Sunday, March 3, 2019

விவசாயின்குரல்

#விவசாயின்குரல்
———————-
இன்று கோவில்பட்டி வட்டாரத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் அவரின் பணி நிமித்தமாக தொலைபேசியில் அழைத்தார். அவர் பேசியதில் விவசாயிகளின் வேதனையும் வருத்தமும் தெரிந்தது. 
அவர் ‘’போதிய மழை இல்லை, சரிவர நீர் பாய்ச்சவில்லை ,அதிக இடைவெளியில் நடவு செய்ததால், களை கட்டுப்படுத்த இயலவில்லை,  இருப்பினும் இருமுறை ஆட்களை வைத்து களை எடுக்கப்பட்டது.நீர் கட்டாத காரணத்தால் தூர் அதிகம் வரவில்லை, ஒருமுறை பஞ்சகாவ்யம், ஒருமுறை மீன் அமிலம், நீர் விடும் போதெல்லாம் ஜீவாமிர்த கரைசல் என இடுபொருட்களை பயன் படுத்தினோம். நெல் நடவு செய்வதற்கு முன் தக்கைப்பூண்டு விதைத்து மடக்கி உழவு செய்துள்ளோம்.  இம்முறை பல தவறுகளை செய்தோம் அதன் மூலம் பல பாடங்களை கற்று  கொண்டோம். அதை சரி செய்து மீண்டும் மண்ணிற்கும் காலநிலைக்கும் ஏற்ப பயிர் செய்ய  செய்ய திட்டமிட்டுள்ளோம். இம்முறை உடல் உழைப்பு மிக அதிகம். நீர் பற்றாக்குறையால் கிணற்றில் ஊறும் நீரை மின்சாரம் கிடைக்கும் போது இரவு ,பகல் என சரிவர தூங்காமல் கண்விழித்து பயிரை பாதுகாக்க ஒருவழியாக அறுவடை முடிந்தது, செலவு கணக்கை பார்த்தால் நிச்சயம் வரவுக்கும் செலவுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது , இயற்கை கொடுப்பதை முழுமனதோடு ஏற்று  தொடர்ந்து பயணிக்க ஆயத்த மாகி வருகிறோம்.’’என்றார்.




அதற்க்கு நான் சொன்னேன், இந்தியாவெங்கும் விவசாயிகளின் நிலைமை வேதனையாகத்தான் உள்ளது. விதர்பா, சோட்டா நாக்பூர் போன்ற பகுதிகளிலும், ஆந்திரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் கடந்த 15 ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் கடந்த 2013ல் இருந்து இன்று வரை நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் விவசாயத்தை காப்பதற்காகவும், அவர்களின் நலனுக்காக போராடிய வகையில் 47 விவசாயிகளுக்கு மேல் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதெல்லாம் யாருக்கு தெரிகிறது. என்ன செய்ய? உலகமயமாக்கல், விவசாய நிலங்களை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்துதல், மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களே விவசாயத்தை விட்டொழியுங்கள் என்று ஒருபுறம் கூறி வருகின்றனர்.

உத்தமர் காந்தி கண்ட கிராம ராஜ்ஜியம் அழிவு பாதைக்கு வந்துவிட்டது. நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை ஒழித்துவிட அனைத்து வகையிலும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவது வேதனையைத் தருகிறது.

#விவசாயிகள்_தற்கொலை #விவசாயிகள் 
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-03-2019.

No comments:

Post a Comment

*Be yourself, none is perfect, to get everything right*.

*Be yourself, none is perfect, to get everything right*. If something goes wrong, that is completely okay, it happens. Step up to get things...