரதம் விநாயகம் பிள்ளை (திருநெல்வேலி)
8. அ.சண்முகம் பிள்ளை (தமிழாசிரியர், மதிரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி)
9. தண்டலம் பாலசுந்தர முதலியார் (அஷ்டவதானி, சபாபதி முதலியாரின் மாணாக்கர்)
10. பூவை கல்யாணசுந்தர முதலியார் (அஷ்டவதானி)
11. செந்தில் வேலு முதலியார் (மயிலம்)
12. வி.சுந்தர முதலியார் (மயிலை)
13. திருமலை கொழுந்து பிள்ளை (ஆங்கில பேராசிரியர் சென்னை பச்சையப்பன் கல்லூரி)
14. ஈக்காட்டு ரத்தினவேலு முதலியார் (சென்னை கிறித்துவக் கல்லூரி தமிழ் பேராசிரியர்)
15. சிவஞான சுவாமிகள் (விருதுநகர்)
16. வேலுச்சாமி பிள்ளை (காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளி தமிழ் ஆசிரியர்)
17. வ.சா.சோமசுந்தரம் பிள்ளை (தஞ்சாவூர்)
18. மதுரகவி மாணிக்க முதலியார் (குன்றத்தூர்)
19. முத்தூர் அ.சங்கரலிங்கம் முதலியார் (துணையாசிரியர் சுதேசமித்ரன் சென்னை)
20. கல்யாணசுந்தரம் பிள்ளை (விருதாச்சலம்)
21. தி.வீரபத்திர முதலியார் (ஐகோர்ட் வக்கீல் மதராஸ்)
22. சு.அரசு பிள்ளை (சோழவந்தான்)
23. தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர்
24. சதாவதானி சுப்பிரமணியம் அய்யர் (தஞ்சாவூர்)
25. பிரம்மஸ்ரீ மகாகவி எட்டையபுரம் சுப்பிரமணிய பாரதியார் (சுதேசமித்ரன் சென்னை)
26. வேங்கட சுப்பிரமணிய பாரதி (சேசகிரி அய்யர் மகன், உடுமலைப் பேட்டை)
27. வித்வான் பொன்னுசாமி செட்டியார் (ஸ்ரீ வில்லிபுத்தூர்)
28. சேக்கூர் விசாக பெருமாள் (தமிழ் வித்வான் திருச்செங்கோடு)
29. எம்.எஸ்.பழனிசாமி ஆச்சாரியார் (தமிழறிஞர் பெரியகுளம்)
30. மகாவித்வான் இராமசாமி நாயுடு (காஞ்சிபுரம்)
31. டாக்டர் சண்முகம் பிள்ளை முத்தமிழ் கவிராயர் (தஞ்சாவூர்)
32. கொட்டாம்பட்டி எம்.கருப்பையா பாவலர் (மதுரை ஜில்லா)
33. தேவாரம் முத்துசாமி முதலியார் (புரசைவாக்கம் அஷ்டவதானி சபாபதி முதலியார் மாணாக்கர்)
34. ரா.அருணாசலக் கவிராயர் (சேத்தூர் சமஸ்தான வித்வான்)
இதில் குறிப்பிடப்பட்ட பெயர்கள் திராவிட காண்டம் என்ற நூலில் அதன் ஆசிரியர் கடலூர் கனகசபை பிள்ளை அப்போது பட்டியலிட்டவாரே இங்கே தரப்பட்டுள்ளது.
இந்த 34 அறிஞர்களில் கடந்த நூற்றாண்டில் மட்டுமல்ல 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்களும் இடம்பெற்றுள்ளனர்.
திராவிடக் களஞ்சியம் என்றால் Dravidian Encyclopedia என்று பொருள். ஏற்கனவே திராவிடப் பல்கலைக்கழகம் பேரா. சுப்பிரமணியன் தொகுத்த திராவிடக் களஞ்சியம் தொகுப்பை வெளியிட்டுள்ளது. அது மொழியியல் கண்ணோட்டத்தில் திராவிட மொழிகளை ஒப்பீடு செய்து தொகுக்கப்பட்ட நூல்.
தமிழ் மொழியிலிருந்து பிரிந்த மலையாள நாட்டினர்,தெலுங்கர்களும், கன்னடத்தினரும், துளு பேசுவர் தமிழ் மொழியோடு தங்களுக்கும்
தொடர்பு உள்ளதாக கூறுகின்றனர். இருப்பினும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டத் திராவிட மொழியியல் குடும்பமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ் மொழிதான் இதில் முக்கிய அங்கமாகும்.
இன்றையகேரளத்திலும்,ஆந்திரத்திலும் , கர்நாடகத்திலும் தமிழ் எழுத்துக்கள் ஆதி காலத்திலிருந்து கல்வெட்டுகளாக நமது பார்வைக்கு இன்றைக்கும் படுகின்றன.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02.09.2021

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...