Thursday, June 29, 2023

#*Plantain Bajji* #*பஜ்ஜி*

#*Plantain Bajji*
#*பஜ்ஜி*
••••
மாலை நாலு மணி வாக்கில்,  ஏதேனும் ஓர் ஓட்டல் - வீட்டில் காபி க்கு, முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி -வடை இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி!
மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு!

அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்!
அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு நல்ல கும்மோணம் டிகிரி காபியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல!

மாலை மூணு மணியளவில் கடலை மாவு கரைபடும்போதே களைகட்டி விடும் கிச்சன் – உருளை, வாழை, கத்தரி, வெங்காயம், செள செள எனப்படும் பெங். கத்தரிக்காய், எல்லாம் சில்லு சில்லாய் வெட்டப்பட்டு (வெங்காயம் ரிங்கு ரிங்காய் பிரியாமல், தின் ஸ்லைசுகளாய் சீவுவது ஒரு தனீக் கலை – பஜ்ஜிக் கலை), பஜ்ஜி மாவில் முக்கி எடுக்கப் பட்டு, பதமாய்க் கொதிக்கும் புது எண்ணையில் (முதல் நாள் சுட்ட எண்ணை உதவாது – சில கடைகளில் பஜ்ஜி வாய்க்கு வந்தவுடன் காட்டிக் கொடுத்துவிடும்!), மெதுவாய் விடப்படும் - சிறு குமிழிகளுடன் பொறிந்து, பொன்னிறம் ஆனவுடன் சட்டுவத்தில் ( அதாங்க, ஓட்டைகள் நிறைந்த கரண்டி) எடுத்து பாத்திரத்தில் போட்டு விட்டால் – பஜ்ஜி ரெடி!
கொஞ்சம் கரகரப்பாகவும், அதிகம் உப்பாமலும், உள்ளிருக்கும் காயின் வடிவத்தில் சூடாக வந்து விழும் பஜ்ஜியே, உன்னை ஆராதிக்கிறேன்! அப்படியே சூடாகக் கடித்துவிட, முழுங்கவும் முடியாமல், துப்பவும் மனமில்லாமல் வாய் வழியே புஸ் புஸ் என்று அனல் காற்று வெளியே விட, தின்னும் பஜ்ஜி ஜோர்! பஜ்ஜியைப் பிய்த்து, காயையும், பஜ்ஜி உறையையும் தனித் தனியே ஊதி ஊதித் தின்பவர்கள் பஜ்ஜியால் சபிக்கப் பட்டவர்கள்!

காரம் கம்மியாக, திப்பி திப்பியாக தேங்காய்ச் சட்னியும், கொஞ்சூண்டு வெங்காய சாம்பாரும் கூட இருந்தால் கோடி சுகம். சாஸோ, கெச்சப்போ ஆபத்துக்குப் பாவமில்லேன்னாலும், இரண்டாம் பட்சம்தான்!

(யாரு, டாக்டரா? எண்ணை கூடாதாமா? .. தண்ணீலெ பொறியாதே – சரி, சரி சாயந்திரம் கிளினிக்குலெ வந்து பார்க்கிறேன்னு சொல்லு –ரெண்டு பஜ்ஜியோட!)

ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் கிடைக்கிறது – கொஞ்சம் இட்லி/தோசை மாவைச் சேர்த்துக் கொண்டால் பஜ்ஜி கரகரப்பாக இருக்கும் - ஓரிரண்டு மிமி தடிமனில் சிம்ரன் மாதிரி ஸ்லிம்மா சீவின காய்கள், நல்ல பஜ்ஜிக்கு நளபாகத் தரம் தரக்கூடியவை! – ரொம்ப நேரம் எண்ணையில் விடக் கூடாது; ஆரஞ்சுக்கும், சிவப்புக்கும் நடுவான கலர் உசிதம் – அதிகம் சூளையில் சுட்ட கருஞ்செங்கல் நிறம் காசிக்குப் போகாமலேயே பஜ்ஜியை ஒதுக்கி வைத்துவிடும்! மேற்படி ’டிப்ஸ்’ அகில உலக ’பஜ்ஜி ரிசர்ச் கமிட்டி’ யினால் பொது மக்கள் நலம் கருதி பரிந்துரைக்கப் படுகின்றன!
‘மானசரோவரி’ல் கிராமத்து சாலையோர டீக்கடையில் பஜ்ஜி பொறித்துப் போடுவதை சுவையாக எழுதியிருப்பார் அசோகமித்திரன்! வாழைக்காயை நீளவாட்டில் சீவிப் போடும் பஜ்ஜி – சின்ன நியூஸ் பேப்பர் தாளில் வைத்துக் கொடுப்பார்கள் – அதில் அழுத்தி எண்ணையை உறிஞ்சிய பிறகு கொஞ்சம் உலர்ந்த பஜ்ஜி – டீயுடன் அதற்கு மக்களிடையே கிராக்கி அதிகம்!
கேரளாவின் நேந்திரம் பழ பஜ்ஜி – ‘பழம்புழுங்கி' ('பழம்பொறி' ?) – ஓர் அசட்டுத் தித்திப்புடன் ரொம்பவும் பிரபலம். ஒன்று தின்றாலே, ஒரு நாள் முழுக்க பசிக்காது!.
காரம் கம்மியான ஸ்பெசல் மிளகாய் பஜ்ஜி – கடற்கரையில் மிகவும் பிரசித்தம்.
’ஸ்டார்டர்’ வகையில் தட்டு நிறைய வெங்காயம், கொத்தமல்லியெல்லாம் தூவிக் கொடுக்கப் படுகின்ற “கோபி 65” பஜ்ஜியின் இக்காலப் பரிணாம வளர்ச்சி! பிரட் பஜ்ஜி கூட கிடைக்கிறது –

