Tuesday, March 19, 2019

தேர்தலோ தேர்தல் ....

சகோதரர் கவிஞர்Tk Kalapria அவர்களின் பதிவு.அவசியம் வாசிக்கவும் .

தேர்தல் -சில நினைவலைகள்

________________________________________


தேர்தலோ தேர்தல் ....


1957, எனக்கு ஏழு வயது. மத்தியானம் சாப்பிட்ட பிறகு சர்வ அலங்கரங்களுடன் அம்மா, அக்கா, பக்கத்து வீட்டுப் உறவுப் பெண்கள் சிலர் நெருக்கியடித்து உட்கார்ந்து  கொண்டிருந்த குட்டியான ஸ்டாண்டர்ட் 10 காரில் நானும் வருவேன் என்று திணிந்து கொண்டு ஓட்டுச் சாவடிக்குப் போனேன். அப்போதெல்லாம் அபேட்சகர்களின் காரில், மாட்டு வண்டியில், குதிரை வண்டியில் எல்லாம் பூத் வரை போய் வாக்களிக்கலாம். 

 காரின் முன் கண்ணாடியின் வலது பாதியில் டிரைவர் பார்ப்பதற்கு மட்டும் இடம் விட்டு விட்டு இடது பாதியில் இரட்டைக் காளைச் சின்னத்திற்குக் கீழ் காங்கிரஸுக்கே ஓட் செய்யுங்கள் என்று உள்ளூர் பிரஸ்ஸில் அச்சடித்த நோட்டீஸ் ஒட்டியிருந்தது. திருநெல்வேலி டவுன் மார்க்கெட்டுக்கு மேலிருக்கும் லைப்ரரிதான் ஓட்டுச் சாவடி. நானும் அம்மாவின் பின்னாலேயே போய் விட்டேன். இரட்டைக் காளைச் சின்னம் ஒட்டிய இரண்டு பெட்டிகள், ரோஜாப்பூ சின்னம் ஒட்டிய பெட்டி ஒன்று இன்னும் சில பெட்டிகள். அவற்றின் மீதான சின்னங்கள் நினைவில்லை.  அம்மாவுக்குத் தரப்பட்ட மூன்று ஓட்டுச் சீட்டுகளையும் மூன்று இரட்டைக் காளைச் சின்னம் ஒட்டிய ஒட்டுப் பெட்டியில் போட்டு விட்டு வந்தாள். நான் விவரம் தெரியாமல், ஏன் ஒரு ஓட்டை ரோஜாப்பூவில் போட்டால் என்ன என்று கேட்ட நினைவு. 


1957 இல் ஒவ்வொரு அபேட்சகருக்கும் ஒவ்வொரு பெட்டி, அதில் அவர்கள் சின்னம் ஒட்டப்பட்டிருக்கும். அதில் விழுகிற ஓட்டுகள் எல்லாம் அவர்களுக்கு.

மேலும்  திருநெல்வேலி அப்போது இரட்டைத் தொகுதி, ஒரு பொது அபேட்சகர், ஒரு S.C அபேட்சகர், இருவரை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி 62 தொகுதிகள் தமிழ்நாட்டில். இதே போல் நான்கு தொகுதிகள் S.T. அபேட்சகர்களுக்கு.ஆக மொத்தம் 66 இரட்டைத் தொகுதிகள். அது போக மூன்றாவது ஓட்டு பார்லிமெண்ட் அபேட்சகருக்கு. அபேட்சகர்,  ஓட்டு, ஓட்டுச் சாவடி எல்லாம் அப்போதைய சொல்லாடல்கள். இவையெல்லாம், 1962 தேர்தலில் உத்வேகம் பெற்ற தி.மு.க  மும்முரமாகப் போட்டியிட்டு 50 இடங்கள் வென்ற போது அபேட்சகர்= வேட்பாளர், ஓட் செய்யுங்கள்= வாக்களியுங்கள் ஓட்டுச் சாவடி= வாக்குச் சாவடி என்று முழுமையாக மாறியது. இரட்டை.த் தொகுதி முறை 1962 இல் கை விடப்பட்டு தனித் தொகுதிகள் (ரிசர்வ்) வந்தன. அந்த மாற்றம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன, அப்போது. திருந்ல்வேல்யில் காங்கிரஸ் பொது அபேட்சகராக  ஸ்ரீமதி ராஜாத்தி குஞ்சிதபாதம் அம்மையாரும், எஸ்.சி. வேட்பாளராக ஸ்ரீமான் சோமசுந்தரம் என்பவரும் போட்டியிட்டு ஜெயித்தார்கள். என் பெயரும் சோமசுந்தரம் என்பதால் சினேகிதர்கள் கிண்டல் செய்தது பசுமையாக நினைவிருக்கிறது. டெல்லிப் பாராளுமன்றத்திற்கு காங்கிரஸ் சார்பில் பி.டி. தாணுப்பிள்ளை என்பவர் ஜெயித்தார். 


