Wednesday, March 6, 2019

*நான்காவது முறையாக மாநிலங்களவைக்கு செல்லும் திரு வை.கோ அவர்களுக்கு வாழ்த்துகள்...* *மலரும் நினைவுகளை பதிவு செய்கின்றேன்.......*



————————————————
வைகோ அவர்கள் 1978இல் முதன்முதலாக மாநிலங்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டார். தற்போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு  நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டில் வைகோ அவர்களுக்கு கூட்டணியின் மிக முக்கியத் தலைவர் என்ற நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக வரும் ஜூன் மாதம் நடக்கும் தேர்தலில்  அறிவிக்கப்பட உள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.  கூட்டணியின் தலைவரான கழகத் தலைவரோடு ஏற்பட்ட உடன்பாட்டில் இந்த முடிவு எட்டப்பட்டது. 

ஈழப்போர் 1984இல் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். இரண்டாம் தடவை மாநிலங்களவை உறுப்பினராக வைகோ போட்டியிட்ட சமயம்; அதற்கான சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு போடும் தேர்தல் சட்டமன்ற வளாகத்தில் நீண்டகாலத்திற்கு பின் நடந்தது. ஆற்காடுவீராசாமியும்போட்டியிட்டார்.
தங்கபாலு போன்றோர் களத்தில் இருந்தனர் .அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தள், லோக் தள் என பல கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியாக மக்கள் நலக்கூட்டணி என பழ.நெடுமாறன் தலைமையில் செயல்பட்டது. இந்த அணியில் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். வைகோவிற்காக நெடுமாறன் தலைமையில் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் (கா) இயக்க சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளை பெற அடியேன் பணியற்றிய நினைவுகள் இன்றும் ஞாபகத்திற்கு வருகிறது.

சிவகாசியில் திமுகவின் வேட்பாளராக  வைகோ அவர்கள்  அதிமுகவின் வேட்பாளர் காளிமுத்துவை எதிர்த்து 1989ல்போட்டியிட்டு வெற்றி கிட்டத சூழ்நிலை ஏற்பட்டது. அந்த தேர்தலில் வை.கோவிற்காக சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் அடியேன் களப்பணி ஆற்றியது உண்டு. அந்த தேர்தல் முடிந்தபின்னர் 6 மாதத்தில் மாநிலங்களவை தேர்தலில்  இரண்டாவது முறையாக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி நிறைவடையும் காலக்கட்டத்திற்கு வந்தது. 

அந்த காலகட்டத்தில்,இந்த நிலையில் ஒரு நாள் காலைப் பொழுதில் அப்போதைய கழக திருநெல்வேலி மாவட்ட செயலாளர் டி.ஏ.கே.இலக்குமணன் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டார். அன்றைக்கு சென்னையில் இருந்தார். அப்போது செல்பேசி எல்லாம் கிடையாது. என்ன? என்றேன். நாளை காலை தினகரன் நிறுவனர் அன்றைய அறநிலையத்துறை, வனத்துறை அமைச்சர் கே.பி.கந்தசாமி அவர்களின் இல்லத்திற்கு மறுநாள் காலை வாருங்கள் சற்று பேச வேண்டுமென்றார். மறுநாள் காலை அவரது இல்லத்திற்கு சென்றபோது அங்கு கே.பி.கேயும், டி.ஏ.கே.இலக்குமணனும் பேசிக்கொண்டிருந்தார். நானும் அங்கே சென்றேன். அங்கு மறைந்த புளியங்குடி க. பழனிச்சாமி உடனிருந்தார். கழகத்தின் நல்ல அருமையான  நகைச்சுவை பேச்சாளராவார். அப்போது வைகோ அவர்கள் டெல்லியில் இருந்தார்.

எங்கள் மூன்று பேரிடம் கே.பி.கே, அன்றைய கைத்தறித் துறை அமைச்சர் கா. தங்கவேலு, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என். பெரியசாமி ஆகியோரெல்லாம் தலைவர் கலைஞரை சந்தித்து வைகோ அவர்கள் திரும்பவும் ராஜ்ய சபாவிற்கு போக வேண்டுமென்பதை தலைவரிடம் கேளுங்கள் என்றார். அப்போது தூத்துக்குடி என். பெரியசாமி சென்னையில் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்தார். அவருடன் டி.ஏ.கே.இலக்குமணன் பேசி அன்று மாலையே தலைவர் கலைஞர் அவர்களை சந்திப்பதென்று முடிவெடுத்தோம். 

இன்றைக்கும் நினைவில் உள்ளது.  மாவட்டச் செயலாளர்கள் டி.ஏ.கே. இலக்குமணன், தூத்துக்குடி என். பெரிசயாமி, அன்றைய கைத்தறித்துறை அமைச்சர் ச.தங்கவேலு, புளியங்குடி க. பழனிச்சாமி, மற்றும் நான்  மாலை 5 மணி அளவில் தலைவரின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றோம். 

"என்னய்யா,  எல்லாம் ஒன்றாக வந்திருக்கீங்க", என்றார் தலைவர். 

"வை.கோ அவர்களை மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும்" என்ற கோரிக்கையை டி.ஏ.கே.இலக்குமவணன் சொன்னார். 

"இதை நீங்கள் சொல்லித்தான் நான் செய்வேனா?" என்ற பொருள்படும்படி பேசினார். 

"இருந்தாலும் தலைவர்கிட்ட சொல்லனுமில்லையா" என்று இலக்குமணன் பதிலளித்தார்.

மூன்றாவது முறையாக 1990ல்  மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்டு  18 ஆண்டுகள் ஏற்கனவே  மாநிலங்களவையில் பணியாற்றி உள்ளார். 

தற்போது நான்காவது முறையாக மாநிலங்களவை செல்வதற்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது.  தமிழகத்தின் உரிமைகளை பெற வைகோ அவர்களின் குரல் திரும்பவும் மாநிலங்களவையில் கேட்கும். 

1998இல் பிப்ரவரி மாதம் சிவகாசி தொகுதியில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 அக்டோபர் மாதம் இரண்டாவது முறையாக சிவகாசி தொகுதியில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடாளுமன்றம் செல்லும் வேளையில் அதிகநாட்கள் நாடாளுமன்றத்தில் பணியாற்றியவர் என்ற பெருமை முரசொலி மாறன் மற்றும் வைகோவிற்கு உண்டு.

பல நல்ல செய்திகளையும், நிகழ்வுகளையும்  நாம் பார்க்கிறோம். காலச்சக்கரம் இவ்வளவே வேகமாக சுழன்று கொண்டிருக்கின்றது. 

கிட்டத்தட்ட 15 ஆண்டு காலத்திற்கு பிறகு திரும்பவும் நாடாளுமன்றத்தில் அவருடைய குரல் கேட்கவேண்டுமென்று கழகத் தலைவர் தளபதி அவர்களும், கழகத் தோழர்களும், மறுமலர்ச்சி திமுக சகோதரர்களும் விருப்பமாகவே. வாழ்க வைகோவின் பணி.

#வைகோ_மாநிலங்களவை_உறுப்பினர்
#வைகோவின்_பயணம்
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-03-2019

No comments:

Post a Comment

Meenanbakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup #Panakotai Maheswaran #Kathersan

Meenambakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup  #Panakotai Maheswaran #Kathersan 1) https://www.thehindu.com/news/cities/chenna...