Friday, July 22, 2022

மாநில சுயாட்சி – காங்கிரஸ்காரரின் குரல்




Date: 5 July 2022 at 10:28:31 PM IST
To: vocnoolagam2000@gmail.com
Subject: PREFACE


       மாநில சுயாட்சி – காங்கிரஸ்காரரின் குரல்

                             -  வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

தினமணி ஆசிரியர் ஏ.என் சிவராமன் 1937 –இல் (அன்றைக்கு தினமணியில் உதவி ஆசிரியர்,டி.எஸ் சொக்கலிங்கம் ஆசிரியர்) எழுதிய மாகாண சுயாட்சி நூலை,நவயுகா பிரசுராலயம் லிமிடெட், ஜி டி(ஜார்ஜ் டவுன்) மதராஸில் இருந்து வெளியிடப்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே முதல்முறையாக மாநில சுயாட்சி முறையை பற்றி காங்கிரஸ்காரராக இருந்தாலும் தமிழில் நூலாக எழுதி வெளியிட்டார் ஏ.என்.எஸ்.அவர் நாட்டின் விடுதலைக்கு முன்பே மாநில சுயாட்சி வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக இந்நூலை எழுதியுள்ளர்.

1932-வருடத்தில் ஆங்கிலேயர் கொண்டு வந்த சட்டத்தை மறுத்து போராட்டம் நடந்த போது சிறை சென்றவர்களுக்காக இந்த நூலை அர்ப்பணித்துள்ளார். இந்நூல் வெளியிடப்பட்டு ஏறத்தாழ 90 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த அற்புத நூலை அருமை நண்பர் கவிஞர் இளைபாரதி வ.உ.சி நூலகம் மறு  பதிப்பு செய்கின்றது என்பது மகிழ்ச்சியான செய்தி..!

இன்றைய இந்தியாவில் பல்வேறு மொழிகள்,கலாச்சாரங்கள்,இருக்கின்ற நிலையில், ஒவ்வொரு மாநிலத்திற்கான உரிமைகள் அதனுடைய சிறப்புகள் பாதுகாப்பதற்கான கூடிய அளவில் பன்மையில் ஒருமை என்ற நிலையில் மாநில சுயாட்சி வேண்டுமென்று இன்றைக்குஅல்ல காங்கிரஸ்காரர் விடுதலை போராட்ட காலத்திலேயே வலியுறுத்தினார்.பூரண சுயராஜ்யம் திலகர் கேட்டதுதான் இதன் ஆரம்ப கட்ட விதையாகும்.

தலைவர் கலைஞர் திமுக ஆட்சி காலத்தில் அமைத்த ராஜமன்னார் குழுவின் அறிக்கை இன்றும் முக்கியமான ஆவணம் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். ஈழத் தமிழர் பிரச்சினையில் 1985இல் திம்பு பேச்சுவார்த்தை இந்திய அரசு மூலமாக நடந்த பொழுது விடுதலைப்புலி தலைவர் சகோதரர் வேலுப்பிள்ளை பிரபாகரனும்,அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவராக இருந்த அப்பா பிள்ளை அமிர்தலிங்கமும் என்னை அழைத்து ராஜ மன்னர் குழுவின் அறிக்கையை சாரா அம்சத்தின் கருத்துக்களை தனியாக முக்கிய குறிப்புகளை தொகுத்துக் கொடுங்கள் என்று சொன்னபொழுது தயாரித்துக் கொடுத்தேன். திம்பு பேச்சுவார்த்தைக்கு போகும் போது பிரபாகரனும் அதைக் குறித்து திலகர் போன்றவர்களிடம் விவாதித்துவிட்டு தான் சென்றார். திம்பு பேச்சுவார்த்தை நடக்கும்போது நானும் அங்கே தான் இருந்தேன்.அமிர்தலிங்கம் அவர்களும் ராஜமன்னார் குழுவின் அறிக்கையை மையப்படுத்தி தான் அதில் கலந்து கொண்டடு பேசினார்.இலங்கையில் இது மாதிரி சுயாட்சியான ஒரு தன்மை எங்களுக்கு வேண்டும் என்று கேட்டார்கள். தனி ஈழம் அமைந்தால் ராஜமன்னார் குழுவின் அறிக்கையில் சொல்லப்பட்ட சில கருத்துக்களை எடுத்துக் கொள்வோம் என்று  வேலுபிள்ளை பிரபாகரன் அன்று சொன்னதுண்டு. இதையெல்லாம் இங்கே பதிவு செய்யவேண்டும் விரும்புகின்றேன்.