அதற்கு முந்திய பிரிட்டிஷ் காலங்களில் காங்கிரஸுக்கு மஞ்சள் பெட்டி, கம்யூனிஸ்டுகளுக்கு சிகப்புப் பெட்டி, முஸ்லிம் லீகிற்கு பச்சைப் பெட்டி. (இப்போது இந்த முறை அமுலில் இருந்தால் ஜெயலலிதா  ஆதரவாளர்கள் எங்களுக்குப் பச்சைப் பெட்டி வேண்டுமென்று கேட்கலாம்,  ) 

ஓட்டுப் போடுவதைப் பார்த்து விட்டு வந்து, பக்கத்து வீட்டு நண்பனுடன் சேர்ந்து ஆளுக்கொரு அட்டைப் பெட்டியும்  எடுத்துக் கொண்டு, தெருவின் அவரவருக்குத் தெரிந்த ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து, துண்டுத்தாளில் பெயர் எழுதி  பெட்டிக்குள் போடச் சொல்லி ஓட்டுச் சேகரிப்பு விளையாட்டு நடத்தினோம்.நான் போகும் வீட்டுக்கு அவன் போக்க் கூடாது. சீட்டில் ஓட்டுப் போடுபவர்களின் பெயரை எழுத வேண்டும் என்று பேச்சு. நண்பனுக்கு நிறைய ஓட்டுகள் விழுந்திருந்தது. அப்புறம்தான் தெரிந்தது, அவனே பெயர்களை எழுதி கள்ள ஓட்டுப் போட்டுக் கொண்டது.


கள்ள ஓட்டுகளும், ஓட்டுக்கு காசு கொடுப்பதும் எல்லாக் காலங்களிலும் உண்டு. அப்போதைய தேர்தல் விதிகளின் படி லெஜிஸ்லேட்டிவ் அசெம்ப்ளிக்கும், லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலுக்கும் (கீழ் சபை, மேல் சபை என இரண்டு சபை) பொதுத் தேர்தல் நடக்கும். மக்கள் வாக்களிக்க வேண்டும்.  எம்.எல்.சி பதவிக்கு வசதியான தலைகளே போட்டியிடுவார்கள். ஆங்கிலேயக் கவர்னரே சிலரை நியமிப்பார் என்பதால் அவருடன் நெருக்கம் உண்டாகும் என்றும் அவர்கள் நினைத்திருக்கலாம். 1923 எம்.எல்.சி  தேர்தலில் ஒருவர் பெரிய சாப்பாட்டுப் பந்தி  ஏற்பாடு செய்து,  இலையில் சாப்பாடு பரிமாறும் போது முதலில் வைக்கப்படும் உப்பின் மேல் ஒவ்வொரு பவுன் வைத்தாராம். அப்போது ஒரு பவுன் விலை கிட்டத்தட்ட 15 ரூபாய்.அப்படிக் கொடுத்த காங்கிரஸ் வேட்பாளர், எங்கள் தெருவினரும் கூட. இந்தத் தகவலை அம்மா அடிக்கடிச் சொல்லுவாள், தேர்தலில் நின்று விட்டால் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறி வந்து விடும். கூடவே இருப்பவர்கள் உசுப்பேற்றி விட்டு விட்டு தேர்தல் காய்ச்சலில் இப்படிச் செய்ய வைத்து விடுவார்கள். அதிலும் நகர சபைத் தேர்தலில் நின்று பணத்தை அள்ளி விட்டுத் தோற்றுப் போய் தங்கள் சொந்த வியாபாரத்தை இழந்த பலரை எனக்குத் தெரியும். தேர்தலில் பணம் கொடுக்கவில்லை என்று யாரும் சொன்னால் அது ‘தேர்ந்தெடுத்த’ பொய். இப்போது இதையே கிட்டத்தட்ட சட்ட பூர்வமாக  அரசு கஜானாவிலிருந்தே  வழங்குகிறார்கள். 


