Sunday, June 18, 2017

என் அரசியல் பயணம் - தொகுப்பு

என் அரசியல் பயணம் - தொகுப்பு 
-------------------------------------
ஏறத்தாழ 46 (1972ல்)ஆண்டு கால அரசியல் பயணத்தை ஆவணடுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக நண்பர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அது எதிர்கால அரசியல் ஆய்வுகளுக்கு பயனாக விளையும் வகையில் எழுத வேண்டுமென்றும் விரும்புகின்றனர். நீண்ட ஆலோசனைக்கு பின், என்னுடைய நினைவுகளை தொகுத்து வெளியிட இருக்கின்றேன். இது சம்மந்தமாக நேற்று சில  வழக்குகள் தொடர்பான  ஆவணங்களை  பெறுவதற்காக சென்னை, உயர்நீதிமன்றம் சென்று இருந்தேன். மதிய உணவு இடைவேளை என்பதால் முன்னாள் நண்பர்களையும், எனக்கு ஜூனியராக பணிபுரிந்தவர்களையும் சந்திக்க நேர்ந்தது. அப்போது பல பழைய அனுபவங்களை எல்லாம் அவர்கள் பகிர்ந்துக் கொண்டனர். 

1999 வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் அருண் ஜெட்லி அவர்கள் மூலமாக, நான் மத்திய அரசு வழக்கறிஞராக பணியை சிலருக்கு பெற்றுத் தந்தேன். அவர்கள் அனைவரும் இன்றைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிட்ட தேர்தல் களங்களில் எல்லாம் எனக்கு தேர்தல் பணிகளை அவர்கள் மேற்கொண்டவர்கள். என்றைக்கும் நன்றியோடு என் நலனை விசாரிப்பார்கள். நானும் சற்று தூரத்தில் அவர்களை விட்டு விலகி இருந்தே நட்பு பாராட்டுவது வழக்கம். 

பொதுவாக நன்றி மறப்பதை வாடிக்கையாக கொண்ட இந்த உலகில் நன்றியுடன் எனது நண்பர்கள் என்னுடைய அக்கறையோடு பேசுவது வாடிக்கை. எனக்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டன என்பது குறித்து அவர்களுடைய கவலையை தெரிவிப்பது உண்டு. இந்நிலையில் நேற்றைக்கு சமூக அக்கறையோடு தாக்கல் செய்த வழக்குகளின் பழைய ஆவணங்களை சட்டப்படி பெறுவதற்கான உதவியையும் மேற்கொண்டார்கள். அந்த ஆவணங்கள் இருந்தால் தான் நீதிமன்ற பதிவுகளை குறித்தான என்னுடைய நினைவுகளை  ஆதாரங்களுடன் பதிவு செய்ய முடியும். 

அந்த வழக்குகள், 

விவசாயிகள் கடன் மீதான ஜப்தி நடவடிக்கை கூடாதென்ற வழக்கு, 

வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனை தீர்ப்பு ரத்து, 

கண்ணகி கோட்டம் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தொடுத்த வழக்கு, 

அரசியல் பிரபலம் ஒருவரின் பிரச்சனைக்கு இடையே மணமுறிவு வழக்கு, யாருக்கும்  வெளிக்காட்டாமல் சட்டப்பூர்வமாக பெற்றுத் தந்தது. 

காவிரி நதிநீர் வழக்கில் தமிழ்நாடு, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களை எதிர்வாதிகளாக மனு செய்து இருக்கும் தேவகவுடா எப்படி நாட்டின் பிரதமர் ஆக முடியும்? என்று தொடுத்த வழக்கு, 

தமிழக மேலவை அமைக்க கோரி வழக்கு,

வைகோ அவர்கள் ரகசியமாக இலங்கை சென்று வந்தது குறித்த வழக்கு. 

1982ல் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் பாண்டி பஜார் வழக்கு. 

உச்ச நீதிமன்றத்தில் கங்கை - காவிரி, வைகை - தாமிரபரணி, குமரி மாவட்ட நெய்யாறோடு தேசிய நதிகள் இணைப்பு

தேர்தல் சீர்திருத்தம் என உச்ச நீதிமன்றத்தில் சில வழக்குகள்.

டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனித உரிமைகள் குறித்தான வழக்குகள் என பல முக்கிய வழக்குகள் என்ற நீண்ட பட்டியலே உணடு. இந்த வழக்குகளில் உயர் நீதிமன்ற ஆவணங்களை மட்டும் பெறுவதற்கான முறையாக சட்டப்பூர்வமாக மனு செய்து நடவடிக்கைகளை குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் பேச்சு வழக்கில் சொல்லிய சில செய்திகள் கவனத்தை ஈர்த்தன. அவை நான் பட்ட பாட்டிற்கு பொருத்தமாக இருந்தது. என்னை மையப்படுத்தியே அதை கூறியது சற்று ஆறுதலாகவும் இருந்தது. 

அத்துடன் நில்லாமல் அவர்,

"உங்களுக்கு பின்னால் அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் வாய்ப்பு கிடைத்துவிட்டது. உங்களுக்கான சுற்று 
இதுவரை  வரவில்லையா என ஆதங்கத்துடன் கேட்டார். அவர் பேச்சு வாக்கில் சொல்லிய வார்த்தைகள்,  "ரொம்ப நாளாக கஷ்டப்பட்டு கிடைக்காத அங்கீகாரத்தை சிலர் ரொம்ப எளிமையாக 
அடையுறாங்க". 

"அரசியல் என்பது அரசியலுக்காக அல்ல, அது மாற்றத்திற்கான, நன்மைக்கான கருவியாகும்".

"என் உடம்பில் பட்ட காயத்தின் மரணவலிகூட மாயமானது, என் வாழ்க்கையின் ரணத்தைப் பார்க்கும் போது"

"விழுந்தவனுக்குதான் வலி தெரியும், சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கவங்களுக்கு தமாஷா தான் தெரியும்" என மனதில் நினைத்துக் கொண்டு பணிகள் முடிந்த்து திரும்பினேன்.

என்னுடைய நினைவு பதிவுகளை இரண்டு தொகுப்புகளாக வருகிறது. 

பெருந்தலைவர் காமாரஜர் காலத்தில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகள், அவசர நிலை காலம், ஸ்தாபன காங்கிரஸ், ஆளும் காங்கிரஸ் தமிழகத்தில் நடந்த இணைப்பு, ஈழத்தமிழர் பிரச்சனை, பிரபாகரன். இந்த பிரச்சனையில் எம்.ஜி.ஆரின் அணுகுமுறை, போராளிகளுக்கு பயிற்சி, 1993ல் திமுகவில் நடந்த பல நிகழ்வுகள் என்பதோடு காமராஜர், இந்திரா காந்தி, தேவராஜ் அர்ஸ், கலைஞர், நெடுமாறன், பிரபாகரன், மத்திய அமைச்சர்களான கே.பி. உன்னிகிருஷ்ணன், ராம்விலாஸ் பஸ்வான், ஜெயப்பிரகாஷ் நாராயணன், நாராயணசாமி நாயுடு மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள், நண்பர்களோடு தொடர்புகள், அவர்கள் குறித்தான நிகழ்வுகளையும் பதிவு செய்ய உள்ளேன். இந்த பதிவு நடுநிலையோடு மனசாட்சியின் படியே எழுதிக்கொண்டு வருகின்றேன். சில நிகழ்வுகள் சிலருக்கு வேதனை கொடுத்தாலும், வரலாற்றை மறைக்க முடியாதல்லவா? சிலரை  திருப்தி படுத்துவதற்காக வரலாற்றை பொய்யாக எழுத முடியாதே. அப்படி பொய்யாக  எழுதினால் அது வரலாறு ஆகாதே?  மனசான்றுகளுக்கு உட்படுத்தி எழுதினால்  தானே என்னால் மனநிம்மதி உடன்  உறங்க முடியும்? 

#என்அரசியல்நினைவுகள் 
#KSRadhakrishnanpostings
#kSRpostings 
#கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-06-2017

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...