Sunday, June 21, 2015

திருநெல்வேலி- தூத்துக்குடி- விருதுநகர் மாவட்டங்கள்





கடந்த 18-06-2015 அன்று ஜம்மு-காஷ்மீர் தலைமை நீதிபதி திரு.பால் வசந்தகுமார் அவர்களின் புதல்வி திருமணவிழாவில் கலந்துவிட்டு, மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ சர்ச் வளாகத்தில் அமைக்கப்பட்ட பந்தலில் அமர்ந்து என்னுடைய சீனியர் வழக்கறிஞர் திரு.ஆர்.காந்தி, உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்களோடு  பேசிக்கொண்டிருந்த பொழுது,  அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் வித்யாசங்கள் இருக்கின்றதே என்று கேட்டார்கள்.

நான் சொன்னேன்,”திருநெல்வேலி மாவட்டம் தமிழனுடைய ஐந்து வகை நிலங்களையும் உள்ளடங்கியதாகும். எங்கள் சொந்த பகுதியான சங்கரன்கோவில், கோவில்பட்டி  வட்டாரங்கள் வானம் பார்த்த பூமி, ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் எப்போது நீரும், செழிப்புமாக பச்சைப் பசேல் என்று இருக்கும் மாவட்டம், நெல்லைச்சீமையிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்களாகப் பிரிந்திருந்தாலும் இரண்டும் எங்களும் ஒன்று தான். இன்னும் சொல்லப்போனால் விருதுநகர் மாவட்டமும் எங்களோடு கலாச்சார ரீதியாக ஒட்டிய பகுதி.

அதே போல நெல்லையின் தென்பகுதியான வள்ளியூர், தூத்துக்குடியின் சாத்தான்குளம் வட்டாரம் ஆகியவை குமரிமாவட்டத்தோடு தொடர்பில் இருக்கும் பகுதிகள். இன்றும் தூத்துக்குடி திருநெல்வேலி நிர்வாக ரீதியாக பிரிந்திருந்தாலும், ஒரே மாவட்டமாகத் தான் எங்களுக்குப் படுகிறது.  விருதுநகர் மாவட்டமும் அரசியல் பணிகளின் காரணமாக நெல்லைமாவட்டமாகவே கருதுகின்றோம்.

ஒரு காலத்தில் விருதுநகர் மாவட்டத்தின் தென்பகுதியிலிருந்து நெல்லை மாவட்டத்தின் எல்லை ஆரம்பிக்கிறது. அப்போது தபால்கள் எல்லாம் சாத்தூரிலிருந்து குதிரைகளில் நெல்லை மண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகச் செவிவழிச் செய்திகள் இன்றும் உண்டு.

இந்த நிலையில், என்னுடைய நிமிரவைக்கும் நெல்லை நூலில் இதுபற்றிய குறிப்புகள் எல்லாம் விரிவாக உள்ளது. நெல்லை மண்ணுக்கு நிகர் நெல்லை மண் தான் என்று திரு.காந்தி அவர்களிடம் சொன்னபோது, “நெல்லைக்காரர்கள் விட்டுத்தரமாட்டீர்களே எப்போதும்” என்று சொன்னார்.

No comments:

Post a Comment

Make a choice to get better, and to move forward. Move boldly against any currents*

*Make a choice to get better, and  to move forward. Move boldly against any currents*. Be persistent and consistent with your change, no mat...