67அழைக்கிறது........

————————————————

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, பேட்டை இந்துக் கல்லூரியிலிருந்து கிளம்பியது ஒரு ஊர்வலம். அது வியாழக்கிழமை ஜனவரி 28 என்று நினைவு. (அன்று காலையில் நகரெங்கும் ஒட்டியிருந்த எங்க வீட்டுப் பிள்ளை மூன்றாவது வாரம்  சுவரொட்டி பற்றியும் கரூரில் அந்தப் படத்தை ஓட விடாது ஆளுங்கட்சியினர் நிறுத்தி விட்டதாக வந்த செய்தி பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம், அதனால் அநேகமாகச் சரியாக இருக்கும்). முந்தின தினம், உள்ளூர் பெண் எம்.எல்.ஏ வீட்டின் முன் கூடி இந்திக்கு எதிராகக் கோஷமிட்ட மாணவர்களை, எம்.எல்.ஏயின் கணவர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். அது மாணவர்களிடையே பரவி பெரிய கொதிப்பு உண்டாகி இருந்தது.  அதே நேரம் சிதம்பரத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் இறந்து போன தகவல் வந்தது. அதனால் ஊர்வலம் போயே தீர்வது என்று கல்லூரியில் முடிவெடுத்தார்கள். ஊர்வலம் அப்போதைய காங்கிரஸ் எம்.பி முத்தையா அவர்கள் வீட்டினைக் கடக்கும் போது, யாரும் எதிர் பாராமல், ஒரு நண்பர் எம்.பி வீட்டின் முகப்பிலிருந்த ஒரு குழாய் வழியாக ஏறி மாடியின் மேல், ஏந்தி வந்த ஒரு கருப்புக் கொடியைக் கட்டினார். மாணவர்கள் செயலைப் பார்த்து உத்வேகம் பெற்ற பொது மக்களும் இணைந்து, இந்திக்கு எதிராகப்  பயங்கரமாகக் கோஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்த நாட்களில் மாணவர்கள் கடுமையாக வேட்டையாடப் பட்டோம். 


ரதவீதியில் மாணவர்களோ, மாணவர் போலத் தோற்றம் கொண்டவர்களோ தென்பட்டால் மலபார்  போலீஸ் விரட்ட வருவார்கள். நாங்கள் சந்து பொந்துகளில் திசைக்கொருவராக ஓடித் தப்பித்து விடுவோம். அவர்கள் வீதியிலேயே நின்று விடுவார்கள். ( தெருவுக்குள் வந்ததும், ”வீடு வரை உறவு வீதி வரை போலீஸ்’ என்று கிண்டலடித்துப் பாடிக் கொள்வோம்.) அன்றிலிருந்து கனன்ற நெருப்பு, ஆட்சியாளர்கள் மீது அதீத வெறுப்பாக வெக்கையை உமிழ்ந்து கொண்டிருந்தது, இளைஞர்களிடையே. மாவட்டம் தோறும் நடைபெறும் தி.மு.க மகாநாடுகளில் ”சந்திப்போம் சந்திப்போம் 67 இல் சந்திப்போம்” என்று எழுப்பிய வார்த்தை முழக்கம் செயல் வடிவம் பெறும் 1967 தேர்தல் கடைசியில் வந்து சேர்ந்தது.

 1967 தேர்தலில்தான் வலுவான எதிர்க் கட்சிக் கூட்டணி தமிழ்நாட்டில் அமைந்தது. 1962லேயே ராஜாஜியின் சுதந்திராக் கட்சி, வலது கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் போன்றவற்றுடன் தி,மு.க வுக்குக் கூட்டணி ஏற்பட்டிருந்தாலும், அதை வலுவானதாகக் கொள்ள முடியாது.  அப்போதெல்லாம் வலது கம்யூனிஸ்ட் வந்தால் இடது வராது. இடது கம்யூனிஸ்ட் இணைந்து கொண்டால் வலது ஒதுங்கிக் கொள்ளும். (அதனாலேயே பல தொகுதிகளில், இரு கட்சி வேட்பாளர்களும் வெற்றி வாய்ப்பை இழந்து,  சொற்ப வித்தியாசத்தில் அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.)   


