Sunday, February 7, 2016

நாடாளுமன்ற-சட்டமன்றத் தேர்தல்கள்


நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தவேண்டும் என்று நாடாளுமன்ற குழு அறிக்கை கூறுகின்றனது. நாடு விடுதலை பெற்றவுடன் 1950ல் இந்தியாவில் நாடாளுமன்ற-சட்டமன்றத் தேர்தல்கள் ஒருசேர நடந்தது.  1952, 1957, 1962, 1967 வரை இரண்டுக்கும் இணைந்தே தேர்தல் நடந்தது.  குறிப்பாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல் நடப்பது வாடிக்கை.  1967க்கு பின்பு காங்கிரஸ் இல்லாத அரசுகள் வந்தபின், இந்த அட்டவணையில் மாற்றமும் நிகழ்ந்தது.  இந்த தேர்தலை முறையாக நடத்த அடிப்படையில் நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தவர் அன்றைய தலைமை தேர்தல் ஆணையர் சுகுமார் சென் ஆவார்.

பிரிவு 356ஐக் கொண்டு மாநில அரசுகளை கலைத்ததால், பல மாநிலங்களில் தேர்தல்கள் நாடாளுமன்றத்தோடு நடத்தாமல் வேறு கட்டத்தில் நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது.  இதனால் அரசு நிர்வாகம் தேவையற்ற முறையில் பணி செய்ய வேண்டி இருக்கின்றது. வெட்டிச் செலவுகள், வேட்பாளர்களுக்கும்-அரசியல் கட்சிகளுக்கும் ஐந்தாண்டுகளில் இரண்டு தேர்தல்களை சந்திக்கவேண்டிய நிலைமை. அது மட்டுமல்லாமல் தேர்தல் ஒழுங்குமுறைகளும், கட்டுப்பாடுகளும் வந்துவிட்டால் அரசு நலத் திட்டங்களை மூன்று மாதத்திற்கு செய்ய முடியாது. ஒரு தேர்தலுக்கு நாடு முழுவதும் நடந்தால் ரூ.4500 கோடி செலவாகிறது என்ற ஒரு கணக்கீடு உள்ளது.

ஐந்தாண்டுகளுக்கு இரண்டு முறை தேர்தல் நடத்தும்போது, அரசு நிர்வாகமும், காவல்துறையினரும் தேர்தல் முஸ்தீப் பணிகளுக்கு மூன்று மாத காலம் தங்களை தயார்படுத்தவேண்டும்.  மத்திய காவல்துறையினர் 1349 கம்பெனிகள் ஒரு தேர்தலுக்கு இறக்கப்படுகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் கருப்புப் பணமும் புழக்கத்திற்கு வந்துவிடுகின்றன.  தேர்தல் நேரத்தில் மாணவர்களுக்கு தேர்வு நடந்தால் கல்விக் கூடங்களும் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்று நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

ஆனால் இது நேர்மையோடு அணுகினால் நிச்சயம் இந்த முறையில் வெற்றி காணலாம். அதற்கு அரசும் அரசியலுக்கு அப்பால் இதை இதயசுத்தியோடு நடைமுறைப்படுத்தினால் மேலே குறிப்பிட்ட சில நியாயங்களும் பாதுகாக்கப்படும்.

இதையெல்லாம் தேர்தல் சீர்திருத்தங்களில் கவனிக்கப்படவேண்டிய கருத்தாகும்.

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...