Thursday, June 4, 2015

குளச்சல் , விழிஞ்ஞம் துறைமுகத் திட்டங்கள். - Colachel, Vizhinjam Port Projects.




திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் அமைக்க அதானி குழுமத்திடம் பொறுப்பை ஒப்படைப்பதை எதிர்த்து கேரள அரசியல் கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்த எதிர்ப்புக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தத் துறைமுகத்தின் திட்டத்தை தமிழகத்தின் குளச்சல் துறைமுகத் திட்டத்திற்கு மாற்றப்படும் என்று கூறி இருக்கின்றார்.


இது எப்படி என்றால்,  பயமுறுத்தும் வகையில்  “இதோபார் உனக்கு வேண்டாம் என்றால் தமிழ்நாட்டுக்குக் கொடுத்துவிடுவேன்” என்று கட்கரி சொல்லியுள்ளார். தமிழகத்துக்கு குளச்சல் துறைமுகம் வேண்டுமென்று கடந்த 25 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டும் மத்திய அரசு பாராமுகமாக இருந்தது.

கேரளாவில் விழிஞ்ஞியம் துறைமுகம் வரவேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி  நேற்றைக்கு வலியுறுத்தியுள்ளார். ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விழிஞ்ஞியம் சர்வதேசத் துறைமுகப் பணியின் டெண்டர்களை அதானி குழுமத்திற்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் அதானி குழுமத்திற்கு டெண்டர் வழங்குவதற்கு எதிர்ப்பு வந்தவுடன், மத்திய அமைச்சர் குளச்சலில் துறைமுகம் வந்துவிடும் என்று அறிவித்திருப்பது, மனப்பூர்வமான முடிவுதானா என்பது கேள்விக்குரியதாகும்.

கொழும்புவுடைய முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் குளச்சலில் துறைமுகம் அமைவதை தடுக்கவும், சேதுக்கால்வாய்த் திட்டத்தை முடக்கவும் இலங்கை அரசு தொடர்ந்து டெல்லி பாதுஷாக்களின் உதவியை நாடிவருகின்றது. குளச்சல் துறைமுகம் நடைமுறைக்கு வந்தால் இந்துமகாக்கடலில் முக்கிய கேந்திரப்பகுதியாக விளங்கும்.

விழிஞ்ஞியத்தில் அமைக்கத் திட்டமிட்ட துறைமுகத்தை குளச்சலில் தான் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். அதை மத்திய அரசு செய்யத் தவறிவிட்டது.

குளச்சலின் மிக அருகேயுள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்படாத, ‘விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் லிமிட்டெட்’ எனும் தனியார் வர்த்தகத் துறைமுகமாக உருவாக்கப்படுகிறது. இந்தத் துறைமுகத்துக்கு வேண்டிய நிலம், நீர், மின்சாரம் அனைத்தையும் கேரள அரசு கொடுக்க வேண்டும்.

இந்தத் துறைமுகத்திலிருந்து வரும் வருமானத்தில் ஒரு சதவீதத்தை துறைமுகம் இயங்கத் துவங்கிய பதினாறாம் வருடத்திலிருந்து மேற்கண்ட தனியார் நிறுவனம் கேரள அரசுக்குக் கொடுக்கும். பின்னர் ஆண்டுதோறும் ஒரு சதவீதம் வருமானத்தை உயர்த்திக் கொடுப்பார்கள். நாற்பது ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்.

இந்த திட்டப்பணிகளை உடனடியாகத் துவக்கும் விதத்தில் ஊக்குவிப்புத் தொகையாக மத்தியஅரசு சுமார் ரூ. 817.8 கோடியை அண்மையில் ஒதுக்கியிருக்கிறது. இந்தக் கடனைத் திருப்பியளிப்பதில் கேரள அரசுக்கும் பங்கு உள்ளது.

தமிழகத்தின் பழமையான, இயற்கைத் துறைமுகம் குமரி மாவட்ட குளச்சல் துறைமுகம். நீண்டகாலமாகவே இந்த துறைமுகம் முக்கியத்துவம் இழந்து, பயன்பாட்டில் இல்லாமல் போனது. குளச்சல் வர்த்தக துறைமுகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5000 பேருக்கும் அதிகமானோர்க்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தற்போது குளச்சல் வர்த்தகத் துறைமுகத்தின் சாத்தியக் கூறுகளைக் கண்டறி வதற்காக ஸ்பெயின் நாட்டு நிறுவனமான டெக்னிக்கா யி பிரயக்டோஸ் (Tecnicay Proyectos) மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் - இந்தியா (Boston Consulting Group - India) எனும் இரண்டு நிறுவனங்களை தூத்துக்குடி துறைமுகத்தின் தலைமைப் பொறியாளர் கோரியுள்ளார்.