‘தூள்பஜ்ஜி’ என்ற சொல்வழக்கு காரைக்குடி பக்கங்களில் உண்டு – பஜ்ஜிக்கும், பக்கோடாவுக்கும் இடைப்பட்ட ஒரு வஸ்து – பொட்டலமாகக் கட்டி விற்பார்கள் – செட்டிநாட்டு சுவையுடன்!
 பாண்டிபஜார் சாந்தா பவனில் அறுபது பைசாவுக்கு ஒரு ப்ளேட் ஆனியன் பஜ்ஜியும் (மூன்று), நாற்பது பைசாவுக்கு ஒரு ஸ்ட்ராங் காபியும் குடித்த நினைவு

மதுரை நெடுமாறன் ஆபிஸ் அருகே,மதுரை கோபு ஐயங்கார் கடை காத்தரிக்காய் பஜ்ஜியும் , பச்சை மிளகாய் காரச்சட்னிக்கும் நிகர் இந்தியாவில் எங்கும் கிடையாது. காமராஜரையே அசத்திய கோபி ஐயங்கார் கடை  கத்தரிக்காய் பஜ்ஜி.             திருக்கோட்டியூர் அக்ரஹாரத்தில்  மாமி வீட்டில் குமுட்டி  அடுப்பில் ( வார்ப்படத்தாலான கரி அடுப்பு  கரி அடுப்பு ). இந்த அடுப்பில் வெங்கல உருளியில் தண்ணீர் கலக்காத பசும்பால் காய்ந்து நிறம் மாறி தளும்பும். . அதற்கு முன் பறங்கிப் பிஞ்சு மெலிதாக நறுக்கி கடலை மாவில் சிறிது மிளகாய்த்தூள் பெருங்காயம், இட்லி மாவு  சேர்த்து அதில் பறங்கிப் பிஞ்சை மெலிதாக நீள வாக்கில் சீவி  நறுக்கி முக்கி எண்ணைச் சட்டியில் பொறித்து  பறங்கிப் பஜ்ஜியும் பச்சை மிளகாய் சட்னியும் நிகரில்லாச் சுவைதான். பஜ்ஜியை பொறித்து எடுக்கும்போது ஒரே முறையாகப் பொறிய விடாமல் அரை வேக்காட்டில் அரித்தெடுத்துப் பின் 2 , 3 தடலைகள் அரிக்கப்பட்டதை எல்லாம் மொத்தமாக இரண்டாம் முறையாகப் பொறித்தெடுத்தால் வரும் மமொறு மொறுப்பான பஜ்ஜிக்கு நிகரே இல்லை.


மதுரை, விருதுநகர்,சாத்தூர், அரும்புக்கோட்டை,கோவில்பட்டி, சங்கரன்கோவில்,ராஜபாளையம், 
ஶ்ரீ வில்லிபுத்தூர் நெல்லை,சேர்மாதேவி, அம்பை, ஆழ்வார் திருநகர், வள்ளியூர் என தெக்கு சீமை ரோட்டுக்கடைகளில் பஜ்ஜிகளை எண்ணைசட்டியில் எடுத்து சில்வர் தட்டினில் போடப்படும் குறிப்பிட்ட கடைகளில் எவை என அடியேனுக்கு பிரசித்தம்.

இப்படி பல ரசனைகள் உண்டு.


No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...