மாநில சுயாட்சி என்பது காலத்தின் கட்டாயம். இந்தியா பல்வேறு மொழிகள், தேசிய இனங்கள், கலாச்சாரங்கள் கொண்ட நாடாகும். இந்திய வட்டார அபிலாசைகள், கோரிக்கைகள் அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க இது ஒரு முக்கியமான காரணியாகும். ‘பன்மையில் ஒருமை’ என்பது இந்திய அரசியல் இயங்கியலின் அடிப்படைத் தத்துவமாகும்.

 

மாநிலங்களின் அதிகாரங்கள் முறைப்படுத்தபட்டால்தான் ஒரு மாநில அரசு முழுமையாகத் தன் திட்டங்களையும், தன்னுடைய அதிகார வரம்புக்குள் மக்கள் நல அரசாக மக்களுக்காகப் பணி செய்ய முடியும்.   இந்தியாவைப் பொறுத்தவரையில் மாநில அரசினுடைய நேர்முகப் பணிகள்தான் அதிகம். அந்தப் பணிகளை நிறைவாகச் செய்ய வேண்டுமென்றால் இன்றைய கால கட்டத்தில் மாநில சுயாட்சி அவசியமானது.

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது அண்ணாவின் உரத்தக் குரல்.  பேரறிஞர் அண்ணா தன்னுடைய உயிலை தைப்பொங்கல் திருநாள் -காஞ்சி இதழில் வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டது வருமாறு:

அண்ணாவின் உயில்;

"...மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரங்களைப் பெறத்தக்க விதத்தில் இந்திய அரசியல் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துக் கூறி வருகிறேன். இதற்கான நல்லாதரவு நாளுக்கு நாள் வளர்ந்தபடி உள்ளது என்பதிலே எனக்குத் தனியானதோர் மகிழ்ச்சி; நமது கழகம் மட்டுமின்றி வேறு பல அரசியல் கட்சிகளும் கட்சி சாராத அறிவாளர் பலரும் இதற்கு ஆதரவு காட்டுகின்றனர்..."

அவர் அதற்கு வெகுகாலத்திற்கு முன்பேயே, 1963இல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது சில கருத்துகளைக் கூறியிருந்தார்:

"அரசினுடைய 'இறையாமை' (ஒப்புயர்வற்ற ஆட்சி அதிகாரம்) (Sovereignty) என்பதற்கு நாம் கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது (Political Sovereignty) பொது மக்களிடம் நிலைத்துள்ளதென நமது அரசியலமைப்பின் (Constitution) முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறைமையானது (Legal Sovereignty) கூட்டாட்சி ஒன்றியத்திற்கும் (மத்திய அரசு) அதன் அங்கங்களுக்குமிடையே (மாநிலங்கள்) பிரித்துத் தரப்பட்டுள்ளது.

இன்னும் அதிகப் பயன்களை விளைவிக்கும் இறைமையைப் பெற்ற அங்கங்களாக, மாநிலங்களைத் திகழச் செய்வதற்கே எங்கள் திட்டங்கள் பயன்படுகின்றன என்று நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? திராவிட நாடு வேண்டும் என்ற கோரிக்கையைக் கிளப்பியவுடன், திட்டங்கள் நாங்கள் 'இறைமையின்' ஆணிவேரை வெட்டுகிறோம் என நீங்கள் ஏன் எண்ணிக் கொள்கிறீர்கள்? முழுமையான இறைமை, குறிப்பிட்ட ஒரே ஓர் இடத்தில் எப்போதும் தங்கி விடுவதில்லை."

நாம் ஒரு கூட்டாட்சியமைப்பை (Federal form) ஏற்றிருக்கிறோம். அரசமைப்பை உருவாக்கியவர்கள், ஒற்றையாட்சி  அமைப்புக் (Unitary form) கூடாது; கூட்டாட்சியமைப்பு முறை தான் வேண்டுமென்று விரும்பினார்கள். ஏனெனில் அரசியல் தத்துவஞானிகள் பலர் சுட்டிக் காட்டியுள்ளபடி, இந்தியா மிகப் பரந்து கிடக்கின்றது.”

"உண்மையில் அதனை ஒரு துணைக் கண்டம் என அழைக்கக் கூடிய அளவிற்கு அது பரந்து விரிந்து கிடக்கின்றது. எஃகால் செய்த வரைச் சட்டத்தைப் போல் வலிவான ஓர் ஒற்றையாட்சியமைப்பை ஏற்க முடியாத அளவிற்கு, இந்நாடு மாறுபட்ட மரபுகளையும், வேறுபட்ட வரலாறுகளையும், பல தரப்பட்ட மனோபாவங்களையும் கொண்டுள்ளது.

