Sunday, February 21, 2016

Journalist

இந்த வாரம் (24.2.16) ஜூனியர் விகடன் இதழில் திரு. திருமாவேலன் தொடரில்  'மெயில்' கணபதி, காமராஜுலு, முருக தனுஷ்கோடி, ஏ.என்.எஸ்., அலை ஓசை நாராயணன், அறந்தை நாராயணன், சுபாஷ் சுந்தரம், வைத்தியநாதன், இந்தியன் எக்ஸ்பிரஸ் வேம்புசாமி, விகடன் ராவ், அம்பி ஜெகநாதன் போன்ற முக்கிய #பத்திரிகையாளர்களை குறிப்பிட்டிருந்தார்.  இவர்கள் அனைவரோடு பேசிப் பழகக் கூடிய வாய்ப்பு மாணவர் பருவகாலத்தில் கிடைத்தது. அரசினர் தோட்டத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி வளாகத்தில் இவர்களை அடிக்கடி சந்திப்பதும் உண்டு.

தினமணி ஆசிரியர், ஏடுகளின் பிதாமகன் ஏ.என். சிவராமன் அவர்கள், 1980 என்று நினைவு, நான் அனுப்பிய கட்டுரையை பார்த்து அதில் உள்ள தொலைபேசி எண்ணில் (76575 மயிலாப்பூரில் திரு. நெடுமாறனும், நானும் பயன்படுத்திய எண்)  அழைத்து கட்டுரை நன்றாக உள்ளது. கோர்ட்டுக்கு போய்விட்டு மாலையில் வந்து என்னை தினமணி ஆபிசில் பார்க்க முடியுமா என்றார்.  அப்போது என்னிடம் எந்த ஊர், என்ன என்று விசாரித்த உடன், கோவில்பட்டி என்னுடைய மனைவியின் ஊர் என்று சொல்லி என்னுடைய உறவினர் சிலரை விசாரித்தார். அவரை அன்றைக்கு சந்தித்தது ஒரு முக்கியமான வாழ்க்கையின் சம்பவமாக இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. மறுநாள் நான் எழுதிய தேர்தலும், சீர்திருத்தங்களும் என்ற கட்டுரை நடுப்பக்கத்தில் தினமணியில் வெளியானது. இயல்பாக சாந்தமாக இருந்தாலும் ஏ.என்.எஸ். ஆங்கிலேயரை எதிர்த்து இளமை காலத்தில் அம்பாசமுத்திரத்திலிருந்து நெல்லைக்கு வரும் புகைவண்டியில் வெடிகுண்டுகளையெல்லாம் பெட்டியில் வைத்து அனுப்பியதெல்லாம் வரலாற்று செய்திகள்.

இவர்களில் சிலரோடு அருகே உள்ள உடுப்பி கிருஷ்ணா பவன், தர்பார் ஓட்டல்,  அல்லது அண்ணா சாலையில் உள்ள காதி பவனில் மேல் மாடியில் இயங்கிய உணவகத்துக்கு சென்று டீ, காபி அருந்துவது உண்டு.  இந்த பத்திரிகை ஜாம்பவான்கள் மனதில் பட்டதை நியாயமாக எழுதக்கூடியவர்கள் ஆவார்கள். அது அக்காலம்.  தீபம் நா. பார்த்தசாரதி, சின்ன அண்ணாமலை, முருக தனுஷ்கோடி போன்றவர்களை நேரில் சென்றுதான் சந்திப்பது வழக்கம். இவர்களில் பலர் நெடுமாறனுடைய மயிலாப்பூர் இல்லத்திற்கு வருவதுண்டு.  இதில் சுபாஷ் சுந்தரத்தின் துக்கத்தைத்தான் இன்றைக்கும் தாங்க முடியவில்லை. தீபம் நா. பார்த்தசாரதி அவர்களின் பூர்வீகம் எங்களின் கரிசல் மண்ணான ஸ்ரீவில்லிபுத்தூர்தான். 

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...