இதற்கிடையில், குமரிமாவட்ட மீனவர்கள், மீன்பிடித் துறைமுகம், மீன் பதனிடும் நிலையம் கட்டித்தருமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். இவ்வட்டாரத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை அனைத்து கடலோரக் கிராமங்களிலும் மீன்பிடித் தொழில் செய்து வாழும் மீனவமக்களுக்கு  இந்த துறைமுகம் அமைந்தால் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கும்.

 கடந்த 2013ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய, மாநில  அரசுகள் ரூ. 87.75 கோடியை குளச்சல் துறைமுகத் திட்டத்துக்காக ஒதுக்கியது. குளச்சல் கடற்கரையின் கிழக்குப் பகுதியில் 540 மீட்டர் நீளத்திலும், மேற்குப் பகுதியில் 230 மீட்டர் நீளத்திலும் அலைத் தடுப்புச்சுவர்கள் கட்டும் பணி தொடங்கியது.

குளச்சல் கடற்கரையிலிருந்து சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு பாலம் அமைத்து, நடுக்கடலில் சுமார் 400 ஹெக்டேர் பரப்பளவில் செயற்கை நிலத்திட்டை உருவாக்கி, சிங்கப்பூர் துறைமுகத் தொழில்நுட்பம் போன்று, அங்கே கப்பல்களை நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசியாவிலிருந்து வரும் கப்பல்கள் குளச்சல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவைத்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் கப்பல்கள் சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும்.

குளச்சல் கடல் தூத்துக்குடி துறைமுகக் கடல் பகுதியை விட மிகவும் ஆழமானது. ஒரு கி.மீட்டருக்குக் குறைவான தூரத்திலேயே, 15 மீட்டர் ஆழம் அமைந்துள்ளது. மேலும் குளச்சல் துறைமுகம் சர்வதேச கப்பல் வழித்தடத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. இங்கு, கப்பல்கள் எளிதாக வந்து செல்லும் வகையில், கடற்கரையில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தப்பட்ட தொழில்கள், பல்வேறு ஆலைகளின் உற்பத்தி பொருட்கள், மீன், கருவாடு, சிமெண்ட், ரப்பர், தேயிலை போன்ற பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யலாம்.


தமிழகத்திற்கு பயன்படும் குளச்சல் திட்டத்தை முடக்கிவிட்டு கேரளாவில் விழிஞ்ஞம் துறைமுகத்தைக் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்தது. குளச்சலில் துறைமுகம் வரவேண்டுமென்பது தமிழகத்தின் நீண்டநாள் கனவாகும். இன்றைய  கப்பல்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்து தமிழகத்தையும் கேரளாவையும் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-06-2015.

1 comment:

  1. குளச்சல் வர்த்தகத் துறைமுகமா? இனையம் வர்த்தகத் துறைமுகமா?
    குளச்சலில் வர்த்தகத் துறைமுகம் கட்டுவதனை அனுமதிக்கலாம். இனையத்திலிருந்து குறும்பனை வரை வருகிற இனையம் வர்த்தகத் துறைமுகம் கட்டுவதனை அனுமதிக்கக் கூடாது. 2011ல் திறக்கப்பட்ட வல்லார்பாளையம் வர்த்தகத் துறைமுகம் எப்படி தோல்வி அடைந்தது என்பது குறித்து முதலில் விளக்க வேண்டும். விழிஞ்சம் வர்த்தகத் துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டு அதில் எவ்வளவு இலாபம் வருகிறது என்பதனை மூன்று வருடங்கள் ஆய்வு செய்துவிட்டு லாபம் வந்தால் மட்டும் குளச்சலில் வர்த்தகத் துறைமுகம் கட்டுவதனை ஆலோசிக்க வேண்டும். இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் இனையம் கடல் பகுதியை அழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு சிலருக்குக் கிடைக்கும் தரகுக்காக இந்தியர்களின் கோடிக்கணக்கான வரிப் பணத்தைக் கடலில் கொண்டு கொட்டுவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

    ReplyDelete

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...