“... சென்ற பதிமூன்றாண்டுகளாக நமது கூட்டாட்சி செயல்படும் தன்மையானது மாநிலங்களிடையே விரக்தி உணர்ச்சியைத் தோற்றுவித்துள்ளதென்பதே எனது குற்றச்சாட்டு. மாநிலங்கள், சுங்கத் தொகை வசூலிக்கக்கூடிய சாதாரண நகராட்சி மன்றங்களைப் போல் விரைந்து மாறி வருகின்றன. அவை, இருக்கும் இடம் தெரியாமல் பின்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டுமென்ற இயற்கையான உணர்வுகள் மாநிலங்களிடம் தோன்றியுள்ளன. நமது கூட்டாட்சியமைப்பின் இவ்வகையான நடைமுறை, மாநிலங்களை மேலும் மேலும் விரக்தியடையச் செய்துள்ளது என்பதை நான் தெளிவாக்க விரும்புகிறேன். நமது அரசியல் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் மறு ஆய்வும் செய்யப்பட வேண்டும் இதனை மத்திய அரசு உணர வேண்டும் என்பதே மாநிலங்களின் கோரிக்கைகளாகும்..."

“...எனவே நமது அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி முறையிலுள்ள பல ஒற்றை ஆட்சித் தன்மைகளை எதிர்த்துப் போரிடுகின்ற ஒரு தாக்குதல் முன்னணியாகவே (Spearhead) நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கருதிக் கொள்ள வேண்டுகிறேன். நாடாளுமன்றத்தின் அறிவுசால் உறுப்பினர்களாகிய நீங்கள் (மாநிலங்களின்) இந்தச் சிக்கலை ஏன் மூடி மறைக்கின்றீர்கள்? நீங்கள் அதனை உயர்மட்ட அரசு மன்றத்திற்குக் கொண்டு வருவீர். அதனை (அச்சிக்கலை) தங்குத் தடையின்றி நடமாட அனுமதிப்பீர்; (தற்போதைய) கூட்டாட்சியை, ஒரு மெய்யானக் கூட்டாட்சியாக மலர வைப்பதற்கு வழி வகை செய்திடுவீர்...'' என முழங்கினார்,

''விடியற்காலையே வாழ்க" (Hail the Dawn) என்ற மகுடமிட்டு. 1969ஆம் ஆண்டின் "ஹோம்ரூல்" (Home Rule) வார இதழில் "தம்பிக்கு" எழுதிய தன் இறுதி முடங்கலில்,

''அன்புத்தம்பி! பதவிப் பித்துப் பிடித்துத் திரிபவனல்லன் நான். வெற்றுத்தாளில் கூட்டாட்சி சார்புடையது எனக் கூறி, நடைமுறையில் மத்திய அரசிற்கு மென்மேலும் அதிகாரங்களைக் குவித்துக் கொண்டிருக்கிற (நமது) அரசியல் சட்டத்தின் கீழியங்கும் ஒரு மாநிலத்திற்கு நான் முதலமைச்சர் என்பதில் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை. இதற்காக மத்திய அரசிற்கு எரிச்சலூட்டி, டெல்லியுடன் சச்சரவு கொள்வதே என் நோக்கம் என்று எனது நல்ல நண்பரான உயர்திரு. நம்பூதிரிபாடு கூறுவதையும் நான் விரும்பவில்லை. அதனைச் சரியான கால கட்டத்தில் தீர்மானிக்க வேண்டுமென்பதும் இன்றியமையாதது. உண்மைதான்; அப்படித் தீர்மானிக்கும் முன்னர், கூட்டாட்சித் தத்துவத்தை மக்களுக்குக் கற்றுத் தரவேண்டும். கொல்லைப்புற வாயில் வழியாக நுழையும் ஒருவகை இரட்டை ஆட்சியே நமது இன்றைய அரசியல் சட்டம் என்பதை, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலிருப்பதன் மூலமாக, சிந்திக்கும் ஆற்றல் படைத்த மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரமுடியுமெனில், உண்மையில் அதுவே நாம் அரசியல் உலகத்திற்குச் செலுத்திய உரிய பங்காகும்."

இந்தச் சூழலில் அண்ணா மறைவுக்கு பின் தலைவர் கலைஞர் தமிழக முதல்வரானார். அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் முதன்முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்ற கலைஞர் டெல்லி செல்கிறார். டெல்லி சென்றும் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அமைச்சர்களை சந்தித்து விட்டு, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, 1969, மார்ச் 17-ஆம் நாள், மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்கள் அறியப்பட வேண்டும், மாநிலங்களுக்கு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. எங்களுடைய தலைவர் அண்ணாவின் கனவு. அதுவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையும் கோட்பாடும் என்று தெளிவாக கலைஞர் குறிப்பிட்டது ஒரு முக்கியமான விடயமாகும். அதுமட்டுமல்ல, மாநில சுயாட்சி குறித்து அறிந்து விரிவான அறிக்கையை வழங்கக்கூடிய அளவில் ஒரு குழுவை அமைக்க இருக்கிறோம் என்றும் கலைஞர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், 1969 ஆகஸ்டு 19 ஆம் நாள் தமிழக சட்டமன்றத்தில் இதுகுறித்த முறையான அறிவிப்பை முதல்வர் கலைஞர் அறிவித்தார். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.வி. ராஜமன்னார் தலைமையில், சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஏ.லட்சுமணசாமி முதலியார், நீதிபதி பி. சந்திரா ரெட்டி மூவர் கொண்ட குழுவை அமைத்தார்.