1959 இல் ’சோசலிஸச் சிற்பி’ நேருவின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின், லைசன்ஸ், பெர்மிட் பொருளாதாரக் கொள்கைகளுக்கு (licence & Permit Raj) எதிராக ராஜாஜி, சுதந்திரா கட்சியை ஆரம்பித்தார். சோசலிஸ்டு என்று சொல்லிக் கொள்பவர்களையே விரும்பாத அவர், கம்யூனிஸ்டுகள் கூட்டணிக்குள் வருவதை 1962ல் அவ்வளவு விரும்பவில்லை. ஆனாலும் ஒரு வகையான கூட்டணி ஏற்பட்டு இருந்தது. சுமாரான வெற்றிகளை சுதந்திரா கட்சி பெற முடிந்தது. ஆனால் ராஜஸ்தான் போன்ற ‘ராஜ விசுவாசப்’ பிரதேசங்களில் அது நல்ல  வெற்றியைப் பெற்றது. இங்கே நூறு சீட்டுகள் வரை போட்டியிட்டு ஆறு சீட்டுகள். சுமார் 7 சதவிகிதம் போல வாக்குகள் வாங்கினார். 1962 தேர்தலில் தி.மு. க, 1957 இல் பெற்ற 15 சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து 50 ஆக, மூன்று மடங்கிற்கும் மேலாக உயர்ந்தது. ஆனால் மகிழ்ச்சியை முழுதுமாகக் கொண்டாட முடியாமல் காஞ்சிபுரத்தில் அண்ணா வெற்றி பெற முடியவில்லை. ஆனந்த விகடனில் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார்கள். அண்ணாவின் கைகளில்  தி.மு.க. என்னும் குழந்தை வருத்தமான முகத்தோடு அமர்ந்து இருக்கும். அண்ணவின் சட்டைப்பையில் ”50 சீட்” என்றும் எழுதப்பட்டிருக்கும். சிரித்த முகத்தோடு speech balloon இல் அண்ணா, ”தம்பீ, எனக்காக அழாதே, உனக்காக சிரி,” என்று சொல்வது போல.  அண்ணா ராஜ்ய சபா உறுப்பினர் ஆகச் சென்றார். 


1964 உள்ளாட்சித் தேர்தல்களில்த்தான் சுதந்திரா கட்சியுடனான கூட்டணி ஒரு முழு வடிவுக்கு வந்து மகத்தான வெற்றிகளை காங்கிரசுக்கு எதிராகப் பெற முடிந்தது. திருநெல்வேலி,வேலூர் போன்ற முனிசிபாலிட்டிகளை (நகராட்சிகளை) தி.மு.க கைப்பற்றியது. பல காங்கிரஸ்‘ அபேட்சகர்கள்’ (வேட்பாளர்கள்) தோல்வி அடைந்தனர். அப்போது புழக்கத்தில் இருந்த தேர்தல் அகராதிப்படி அபேட்சகர் என்றால் வேட்பாளர். ஓட் செய்யுங்கள் என்றால் வாக்களியுங்கள். உள்ளாட்சித் தேர்தலின் பெயர் ‘ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்’. 1962ல் ’ஸ்தல ஸ்தாபன இலாக்கா மந்திரி,’ கடையநல்லூர் மஜீத். 1967 இல்  கலைஞர் பொதுப் பணித்துறை அமைச்சராகும் வரை அது ’மராமத்து இலாக்கா மந்திரி பதவி’. மாண்பு மிகு முதல்வர்  என்பதை, முதல் மந்திரி கனம் ஸ்ரீமான் பக்தவத்சலம் என்று நோட்டீஸில் அச்சடிப்பார்கள்.

 1967 கூட்டணியை தி.மு.க., அகரக் கூட்டணி என்று வர்ணித்தது. அ= அறிஞர் அண்ணா. ஆ= ஆச்சார்ய ராஜாஜி, இ= இஸ்மாயில் சாய்பு ( சிலர் ஆ= ஆதித்தனார், இடது கம்யூனிஸ்ட் என்றும் சொல்லிக் கொள்வார்கள்,) இது போக ம.பொ.சியின் தமிழரசுக்கழகம், ஃபார்வர்ட் ப்ளாக், ஆதித்தனாரின் ‘ நாம் தமிழர்’ கட்சி. எல்லாமும் இருந்தது. ஆனால் உண்மையில் அது மாணவர்களாகிய எங்களைப் பொறுத்து அரிசி, ஆளும்கட்சி வெறுப்பு, இந்தி எதிர்ப்புக் கூட்டணி  என்றே தோன்றியது. அப்போதைய காங்கிரஸ்காரர்கள். அரிசி கிடைக்காவிட்டால் எலிக்கறி சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். அதற்காக, ஒவ்வொரு ஊரிலும் அரசியல்க் கூட்டம், குறிப்பாகக் காங்கிரஸ் கூட்டம் நடைபெறும் இடத்திற்குச் சற்று முன்னர், செத்த எலிகளைத் தோரணம் போலக் கட்டித் தொங்க விடுவது தொண்டர்கள் தலையாய பிரச்சார உத்தி. இப்படி பதினாறு அடி பாயும் ஒரு தொண்டர் பட்டாளத்தை வேறு கட்சியில் பார்க்கவே முடியாது.தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்று அவ்வையார் இவர்களுக்காகத்தான் பாடினாளோ என்னவோ.  ஒரு கொடிக் கம்பம் நடுவது என்றால்க் கூட, அதற்குப் பெயிண்ட் அடிப்பதற்கு ஒரு பெயின்டர் எதற்கு நாமே அடிப்போம் என்று விடிய விடிய உட்கார்ந்து அடிப்பார்கள். அதே போல தெரு நீளத்திற்கு சணல்க் கயிறு கட்டி அதில்க் கழகக் கொடி ஒட்டி அது காயும் வரை காத்திருந்து மடித்து வைப்போம். எல்லாம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்டுவதற்காக. அப்போது டீ குடிப்பது கூட தொண்டர்கள் சொந்தக் காசில்தான்.    


திருநெல்வேலி பேட்டையில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே, வீதிக்குக் குறுக்காக, இரவோடு இரவாக இப்படி ஒரு பெருச்சாளியைத் தோரணம் கட்டி வைத்து விட்டார்கள். அன்று தி.மு.க சார்பில் எம்.ஆர்.ஆர் வாசு மீட்டிங், அதற்கு வருவோரெல்லாம் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்க்கவும் பெரிய பரபரப்பு ஆகி விட்டது. அதை அவிழ்ப்பாரில்லை. போலீஸ், காசு தருகிறோம் என்று நயமாகச் சொல்லியும் மிரட்டியும்  பஜாரில் அலையும் அன்றாடங்காய்ச்சிகள் கூட முன் வரவில்லை. கடைசியில்  ஒரு உயரமான சுமையுடன் வந்த லாரி தானகவே அறுத்து விட்டுப் போனபோது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் ஹோவென்று கத்தினோம். போலீஸ் விரட்டிக் கொண்டு வந்தது. ஏற்கெனவே மாணவர்களுக்கும் அவர்களுக்கும் இரண்டு வருடமாகத் தீராத பஞ்சாயத்து. 

  இப்போதோ பிரியாணிப் பொட்டலம் குவார்ட்டர், 300 ரூபாய் இது ஆண்களுக்கு. பெண்களாயிருந்தால், பிரியாணி அல்லது புளியோதரை தண்ணீர்ப் பாக்கெட், 200 ரூபாய். இதெல்லாம் இப்போதைய தேர்தல் திருவிழாவில் கூட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டு நாற்காலியில் அமர்த்தப் படும் தொண்டர்களுக்கான மொய். இதிலும் மேலிடத்தில் கள்ளக் கணக்குச் சொல்லி அதிகமாக வாங்கி ஆட்டையைப் போடுவது கட்சிக்காரர்களின் பொய். எந்த வேலையும் பார்க்காமல் இப்படிக் கிடைக்கும் பணத்திற்காகக் கூட்டத்தில் வெந்து வியர்வையில் கரைந்து காணாமல்ப் போகிறவர்களின் காலம் இது. 