அதேகட்டத்தில், சுவிட்சர்லாந்து நாட்டில் நடைமுறையில் இருப்பது போல, தமிழகத்திற்குத் தனிக் கொடி வேண்டும் என்று ஒரு கோரிக்கையை கலைஞர் எழுப்பினார். அதுமட்டுமல்ல நாட்டின் விடுதலைத் திருநாளில் அந்தந்த மாநில முதல்வர்கள், அந்தந்த மாநிலத் தலைநகரில் கொடிகளை ஏற்ற உரிமையையும் பெற்றுத் தந்தவர் கலைஞர்.

ராஜமன்னார் குழுவினர் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் இதுகுறித்து ஆய்வு நடத்தி, பல்வேறு கட்சிகள், முக்கியத் தரப்பினர்களிடம் வினாத்தாளை அனுப்பி, பதிலைப் பெற்று அறிக்கையை முதல்வர் கலைஞரிடம் 27.05.1971 அன்று அளித்தனர்.

தலைவர் கலைஞர் 1969 இல் தமிழக முதல்வர் ராஜமன்னார் குழுவின் அறிக்கையை குறித்து 1974 இல் பெற்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பியதெல்லாம் கடந்த கால நிகழ்வுகள்.தமிழக சட்டப்பேரவையிலும் மேலவையில் இது குறித்து சிறப்பான விவாதங்கள் இரண்டு மூன்று நாட்கள் நடந்தன. அன்றைக்கு ஆளும் காங்கிரஸில் அதாவது இந்திராகாந்தி காங்கிரஸில் சட்டமன்ற உறுப்பினர்கள்  இல்லை.காமராஜர் தலமையில் உள்ள ஸ்தாபன காங்கிரஸ் மட்டும் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அன்றைக்கு சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன், செ.மாதவன் இந்த விவாதங்களில் பங்கேற்றனர்.அதுமட்டுமல்ல பெ.சீனிவாசனும்,ஆலடி அருணாவும் எதிர்வினையாக விவாதிட்டனர். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யா , அன்றைய சோசியலிஸ்ட் கட்சியின் ஏ.ஆர் மாரிமுத்து, எஸ்.எஸ் ராமசாமி படையாட்சி,ஸ்தாபன காங்கிரஸ் பொன்னப்ப நாடார் ,ஜேம்ஸ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கே.டி.கே தங்கமணி என இந்த விவாதத்தில் பலர் கலந்து கொண்டனர்.அன்று விவாதித்த சட்டமன்ற குறிப்புகள்  படிக்கவே  ஆர்வமாக இருக்கும். எச்.வி ஹண்டே, அனந்த நாயகி, கோவை செழியன் போன்றோரின் விவாதங்கள் சட்டமன்றத்தில் இடம் பெற்றன.

கூட்டாட்சி என்பது உலகமறிந்த ஒரு கோட்பாடுதான். அமெரிக்காவிலும் சரி, கனடாவிலும் சரி, மற்றும் ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளிலும் சிறப்பாக இத்தத்துவம் நடைமுறையில் உள்ளது.

மாநில சுயாட்சி என்பது விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் தலைவர்களே வலியுறுத்திய விடயம் தான். நாட்டின் விடுதலைக்கு முன்பே மாகாண சுயராஜ்யம் என்றுதான் காங்கிரஸ், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குரல் கொடுத்தது. அதுதான் மாநில சுயாட்சி. இன்னும் சற்று வரலாற்றைப் பின்னோக்கி கவனித்தால் லக்னோவில் நடந்த காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்திலும் இது விவாதிக்கப்பட்டதுதான்.

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட 11.12.1947 தேதியிட்ட அறிக்கையில் மாநிலங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் பற்றி, தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ''தன்னாட்சி உரிமை கொண்ட உறுப்புகளுடன் அதாவது மொழி, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்களுக்கும் சுதேச சமஸ்தானங்களின் பகுதிகளும் வயது வந்தோருக்கு வாக்குரிமை என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களோடு கூடிய ஒரு கூட்டாட்சியாக இந்திய அரசியல் அமைப்பு இருக்கும்.