சுதந்திராக் கட்சி கூட்டணியில் இணைந்ததில் சில வீடுகளின் பெரியவர்கள், மாணவர்களை அதிகம் மிரட்டுவதில்லை. மிரட்டினாலும் கேட்பது யார்.  பொதுவாக “என்னன்னும் போங்கலே.”  என்று தண்ணீர் தெளிச்சு விட்ட கேசுகள்தான் அதிகம். காணாததற்கு பழம்பெரும் காங்கிரஸ் தியாகிகள் எல்லாம் ராஜாஜியோடு சுதந்திராக் கட்சியில் இருந்தார்கள். அதைப் பயன் படுத்தி பிரமாதமான தேர்தல் உத்தியாக தி.மு.கவினர். ஒவ்வொரு ஊரிலும் அண்ணா பேசும் கூட்டத்திற்கு அப்படிப்பட்ட தியாகிகளைத் தலைமை தாங்க வைத்தார்கள். திருநெல்வேலியில் சாவடி கூத்தநயினார் பிள்ளை என்பவரின் தலைமையில் அண்ணா பேசினார். ஒரு காலத்தில் அவர் வீட்டில்தான் மகாத்மா காந்தி வந்து தங்கி இருந்தார். அநேகமாக எல்லா ஊரிலும் மாணவர்கள் தாங்களாகவே வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்கள். அவரவர் பகுதிகள் தவிர பக்கத்திலுள்ள பகுதிகளுக்கும் கூட்டமாகச் செல்வோம். சொந்தத் தெரு, வார்டு என்றால் எல்லாம்  அநேகமாகப் பழகின மக்கள்தான். அதனால் யார் வீட்டிற்குள்ளும் சுதந்திரமாகச் சென்று விடுவோம். எதிர்க் கட்சியினரால் அப்படி முடியாது. கடைசி நேரத்தில் பணம் கொடுக்கும் முயற்சிகளை முறியடிக்க இந்தப் பழக்கமும் நெருக்கமும் பெரிதும் உதவின. மக்களும் பணம் வாங்குகிற மனோ நிலையில் அன்று இல்லை. அப்போது ஆளும் கட்சிக்கு மருந்துக்குக் கூட தொண்டன் கிடையாது. தினமும் இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் வாங்கிக் கொண்டு சிலர் வேலை பார்த்தார்கள். அதுவும் நிழலில் உட்கார்ந்து கொண்டு பூத் ஸ்லிப் எழுதுவது போன்ற மேனி நோகாத வேலைகள் மட்டுமே.

 

நாங்கள் விருது நகர் போய் இரண்டு நாட்களாவது சீனிவாசனுக்கு தேர்தல் வேலை பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அங்கே இப்போது பயங்கரக் கெடு பிடியாய் இருக்கிறது போக வேண்டாம்,  என்று தெருவின் மூத்த தொண்டர்கள் எங்களைப் போக அனுமதிக்கவில்லை. தேர்தலுக்கு முந்திய இரவுகளில் போலீஸ் மாணவர்களைக் குறி வைத்துப் பிடிப்பதில் மும்முரமாக இருந்தது. அதனால் எங்களை வீதிக்குப் போகக்கூட அனுமதிக்கவில்லை. ஆனால் தேர்தல் அன்று போலீஸின் முகமே மாறி விட்டது. அதுவே வெற்றிக்கு அறிகுறி என்று தெரிந்து விட்டது. தேர்தல் அன்று அதிகாலையில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை, வாக்குச் சாவடிக்கு அனுப்பத் தயாராக இருங்கள் என்று சொல்லி விட்டார்கள். உண்மையிலேயே அதுதான் மிக முக்கியமான வேலை. ஒரு தடவைக்கு மூன்று தடவை ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, “ ஓட்டுப் போட்டாச்சா, கூட்டமே இல்லை போய்ட்டு வந்துருங்க ஐயா, அண்ணாச்சி, மதினி, அக்கா என்று சலிக்காமல் சொல்லுவோம். எல்லா ஊர்களிலும் இதுதான் நிலைமை. அதனால் பதிவான வாக்குகள் 77 சதவிகிதம் வரை கணிசமாக உயர்ந்தது. 1962 இன் நிலைமை தலை கீழாக மாறியது. தி..மு.க 137 இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் கட்சி 51 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

 ஆனால் என்ன அவ்வளவு பாடுபட்டும் எங்களால் ‘ஓட்டு’ப் போடமுடியவில்லை, அப்போதைய ’வாக்களிக்கும் வயதான 21 எங்களில் பலருக்கும் வந்திருக்கவில்லை.  நாங்கள் பெரும்பாலானோர் எங்கள் 18 வயதில் இருந்தோம். ராஜிவ் காந்தி அரசால், 61 வது அரசியல் சட்டத் திருத்தப் படி 1989 மார்ச்சு முதல் வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப் பட்டது. அதன் பலனை அவர் அனுபவிக்க முடியவில்லை. இப்போதைய தேர்தலிலும் வெற்றியை நிர்ணயிக்கப் போவது சமீபத்தில் 18 வயது ஆகிய கணிசமான புது வாக்காளர்கள்தான் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...