இந்தியக் கூட்டாட்சி பல்வேறு பகுதிகளினால் மனமுவந்து ஏற்றுக் கொள்ளப்படுகிற ஒரு கூட்டு அமைப்பாகவும் இருக்கும். இந்த இந்தியக் கூட்டாட்சி அங்கம் வகிக்கும் மாநிலங்களுக்கு அதிகபட்ச சுதந்திரம் இருக்கும். மத்திய அரசுக்கு ஒதுக்கப்படும் அதிகார இனங்கள் பொதுவானவையாகவும், முக்கியமானதாகவும் ஒரு சிறிய பட்டியலுக்குள் அடங்கியவையாகவும் இருக்கும்.

மேலும், மாநிலங்களில் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய பொதுப் பொருள்களைக் கொண்ட ஒரு விருப்புப் பட்டியலும் இருக்கும்” என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

மதன்மோகன் மாளவியா, சாப்ரு, ஜின்னா, முகமது அலி அடங்கிய 19 பேர் பிரகடனம் செய்ய 1916-இல் 'லக்னோ ஒப்பந்தம்' மாநில எல்லைக்குள் முழு சுயாட்சி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தது. மௌலானா அபுல்கலாம் ஆசாத், 03.04.1946-ஆம் ஆண்டு அறிவித்த திட்டத்தின்படி நாட்டின் பாதுகாப்பு, அனைத்து இந்திய போக்குவரத்து, வெளியுறவு, போன்ற துறைகள் மட்டும் மத்திய அரசிற்கு உட்பட்டதாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் தனி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதைப்போல மற்ற மாநிலங்களுக்கும் உரிமைகளை வழங்குவதில் ஏன் மத்திய அரசு மந்த நிலை காட்டுகிறது என்பது தெரியவில்லை. மத்திய - மாநில உறவுகளில் பிரச்சனைகள் எழுப்பப்பட்ட பொழுது, அதை அறிந்து தீர்க்க ஒரு மத்திய - மாநில உறவு மன்றம் அமைக்கப்பட வேண்டும். இது உச்சநீதிமன்றம் போன்ற அமைப்பாக இயங்க வேண்டும். அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணை குறிப்பிட்டவாறு அனைத்து மொழிகளும், ஆட்சி மொழிகளாக அறிவிக்க வேண்டும்.

அகில இந்திய அளவில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி.இராமராவ், கர்நாடக முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, இன்றைக்கு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, முன்னாள் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சிவீ ரெட்டி, நீதிபதி வி.ஆர். கிருஷ்ண அய்யர் உள்ளிட்ட பல முதுபெரும் தலைவர்கள் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்று தமிழகத்திலிருந்து முதன் முதலாக எழுப்பப்பட்ட இந்த உரிமைக் குரலுக்கு ஆதரவாகக் கடந்த காலங்களில் குரல் கொடுத்துள்ளனர். இவர்களின் தேசிய ஒருமைப்பாட்டின் மீதுள்ள பற்றை யாரும் சந்தேகம் கொள்ள முடியாது.

இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் மாநிலங்களுக்குச் சேர வேண்டிய அதிகாரங்களை மத்திய அரசு உடனடியாக கவனித்து வழங்க வேண்டும். ஒரு சங்கிலியின் வலிமை என்பது அதனுடன் இணைந்துள்ள ஒவ்வொரு வளையத்தின் வலிமையைப் பொருத்ததாகும். அதைப்போல் இந்தியாவின் வலிமை அதன் மாநிலங்களின் உரிமை ஆகும். இதை உணர்ந்து மத்திய மாநில அரசுகளில் அதிகாரங்கள், சம அளவில் இருந்தால் தான் ஜனநாயகம் சரியாக இந்தியாவில் இயங்கும். மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தவறானக் கண்ணோட்டத்துடன் பிரிவினைவாதம், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் என்ற முறைகளில் ஒருபோதும் அணுகக்கூடாது.

அன்றைய காலகட்டத்தில் காங்கிரசும் பல்வேறு அரசியல் இயக்கங்களும் இதைப் புரிதலோடு பேசியுள்ளன. அந்த அளவில் கருத்தோட்டங்கள் அன்றைக்கே நிலவினாலும் இன்னும் அந்த இலக்கினை எட்டாமல் இருக்கின்றோம்.

நாடு சுதந்திரத்திற்குப் பிறகு மாநில சுயாட்சிக்காகப் பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்தன. அதில் பிரதானமாக தலைவர் கலைஞர் அவர்கள் அமைத்த ராஜமன்னார் குழுதான் முக்கியமானதாகும்.

அந்த வகையில்,

1. மத்திய அரசு மொரார்ஜி தேசாய் தலைமையில் நிர்வாக சீர்திருத்தக் குழுவை அமைத்து மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்தது. சில காலம் மொரார்ஜி தேசாய் அந்தப் பொறுப்பில் இருந்துவிட்டு பதவி விலகினார். அந்தக் குழுவின் தலைவராக கர்நாடகாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அனுமந்தையா நியமிக்கப்பட்டார். இவருடைய முயற்சியில்தான் பெங்களூருவில் உள்ள சட்டமன்றக் கட்டிடம் விதான் சவுதா கட்டப்பட்டது. அனுமந்தைய்யா அரசியல் நிர்ணய சபையில் பேசும்போது மாகாண சுயாட்சி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். அது அரசியல் சாசனத்தில் இடம்பெற வேண்டும் என்றும் குரல் கொடுத்தவர்.  இந்தக் குழு ஆய்வு நடத்தி 28 செப்டம்பர் 1967- ல் மத்திய - மாநில உறவுகள் குறித்தான விரிவான அறிக்கையை சில தொகுதிகளாகத் தொகுத்து மத்திய அரசிடம் முதன் முதலாக வழங்கியது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால்; இதில், மத்திய மாநில உறவுகளை ஆராயத் துணைக்குழுவின் தலைவராக, சட்ட நிபுணர் எம்.சி.செதல்வாட் தலைமையில் அமைந்த குழுவில், அன்றைய சென்னை மாநில முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பக்தவத்சலமும் உறுப்பினராக இருந்தார். அவரோடு மற்ற உறுப்பினர்கள், மத்திய முன்னாள் ராஜாங்க அமைச்சர் தாரகேஸ்வரி சின்ஹா (என்னுடைய மாணவ அரசியல் காலத்தில் என் மீது அன்பு கொண்டவர். தமிழகம் வந்தால் நான் அவரோடு பயணிப்பதுண்டு. டெல்லி சென்றால் அவருடைய இல்லத்தில் தங்குவதும் உண்டு. அருமையாக ஆங்கிலத்தில் உரையாற்றுவார். டெல்லி நாடாளுமன்றக் கட்ட்டத்திற்கு என்னை முதன்முதலாகன் அழைத்துச் சென்றவர் இவர் தான்), பி.சி.மேத்யூ, மற்றும் ஜி.எஸ்.சர்மாவோடு இந்தத் துணைக்குழுவுக்கு, என்.கே.முகர்ஜி உறுப்பினர் இயக்குநராக பணியாற்றினார்.

2. தமிழில் தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன் ‘மாகாண சுயாட்சி’ என்ற நூலை விரிவாக எழுதியிருந்தார். இவரும் காங்கிரஸ்காரர்.

3. மத்திய முன்னாள் அமைச்சர் நுண்ன்மான் நுழைபுலம் கொண்ட மறைந்த கே.சந்தானத்தின் மத்திய-மாநில உறவு குறித்தான அறிக்கை – 01.04.1970

4. சிரோமணினி அகாலிதளம் கட்சி, 16-17 அக்டோபர் 1973ஆம் ஆண்டு, முன்னாள் பஞ்சாப் முதல்வரும், முன்னாள் தமிழ்நாடு ஆளுநருமான சுர்ஜித் சிங் பர்னாலா, ஜிவான் சிங், பல்வந்த் சிங் உள்ளிட்ட 12 பேர் குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கையினை, “அனந்த்பூர் சாகிப்” மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றியது. பிரகாஷ் சிங் பாதல் முன்னெடுப்பு இதில் முக்கியமானது.

5.மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு, பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசுக்கு 01.12.1977-ல் அனுப்பிய மத்திய மாநில உறவுகள் குறித்தான அறிக்கை. திரும்பவும் முதல்வர் ஜோதுபாசு மத்திய-மாநில உறவுகள் நிதிப்பங்கீடுகள் குறித்து அக்டோபர் – 8, 1983இல் அனுப்பிய விரிவான வெள்ளை அறிக்கை. இந்த அறிக்கை தான் பாரூக் அப்துல்லா கூட்டிய ஸ்ரீநகர் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

6. இந்தியாவில் பல்வேறு திசைகளில் இருந்து மாநில சுயாட்சி, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் என்ற எழுந்த உரத்தக் குரல்களுக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, 09.06.1983 அன்று மத்திய-மாநில உறவுச் சிக்கல்களை ஆராய நீதிபதி சர்க்காரியா குழுவை மத்திய அரசு சார்பில் நியமித்தார்.

7. காஷ்மீர் ஸ்ரீநகரில் காங்கிரஸ் அல்லாத 59 எதிர்க்கட்சித் தலைவர்கள் (17 அரசியல் கட்சிகள்)  அக்டோபர் மாதம் 5, 6, 7 – 1983 மூன்றுநாட்கள் கூடி, மத்திய-மாநில உறவுகள் குறித்து விவாதங்களை நடத்தி ஸ்ரீநகர் பிரகடனத்தை அறிவித்தனர். இதில் தலைவர் கலைஞர் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில், பிரிவு 356 பிரகடனம், ஆளுநர்கள் நியமனம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட மற்ற சிக்கல்களும் விவாதிக்கப்பட்டன. இந்த நிகழ்வுகள் முழுமையாகவும் அறிக்கையாகவும் Central-State Relations என்ற தலைப்பில் சதி சாஹினி தொகுத்து, வைகாஸ் வெளியீட்டகம் ஆங்கில நூலாக அப்போது வெளியிட்டது. 

8. கடந்த 1983 – 1988 வரை கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே, பெங்களூருவில் 20 மார்ச்சு 1983இல், காங்கிரஸ் அல்லாத தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டி, மத்திய-மாநில உறவுகள், ஆளுநர் பதவி தேவையா? என்ற விவாதங்களை முன்னெடுத்தார். இதில், தமிழ்நாடு, புதுவை, கர்நாடக, ஆந்திர முதலமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். எம்.ஜி.ஆர், என்.டி.ராமாராவ், புதுவை ராமச்சந்திரன் பங்கேற்றனர். கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றதால் கேரளா பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டின் பின் ஆளுநர் பதவி தேவையில்லை என்று வெள்ளை அறிக்கையையும் திரு ஹெக்டே வெளியிட்டார். இந்த மாநாட்டுக்குச் சென்ற அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், 23 மார்ச்சு 1983- அன்று தமிழக சட்டமன்றத்தில் இந்த மாநாடு குறித்தான அறிக்கையை, எட்டு பக்கத்திற்கு வைத்து, இது குறித்து விளக்கத்தை அளித்தார்.

9. என்.டி.ராமாராவ் ஆந்திர முதல்வராக இருந்தபோது 28 மே-1983இல், விஜயவாடாவில், காங்கிரஸ் அல்லாத அரசியல் கட்சிகளின் மாநாட்டைக் கூட்டினார். இதில் எல்.கே.அத்வானி, அகாலிதள் தலைவர் பர்னாலா, காங் (எஸ்) தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பசவபுன்னைய்யா, ஹெச்.என்.பகுனா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா, மத்திய முன்னாள் அமைச்சர் ஜெகஜீவன் ராம், மேனகா காந்தி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பிரிவு 356 கூடவே கூடாது என்று தெளிவான தீர்மானமும் பிரகடனமும் செய்யப்பட்டது. தெலுங்குதேசக் கட்சியின் மத்திய மாநில உறவுகள் குறித்தான அறிக்கையும் வெளியிடப்பட்டது.

10. அசாம் கண பரிஷத் (ஏ.ஜி.பி) சில்லாங் நகரில் கூட்டிய அகில இந்திய அனைத்துக் கட்சி மாநாட்டில் பிரிவு 356 கூடவே கூடாது என்று விரிவாக பிரகடனத்தை வெளியிட்டது. பாட்னாவிலும் அனைத்துக் கட்சிக் கூட்ட்த்தில் இதே தீர்மானன்ங்கள் நிறைவேற்றப்பட்டன.

11. தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் மத்திய-மாநில உறவுகளை ஆய்வு நடத்த சென்னையில் 1984, ஜனவரி 5 - 8 தேதிகளில், கன்னிமரா ஓட்டலில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாகத் தயார் செய்து மத்திய அரசு அமைத்த சர்க்காரியா குழுவிடம் வழங்கினார். இந்த அறிக்கை சட்டமன்றத்திலும் வைக்கப்பட்டது.

12. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் 08.04.1989 – ல் ஆளுநர் வேண்டுமா?, வேண்டாமா? என்று வெளியிட்ட விரிவான அறிக்கையும் முக்கியமான ஆவணமாகும்.

13. மத்திய-மாநில உறவுகள் குறித்து மத்திய முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம் அகில இந்திய ரேடியோவில் 1991 நவம்பர் 08 மற்றும் 09- தேதிகளில், ஹைதராபத்தில் சர்தார் பட்டேல் நினைவுச் சொற்பொழிவாக  ஆற்றிய உரையை மத்திய அரசு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் நூலாக வெளியிட்டுள்ளது.

14. மத்திய அரசு, மாற்றந்ன்தாய் போக்கில் மாநில அரசுகளை, தன் விருப்பம் போல இதுவரை, பிரிவு 356ஐப் பயன்படுத்தி ஏறத்தாழ 128 முறை, மாநில அரசுகளை கலைத்துள்ளன. முதல்முதலாகப் பஞ்சாபில், 16-06-1951-இல் டாக்டர் கோபிசண்ட் தலைமையிலான காங்கிரஸ் அரசைக் கலைத்தது. அதுபோல பெப்சு மாநில அரசும் கலைக்கப்பட்டது. 1959இல் கேரளாவில் நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சியை மத்திய அரசு கலைத்தது.

கர்நாடக முன்னாள் முதல்வர் மறைந்த எஸ்.ஆர்.பொம்மை தொடர்ந்த “S.R. Bommai vs. Union of India” என்ற வழக்கில், உச்சநீதிமன்றம், ‘பிரிவு 356ஐப் பயன்படுத்தி மத்திய அரசு, மாநில அரசுகளை விருப்பம்போலக் கலைக்க முடியாது என்ற தெளிவான, பாதுகாப்பான தீர்ப்பை 11-03-1994இல் வழங்கியது. இந்த வழக்கின் தீர்ப்பில் மத்திய மாநில உறவுகள் குறித்தான சிக்கல்களும் விவாதிக்கப்பட்டுள்ளன.

15. மத்திய – மாநில உறவுகள், நிதிப்பகிர்வு சீர்திருத்தங்கள் குறித்து, ராஜா ஜே.செல்லையாவின் 2006 அறிக்கை.

16. ஜம்மு-காஷ்மீரில் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி ஆட்சிக் காலத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில சுயாட்சி வேண்டும் என்று குழு அமைத்து ராஜமன்னார் குழுவைப் போல விரிவான அறிக்கையும் 1999 – ல் பெறப்பட்டு ஸ்ரீநகரில் இது குறித்தான மாநாடும் நடந்தது.

17. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், இந்திய அரசியல் சாசனம் மறு ஆய்வுக்காக எம்.என்.வெங்கடாசலய்யா தலைமையில் 22, பிப்ரவரி 2000-த்தில் அமைக்கப்பட்ட குழுவும் - மத்திய-மாநில உறவுகள், ஆளுநர் குறித்த செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடத்தி மத்திய அரசிடம் விரிவான அறிக்கையும் அளித்தது.  இதுவரை இந்திய அரசியல் சாசனத்தைத் திருத்த, ஏறத்தாழ 130 மசோத்தாக்களைக் கொண்டு வந்துள்ளோம். 

18. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் 2002இல் நீதிபதி மதன் மோகன் பூஞ்சி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படி பல்வேறு குழுக்கள்,நிகழ்வுகள்,மாநாடுகள் மத்திய-மாநில உறவைவும், மாநில சுயாட்சியையும் குறித்து ஆய்வுகளை இதுவரை மேற்கொண்டுள்ளன. ஆனால், இதற்கு மூல காரணம், மூலப்பத்திரம் கலைஞர் அமைத்த ராஜமன்னார் குழுவின் மாநில சுயாட்சி அறிக்கைதான். அந்த அறிக்கையை இன்றைக்கு திரும்பவும் ஆழிப் பதிப்பகம் அற்புதமாக வெளிக்கொண்டுவந்திருக்கிறது.வர இருக்கின்றது.

மாநில சுயாட்சி குறித்து அண்ணன் முரசொலிமாறன் மாநில சுயாட்சி என்ற விரிவான நூலை 1974-இல் வெளியிட்டார். அதன்பின், கு.ச.ஆனந்தனின் ‘மலர்க மாநில சுயாட்சி’ நூல் வெளிவந்தது. பழ.நெடுமாறனின் மத்திய-மாநில உறவுகள்- சில குறிப்புகள் என்ற நூலை 1985-ல் மே மாதம் கலைஞர் வெளியிட்டார்.

பேராசிரிய நாகநாதன் போன்ற பலர் மாநில சுயாட்சி குறித்து விரிவாக எழுதி நூல்களாக வெளிவந்துள்ளன. இவர்களுக்கு முன் மா.பொ.சி மாநில சுயாட்சி குறித்து எழுதிய நூல்கள் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.

தொடர்ந்து மாகாண சுயாட்சி குரல் நீண்ட காலம் ஒலித்து வருவதற்கு சாட்சியாக இன்றைக்கும் இருக்கின்றது ஏ.என்.எஸ் அவர்களின் மாகாண சுயாட்சி நூல். இந்த நூலை மறுபதிப்பு முயற்சி எடுத்துக் கொண்ட கவிஞர் இளைய பாரதிக்கும், வ.உ.சி நூலகத்திற்கும் என்னுடைய வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கோவில்பட்டி                                    கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

 6.7.2022                                          வழக்கறிஞர்,

                                                 அரசியலாளர்,

                                                 ஆசிரியர் – கதை சொல்லி

                                               பொதிகை-பொருநை-கரிசல்


-- 
K. S. Radhakrishnan,
http://ksradhakrishnan.in  

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...